கனடாவில் கார்

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

அ முத்துலிங்கம்


கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம். அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தொிவது.

அமொிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் இருந்தாலும்கூட, முறைப்படி எழுத்துப் பாீட்சை, பிறகு கார் ஓட்டும் சோதனை என்று சித்தியடைந்த பின்னர்தான் இங்கே ஓட்டுநர் உாிமம் பெறமுடியும்.

ஆகவே முதலில் எழுத்துப் பாீட்சைக்கு போனேன், இருநூறு பக்க போக்குவரத்து விதிகளை கரைத்துக் குடித்த பிறகு. ஆனால் உண்மையில் கம்புயூட்டாில்தான் கேள்வி, பதில்கள்.

மாதிாிக்கு ஒரு கேள்வி இப்படி இருக்கும்:

எதிாில் STOP குறியீடு தென்பட்டால் என்ன செய்யவேண்டும் ?

அ) திரும்பி போகவேண்டும்.

ஆ) திடாரென்று பிரேக் போடவேண்டும்.

இ) நின்று, கவனித்து, அபாயம் தவிர்த்து போகவேண்டும்.

ஈ) வேகமாக கடக்கவேண்டும்.

இதில் ஏதாவது ஒரு பதிலை மட்டும் புள்ளடி போட்டு தொிவு செய்யச் சொல்வார்கள். எல்லாமாக 40 கேள்விகள். அதிலே வெற்றியடைந்த பிறகு நான் கார் ஓட்டும் பயிற்சிக்கு ஒரு குருவை தேடினேன். பயிற்சி நிலையத்தில் இருந்து எனக்கு ஒருவரை அனுப்பி வைத்தார்கள். இளைஞர். வயது 30 இருக்கலாம். பெயர் கதிரைவேற்பிள்ளை என்றார். மொழியகராதி படைத்த கதிரைவேற்பிள்ளைக்கும் தனக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை என்று முதலிலேயே மறுத்துவிட்டார்.

சுருக்கம் வேண்டி நான் அவரை ‘குருவே ‘ என்று விளித்தேன். அவரோ வயது கருதி என்னை ‘அண்ணை ‘ என்றே அழைத்தார்.

‘அண்ணை, இது கொழும்பு இல்லை; இந்த நாட்டு டிரைவிங் வேற மாதிாி. உங்களுக்கு கார் ஓட்டத் தொியுமோ ? தொியுமென்றால் படித்தது முழுவதையும் மறவுங்கோ ? ‘ என்றார்.

‘குருவே, மறதி என்னோடு கூடப்பிறந்தது என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. நான் நல்லாய் மறப்பன் ‘ என்று உத்திரவாதம் அளித்தேன். அப்படியே எங்கள் பயிற்சி ஆரம்பமானது.

முதலாம் நாள். நான் சீட் பெல்ட்டை இறுக்கக் கட்டி, ஸ்டியாிங் வளையத்தை நசுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்பொழுதே உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. கார் ஒரு சாண்கூட இன்னும் நகரவில்லை.

குரு சொன்னார், ‘நீங்கள் பயப்பிடாதையுங்கோ. நான் எல்லாம் படிப்பிச்சுத்தருவன். ‘

முதலாம் பாடம்.

‘உங்களுக்கு KGB தொியுமோ ? ரஸ்ய உளவுத்துறை ? ‘

‘ஓ, நல்லாய்த் தொியும். ‘

‘ K என்றால் Key, G என்றால் Gear, B என்றால் Brake இதை ஞாபகத்தில் வைத்திருங்கோ. அதாவது சாவி போட்டு காரை இயக்கி, கியரை போட்டு பிறகு பிரேக்கை இறக்கி, இந்த ஒழுங்கு முறை மாறாமல் செய்யவேண்டும். இரண்டு, மூன்று முறை இந்தப் பயிற்சி நடந்தது. பிறகு கார் எறும்பு வேகத்தில் ஊர்ந்தது.

சிவப்பு விளக்கு வந்தது. கார் பிரேக்கை அழுத்தி நிற்கவைத்தேன். நின்றது.

‘குருவே ‘ என்றேன்.

‘என்ன ? ‘

‘இப்ப மூச்சை விடட்டா ? ‘

‘ஐயோ! ஐயோ! மூச்சை விடுங்கோ. அதுவும் நான் சொல்ல வேணுமே ‘ என்றார்.

முதலாம் பாடம் முடிந்தது.

அடுத்த நாளே குருவுக்கும் எனக்கும் இடையில் சிறு மனஸ்தாபம் வந்துவிட்டது.

‘காரை எடுங்கோ ‘ என்றார். நான் பிரேக்கை தளர்த்தி, பெல்ட்டை கட்டி, சாவியைப் போட்டு காரை கிளப்பினேன். குரு ‘ஐயோ ‘ என்று தலையில் கையை வைத்து, ‘அண்ணை, என்ன செய்யிறியள் ? ‘ என்றார்.

‘FBI. பிரேக்கை Free பண்ணி, Belt ஐ கட்டி, Ignition ஐ ஸ்டார்ட் பண்ணினன். ‘

‘நீங்கள் விளையாடுறியள். நான் KGB என்றல்லோ சொன்னனான். ‘

‘அட, ஓ! FBI அமொிக்க உளவுத்துறை இன்னும் ஒருபடி மேலே என்றதால அப்படி செய்துபோட்டன். இனிமேல் கவனமாயிருப்பன். ‘

குரு சிாிக்கவில்லை, இரண்டு நாளாக.

தினம் தினம் குரு வந்தார். தினம் தினம் சிறு சண்டையும் வந்தது.

‘வலது பக்கம் திருப்பவேணும் ‘ என்றார் குரு.

சிவப்பு விளக்கு எாிந்தது. நான் காரை நிற்பாட்டினேன். பிறகு மெதுவாக ஊர்ந்து பாதையில் ஒரு வாகனமும் ஆபத்தை தருவதற்கு தயாராக இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு காரை எடுத்தேன்.

குரு ‘வொிகுட் ‘ என்றார்.

அடுத்ததும் வலது பக்கம். குரு ‘வொிகுட் ‘ என்றார்.

மீண்டும் வலது பக்கம். பச்சை விழுந்துவிட்டது. நான் காரை நிறுத்தி, மெதுவாக இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஊர்ந்தேன்.

‘அண்ணை, ஏன் காரை நிறுத்திறியள். உங்களுக்கு பச்சை போட்டிருக்கிறான். எடுங்கோ, எடுங்கோ ‘ என்றார்.

‘குருவே, நான் பாீட்சைக்கு போகும்போது பச்சை விளக்குக்கும் இப்படி கவனமாக எடுத்தால் கூட மார்க்ஸ் அல்லோ போடுவான் ‘ என்றேன்.

அன்று பாடம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பிறகு குரு நாலு நாள் பாடம் எடுக்கவும் மறந்துவிட்டார்.

குருவின் முகத்தில் கலவரம் மறைந்து, சாந்தம் வெளிப்பட்டதும் நான் ஒரு பட்சி செய்வதுபோல வாயை திறந்தேன்.

‘குருவே, எனக்கு ஒரு ஐயம் ? ‘

‘கேளுங்கோ, உங்களுக்கு உடம்பு முழுக்க ஐயம்தானே ‘ என்றார்.

‘பொிய ட்ரக் வந்தால் அவைக்கு முன்னுாிமை கொடுக்கவேண்டும் ? ‘

‘ஓம் ‘

‘ஒரு பாதசாாி வந்தால் அவருக்கு முன்னுாிமை கொடுக்கவேண்டும் ‘

‘ஓம் ‘

‘ஒரு சைக்கிள் வந்தால் அவருக்கு முழு ரோட்டையும் கொடுக்க வேண்டும் ? ‘

‘ஓம் ‘

‘ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் முழு ரோட்டும் கொடுக்க வேண்டும் ? ‘

‘ஓம் ‘

‘ஒரு பஸ் வந்தால் அவர் வளைத்து எடுத்துப்போக முன்னுாிமை கொடுக்க வேண்டும் ? ‘

‘ஓம் ‘

‘அதுவும் பள்ளிக்கூட பஸ் என்றால் அது நிற்கும்போதுகூட பின்னால் 20 அடிதூரம் தள்ளித்தான் காரை நிறுத்தவேண்டும் ? ‘

‘ஓம் ‘

‘அம்புலன்ஸ், பொலீஸ், இன்னும் அவசர வாகனங்கள் வந்தால் ஒதுங்கி கரையில் நிற்கவேண்டும் ?

‘ஓம் ‘

‘அப்ப ஏன் மினக்கெட்டு நான் கார் பழகிறன் ? ‘

‘அதுதான் எனக்கும் தொியவில்லை. உங்களுக்காக 72 பஸ் ரூட்கள் இங்க வைத்திருக்கிறான்கள். ‘

நான் சொண்டுகளை மடித்து வாயை மூடினேன்; புத்திசாலித்தனம் ஒழுகாமல் பார்த்துக்கொண்டேன்.

பாீட்சை தினம் நெருங்கியது. நான் இப்பொழுது சிக்னல் விளக்குகளுக்கிடையில் மூச்சுவிடப் பழகிவிட்டேன். இடது பக்க திருப்பம், வலது பக்க திருப்பம், ஒழுங்கை மாறுவது எல்லாம் எனக்கு தண்ணீர் பட்ட பாடு.

‘நிற்பதுவே, எடுப்பதுவே, ஓடுவதுவே. ‘ இதுவே என் சிந்தனை.

ஒரு சிறு ஒழுங்கை வழியாக குரு என்னை கூட்டிப்போனார். STOP குறியீடு வந்தது. நிதானமாக நின்று குரு சொல்லித் தந்தபடி ‘ஒன்று, இரண்டு, மூன்று ‘ என்று எண்ணி பிறகு காரை எடுத்தேன். அடுத்த STOP ல் பாதை ஓவென்று வெறுமையாக இருந்தது. ஒரு குருவியும் இல்லை. ரோட்டை பார்க்க வாய் ஊறியது. அப்படியே நிற்காமல் எடுத்துவிட்டேன்.

‘என்ன அண்ணை சோதனை வருகுது, நீங்கள் நிக்காமல் இப்படி எடுக்கிறியள் ? ‘ என்றார் எாிச்சலுடன்.

‘இல்லை, குருவே! ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லித்தான் எடுத்தேன். கொஞ்சம் கெதியாய் எண்ணிப்போட்டன். ‘

இன்னும் ஒரு நாள் தான் பாீட்சைக்கு இருந்தது. குருவுக்கு என் சாரத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. எனக்கும்தான்.

அன்றுவரை சொல்லித் தந்த விதிகள் எல்லாவற்றையும் குரு இன்னொருமுறை ஒத்திக்கை பார்த்தார்.

கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஓட்டு வளையத்தை என்னுடைய கை இறுக்கிப் பிடித்தபடியிருந்தது.

குரு கத்தினார். ‘ஒழுங்கையை மாத்துங்கோ, இடது பக்கம் திரும்ப வேணும். இடது பக்கம். ‘

‘எந்த இடது பக்கம் ? எந்த இடது பக்கம் ? ‘

‘வலது பக்கத்துக்கு எதிர் பக்கம். ‘

அன்று ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. காருக்கு சிறிய காயந்தான்.

கடைசியில் சோதனை தினம். என் குருவுடன் போகும்போது செய்த அத்தனை தவறுகளையும் அன்று செய்தேன். போதாததற்கு ஒரு புதுவிதமான பிழையையும் நானாகவே கண்டுபிடித்து அதையும் குறைவின்றி செய்தேன்.

இடது பக்கம் திரும்புவதற்காக நாற்சந்தியில் நின்றேன். பச்சை விழுந்து விட்டபடியால் முன்னுக்கு வந்து வசதியான தருணத்திற்காக காத்திருந்தேன். மஞ்சள் வந்துவிட்டது. மூச்சை பிடித்து காரை எடுத்தேன். ஆண்டவனால் அனுப்பப்பட்டதுபோல அந்த நேரம் பார்த்து பாதசாாி ஒருத்தர் சாவதானமாக ரோட்டை கடந்தார். படு வேகத்தில் எதிராக ஒரு காரும் வந்துகொண்டிருந்தது. தவிர்க்கமுடியாது. அம்புப் பாய்ச்சலுக்கு சற்று குறைவான வேகத்தில் காரை விட்டேன். பாதசாாியின் பிருட்டத்தை மெதுவாக இறகு தடவுவதுபோல உரசிக்கொண்டு கார் போனது. பனிக்குளிர் காலங்களில் குளியலறைப் பக்கமே போய் பழக்கமில்லாத அந்த வெள்ளையதிகாாி அப்போதுதான் குளித்தவர் போல தொப்பலாகிவிட்டார்.

எத்தனை தடவை இந்த முயற்சி தொடர்ந்தது என்பதை நீங்கள் கேட்காவிட்டால் நானும் ஒரு பொய் சொல்வதிலிருந்து தப்பிக்கலாம். கடைசியில், விறைக்கும் ஒரு குளிர் கால முன்மதியத்தில், ரோட்டு ஓரங்களில் பனிச்சேறு குவிந்திருக்கும் நல்ல நாளில், பாதசாாிகள் எல்லாம் விடுப்பில் போய்விட்ட ஒரு சுப நேரத்தில், எனக்கு ஓட்டுநர் உாிமம் கிடைத்தது.

ஆனால் ‘எல்லாம் படிப்பிச்சுத்தருவன் ‘ என்று உத்திரவாதம் கொடுத்த என் குரு ஒரு பச்சை துரோகம் செய்துவிட்டார்.

ஸ்டியாிங் வளையத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரம் பின்னுக்கு தள்ளப்பட்ட இருக்கையில் சாய்ந்து இருந்துகொண்டு, ரேடியோ முழங்க, ஒரு கையால் செல் போனைப் பிடித்து பேசிக்கொண்டு, முழங்கையால் ஓட்டு வளையத்தை அணைத்தபடி, மறுகையால் நூறு பாகை சூட்டில் நுரை பொங்கித் தள்ளும் ‘லாத்தே ‘ கோப்பியை கடுதாசி குவளையில் ஏந்தி உறிஞ்சியபடி, அதிவேக நெடுஞ்சாலையில், 120 கி.மீ வேகத்தில்

போகும் ரகஸ்யத்தை மட்டும் குரு எனக்கு சொல்லித் தரவே இல்லை.

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்