கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நாக.இளங்கோவன்


அன்பின் ஆசிரியருக்கு,

திரு.செயமோகனின் கீதை குறித்த கட்டுரையில் ஞானத்தேடல் நடத்துவதாகத் தெரிந்தது. ஆயினும் அந்த ஞானத் தேடல் திராவிட இயக்கம்,ஈ.வெ.ரா என்று வந்தவுடன் சுளுக்கிக் கொண்டதைக் காண முடிந்தது.

வசவு பாடும் மரபை தொடங்கி வைத்தார் என்று குற்றம் சாட்டி விட்டு, செயமோகன் தன் வசை பாடலை ஈ.வெ.ரா மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் செய்திருப்பது அவரின் ஞானத்தேடலில் நேரிய பார்வையைக் காட்டவில்லை.

தனது சொந்த விருப்பு வெறுப்புட்குட்பட்டும், தனது அண்மைய சொந்த அனுபவத்தைக் கொண்டும் அவர்எழுதியிருக்கிறார் என்று எண்ணுவது தவிர்க்க முடியாதது.

ஈ.வெ.ராவை வசை பாடுவதும், திராவிட இஇயக்கங்களைவசை பாடுவதும் அண்மைய காலத்து நாகரிகமாக ஆகி வந்திருக்கிறது. திராவிட இயக்கங்கள் ஏதோ பாதகங்கள் செய்து விட்ட மாதிரியும், இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல பாசிச இயக்கங்கள் அப்பழுக்கற்ற சுத்த சுயம்பிரகாசங்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பலர் முயல்கையில் செயமோகனும் தனது பங்கை அளித்திருக்கிறார்.

கீதை, கீதை என்று பலர் புலம்பிக் கொண்டு திரிகையில், அந்த கீதையின் நாயகன் உள்ளிட்ட பல கடவுளரின் கோயில்களுக்குள்ளே பொதுமக்கள் போக முடிந்ததே பெரியாரால்தான். அது போன்ற போராட்டங்களும் குமுகப் பணிகளும் செய்து விழிப்புணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படுத்திய திராவிட இயக்கம் மலட்டு இயக்கம் என்றால் பார்த்தோரும், கேட்டோரும் நகைப்பாரே அன்றி வேறேதும் நினையார்.

கீதையைச் சுற்றி ஓடிய ஞானத்தேடல் அவரின் சொந்தக் கருத்தாகினும், நடையும் போக்கும் ஒரு சிந்தனையாளரின் எழுத்துக்களாக நன்றாகவே இருக்க, திராவிட இயக்கத்தின் மேல் இருக்கும் அவரின் கோபம் அவர் ஞானத்தேடலின் குறுக்கே வந்து நின்று ஞானத்தேடலை குழறுபடியாக்கி விட்டது.

கீதையை புகழ்கிறவர்கள் திராவிட இயக்கத்தையும், திராவிட இயக்கத்தை விரும்புபவர்கள் கீதையையும் கல்லால் அடித்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். செயமோகனும் தன்னை அப்படிப்பட்டவர் என்றே அடையாளம் காட்டியிருக்கிறார்.

‘எந்த ஒரு நூலையும் ஒற்றை வரியில் குறுக்குவது ஒரு அறிவார்ந்த நாணயமின்மையே ‘ என்று சொல்லும் செயமோகன், ஒரு பெரிய இயக்கத்தை ‘மலட்டு இயக்கம் ‘ என்று, ஒற்றை வரி கூட இல்லை, இரண்டு சொற்களில் குறுக்குகிறார்.

இது எவ்வகையில் சேர்ந்தது ? என்பதைக் கட்டுரை ஆசிரியர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

பகவத் கீதை என்ற பெரிய்ய்ய நூலை பகவான் படைத்தும், அதைப் படிக்க விடாத மரபைத் தான் திராவிட இயக்கத்திற்கு முந்தைய காலத்தைய வரலாறு அதிகம் காட்டுகிறது.

படிக்கவே முடியாதிருந்த போது, படிப்பதைக் கேட்பதே தவறாக இருந்த போது, படிக்க முடியாதவர்களுக்கும், படிக்கக் கூடாதவர்களுக்கும் பகவான் கிருட்டிண பரமாத்மா அருளியதும் ஒன்றுமில்லை. அப்படிப் பட்டோர்களுக்கு பரமாத்மாவின் கீதையைச் சுற்றிய இயக்கமும் மலட்டு இயக்கம்தான்!

படிப்பு தெரியாதவர்களுக்கு பகவத் கீதை இருந்தென்ன இல்லாது போயென்ன ?

அப்படிப் படிப்பில் இருந்து தள்ளிக் கிடத்தப் பட்டிருந்தவரெல்லாம் படிப்பை நோக்கி வருவதற்கே காரணம் ஈ.வெ.ராவும் அவரைப் போன்றோரும்தான். பெருந் திரளான மக்களுக்கு அவ்வகையில் விழிப்பு தந்த பெரியாரின் இயக்கம் மலட்டு இயக்கமா ?

ஈவெராவும் அவர் இயக்கமும், ஞான சுகம் கண்டு, கண்ணை செருகிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க வில்லை. மாறாக கையில் கிடைப்போரை இறுகப் பற்றி உலுக்கி விட்ட இயக்கம் திராவிட இயக்கம். அது மலட்டு இயக்கமா ?

ஒரு வலுவான நூல் இல்லையாம் திராவிட இயக்கத்திற்கு! வலுவான நூல் என்றால் என்ன ?

சோகம் வரும்போது சுகமாக சொறிந்து விடும் நூல்களெல்லாம் வலுவான நூல்களா ?

அப்படிப் பார்த்தால், ஞான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பகவத் கீதையும் சுகம் தரும்!

அதுவும் பகவத் கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று செயமோகன் ஒரு பெரிய பாடத்தையே எடுத்துள்ளார். பகவத் கீதையைப் படிப்பதற்கே ஒரு பெரிய பாடம் படிக்க வேண்டும்; மற்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ள அத்தனை சங்கதிகளையும் ஒருவர் படிக்க வேண்டும்.

பகவத் கீதை என்ற ஒரு நூலை ஒருவர் படிக்க வேண்டும் என்றால் அவர் நூறு நூல்களைப் படித்திருக்க வேண்டும். இதுதான் செயமோகனின் கட்டுரை காட்டும் கருத்து.

அது மட்டுமல்ல, ஈ.வெ.ரா, நூல்களை திரிக்கும் மரபை ஏற்படுத்தினார் என்றும் கூறுகிறார்.

பகவத் கீதை என்ற நூலை படிக்க வேண்டும் என்றால், அதற்கு உரையெழுதியவர்கள் எழுதிய அனைத்தையும் படிக்க வேண்டும் என்று செயமோகன் கூறி அவை எவை எவை என்று சுட்டியும் காட்டுகிறார்.

பலரின் உரைகள் என்பது ஒரு மூல நூலின் திரிபுகள்தானே ? வால்மீகி இராமாயணமும் கம்பராமாயணமும் இராம கதையின் மெல்லிய திரிபுகள்தானே ?

கீதையின் திரிபை ஏற்றுக் கொள்ளும் கட்டுரை ஆசிரியர் பெரியாரின் திரிபுகளை தனிமைப் படுத்தி அதை வசை பாடுவது ஞானத் தேடலின் அழகாமோ ?

இத்தனை உரைகளைப் படித்தால்தான் பகவத் கீதையினை புரிந்து கொள்ளல் ஏலும் என்ற நிலையில் பகவத் கீதை பாமரனை எட்டாததில் வியப்பில்லை. அந்த வகையில் ஒரு சிறு திரளைத் தவிர முழுக் குமுகாயத்திற்கும் கீதை பிறந்ததில் இருந்து அது சென்றடையவேயில்லை.

ஆனால், ஈ.வெ.ரா மற்றும் திராவிட இயக்கத்தவரின் கையெழுத்துப் பக்கங்கள், மற்றும் கால் பக்க, அரைப்பக்கக் கட்டுரைகள் கூட, கூறு கட்டி விற்கப் பட்டும் இலவயமாகத் தரப்பட்டும் பாமரனை எட்டி விட்டதால்தான் திராவிட இயக்கம் இன்றும் நிற்கிறது.

பெரியாரின் எழுத்துக்களுக்கு அண்ணாவோ நாவலரோ கருணாநிதியோ உரை எழுத வேண்டிய அவசியமில்லை. அவ்வளவு எளிமையானவை. சாதாரண மனிதனை சட்டெனச் சென்றடைந்தவை.

பல நூறாண்டுகள் ஆகியும் கீதை இன்றும் பாமரனை எட்டவில்லை. ஆனால் ஒரு நூறாண்டு கூட இல்லாத நிலையிலும் திராவிட இயக்கத்தின் எழுத்துக்களும் கருத்துக்களும் பாமரனை எட்டி விட்டன.

அப்படி எட்டிய எழுத்துக்கள் சோகத்தில் குமைந்தவனுக்கு சுகம் தந்து தூங்க வைத்த எழுத்துக்கள் அல்ல. அவனை முதுகில் தட்டிக் கொடுத்து கிளர்ச்சியடையவைத்து புத்துணர்ச்சி தந்து மாற்றத்தைக் கண் முன் கொண்டு வந்த எழுத்துக்கள்.

அப்படிப் பட்ட எழுத்துக்களும் கருத்துக்களும் தந்த இயக்கம் மலட்டு இயக்கமா ?

ஒவ்வொரு மனிதனுக்கும் சோகங்களுக்கு வடிகாலாக தோளோ, மடியோ தேவைப்பட்டே இருக்கிறது. செயமோகன் சுட்டிக் காட்டிய சோகங்களை ஒட்டிய சோகங்களுக்கு கீதை தன் மடியினைத் தரக் கூடும்.

ஆனால், சோகங்கள் பல வகை என்பதும், இயற்கையையொட்டிய சோகங்களுக்கு அப்பாற்பட்ட ‘செயற்கை சோகங்கள் ‘ ஏராளம் என்றும் செயமோகன் ஒப்புக் கொள்வார் என்று எண்ணுகிறேன்.

ஊர்ப் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தள்ளி வைக்கப்பட்டது ஒரு வகை செயற்கை சோகம். ஊரின் ஒதுக்குப் புறத்தில் போய் தண்ணீர் சேந்தி, அதையும் மங்கை இடுப்பில் வைக்காது தலையில் தூக்கி வரவேண்டும், அப்படி வரும்போது இருகைகளும் பானையைப் பிடித்திருக்க வேண்டும், அப்படி வருகையில் மாராப்பும் இருக்கக் கூடாது என்று இருந்த சட்டமெல்லாம் ஒரு வகை செயற்கை சோகம்.

படிக்கக் கூடாது, படிப்பதைக் கேட்கக் கூடாது என்று சொல்லப்பட்டது ஒரு வகை செயற்கை சோகம்.

தொட்டால் தீட்டென்று துரத்தியடித்தது ஒரு வகை செயற்கை சோகம்.

ஆலயமும், வேதாந்தமும், தத்துவமும் அவை தரும் ஞான சுகமும் அனைவருக்கும் அல்ல; அவைகளில் வருணம் பார்த்து பிரித்துத்தான் தரப்பட்டது அந்த சுகங்கள் என்பது ஒரு செயற்கை சோகம்.

இயற்கையின் சோகங்களான, பிரிவு, இழப்பு போன்ற சோகங்களுக்கு கீதை ஒருத்தருக்கு தடவி விடுகிறது என்றால் அதற்கு மறுப்பேதும் யாரும் சொல்ல முடியாது.

அதே போல, செயற்கையான சோகங்களுக்கு கீதையிடம் மருந்தில்லை, என்பது மட்டுமல்லாமல், அந்த செயற்கையான சோகங்களுக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லி, செயற்கையான சோகங்கள் பலவற்றுக்கு தோளும், மடியும் கொடுத்த திராவிட இயக்கம், மலட்டு இயக்கம் என்றும் வசவு அதன் மரபு என்றும் ஒருவர் சொன்னால் அவரின் ஞானத் தேடல் அய்யத்திற்கு இடமாகின்றது.

மேலும், ஆக்க பூர்வமான விவாதங்கள் ‘தலைமறைவாகவே ‘ நடக்கும் நிலையில் உள்ளன என்று வருந்துகிறார் கட்டுரை ஆசிரியர்.

பெரியார் என்ற தனிமனிதன், தான் ஆக்கபூர்வம் என்று எண்ணியதை தலைமறைவாகச் செய்யவில்லை. நட்ட நடுச் சாலையிலும், வெட்ட வெளியிலும் நின்று குரல் கொடுத்தார். செயமோகனின் வசவுகளைப் போல ஆயிரக் கணக்கில் ஈ.வெ.ராவும் திராவிட இயக்கமும் சந்தித்திருக்கின்றன. ஆக்கபூர்வமாய் செய்ய நினைத்த காந்தியடிகள் தலைமறைவாய் செயல் படவில்லை.

ஆகவே, ஆக்கபூர்வத்திற்குத் தலைமறைவு தேவையில்லை,துணிவும் தெளிவும்தான் தேவை. தலைமறைவு தேவைப்படுவோர் செய்வன பெரும்பாலும் தகாதவையாக இருக்கக் கூடும்.

கீதையையும் சாராத, திராவிட இயக்கத்தையுன் சாராத பொதுவான நல்ல கருத்துக்கள் சில இருந்த போதிலும், மொத்தத்தில் செயமோகனின் கட்டுரை,

1) திராவிட இயக்கத்தின் பால் அவர் கொண்டுள்ள அசூசையைக் காட்டுவதாக உள்ளது.

2) ஞானத்தேடலை முழுமையாக செய்யாமல், விருப்பு வெறுப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.

3) தீட்டுக் கலாச்சாரத்திற்கு துணை போகிறது.

4) திராவிட இயக்கத்தினை அருவெறுப்பவர்களுக்கு ஆனந்தம் அளிக்கிறது.

5) வருணம் என்பதன் பலனை நன்கு யோசிக்குங்கால் அது மக்களிடம் காணப்படும் அழியா/அழிக்க முடியா ‘மனநோய் ‘. அந்த மனநோயை பலரும் தங்களின் சார்புத்தன்மைக்கேற்றவாறு பொருள் கொடுக்கிறார்கள் அண்மைக்காலத்தில். அந்த மனநோய்க்கு மேலும் நோய் சேர்க்கிறது அக்கட்டுரை.

6) ஞானத்தேடல் என்று துவங்கி, ஒரு வசவு மடல் ஆகாமல் இருந்திருக்கலாம்.

மற்றபடி திராவிட இயக்கத்திற்கு எதிராக, மற்றும் கீதைப்பிரியர்களுக்கு இனிப்பாக எழுதப்பட்ட பத்தோடு மேலும் ஒன்று.

அன்புடன்

நாக.இளங்கோவன்

nelan@rediffmail.com

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்