கணவனைக் கொல்லும் காரிகை

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


ஒரு காலைப் பொழுதில் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கும் போதோ, நல்ல மாலைப் பொழுதில் விளக்கு வைத்தபின், நீங்கள் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போதோ எவ்வித சலனமுமின்றி, ஒரு பூச்சி உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தால், அது சந்தேகமின்றி Praying mantis தான்.

நீங்கள் கிராமங்களில் தயிர் கடைவதைப் பார்த்திருக்கிறீர்களா ? வீட்டில் உள்ள ஒரு சிறு தூணைச்சுற்றி வளையம் போல இரண்டு கயிறுகள் இருக்கும். அவற்றின் நடுவில் மத்து இருக்கும். மத்து தயிர் இருக்கும் கலனில் இருக்கும். மத்தின் தண்டைச்சுற்றி ஸ்ப்ரிங் போல கயிறு சுற்றப்பட்டு இருக்கும். இந்த கயிற்றை முன்னும் பின்னும் இழுப்பதால், மத்து சுழன்று தயிர் கடைபடும். இந்த Praying mantis பூச்சிகளும் முன்னங்கால்களைத் தயிர் கடைவதைப் போல முன்னும் பின்னும் ஆட்டுவதால், தயிர் கடையும் பூச்சி என்பதும் ஒரு பெயர்!!!

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஏதோ கோவிலில் பக்தி சிரத்தையுடன் கைகூப்பி பிரார்த்தனை (Prayer) செய்வதைப் போல இருக்கிறதா ? அதனால்தான் இதற்கு Praying mantis என்று பெயர். இது Preying mantis என்றும் சொல்லப்படும். அதாவது இந்த பூச்சி வேட்டையாடுவதில் மகா சமர்த்து. அதற்குத் தோதாக, அவற்றின் முன்னங்கால்கள் உருமாறி இருக்கும். எல்லா பூச்சிகளுக்கும் முன்னங்கால், நடுக்கால், பின்னங்கால் என ஆறு கால்களும் ஒரே அளவில் இருக்கும். ஆனால் இந்த பூச்சிக்கு மட்டும் முன்னங்கால்கள் உருமாறி இருக்கும். அதாவது அவை சற்றே நீண்டும் வளைந்தும் இருக்கும். அந்த நீண்ட பகுதியில் இரம்பத்தில் இருக்கும் பற்களைப் போலவே வரிசையாக பற்கள் இருக்கும்.

இரையைப் பிடித்துத் தின்பதற்கு முன், எங்காவது பசுமையான இலையின் மீதோ, மரங்களின் பட்டையின் மீதோ, காய்ந்த குச்சிகளின் மீதோ, பரம சாதுவாக, ஒன்றுமே தொியாததைப் போல படுபாந்தமாய் உட்கார்ந்து இருக்கும். அதற்கேற்ப அவற்றின் நிறம் பசுமையாகவோ, பழுப்பாகவோ இருக்கும். எனவே இலைகளின் அல்லது மரப்பட்டைகளின் பின்னணியில் இருக்கும் இடமே தொியாமல் இருக்கும். இதற்கு Camouflage என்று பெயர்.

நல்ல சுவையான அப்பாவி இரை, மிக அருகில் வரும்போது பட்டென்று தாவி அவற்றைப் பிடித்துக்கொள்ளும். அந்த அப்பாவி இரை துள்ளுவதற்குக் கூட அவகாசம் தராமல், கழுத்தைக் கடித்து கொன்று விிடும். இதற்கு ஏதுவாக, இவற்றின் தலை முக்கோண வடிவில் தடித்த தாடையுடன் இருக்கும். அதுமட்டுமன்றி, பூச்சிகளிலேயே இதற்கு மட்டும்தான் தலை 180 டிகிரி சுழலும். ஆக இவர் சமர்த்தாக வேட்டையாடுவதால் Preying mantis என்றும் சொல்லப்படுகிறார்.

இவை Dictyoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Preying mantis களில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. இவையும் உலகின் அனைத்து வெப்பமண்டல நாடுகளிலுமே இருக்கும்.

கலவிக்குத் தயாராய் இருக்கும் பெண்பூச்சி, ஆண்பூச்சியைக் கலவிக்கு அழைக்கும். கொஞ்சம் விவரமான ஆணாக இருக்குமானால், நைசாக பெண்பூச்சியின் பின்புறமாக வந்து, அதன்மீது ஏறி கலவியில் இணைந்துவிடும். கொஞ்ச நேரத்தில் விந்தணுக்களைப் பெண்பூச்சிக்குள் அனுப்பிவிட்டு, இறங்கி ஓடிவிடும். கொஞ்சம் மதிமயங்கி, கலவி இன்பத்தில் மூழ்கி, தன்னையே மறந்துவிடும் ஆண்பூச்சி, தன்னை முழுமையாக மறந்துவிட வேண்டியதுதான்!! ஆம்!!! கண்ணிமைக்கும் நேரத்தில், ஆண்பூச்சி விந்தணுக்களைப் பெண்பூச்சிக்குள் அனுப்பவில்லை என்றாலும் கூட, பெண்பூச்சி ஆண்பூச்சியைக் கொன்று தின்ன ஆரம்பித்துவிடும். இங்கு ஒரு சுவாரசிய சமாச்சாரம் உள்ளது. கழுத்து கடிபட்டு, தலை துண்டான பின்னும், ஆண்பூச்சி பெண்பூச்சிக்குள் விந்தணுக்களை அனுப்பிவிட்டுதான் உயிரை விடும். பின்னர் பெண்பூச்சி, ஆண்பூச்சியின் உடலை சுவைத்து சாப்பிடும். இதுதான் பெண்பூச்சிக்குள் வளரும் கருக்களுக்கு புரத ஆதாரம்!!!

பொதுவாக பூச்சிகளைப் பொறுத்தவரை, மதுரை இராஜ்யம்தான்!! சிதம்பர இராஜ்யம் மிக மிக குறைவு (பூச்சி என்ன பூச்சி, மனிதர்களிலும்தான்!). இதை நாம் தேனீ, கரையான், இங்கு என எல்லா இடத்திலும் பார்த்தோம். எனவே பெரும்பாலான நேரங்களில், ஆண்பூச்சி பெண்பூச்சியின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரை விடும்.

தாய்மை என்பது எல்லா பெண் உயிரிக்கும் வாய்த்த, கிடைத்தற்கரிய பெரும்பேறு. ஆனால் அதைக்கூட ஒரு பெண்பூச்சி, ஆண்பூச்சியின் முதுகில் சுமத்திவிடும். ஆம்! அது இராட்சத நீர்நாவாய் (Giant water bug). மழைக்காலத்தில் நம் வீட்டிற்குக்கூட, இவர் அழையா விருந்தாளியாய் வந்திருப்பார்.

கலவியை முடித்தபின் பெண்பூச்சி, ஆண்பூச்சியின் முதுகில் பலவந்தமாக முட்டை வைக்க ஆரம்பிக்கும். அவரும் இளம்ிகுஞ்சுகள் வெளியில் வரும்வரை முட்டைகளை முதுகில் சுமப்பார்.

பூச்சிகளுக்குக் காதலிக்கவும் தொியும்!!!! என்ன நம்பமுடியவில்லையா ?

…. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்