கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
கடும் நஷ்டம்
உப்பு வியாபாரி திரும்பினான்
நனைந்தபடி
2
வானம் அழுகிறது
கண்ணீரில் இல்லை
உப்பு
3
வயல்கள் காற்றாலைகள்
அதுவும் தாண்டி தொடுவானம்
எங்கும் நிலா வெளிச்சம்
4
கிட்ட வந்து கால்நனைத்த
அலை சொன்னது
அடையாளங்களை இழ
5
உயரமாய் மலை
பெருகியெழும் அருவி
சின்னதாய் மனிதன்
6
அந்தி இருளாய்
கூடு திரும்பும்
காகங்கள்
7
வந்து நிற்கும் பூக்காரன்
மல்லிகை முல்லை இருவாட்சி
குப்பென்று பீடி வாசனை
8
சூடான செய்திகள் தினசரி
கிழித்து
பஜ்ஜிவைத்துச் சாப்பிட்டான்
9
அறுவடைக் காலம்
ஆழ்ந்த துயரம்
சோளக்கொல்லை பொம்மை
10
இனம் இனத்தோடு
அழகு அழகோடு
பூவோடு பட்டாம்பூச்சி
11
அபிஷேகப் பிள்ளையார்
வாசனை பிடிக்கிறார்
குருக்களின் கூந்தல் ஷாம்பு
12
பூஜையறை சாம்பிராணி
கண கண மணியோசை
எனக்காகப் பிரார்த்திக்கும் அம்மா
13
ஐயோ மழை
யார் பிடிப்பார் குடை
சோளக்கொல்லை பொம்மை
14
ஊர் எல்லை வரை நாய்
ஊர் தாண்டி
மரங்கள்
15
கடவுளைக் கண்டதுண்டா
என்றான் அவன்
நீதான் என்றார் அவர்
16
புது எஜமானுக்குக்
காத்திருக்கும்
பொம்மை நாய்க்குட்டி
17
தொலைக்காட்சிப் பெட்டி
புயல் எச்சரிக்கை
நடுங்கும் ரோஜாச்செடி
18
கோடை நதி
பாலந் தவிர்த்து
கால் நனைய நல்ல நடை
19
அறுவடை முடிந்து
மாட்டுக்கு வைக்கோல்
மனுசனுக்கு நெல்
20
சாலையோரம்
ஏன் மரங்கள்
இறங்கி ஒண்ணுக்கடிக்க
21
கழிதட்டிப் போகும்
பார்வையற்றவள்
கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு
22
வயல்வெளி தாண்டும்
புகைவண்டி
ஜன்னல் நிறைய ஜனம்
23
மாற்றுவழியில் செல்லவும்
அதற்கு இது மாற்றுவழி
அதே வழியில் போனான்
24
ஆகா அதோ சூரியன்
முதலில் பார்த்தது
சேவல்
25
கானகத்துப் புல்வெளி
விருந்துண்ணும் யானைக்கூட்டம்
புன்னகைக்கும் கடவுள்
26
திருடன்
கதவைத் திறந்ததும்
வெளியே பாயும் பூனை
27
எழுந்து விடுவாரா தாத்தா
சத்தமாய் ஆணியடிக்கிறார்கள்
சவப்பெட்டியில்
28
விக்கி விக்கி
அழும் குழந்தை
தூக்கமாய்க் கவியும் கடவுள்
29
அடாடா குடை இல்லை
அதனாலென்ன
நனைவதும் நன்றாயிருக்கிறது
30
எளிய குடிசை
என்றாலும் தூய தண்ணீருண்டு
வருக நண்பரே
31
யாருமற்ற தனிமை
தூரத்து ஒற்றை மரம்
வா என்கிறது
32
குழந்தை தேடுகிறது
திரும்பி வா
பட்டாம்பூச்சியே
33
பள்ளிக்கூட வாசல்
புளிப்பு மிட்டாய்ப் பாட்டி
அப்பாவுக்கே விற்றவளாம்
34
குத்திவிட்டதா முள்
எத்தனை சிவப்பு
அந்த ரோஜா
35
பிரிவை
எப்படிப் பேச
ஆர்ப்பரிக்கும் கடல்
36
அப்பா இல்லை இப்போது
இருக்கிறது
அப்பா அமரும் மரத்தடி
37
ஆல்பத்தில்
குழந்தையின் அழுகை
பார்த்துவிட்டுச் சிரிக்கிறது
38
தோட்டம் சுற்றி முள்வேலி
முள்வேலியில் ஜம்மென்று
குருவி
39
கடல்பார்க்க கூடும்ஜனம்
ஜனம்தேடிக் கூடும்
வியாபாரிகள்
40
சிறைக்கைதியின் வருத்தம்
யாருமே பார்க்க வரவில்லை
ஜன்னல் வழியே மழை
41
கால் வலிக்கு
டாக்டரிடம் போனான்
ஆஸ்பத்திரி ரொம்ப தூரம்
42
என்ன பார்க்கிறான்
குருடன்
இறந்த பின்
43
திரும்பிப் பார்க்கச் சொன்னது
தலையில் ரோஜா
உதடு சுழித்துப் போகிறாள்
44
மூடு இல்லாததால்
கவிதை வாங்கப் போனவன்
காற்று வாங்கி வந்தான்
45
பாழடைந்த வீட்டில்
கட்டுமான வேலைகள்
சிலந்தி
46
மலர்ந்த ரோஜா
மனிதனைப் பார்த்ததும்
மீண்டும் மொட்டானது
47
திருடன்
தொழிலுக்குக் கிளம்ப
வீட்டுக்குள் காதலன்
48
கண்ணகிக்குக் கோவில்
மாதவிக்கு?
அரண்மனை!
49
பஸ்சில் கணக்கு வாத்தியார்
மாணவனாக கண்டக்டர்
தந்தான் சில்லரை தப்பாய்
50
சத்தமாய் விளையாடும் குழந்தைகள்
உறக்கம் கலையாத தாத்தா
காது மந்தம்
51
முட் புதருள்
பதுங்கும் பாம்பு
பாத்து பாத்து
52
தலையில் நெருப்பு
சேவல் ஐயோ
ஏறும் கூரைமேலே
53
தேன்குடித்த கிறுகிறுப்பு
தள்ளாடும்
பட்டாம்பூச்சி
54
உயரத்தில் மரக்கிளை
உறக்கத்தில் சிறுத்தை
கிளையைத் தாங்கும் கடவுள்

(முற்றும்)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்