கண்ணாடி

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

திலீப் குமார்


அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது.

பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. பழனியம்மாள், அருகிலிருந்த பெட்டியிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து அதிலிருந்த ஒருகிழிந்த கவுனைக் குழந்தைக்கு மாட்டினாள். காலை நேரத்து இதமான வெயிலில் குழந்தை சுகித்துச் சிரித்தது.

மரத்தைச் சுற்றி அரைவட்டமாகப் படுத்திருந்த மாரியப்பனுக்கு அப்போதுதான் விழிப்புத் தட்டியது. மூட்டையை முடிந்து வைத்தபடியே பழனியம்மாள் அவனைப் பார்த்தாள். அவன் மெளனமாக எழுந்து உட்கார்ந்தான். பழனியம்மாளுக்கு ரொம்பவும் பசித்தது. நேற்று காலை சாப்பிட்டதுதான். அதன் பின்பு ஒன்றுமே இல்லை. தன் கிழிந்து போன போர்வையை விலக்கி வைத்துவிட்டு, அவசரமில்லாமல் சட்டைப்பையிலிருந்து ஒரு பீடியைத் துழாவி எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான் மாரியப்பன்.

புகையை உள்ளே இழுத்து ஊதியபோது அடுத்த கட்டு பீடிக்குத் தன்னிடம் சில்லரையில்ல என்கிற நினைப்பு அவனுள் அவசரமாய் வந்து போனது. இன்னும் ஒரே ஒரு பீடி மட்டும்தான் மீதி இருந்தது. என்றாலும், அவன் மனத்தில் ஒரு சன்னமான தெம்பு இருக்கத்தான் செய்தது. முதல் நாள் இரவு பழனியம்மாள் தனது சேலைத் தலைப்பில் பத்திரமாக முடிந்து வைத்த 25 காசு நாணயத்தை அவன் ஞாபகம் வைத்திருந்தான்.

தெரு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெருவை மிக உற்சாகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. அது விரைவில் பசித்து உணவுக்காக அழும் என்று எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்தாள், பழனியம்மாள்.

மாரியப்பன் பீடியை கடைசியாகத் தாபத்தோடு இழுத்து வீசிவிட்டு இருமினான். தொடர்ந்து, வாய் நிறைய எச்சிலையும் கோழையையும் திரட்டித் தூர உமிழ்ந்துவிட்டு எழுந்தான்.

பழனியம்மாள் தனக்குள் ஆழ்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

மாரியப்பன் தன் முகத்தை நன்றாகக் கழுவி, தனது அழுக்கு வேட்டியின் தலைப்பால் துடைத்தபடி மரத்தடிக்கு வந்தான். பெருக்கி முடித்துவிட்டுப் பழனியம்மாள் அமைதியாகக் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரத்தைச் சுற்றியிருந்த இடம் இப்போது சுத்தமாகக் காட்சியளித்தது. சுவரோரம் இரண்டு பெரிய ஜாதிக்காய்ப் பெட்டிகள் இருந்தன. முதல் பெட்டியின் மேல் மூன்று மண்சட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பெட்டி, மேல்பலகையே இல்லாமல் இருந்தது. அதனுள், இரண்டு மூன்று சிறியதும் பெரியதுமான துணி மூட்டைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி, கழுத்துடைந்த ஒரு கருப்புப் பானை இருந்தது. அதனருகில் பெரிய தகரப் பீப்பாய் ஒன்றும் இருந்தது. பீப்பாயில் முக்கால்வாசிக்கு மேல் தண்ணீர் சலனமற்று இருந்தது. நீரின் மேல், மரத்திலிருந்த விழுந்த சின்ன இலை ஒன்று அசையாமல் மிதந்து கொண்டிருந்தது.

மாரியப்பனுக்கும் ரொம்பப் பசித்தது. தன் மனைவியின் அருகில் வந்து அவனும் உட்கார்ந்துகொண்டான். பின், நயமாகப் பேச்சை ஆரம்பித்தான்.

‘டாத்தண்ணிக்கு ஏதாவது வளி பண்ணுவியா ? ‘

‘நா என்னத்தெ வளி பண்றது ‘ நீயே பண்ணு. ‘

ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தபின் மீண்டும் மாரியப்பனே பேசினான்.

‘செரி, போச்சாது போ, காசு எதனாச்சும் குடு புள்ளே. ‘

‘ஏது காசு ‘ ‘

‘சும்மா யாரெ ஏமாத்தறே. நேத்து ராத்திரி முடிஞ்சுவைச்சு நாலணா மறந்து போச்சா ? ‘

‘ஓ அதுவா ‘ அது தீந்தது எப்போ ‘ காலைலெயே கொழந்தைக்கு டா வாங்கிக் குடுத்தாச்சு. மிச்சம் அஞ்சு காசு. அதுக்குப் பொகைலெ வாங்கியாச்சு. ‘

‘நெசமாலுமா ? ‘

‘நெசமாத்தான். ‘

மாரியப்பன் அவளை நம்பாதவனாக, ‘இல்லே பொய்யீ… இ…இ ‘ என்று நீட்டி இளித்தான். மாரியப்பனுக்கு மேல் வரிசையில் நடுப்பல் விழுந்துவிட்டது. தன் கணவனைப் பார்த்தபோது பழனியம்மாளுக்குப் பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. மறுகணம், இவளது பசியும் எரிச்சலும் கோபமுமாய் வெளிப் பட்டன.

‘ஆமா ‘ பொய்யீ….இ..இ…இ ‘ எப்பப் பார்த்தாலும் இப்படியே இளி,பல்லுப் போன கொரங்கு மாதிரி. உருப்படியா ஒண்ணும் செய்யாதே ‘ ஆம்பிளையெப்….. பாரு, ஆம்பிளையெ. ‘

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாரியப்பன் சிரிப்பதை உடனே நிறுத்திக் கொண்டான். அடுத்த கணம் ஆவேசம் வந்தவனாய், பாய்ந்து எழுந்து ஆக்ரோஷமான குரலில் ஒரு கொச்சையான வசையைக் கூவிக்கொண்டே பழனியம்மாளின் மார்பில் எட்டி உதைத்தான். ‘ஐயோ ஐயோ ‘ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தனது நீட்டிய கால்களுக்கிடையே கவிந்து கொண்டாள் பழனியம்மாள். அவன் அவளை முதுகில் மிதித்தான். இம்முறை பழனியம்மாளின் அலறல் முன்பைவிட உரக்கக்கேட்டது. இவனை அது என்னவோ செய்திருக்கவேண்டும். ஆவேசம் கூடியவனாய் அவளருகில் மண்டியிட்டு அவள் முதுகில் ஒரு குத்துவிட்டான். பழனியம்மாள் மீண்டும் கதறினாள். இவன் மீண்டும் அவளைக் குத்தினான். பழனியம்மாள் அவனை அசிங்கமாகத் திட்டிக்கொண்டே கதறினாள். இவன் மறுபடியும் குத்தினான். பிறகு, தொடர்ந்து வெறியுடன் அவளைக் குத்திக் கொண்டேயிருந்தான்.

பயத்தில் குழந்தை வாயைப் பிளந்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தது. மாரியப்பன் ஒருவாறாக அடித்துக் களைத்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. முகத்தைத் துடைத்துக் கொண்டான். தனது கடைசி பீடியைப் பற்றவைத்தான். கண்களையும் நெற்றியையும் சுருக்கி, புகையை நிறையவே இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இவர்களை வேடிக்கை பார்த்த கூட்டம் மெல்லக் கலையத் துவங்கியது.

மணி இரண்டைத் தாண்டிவிட்டது. தெரு அமைதியாகக் காய்ந்து கொண்டிருந்தது. பழனியம்மாள் அடிவாங்கிய களைப்பில் உறங்கிப் போயிருந்தாள். மாரியப்பனும் சற்றுத்தள்ளி உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தை பசியாலும் பயத்தாலும் குழம்பிப் போயிருந்தது.

சிறிது நேரம் கழித்து, குழந்தை பழனியம்மாளின் தோளை உலுக்கி எழுப்பியது. விழித்து எழுந்த பழனியம்மாள் ஒரு கணம் குழம்பினாள். எதிரில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்தது என்றாலும், நிதானமாகத் தனது கொண்டையை அவிழ்த்து உதறினாள். பழனியம்மாளின் தலைமுடி மிக நீளமாய் இருந்தது. பின், கைகளை உயர்த்தித் தலையை நன்றாக அழுந்த வருடி, முடியை இறுக்கி இணைத்து, கொண்டையை மீண்டும் முடிந்து கொண்டாள். இவள் கொண்டை முடிகிறவரை பொறுமையாகக் காத்திருந்த அந்தச் சிவப்பான பிராமணப் பெண் இவளைப் பார்த்து ‘ஏம்மா, கொஞ்சம் பாத்திரமெல்லாம் ஈயம் பூசணும், பூசித் தர்றயா ? ‘ என்று கேட்டாள். அந்தப் பெண் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். பழனியம்மாளின் நீளமான கேசத்தை அவள் ஏக்கத்தோடு பார்த்தாள்.

‘ஓ ‘ பூசித் தர்றேனுங்க ‘ எவ்வளவு பாத்திரமுங்க ? ‘

‘என்ன ஒரு இருபது, இருபத்தஞ்சு இருக்கும். ‘

‘செரி, கொண்டுவாங்க. ‘

‘கொண்டுவர எல்லாம் முடியாது. நீதான் வந்து எடுத்துக்கணும். எடுத்துட்டு வர ஆளில்லை, அதனாலேதான். ‘

‘செரி, நம்ம வூடெங்கங்க ? ‘

‘கிட்டக்கத்தான் ‘ அடுத்த தெருதான். ‘

‘செரி, இருங்க. நானே உங்களோட வர்ரேன். ‘

பழனியம்மாள் அந்தப் பெண்ணோடு அடுத்த தெருவிற்கு நடந்தாள். தெரு, மிகவும் களைத்துப் போய் உறங்கத் துவங்கியிருந்தது. வழியில் இவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அந்தப் பெண் பழனியம்மாளைவிட ஒரு கஜம் முன்னால் தள்ளியே நடந்தாள்.

அந்தப் பெண்ணின் வீடு, நிறைய பேர்களடங்கிய குடும்பம் வசிக்கிற ஒரு சாதாரணமான, ஆனால் பெரிய வீடு. பழனியம்மாளை வீட்டின் சந்து வழியாக வரச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் முன் கதவு வழியாக உள்ளே சென்றாள். இவள் அந்த நீண்ட சந்தைக் கடக்க ஆரம்பித்தாள்.

வீட்டின் உள்பக்கத்திலிருந்து ஒரு அறை சந்தைப் பார்த்த மாதிரி இருந்தது. திறந்திருந்த அதில் பெரிய நிலைக்கண்ணாடி பதித்த பீரோ ஒன்றும் இருந்தது. பழனியம்மாள் அதைக் கடந்த போது இவள் பிம்பம் அதில் விழுந்தது. இவள் சட்டென்று, கண்ணாடியில் முழுதாய் விழுந்த தனது உருவத்தைக் காண நின்றாள். இவள் இதுவரை தன்னை முழுதாகப் பார்த்துக் கொண்டதே இல்லை.

பழனியம்மாளுக்குப் பகீரென்றது. அந்த உருவம் ஒல்லியாய்க் களைத்து காணப்பட்டது. அதன் இடது கண்ணுக்குக் கீழே இருந்த மச்சம் அதை இன்னும் கோரமாக்கியது. கண்கள் எதையோ, எப்போதும் தேடிக்கொண்டிருப்பவையாகக் காட்சி அளித்தன. இரக்கமற்ற காலம் உடலை தின்றுவிட்டிருந்ததோடு, மனத்தின் யெளவனத்தையும் திருடிச் சென்றுவிட்டிருந்தது. அந்த ஒரு கணத்தில், வாழ்க்கையே தன்முன் சுருண்டு, விரிவதாய் இவள் உணர்ந்தாள். அந்நிமிஷத்தின் சிந்தனையற்ற மெளனம் அவளை வதைத்தது. என்றாலும், பழனியம்மாள் அதில் லயித்துத்தான் போனாள். ஓரிரு கணங்களுக்குப் பின் அவள் நகர்ந்து சந்தைக் கடந்தாள். அந்தப் பெண் இவளுக்காகக் காத்திருந்தாள். இப்போது அவள் கண்ணாடி அணிந்திருக்கவில்லை.

சிறிது நேரத்தில் பாத்திரங்களைச் சுமந்தபடி மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள் பழனியம்மாள். அந்தப் பெண்ணிடம் கூலிபேசி, இரண்டு ரூபாயை முன்பணமாகவும் பெற்று வந்திருந்தாள்.

முதலில் எதிர் சாரியிலிருந்த டாக்கடையிலிருந்து குழந்தைக்கு இரண்டு பன்னையும் ஒரு டாயையும் வாங்கிக் கொடுத்தாள். தானும் ஒரு டாயை வாங்கிக் குடித்தாள். வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக்கொண்டாள். மறக்காமல் மாரியப்பனுக்காக ஒரு கட்டு பீடியை வாங்கி வைத்தாள். ‘நாடார் மளிகை ‘ யிலிருந்து அரிசி வாங்கிவரக் குழந்தையை அனுப்பியபின் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

வழக்கமாகப் பறிக்கிற இடத்தில் குழியைப் பறித்தாள். குழி நிறையக் கரியை அடுக்கி நெருப்பு மூட்டினாள். பின் பெட்டியிலிருந்து, ஊதுகுழல், ஈயம், நவசாரம், இடுக்கி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள். திரும்பிவந்த குழந்தையிடம், நெருப்பை ஊதச் சொன்னாள். பிறகு பாத்திரங்களை ஒவ்வொன்றாக மெதுவாகக் கழுவ ஆரம்பித்தாள். மாரியப்பன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக்கொண்டிருந்தான். அவனையே இவள் வெறித்துக் கொண்டிருந்தாள். இவள் கோபம் தணிந்துகொண்டிருந்தது.

மணி நான்கானபோது, மாரியப்பன் விழித்தான். நெருப்பு நன்றாகக் கனிந்து, சிவப்புப் புள்ளிகளாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. பழனியம்மாள் பாத்திரங்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். மாரியப்பன் ஒரு முறை எல்லாவற்றையும் கண்களைச் சுழற்றிப் பார்த்தான். பின், எழுந்து சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்து நெருப்பின் அருகில் உட்கார்ந்துகொண்டான். துடைத்து வைத்த பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய குண்டானை இடுக்கியால் பிடித்து நெருப்பின் மீது வைத்தான். பாத்திரத்தைச் சுழலவிட்டு, அது முழுதும் சூடேறியபின், ஒரு துணியால் நவசாரத்தைத் தொட்டுப் பாத்திரத்தின் உள்பாகமெங்கும் துடைத்தான். நெருப்பின் சூட்டால் நவசாரத்தின் துவர்ப்பான நெடியும் ஆவியும் அந்த இடமெங்கும் பரவியது.

பழனியம்மாள், பீடிக்கட்டை இவன் பக்கம் நகர்த்தினாள். இவன் அவளைப் பார்க்கக் கூசி முகத்தைத் திருப்பி ஒரு பீடியை உருவிப் பற்றவைத்துக் கொண்டான். ‘ஏய் ‘ ஜெகதீஸ்உ ‘ போய் ஒங்கப்பனுக்கு ஒரு டா வாங்கிட்டு வந்து குடுடி ‘ என்றாள் அவள். குழந்தை உற்சாகமாகக் குதித்து ஓடியது. சுமார் ஏழு மணி வரை இவர்கள் ஒன்றுமே பேசாமல் வேலையை முடித்தார்கள். இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த நெருப்பின்மீது சோற்றுக்கு உலை வைத்தாள் பழனியம்மாள். பின், தலைப்பைச் சுருட்டி தலையில் பொருத்தி அதன் மேல் பாத்திரங்களை எடுத்து வைக்க ஆயத்தமானாள். அதற்குள் மாரியப்பன் எழுந்து பாத்திரங்களை எடுத்து அவள் தலைமேல் ஏற்றிவைத்தான். பழனியம்மாள் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையைச் சத்தத்தோடு உமிழ்ந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

பழனியம்மாள் திரும்பி வந்தபோது மாரியப்பன் ஜெகதீஸ்வரிக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.

நகராட்சிக் குழாயில் வழக்கமாக அந்த நேரத்தில் மட்டும் வருகிற தண்ணீர் வந்ததும், மாரியப்பன் குளிக்கச் சென்றான். பழனியம்மாள் அவனுக்கு முதுகு தேய்த்துவிடப் போனாள். அவனுடைய முதுகுத்தண்டில் அழுக்கு நிறையவே சேர்ந்திருந்தது. சதையே இல்லாமல் இருந்த, அவன் முதுகைத் தேய்த்துவிடும் போது அவனது விலா எலும்புகள் இவள் கையைக் குத்தின. இவள் அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். தானும் குளித்துவிட்டு வந்த பின்பு, ‘ஜெகதீஸ்உ ஒங்கப்பனே கூட்டிட்டுச் சாப்பிட உக்காருடி ‘ என்று அவனைப் பூடகமாக அழைத்தாள் பழனியம்மாள். மூவரும் சாப்பிட அமர்ந்ததும், குழந்தை மட்டும் ஆர்வமாய்ச் சாப்பிட்டது. இவர்கள் மெளனமாகவே சாப்பிட்டு முடித்தார்கள்.

எச்சில் பாத்திரங்களைக் கழுவிவிட்டு வந்தபோது மணி பத்துக்குமேல் இருக்கும். குழந்தை அப்படியே உறங்கிப்போயிருந்தது. பழனியம்மாள் படுப்பதற்காக மரத்தடியைச் சுத்தம் செய்து, தரையெங்கும் நீரைத் தெளித்தாள். மண்ணுக்குள் ரகசியமாய்ப் புதைந்திருந்த தகிப்பு, நீரை ஆர்வமாய் உறிஞ்சிக் கொண்டது. திடாரென்று காற்றில் வெப்பம் படர்ந்து, பின் மெல்லக் குளுமை பரவியது. பழனியம்மாள் வழக்கம்போல், அதிகம் கிழிபடாத சேலையை எடுத்து மரத்தைச் சுற்றி ஒரு மறைப்பை ஏற்படுத்தினாள். நைந்துபோன பாயில் குழந்தையைக் கிடத்திவிட்டு மற்றொரு சேலையைத் தனக்கு விரித்துக் கொண்டாள். பிறகு, துணி மூட்டைகளில் ஒன்றை எடுத்து, தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுக்க ஆரம்பித்தாள்.

சுவரோரமாகச் சாய்ந்திருந்த மாரியப்பன் பீடியைத் தூர எறிந்துவிட்டு, மெல்ல பழனியம்மாளை நெருங்கினான். அவள் இவனுக்கு முதுகைக் காண்பித்துப் படுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சில கணங்களுக்குப்பின் மாரியப்பன் ஆரம்பித்தான்.

‘எம்மேலே கோவமா புள்ளே ? ‘

‘ம்…ஹ்உ…ம் ‘

‘பின்னே ? ‘

‘….. ‘

‘தூக்கமா ? ‘

‘ம்…ஹ்உ…ம் ‘

‘பின்னே ? ‘

‘……. ‘

பழனியம்மாள் பேச மறுத்தாள். மாரியப்பன் மெல்ல அவளுடைய கைகளை வருடினான்.பின் மெதுவாக அவளைத் தழுவித் தன் பக்கம் திருப்பி அவளது உதடுகளில் முத்தமிட்டான். பழனியம்மாள் சலனமற்றுக் கிடந்தாள். கண்ணாடியில் முழுதாய்த் தெரிந்த தன் உருவத்தை நினைத்துக் கொண்டாள். திடாரென்று, இரண்டாவது முறை பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கச் சென்றபோது அந்த நிலைக்கண்ணாடியிருந்த அறை மூடப்பட்டிருந்தது என்பது ஞாபகம் வந்தது.

அவள் விலகிப் படுத்தாள்.

Series Navigation

திலீப் குமார்

திலீப் குமார்

கண்ணாடி

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

அசோகமித்ரன்


டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால் அந்தப் பூட்ஸைப் போட்டுக்கொள்ளும்போதே சுண்டுவிரல் வலித்தது. அரை மைல் நடந்து, நகர ஆரம்பித்துவிட்ட பஸ் பின்னால் ஓடி அதில் தொத்திக் கொண்டதும் வலி பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.

இவ்வளவிற்கும் அந்த பூட்ஸ் நான் குறைந்தது இரண்டாண்டு காலம் தினமும் போட்டுக்கொண்டு திரிந்ததுதான். அப்புறம் ஐந்தாறு இண்டர்வியூக் காலங்களில் அணிந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நான் வேலையை விட்டு ஒருவருடம் ஆவதற்குள். அப்போதெல்லாம் சுண்டுவிரல் வலித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை வேலை கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பு– மன நிலையினால் உடலின் மறு கோடி வலி உரைக்காமல் இருந்திருக்கலாம். இப்போதோ இந்த வேலைக்கு நான் பொருத்தம், என்னுடைய திறமைகள் இவர்களுக்கு ரொம்பப் பயனுள்ளதாகத் தோன்றும், இந்த வேலை கிடைத்தால் கடைசிப் பையனுக்கு டான்ஸில் ஆபரேஷன் உடனே ஏற்பாடு செய்துவிடவேண்டும் என்றெல்லாம் மனதில் தோன்றுவது கிடையாது. யாராவது ஓடிவந்து ‘நீ உடனே ஒரு வேலை கேட்டு விண்ணப்பம் எழுதிப் போடு ‘ என்றால் அந்தப் பணியை எப்படியெல்லாம் ஒத்திப்போட முடியுமோ அப்படியெல்லாம் செய்வேன். பார்க்கப் போனால் விண்ணப்பம் எழுதியே ஆகவேண்டும் என்று நான் காகிதமும் பேனாவுமாக உட்கார்ந்துகொண்டால்கூட ‘அன்பார்ந்த ஐயாவுக்கு ‘ மேல் எழுத்தே ஓடாது. ஆனால் பூட்ஸ் மட்டும் நன்றாக வலிக்கிறது.

பூட்ஸ் அழுத்தி வலிக்கிற காலும் தொளதொள கோட்டும் ரெக்ஸைன் கைப் பையுமாக அமைந்தகரை மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். ஆவடி என்னும் இடம் சென்னைக்கு வடக்கே (அல்லது வடமேற்கே) இன்னும் வெகு தூரத்தில் இருந்தாலும் புது ஆவடி ரோடு அந்த மார்க்கெட்டுக்கும் முன்னாலேயே தொடங்குகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தேன். ஆதலால் பஸ் வந்த வழியிலேயே சிறிது தூரம் நடந்து வந்தேன். கண்ணில் பட்ட முதல் டாக்ஸியை நிறுத்தினேன். நான் போக வேண்டிய இடத்தை முதலிலேயே சொல்லி ‘இந்த வண்டி வராது ‘ என்று பதில் கிடைத்துத் திண்டாடிய நினைவுகள் நிறைய உண்டு. ஆதலால் ஒன்றுமே சொல்லாமல் கணப்போதில் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மீடர் போடப்பட்டது.

‘எங்கே போகணும் ? ‘

‘புது ஆவடி ரோடு. ‘

‘எங்கே ? ‘

‘டிரேட் ஃபேர். உலக சந்தை ஆபீஸஉக்கு. ‘

வண்டி முடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே முழுக்கத் திரும்ப இருந்தது.

‘இங்கே எங்கே போறீங்க ? புது ஆவடி ரோடு அந்தப் பக்கமில்லே இருக்கு ? ‘

‘நீ எங்கே போகணும் ? புதுசா எக்ஸிபிஷனுக்குக் கட்டிட்டு இருக்காங்களே, அங்கத்தானே ? ‘

‘ஆமாம். ஆனா அது புது ஆவடி ரோடில்தானே இருக்கு. ‘

‘ஆமாம் சாமி. அதுக்கு இந்தப் பக்கந்தானே வழி. ‘

‘புது ஆவடி ரோடு அங்கே பச்சையப்பாஸ் காலேஜ் கிட்டேனாப்பா தொடங்கறது ? ‘

‘எக்ஸிபிஷன் இந்தப் பக்கம் சாமி. நான் அங்கேந்து இப்பத்தானே வாரேன். ‘

‘நான் எக்ஸிபிஷனாண்டை போகலை. ஆபீஸஉக்குப் போகணும். அது புது ஆவடி ரோடிலேதான் இருக்கு. ‘

எதிரே பூதாகாரமான லாரி ஒன்று நின்று கேவலமாக ஹார்ன் அடித்தது.

‘எக்ஸிபிஷன் ஆபீஸஉ எக்ஸிபிஷனண்டை இல்லாமே எங்கேயிருக்கும் சாமி ? நான் இப்போ அங்கேந்துதான் வாரேன்னு சொல்லறேன். ‘

‘அதெல்லாம் தெரியாதப்பா. புது ஆவடி ரோடுன்னா புது ஆவடி ரோடுதான். ‘

இப்போது எங்கள் பின்னால் வரிசையாக இரு பஸ்கள், மற்றும் கார்கள் மாட்டு வண்டிகள் எல்லாம் நின்றுகொண்டிருந்தன.

‘நீ போப்பா. புது ஆவடி ரோடு போன்னா போயேன். ‘

வண்டி சீறிக்கொண்டு கிளம்பி அரை நிமிஷத்திற்குள் புது ஆவடி ரோடு தொடக்கத்திற்குச் சென்றடைந்து நின்றது. ‘இப்போ எங்கே போகணும் ? ‘

‘நீ இந்த ரோடிலேயே போயிண்டிரு. நான் சொல்லறேன். ‘

டாக்ஸி வேகமாகப் போய்க்கொண்டேயிருக்க நான் பதட்ட நிலையில் சீட் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு சாலை இருபுறங்களிலும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். டாக்ஸி ஒரு மைலுக்கு மேலாகப் போயிருக்கும். நிறைய வீடுகள் வந்தன. காரியாலயமாக ஒன்றும் தட்டுப் படவில்லை. இந்தத் தேடலில் டாக்ஸி டிரைவரின் ஒத்துழைப்புக் கிடையாது என்கிற சூழ்நிலை. திடாரென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்து எனக்குப் பகீரென்றது. முன்பு ஒரு சமயம் வேறொரு காரியாலயத்திற்கு ஹாடோஸ் சாலை என்று விலாசம் கொடுத்திருந்தது. ஒரே ஃபர்லாங்கு நீளமிருக்கும் ஹாடோஸ் சாலையில் ஒரு மணி நேரம் அலைந்து திரிந்த பிறகு அந்தக் காரியாலாயம் ஹாடோஸ் சாலையில் பிரிந்து போகும் ஒரு சந்துக் கோடியில் இருந்தது தெரிய வந்தது. அதேபோல இந்த உலகச் சந்தையும் ஒரு சந்தின் கோடியில் காரியாலயம் அமைத்துக் கொண்டிருந்தால் ?

திடாரென்று வீடுகள் முடிந்து சாலை ஒரு மேட்டில் ஏறி ஒரு திறந்தவெளிப் பிரதேசத்தில் திரும்பியது. அப்போது டாக்ஸியிலிருந்து பார்த்ததில் உலகச் சந்தை விளம்பரங்கள் எல்லாவற்றிலும் காணப்பட்ட கோபுரம் வெகுதூரத்தில் தெரிய வந்தது. ஆனால் புது ஆவடிச் சாலை அதை நோக்கிச் செல்லவில்லை. ‘இது புது ஆவடி ரோடுதானே ? ‘ என்று கேட்டேன். நான் கேட்டது என் காதுக்கே சரியாகக் கேட்கவில்லை.

இன்னும் ஒரு மைல் சென்றபின் டாக்ஸி மீண்டும் நின்றது. ‘இப்படியே போனா ஆவடிக்குப் போகலாம். ஆனா எக்ஸிபிஷனாண்டை போகமுடியாது. ‘

நான் அதற்குள் என் கலவர நிலையிலும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டிருந்தேன். ‘சரி எக்ஸிபிஷனுக்கே போங்க. அங்கே போய்க் கேட்டுண்டு போகலாம். ‘

டாக்ஸி புதிதாகப் போடப்படும் மிக அகலமான சாலையில் திரும்பியது. பெரிய சரளைக் கற்களைப் போட்டு சமதளமாக்கியிருந்தார்கள். இன்னும் தார் போடவில்லை.

டாக்ஸி கடகடவென்று சப்தமெழுப்பிக்கொண்டு மெதுவாக முன்னேறியது. சரளைக் கற்கள் சக்கிரத்தடியில் அழுந்தித் தெறித்து விழுந்தன. கோபுரம் சிறிது சிறிதாகத் தோற்றம்கொள்ள ஆரம்பித்தது. அத்துடன் இன்னும் பல கட்டிடங்கள் புதுமையான விநோதமான உருவங்களில் எழுப்பப்படுவதும் தெரிந்தது. இன்னும் இரு வாரங்களில் சந்தை தொடங்கியாக வேண்டும். ஏற்கெனவே செய்து முடித்த வேலை மலைக்க வைக்கும்படியாக இருந்தது. அதே நேரத்தில் இன்னும் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்க வேண்டும் என்றும் தோன்றிற்று. எவ்வளவு லட்சக் கணக்குச் செலவில் எவ்வளவு ஆயிரம் பேர் எவ்வளவோ நாட்களாகச் செய்து வரும் விவரம் எனக்கு ஒழுங்காக அறிந்துகொள்ள முடியவில்லை. அந்தக் காரியாலயம் எங்கே என்றுகூடச் சரியாகத் தெரியாது.

சந்தை முன்வாசல் எதிரே டாக்ஸி நின்றது. முன் வாசலுக்கு முன்னே, சாலைக்கு மறுபுறத்தில் ஒரு புது தனிக் கட்டிடம். போர்டெல்லாம் ஒழுங்காக மாட்டியிருந்தார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் அங்கே தோட்டம் போடப்பட்டுச் சில செடிகளில் பூக்கள்கூடத் தோன்றியிருந்தன.

என் ரெக்ஸைன் பையைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினேன். நிற்கவே முடியாமல் பூட்ஸ் வலித்தது. ‘உன் டிரிப்புக்கு முன்னாலே இதே இடத்திலேந்துதான் நான் வாரேன். ‘ புது ஆவடி ரோடு என்று நான் பிடிவாதமாக இல்லாதிருந்தால் எப்போதோ இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். செலவு மிகவும் குறைந்திருக்கும்.

டாக்ஸியை அனுப்பிவிட்டு அந்தக் காரியாலயம் முன்னால் நின்றேன். கல்யாணத்திற்காகத் தைத்த கோட்டும் காலை நசுக்கும் பூட்ஸஉம் வேஷமணிந்து கொண்டு இங்கு வந்து நின்றது பொருத்தமாகப் படவில்லை. குளிருக்கு அடக்காமாயிருந்தது என்பதைத் தவிர.

காரியாலயத்திற்குள் சென்றேன். தற்காலிகமாகக் கட்டப்பட்ட கட்டிடம். ஆனால் தடபுடலான மேஜை நாற்காலி, சோபாக்கள். சுவரில் பெரிய பெரிய வரைபடங்கள், போஸ்டர்கள். வரவேற்பறையில் ஒரு சோபாவில் சாய்ந்திருந்த ஒரு நபரைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஒரு கணத் தயக்கம். அந்த சோபாவிடம் சென்று ‘விளம்பர அதிகாரி எங்கேயிருக்கிறார் ? ‘ என்று கேட்டேன். அந்த ஆளின் கோட் துணிக்கும் டையின் தரத்திற்கும் நான் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசியிருக்க முடியாது. அவன் பதில் தராமல் சாய்ந்து கொண்டிருந்தான். நான் மீண்டும் கேட்டேன். ‘அங்கே கேளு, ‘ என்று அவன் ஹிந்தியில் சொன்னான். அவன் கைகாட்டிய திசையில் டெலிபோன் ஸ்விட்ச்போர்டு இருந்தது. நான் அங்கே போய் நின்றேன். சோபா ஆளும் எழுந்து வெளியே போய்விட்டான். நான் இன்னும் அவனை ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன் என்று எண்ணியிருக்கலாம்.

ஒரு காரிடாரிலிருந்து ஒருவன் இரைந்துகொண்டே வந்தான். அவன் கையில் கத்தைக் காகிதங்கள் இருந்தன. டெலிபோன் ஸ்விட்சுபோர்டில் ஒரு சிறு வட்டப் பட்டை கிர்கிர்ரென்று சப்தமெழுப்பிக் கொண்டிருந்தது யாரோ பாவம், வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கவேண்டும்.

வந்தவன் ஒரு பித்தானைக் கீழே தள்ளி டெலிபோனைக் காதில் மட்டும் வைத்துக் கொண்டு கேட்டுவிட்டு இருகம்பிகளை இரு துளைகளில் நுழைத்தான். ஒரு கைப்பிடியை இருமுறை சுற்றி டெலிபோனைக் கீழே வைத்தான். ‘என்ன வேணும் ? ‘ என்று என்னைத் தமிழில் கேட்டான்.

‘விளம்பர அதிகாரியைப் பாக்கணும். ‘

‘எதுக்கு ? ‘

‘பாக்கணும் ‘

டாக்ஸி டிரைவருக்கு நான் ஏற்படுத்திய மனநிலையை இவனுக்கும் ஏற்படுத்திவிட்டேனோ என்று சந்தேகிக்க வைக்கும் ஒரு கண இடைவெளி.

‘இந்த காரிடாரிலே நேராப்போய் அஞ்சாவது கதவு. ‘

அந்த காரிடாரில் நடக்கும்போது நான் நொண்டுவதாக உணர்ந்தேன். டெலிபோன் ஆள், ‘அஞ்சாவது ரூம், அஞ்சாவது ரூம், ‘ என்று கத்தினான். முதல் நான்கு அறைகளுக்கு ஒரு பொதுத் தன்மை. ஐந்தாவது அறை ஏர்கண்டிஷன் செய்யப்படாமல் சாதாரணமாக இருந்தது. அந்த அறையில் உட்கார்ந்திருந்த விளம்பர அதிகாரியும் சாதாரணமாக, ஒரு வேளை அவரும் சுண்டுவிரலை நசுக்கும் பூட்ஸைப் போட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகப் படும்படி, உட்கார்ந்திருந்தார். அதிக விற்பனையாகும் தினசரிப் பத்திரிகைகள் பலவற்றை மேஜைமீது விரித்து வைத்துக் கொண்டு ஒரு சிவப்பு பென்சிலால் சில பகுதிகளைக் குறியிட்டுக் கொண்டிருந்தார். அப்பகுதிகள் இன்னும் பதினைந்து நாட்களில் தொடங்கப்போகும் உலகச் சந்தையின் விளம்பரங்கள்.

‘என்ன சார் வேணும் ? ‘ என்று தமிழில் கேட்டார்.

நான் விவரமாக சொன்னேன்.

‘எவ்வளவு வருடமாகப் பத்திரிகை வெளிவரதுன்னு சொன்னேள் ? ‘

‘இது அஞ்சாவது வருடம். இந்த நாட்டிலிருக்கிற முக்கியமானவங்க எல்லார் கைக்கும் இது போறது. ‘

‘என்ன சர்குலேஷன் ? ‘

நான் சொன்னேன். நாட்டில் முக்கியமானவர்கள் எண்ணிக்கை சிறிது குறைவாகத்தான் இருந்தது.

‘அடுத்த வாரம் வாருங்களேன். கேட்டுப் பார்க்கிறேன். ஸ்பெசிமன் காபியும் டாரிஃபும் கொடுத்துட்டுப் போங்கோ, ‘ என்றார்.

என்னிடம் அதற்கும் மேலும்கூட இருந்தது. உலகச் சந்தை சேர்மேனுக்கு விண்ணப்பம், விளம்பர அதிகாரிக்கு ஒரு தனிக் கடிதம். கடைசி ஆயுதமாக உபயோகிக்க வேண்டியது அது. அந்தக் கட்டத்தை அடைந்தாகி விட்டது என்றே எனக்குத் தோன்றிற்று. அவர் தன் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். ‘ஓகோ, உங்க பத்திரிகையிலே கோதண்டராமும் இருக்காரா ? எவ்வளவு நாளா வெளிவரதுன்னும் சொன்னேள் ? ‘ என்றார்.

நான் சொன்னேன். அவர் ஒருகணம் எதையோ ஞாபகப்படுத்திக் கொள்வதுபோலத் தோன்றினார். ‘ஏன் சார், இதுதானே மிஸ்டர் எஸ். ஆர். வாசுதேவனும் இன்னொருத்தரும் சேர்ந்து ஆரம்பிச்ச பத்திரிக்கை ? ‘ என்று கேட்டார்.

‘ஆமாம். ‘

‘வெரிகுட், வெரிகுட். மிஸ்டர் வாசுதேவன் எப்படி இருக்கார் ? ‘

நான் பதிலே சொல்லாமல் சமாளித்தேன். ‘வாசுதேவனும் நானும் சேர்ந்துதான் பாட்னாவிலே இருந்தோம். அவர் அங்கேயிருந்து டில்லிக்குப் போய் விட்டார். நான்தான் இடியட் மாதிரி மெட்ராஸ் வந்தேன். ‘

எனக்கு அவருடைய பூட்ஸ் பற்றி மறுபடியும் நினைக்கத் தோன்றியது.

‘வெரி எண்டர்பிரைசிங் டைப். எப்படியிருக்கார் ? ஜமாய்ச்சிண்டிருப்பாரே ? ‘

நான் எவ்வித அர்த்தமும் தோன்றாத ஒரு சிரிப்புச் சிரித்தேன். ‘ஆமாம் ‘ என்றேன்.

விளம்பர அதிகாரி தொடர்ந்து, ‘வெரி எண்டர்பிரைசிங் டைப். அவர் இருந்து கூடவா உங்கள் சர்குலேஷன் இப்படி இருக்கு ? ‘

இப்போது வெறுமனே சிரித்தேன்.

‘உங்களுக்கு வரவு செலவுக்குக்கூட கட்டிவராதே ‘ நீங்க என்ன பண்ணறேள் இதிலே ? ‘

நான் சொன்னேன். இம்மாதிரிக் கேள்விகளுக்கு என்றே நான் பதில் தயாரித்து வைத்து, நான்கைந்து ஆண்டுகளாக உபயோகித்து வருகிறேன். விஷயம் அவ்வளவு புரியவும் புரியாது, அவர்கள் மீண்டும் கேள்விகளும் கேட்கமாட்டார்கள்.

‘வாசுதேவனும் நானும் சேர்ந்து பாட்னாலே இருந்தப்போ அநேகமாத் தினமும் பாட்னா பத்தி எதாவது பேப்பர்லே வந்திண்டேயிருக்கும். ஒரு தடவை ஒரு ஆர்மி பார்ட்டிக்குப்போயிட்டு–காட், அன்னி ராத்திரி ஒரே ரகளையாப் போயிடுத்து. பிளாக்கவுட் வேறே. வாசுதேவனாலே நிக்க முடியலே, ஆனா ஒரு டாங்காவாலாவை அடிச்சுட்டான். அப்பல்லாம் நீங்க பொறந்திருக்கக்கூடமாட்டாங்க. சாயந்திரம் கிளப்புலே போய் உக்காந்துண்டா நானும் அவனும் எட்டு மணிக்குள்ளே அரை பாட்டில் விஸ்கி தீத்துடுவோம். எப்படியிருக்காரோ இப்போ ? நீங்க கடைசியா எப்போ பாத்தீங்க ? ‘

நான்கு ஏர்கண்டிஷண்ட் அறைகளுக்குப் பக்கத்திலேயே ஒரு சாதாரண அறையில் வேலை பண்ண வேண்டியிருந்த அந்த மனிதர் அந்தச் சூழ்நிலையில் அதற்கு முன்னர் இவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கவே மாட்டார் என்பது போல எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். வாசுதேவன் எங்கள் பத்திரிகையுடன் எப்போதோ துண்டித்துக் கொண்டுவிட்டதை நான் அவரிடம் சொல்லவில்லை. ‘அது ஒரு காலம். அந்த மாதிரி இனிமே வரப்போறதில்லை. அந்த நாளே வேறு, ‘ என்றார்.

அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். நான் சொன்னேன், ‘நீங்க சுலபமா ஒரு முழுப்பக்கம் எடுத்துக்கலாம். பின் அட்டைகூட எடுத்துக்கலாம். ‘

அவர் சந்தோஷம் தடைப்பட்டவராகத் தோன்றினார்.

‘இது மாசப் பத்திரிகைதானே, சார். நீங்க ஒரு இன்ஸர்ஷன் தான் தரமுடியும், ‘ என்றேன்.

‘ஆமாம், ‘ என்றார். பிறகு, ‘நீங்க ஒரு பத்துநாளைக்கு முன்னாலே வந்திருக்கக் கூடாதா ? அம்பதோட அம்பத்தொண்ணா ஒரு மாதிரி சமாளிச்சிருக்கலாம். இப்பல்லாம் சேர்மென் ஒவ்வொரு செலவு அயிட்டத்துக்கும் என்ன என்னன்னு கேக்கறார், ‘ என்றார்.

‘நாங்க உங்க ஃபேரை முழுக்க கவர் பண்ணறதா இருக்கோம். ‘

‘அது சரி, அது வந்து, சேர்மென் கிட்டே காண்பிச்சு நீங்க அடுத்த இஷ்யூ கொண்டு வரத்துக்குள்ளே ஃபேரே முடிஞ்சிருக்கும். ‘

‘அதுக்குத்தான் இப்பவே வந்தேன். ‘

அவர் இப்போது முற்றிலும் பழைய மாதிரியே ஆகியிருந்தார். அவர் சொன்னார்; ‘நீங்க நாளைக்கு வாருங்கோ, உங்களுக்கு ஒரு பாஸ் வாங்கித் தரேன். ‘

‘பாஸா ? ‘

‘ஆமாம். ஃபேரேல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு. முடிஞ்சா இனாகரேஷனுக்கு இன்விடேஷன் அனுப்பறேன். அந்த லிஸ்டெல்லாம்கூட ஒருமாதிரி முடிச்சாச்சு. இருந்தாலும் பாக்கறேன். ‘

‘எங்களுக்கு இருபத்தெட்டாந்தேதி வரைக்கும் கூட பிரஸ்ஸிலே ஃபாரம் ஓடிண்டிருக்கும். நீங்க இருபத்தைஞ்சாந்தேதி ரிலீஸ் ஆர்டர் கொடுத்தாக்கூட பின் ராப்பர்லே சேத்துண்டுடலாம். ‘

‘நான் சேர்மனைத்தான் கேக்கணும். ஒவ்வொண்ணுக்கும் அவரைத்தான் கேக்க வேண்டியிருக்கு. அதான் ப்ராப்ளம். ‘

இப்போது அவர் ஒரு தனி அறையில் உட்காரும் அதிகாரியாகக் கூடத் தோன்றவில்லை.

‘நாளைக்கு வாங்கோ நீங்க. நான் பாஸ் வாங்கித் தரேன். ‘

நான் எழுந்து நின்று கொண்டேன். அவரும் எழுந்து என் கையைப் பலமாகக் குலுக்கினார். அப்போது நானும் அவரும் ஒருமாதிரி இருந்தோம்.

‘வாசுதேவனுக்குச் சொல்லுங்கோ, நான் அவரை ரொம்ப விசாரிச்சேன்னு, ‘ என்றார்.

எனக்கு வாசுதேவனைக் கொஞ்சமும் தெரியாது. ‘சரி, ‘ என்றேன்.

அவர் மீண்டும் தினசரிப் பத்திரிகைகள் குவியலில் மூழ்கினார். நான் காரிடாருக்கு வந்து, நான்கு ஏர்கண்டிஷண்ட் அறைகளைத் தாண்டி வரவேற்பறையையும் கடந்து வெளியே வந்தேன். வெயில் சுளீரென்று அடிக்க ஆரம்பித்திருந்தது. நான் கோட்டைக் கழட்டி மடித்துக் கையில் தொங்கவிட்டுக் கொண்டேன். கால்வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. அந்தக் கட்டிடத்தின் வெளிப்புறமாகவே நடந்து அதன் பின்புறத்தை அடைந்தேன். ஒரு மூடிய கதவுக்குமேல் ‘ஆண்கள் ‘ என்று எழுதியிருந்தது.

Series Navigation

தமிழில் அசோகமித்ரன்

தமிழில் அசோகமித்ரன்