கடைபிடி; முதல் படி!

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

வித்யாசாகர்


நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள் வந்து நிற்பதுமா வாழ்க்கை?

படுத்த உடன் தூக்கம் வருவது வாழ்க்கை. பசித்து உணவு உட்கொள்வது வாழ்க்கை. சொந்தம் கூடி மகிழ்ந்ததில் மனது நிறைந்து சிரித்திருப்பது வாழ்க்கை. கண்மூடி அமர்கையில் உள்ளம் கோவிலாகி – உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்த பக்தியில் நம் நன்னடத்தை தெய்வமாகத் தெரிவது வாழ்க்கை.

வாழ்வின் விசாலமான தெருக்களின் வெளிச்சத்தை இருட்டாக்கி விடுவதே நம் கோபமென்னும் ஒற்றைப் பல் அரக்கன் தான். நிறைய இடங்களில் நாம் தன்னை முன்னிலை படுத்த முனைவதே முந்தி வரும் கோபத்திற்கான காரணமெனக் கொள்வோம்.

தெளிவாக சிந்திப்பதிலும் உண்மையை விளங்கிக் கொள்வதிலும் கோபம் கடை தூரம் விலகிவிடுகிறது. உடன் பிறந்தால் தான் உறவு; பழக்கமுற்றால் தான் நட்பென்றில்லை, அசைவுறும் அத்தனை உயிர்களுமே யாரிடமோ அன்பு கொண்டவை தான். எதையோ நேசிக்கத் தெரிந்தவை தான். அன்பு வைப்பின் ஒரு மரம் கூட நமக்காக அசைவது புரியப் பட்டுவிடும் என்பதென் கூற்று.

ஆக, அன்பு கொள்ளுதலில்; விட்டுக் கொடுக்க மனம் விசாலப் பட்டுவிடுகிறது. விட்டுக் கொடுத்தலில் கோபம் அர்த்தமற்றுப் போகிறது. கோபமில்லாதிருத்தலில் நெருக்கமுன்டாகிறது. நெருக்கமான அன்பில்; வெளிச்சம் பளிச்சென பரவுவது கூடி வாழும் சிரிப்பு சப்தத்தில் கேட்கிறதென்பதால், வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய முதல்படி “எங்கு கோபம் கொள்வதென தெளிவு கொள்வதே” யென்று உறுதிக் கொள்வோம்.

நான் தெருவாசலில் நின்றிருக்கிறேன். மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஒருவர் தெருவில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் வண்டியை விட்டுவிட சாக்கடை நீர் சொலீரென என் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. கோபத்தில் மிதிவண்டி ஓட்டியவனை அசிங்கமாக திட்டிவிட, அவன் எங்கம்மாவை பத்தியாடா திட்டினன்னு இறங்கி வந்து மூக்கில் ரத்தம் வருவது போல ஒரு குத்து விடுகிறான். என் மகன் ஓடிவந்து எங்கப்பாவையாடா அடிச்சேன்னு அவன் கைய கால ஒடைக்க, அவுங்க வீட்டு ஆளுங்க மொத்தமா ஒரு ஆட்டோவுல வந்து எங்களை பின்னி பெடலெடுக்க, காவல் நிலையத்துக்கு புகார் போயி ரெண்டு குடும்பத்து ஆம்பளைங்களையும் ஒரு வாரம் காவல்ல வைக்க, திரும்பி வரும் போது ஊரு கேவலமா பேசி சிரிக்க, கோபத்தில் கொதித்தெழுந்த முகம் சாக்கடை நீரினை விட நாறாமலில்லை.

Series Navigation