கடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

தம்மாம் பைசல்


ஆர்.எஸ்.எஸ் எனும் இயக்கமும் மனுஸ்மிருதியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. குறிப்பாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ் கனவு காணக்கூடிய இந்துராக்ஷ்டிரம் என்பது மனுஸ்மிருதியை நிலைநாட்டுவதற்கன்றி வேறில்லை.

உண்மை இவ்வாறிருக்க வழக்கம் போல பொய்யை மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையாக்கும் மனநிலையில் இருப்பவர்கள் அவ்வாறே பிரச்சாரமும் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீலகண்டன் கூறியது. அதை அப்படியே தருகிறேன். இல்லாவிட்டால் தான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவரது

எழுத்து மற்றும் அதற்கான இணைப்பையும் தருகிறேன்.

மனுஸ்மிருதியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதுமில்லை. ஏதாவது ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவ்வாறு கூறியுள்ளாரா ?

ஆனால் சாதியத்துக்கு எதிராக இந்துக்களிடையே உழைக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தான்.

(திருவாளர் நீலகண்டன்

இவரது வாதத்திற்கு பதிலாக நாம் ஹிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரண்ட்லைன் இன்னபிற முக்கியமான பத்திரிகைகளிலிருந்து ஆதாரங்களை எடுத்தால் அவையெல்லாம் அரைவேக்காடு என்று சுலபமாக முத்திரை குத்திவிடுவார். பரவாயில்லை. (ஆனால் அவைகளிலிருந்தே அவர் ஆதாரங்களை( ?!) அடுக்குவார் என்பது வேறு விஸயம்)

ஆனால் அவரால் அரைவேக்காடு என்று ஒதுக்க முடியாத ஒரு புத்தகத்திலிருந்து சில ஆதாரங்களை நாம் எடுத்து அவர் முன்பாகவும் திண்ணை வாசகர்கள் முன்பாகவும் வைப்போம். இதற்கு என்ன பதில்களை வைத்திருக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அவர் வைக்கும் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதில்களை எழுத முயற்சிக்கிறேன் .

(இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்).

ஆர்.எஸ்.எஸ் காரர்களின் வேத புத்தகம் என்று அவர்கள் கூறுவது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. மறுக்கவும் மாட்டார்கள்.

அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறார். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம் ? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா ? இதோ படியுங்கள்.

“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை ?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத்

தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”

(குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறார் கோல்வாக்கர். அதுமட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறார். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இவர்கள் தான் சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் ? .

அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. மனுஸ்மிருதி கூறும் வர்ண ஏற்றதாழ்வை நியாயப்படுத்துகிறார். இவர்களுக்கு என்று ஒரு வழிமுறை உண்டு. அதுதான் மூளைச் சலவை. தங்களது கொள்கைகளை அப்பாவி பாமர மக்களிடையே எடுத்துச் செல்லும்போது அதை நியாயப்படுத்த வேண்டி பல குறுக்குவழிகளை கையாளுகிறார்கள். அவர்களது குலத்தொழில் முறையை அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் மீது திணித்து அதை கடவுளை வணங்குவதற்காக என்று கூறி மூளைச்சலவை செய்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் இதோ அவர் எழுதியது :-

“வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே – நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும் – அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம். ‘பிராமணர்கள்’ தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில்

வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம்

செய்கிறார்கள்”

என்கிறார் கோல்வாக்கர். (Bunch of Thoughts 8-வது அத்தியாயம் பக் – 107-108)

சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்துஎடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள்

கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம்.

இதைப்பற்றி யாராவது கருத்து தெரிவித்தால் அவர்களுக்கு சில முத்திரைகளை குத்தி ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என்று கூசாமல் பொய் பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் என்பது சாதிய அமைப்பிற்கு எதிராக போராடும் இயக்கம் என்று கூறுகிறார். ஆனால் இவரது தலைவர் கோல்வாக்கர் என்ன கூறுகிறார். அவர் எழுதிய ஆர்.எஸ்.எஸ் வேதநூல் சாதி அமைப்பை எப்படி பச்சையாக ஆதரித்து எழுதுகிறது என்பதை இதோ பாருங்கள்.

“வடமேற்கு – வடகிழக்கு பகுதிகளை முகம்மதியர்கள் மிகச்சுலபமாக வென்றுவிட்டார்கள். அதற்கு காரணம் அந்தப் பகுதிகளில் புத்தமதம் சாதி அமைப்பை முறையை தகர்த்து பலவீனப்படுத்தியதுதான். ஆனால் அதற்கு நேர்மாறாக டில்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும் இந்து மதம் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகும் உறுதியாக ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு காரணம் இந்த மாநிலங்களில் சாதி அமைப்பு முறை கடுமையாகப்

பின்பற்றப்பட்டதுதான்.”

‘History proves that Mohammedans could win over the northwest, northeast are easily where Buddhism has shattered the pattern of the caste system. But contrary to this, the Hindu religion was strong in Delhi and Utterpradesh despite Muslim rule because the caste system was strictly followed there ‘

(Bunch of thoughts நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ் தலைவர் தன்னுடைய இயக்கத்தைப் பற்றி எழுதியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா ? அல்லது அதன் (தீவிர) தொண்டன் என்று (தனக்குத் தானே) சொல்பவர்களின் கருத்துக்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமா ?

பாவம் தான் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்று அறியாதவர்கள் கூட அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்னும் போது அவர்கள் மீது பச்சாதாபம் தான் வருகிறது.

சரி! ஒருவேளை நீலகண்டன் அவர்கள் சாதி அமைப்பை எதிர்ப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கூட ஆர்.எஸ்.எஸ்-ஸின் கண்டனத்திலிருந்து தப்ப முடியாது. ஏன் தெரியுமா ?

அந்த நூலில் கோல்வாக்கர் எழுதுகிறார்.

“சிலர் நீண்டகாலமாக சாதி அமைப்பு முறையை எதிர்த்துக் கொண்டேவருகிறார்கள். பழங்காலத்தில் சாதி அமைப்பு முறை இருந்தது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் இச் சாதி அமைப்பு முறை நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உண்மையில் இந்த சாதி அமைப்பு சமூகத்தில் ஒற்றுமையை காப்பதற்கே உதவி செய்திருக்கிறது”

(There is nothing to prove that the caste system ever hinderedout social

development. Actually the caste system has helped to preserve the unity to

our society)

(Bunch of thoughts நூலிலிருந்து)

இந்து மதத்தின் ஒற்றுமையை குலைப்பவர்களின் பட்டியலில் சாதி அமைப்பு முறையை எதிர்ப்பவர்களும் வருகிறார்கள். ஆனால் நடுநிலையாளர்கள் சராசரி இந்துக்கள் இந்த சாதி அமைப்பு முறையை எதிர்க்கிறார்கள்.

இந்த சாதி அமைப்பு முறையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இதைப்பற்றி எடுத்துச் சொல்லும்போது அவர்களை மிக எளிதாக விலக்கிவிடுகிறார்கள். சகோதரர் பித்தன் அவர்கள் கூட தன்னுடைய கருத்துக்களையும் தன்னை பாதித்தவைகளையும் சொன்னபோது கூட அவரது கருத்துக்களை எள்ளி நகையாடுகிறார்கள். அதனால் தான் பாதிக்கப்பட்டவைகளைப் பற்றி கூட ஆராயாமல்.

இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மனுதர்மத்தை வலியுறுத்துபவர்கள் மட்டுமல்ல. அதற்காக கோயில் கட்டியவர்கள். அதில் விழா எடுப்பவர்கள். அதற்காக மாநாடுகளை நடத்துபவர்கள். இவை பற்றியெல்லாம் உள்ள ஆதாரங்களை எடுத்து எழுவதற்கும், இவர்களது தலைவர்களின் இதுசம்பந்தமான அறிக்கைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரங்கள்

தேவைப்படுகிறது. ஒருவேளை இங்கே எழுதிய கருத்துக்களை அவர்கள் மறுக்கும் பட்சத்தில் நேரங்களை பாராமல் எழுதுவதற்கு முயற்சி செய்கிறேன்.

Last but not least, மனுதர்மம் வலியுறுத்தும் சாதியையும் பார்ப்பன உயர்வையும் இவர்கள் ஆதரித்தார்கள் என்பதோடு நில்லாமல் மனுதர்ம சாஸ்திரத்தையே வைத்து 1981-ம் ஆண்டில் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.

Economical and Political Weekly வாரஇதழ் (6-3-82) இதுபற்றி வெளியிட்ட செய்தி இது:

“பூனாவில் – ஆர்.எஸ்.எஸ் காரர்கள் 1981 டிசம்பரில் ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் அம்பேத்கர் மகாத்மா பூலே காந்தி கோல்வாக்கர் ஆகியோர் படத்தோடு மனுதர்மசாஸ்திர நூலையும் அலங்கரித்து எடுத்துச் சென்றனர். மராட்டிய பத்திரிகையான சரிதாவில் பாய்வய்தியா என்ற எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அம்பேத்கர் மனுதர்மத்தை எரித்தவர். நான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்றவர். அவர் படத்தையும் மனுதர்மத்தையும் ஒன்றாக எடுத்துப் போவதா என்று அந்தக் கட்டுரையில்

எழுதியிருந்தார்” – இவ்வாறு அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது.

இதிலிருந்து இவர்களது கருத்துக்களும் கொள்கைகளும் மிகத்தெளிவாக நமக்கு விளங்குகிறது. சாதீய அமைப்புகளை நடைமுறைப் படுத்தவும் பார்ப்பனீய உயர்வை மீண்டும் கொண்டு வரவும் தலித் சகோதரர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தவுமே ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது.

ஆனால் இவற்றிற்கெல்லாம் மாற்றமாக சாதீய ஏற்ற தாழ்வுகளை எல்லாம் தூர எறிந்து விட்டு அனைத்து மக்களையும் சகோதரர்கள் என்கிறது இஸ்லாம்.

‘மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைத்தோம் ‘ – அல் குர்ஆன் 49:13

‘நீங்கள் யாவரும் ஆதமின் மக்களாவீர்கள் ‘ – நபிமொழி (நூல் – முஸ்லிம், திர்மிதி)

‘நீங்கள் ஒருவரிலிருந்து மற்றவர்களாக தோன்றியவர்களே! ‘ – அல்குர்ஆன் 4:25

சாதீயத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சாதீயத்தை எதிர்ப்பவர்களையும் இத்தகைய மெளட்டாக

சிந்தனையிலிருந்து விடுபட்டு சுதந்திரப் பறவைகளாக இருப்பதற்காக உலகளாவிய சகோதர இயக்கமாகிய இஸ்லாத்திற்கு அழைப்பு விடுவிக்கின்றோம். இதன் மூலம் ஈருலக வெற்றியையும் அடையலாம். இன்ஷா அல்லாஹ்.

என்றும் அன்புடன்

தம்மாம் பைசல்

faiseldmm@hotmail.com

Series Navigation

author

தம்மாம் பைசல்

தம்மாம் பைசல்

Similar Posts