கண்ணகிக்குச் சிலை தேவையா?

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஜோதிர்லதா கிரிஜாகடைசியில் ஒரு வழியாய்க் கலைஞர் அவர்கள் முன்னர் முதலமைச்சாராக இருந்த போது மிகுந்த ஆர்வத்துடன் திறந்து வைத்த – ஆனால் இடையில் அதன் மேடையிலிருந்து அப்புறப் படுத்தப் பட்டு விட்டிருந்த – கண்னகியின் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட விருக்கிறது. ஆரவாரங்களுடனும், கொண்டாட்டத்துடனும் அந்தச் சிலை மீண்டும் அரங்கேறக்கூடும்.
முன்னாள் மாண்பு மிகு முதலமைச்சர் வைத்த கண்ணகியின் சிலையை அவருக்குப் பின்னர் பதவி யேற்ற மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜெயலலிதா கொஞ்ச காலம் கழித்து அப்புறப்படுத்தினார். இதற்குப் பல காரணங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்தன. தலைவிரி கோலமாய் ஒரு பெண் கோபாவேசத்துடன் கடற்கரைக்குப் பக்கத்தில் நிற்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதன்று என்று சோதிடம் சொல்லப்பட்டதும் அவ்வதந்திகளுள் ஒன்று. விபத்தில் சேதமடைந்ததால் அச் சிலை அகற்றப்பட்டதென்றும், வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதென்றும் முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா அண்மையில் கூறியுள்ளார்.
தாம் பதவ்¢ விலக நேர்ந்ததற்குப் பிறகு பதவிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் கண்ணகியின் அச்சிலையை அப்புறப்படுத்தியதில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மனக் கசப்பு. அதை ஒரு கவுரவப் பிரச்சினையாய் நினைக்கும் அவர் அதை மறுபடியும் அதே இடத்தில் பதிக்க எண்ணுகிறார்.
ஆனால், இந்தக் கட்டுரையில் நாம் எழுப்பப் போகும் கேள்வி கண்ணகிக்குச் சிலை தேவையா என்பதுதான். சிலை வைக்கிற அளவுக்கு அவள் அறிவாளியா? நெஞ்சில் ஈவிரக்கம் உள்ளவளா? பெண் என்பவள் ஆணைக் காட்டிலும் நெஞ்சில் அதிக ஈரம் உள்ளவள் எனும் இயற்கையை ஒட்டி நடந்து கொண்டவளா? இல்லையே!
இராமாயண, மகா பாரதக் கதைகளை அறிந்திருப்பது போல், கண்ணகி கதையையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருப்பவர்கள். சிலப்பதிகாரத்தைப் படிக்காவிட்டாலும் கண்ணகி கதை அவர்களுக்குத் தெரியும். (பல்லாண்டுகளுக்கு முன்னர் வந்த பி.யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா நடித்த “கண்ணகி” திரைப்படத்துக்கும், கலைஞரின் “பூம்புகாருக்கும்” நன்றி.)
கண்ணகி சிலையைப் பற்றி எழுதுகையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது. பிரபல வார இதழில் வந்தது. படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கண்ணகியின் சிலையருகே நின்று கொண்டு ஒரு கிராமவாசி புலம்புவார்: “போலீஸ்காரரு ஒரு பக்கம் கையை நீட்டுறரு. இந்தம்மா இன்னொரு திசையிலே கையை நீட்டுறாங்க. நான் எந்தப் பக்கம் போறது?” (வாசகம் மாறி யிருக்கக்கூடும். ஆனால் கருத்து இதுதான். கொஞ்சம் நகைச்சுவையும் இருக்கட்டுமே என்பதற்காக இதை நினைவு கூர்ந்தோம். அவ்வளவுதான். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)
நாம் எல்லாரும் அறிந்த கதையே யானாலும் கட்டுரையின் நோக்கம் கருதி அதன் மிக எளிய சுருக்கத்தை இப்போது பார்ப்போம்.
தன்னை விட்டுப் பிரிந்து மாதவியோடு வாழச் சென்று விட்ட கணவன் கோவலன் மாதவியோடு விளைந்த சச்சரவால் மறுபடியும் கண்ணகியிடம் திரும்பி வருகிறான். (எல்லாப் பெண்களையும் போல்) கண்ணகி அவனைத் திரும்ப ஏற்கிறாள். வறுமையின் காரணத்தால், அவள் தன் காற்சிலம்புகளில் ஒன்றைக் கோவலனிடம் கொடுத்து அதை விற்று வர அனுப்புகிறாள். அதை அவன் விற்க முயலும் போது மதுரை மன்னன் பாண்டியனுடைய மனைவியின் காற்சிலம்புகளில் ஒன்று காணாமற் போயிருந்ததால், திருடன் என்று சந்தேகிக்கப்பட்டுப் பிடிபடுகிறான். அரசியின் காற்சிலம்பு போன்றே அவன் வைத்திருந்ததும் இருக்கவே, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாய்க் கருதப் பட்டுக் கொல்லப்படுகிறான். செய்தி யறிந்த கண்ணகி சொல்லி மாளா ஆவேசத்துடன் தன் மற்றொரு கால் சிலம்புடன் பாண்டிய மன்னனைச் சந்தித்து, அரசவையில் தன் மற்றொரு சிலம்பை உடைத்து உள்ளே யிருந்த கற்களைக் காட்டுகிறாள். அரசியின் காற்சிலம்புகளில் ஒன்றில் இருந்தவை கண்ணகி தற்போது உடைத்ததில் இருந்த கற்களோடு ஒத்துப்போகின்றன. மற்றதில் இருந்தவையோ வேறு வகையான கற்கள். ஒன்றில் முத்துகளும், மற்றதில் மாணிக்கமும் இருக்க, அவள் கணவன் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப் படுகிறது. குற்ற உணர்வின் மிகுதியால் மன்னன், “யானே கள்வன்!” என்று புலம்பி மயங்கிச் சாய்கிறான். அக்கணமே அவனது உயிர் பிரிகிறது.
கண்ணகி பத்திரகாளி யாகிறாள். அவளுள் அடங்க மாட்டாத ஆத்திரம் பெருகித் ததும்புகிறது. தன்னுள் பொங்கிய அடங்கா ஆத்திரத்தில் அவள் மதுரையையே எரித்துச் சாம்பலாக்குகிறாள். ஆயிரக் கணக்கான மனிதர்கள் கருகிச் சாகிறார்கள். கண்ணகியின் சினம் நியாயமானதே. அவள் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளப்படக் கூடியவையே. ஆனால், தன் சொந்தத் துயரத்துக்காக ஓர் ஊரையே எரித்துச் சாம்பலாக்கவும், எண்ணற்ற உயிர்களைக் கொல்லவும் அவள் முற்பட்டது நியாயம்தானா? அவ்வாறு அவள் செய்தது முட்டாள்தனத்தின் உச்சமல்லவா? இப்படிப்பட்ட ஒரு முட்டாள் பெண்ணுக்குச் சிலை வைக்கலாகுமா?
சிலப்பதிகாரம் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லப் படுகிறது. அந்தக் களஞ்சியத்தால் பயனடைவதுடனும், அதன் இலக்கியச் செறிவுக்காகவும், கவிதை நயத்துக்காகவும் அதைச் சுவைப்பதோடு நாம் நிறுத்திக் கொள்ளுவதே சரியாக இருக்கும். எல்லாம் அறிந்த கலைஞர் ஒரு முட்டாள் பெண்ணுக்குச் சிலை வைத்துப் பெண்களாகிய எங்களை யெல்லாம் முட்டாள்களாக்க வேண்டாமென்று பெண்களின் சார்பில் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இத்தகைய முட்டாள் பெண்களுக்கு நம் புராணங்களிலும் பஞ்சம் இல்லை என்பது நமக்குத் தெரியும். (மகா பாரதத்தில்) மன்னன் திருதராஷ்டிரன் பிறவிக் குருடன் என்பதால் அவன் மனைவி காந்தாரி (அவ்னுக்குக் கண்களாக இருந்து உதவுவதற்குப் பதிலாக) அவனது வசதிக்குறைவைத் தானும் அனுப்பவிப்பதே பதிவிரதையின் இலக்கணம் என்று கருதித் தன் கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக்கொண்டாள்! நளாயினி என்கிற மற்றொரு முட்டாள் தொழுநோய் வாய்ப்பட்டிருந்த (நடக்க முடியாத) தன் கணவனை அவனது விருப்பத்துக்கிணங்க ஒரு பெரிய கூடையில் உட்காரத்தித் தன் தலை மீது வைத்துக்கொண்டு விலைமகளின் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்லுகிறாள்!!
காந்தாரி, நளாயினி, கண்ணகி அகிய மூவரும் சிறிய எண்ணிக்கையிலான எடுத்துக்காட்டுகள். ஆண்கள் படைத்த (புளுகு) இலக்கியங்களில் இத்தகைய பெண்கள் ஏராளமானோர்.
கண்ணகி என்றதுமே அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் “கற்புக்கரசி” எனும் பட்டம்தான் யாவர்க்கும் நினைவுக்கு வரும். அப்பட்டத்துக்குத் தகுதி பெறக் கண்ணகி என்ன செய்தாள்? “சோரம் போன” கணவனைத் திரும்ப ஏற்றுக்கொண்டாள். தன்னைத் தவிக்க விட்டு விட்டுப் போனவனையே நினைத்துக்கொண்டு வாழ்ந்தாள். மறு மணம் செய்து கொள்ளவோ, தானும் சோரம் போகவோ இல்லை. இந்த அளவுகோலின் படிப் பார்த்தால், நம் நாட்டுப் பென்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் என்கிற விழுக்காட்டிற்கும் மேல் “கற்புக்கரசி”ப் பட்டத்துக்குத் தகுதியானவர்களே. அப்பட்டம் கண்ணகிக்கு உரிய சிறப்பாய்க் கருதப் படுவதற்கும் எந்த நியாயமும் இல்லை!!!
பெண்களை எக்காலத்தும் அறிவுகெட்டவர்களாய் வைத்திருக்கப் பார்க்கும் இது போன்ற கற்பனை இலக்கியக் கதை மாந்தர்களைக் கொண்டாடுவதை நாம் நிறுத்துவோமாக!
புரட்சிச் சிந்தனையாளர், சமுதாயக் கண்ணோட்டமுள்ளவர், பெண்களின் பால் பெரும் பரிவு காட்டி, ஒரு பெண்ணைக்காட்டிலும் அதிக ஆத்திரத்தோடு ஆணாதிக்கத்தைச் சாடியவர் என்றெல்லாம் போற்றப்படுகிற தந்தை பெரியார் அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்த கலைஞர் அவர்கள் கண்ணகியின் சிலை விஷயத்தைத் தமது கவுரவப் பிரச்சினையாய்க் கருதுவாரெனில், அதை அருங்காட்சியகத்தில் வைக்கலாம். இவ்வாறு சிலை வைத்துப் பெண்களை அவமானப் படுத்த வேண்டாம் என்று பெண்களின் சார்பில் கேட்டுக்கொள்ளுகிறோம்..
. . . . . . . . .
jothigirija@vsnl.

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா