கடல் தினவுகள்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

ஸ்ரீமங்கை


____

அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது..
நிலவின் அறிமுகம் நிகழும்வரை.

நீலத்தில் தவம்செய்யும்
பலபொழுதும் பகலில்.
திடாரென்று ஏதோநினைத்து
அடிமணல் வாரியிடுத்து
கருஞ்சாந்துக்குழம்பாய்,
திட்டுத்திட்டாய் குமிழித்து
கரைகளில் வண்டலடிக்கும்.

நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டில்
பித்தான கடலின் பதற்றங்கள்
மனிதனைவிட மோசம்.

நாளை நிலவு விடைபெறுமென
உணர்ந்ததாய்க் கடலின்
ஓதஓலங்கள்.காற்றில் கசிந்து
கானல்வரிகளாய்..
பொங்கிப் பொங்கி பாறைகளில்
முட்டிமோதி அலைபாய்ந்து.
வெள்ளைநகங்களால் கரைகளில்
கீறிப் புண்படுத்திக்கொண்டு,
செத்ததை கரைசேர்த்துப்
பொருமிஅழும்.

காயல்களில் ஒருங்கி
தென்னைகளின் வேர்களில்
பிரிவின் வலியைப் புலம்புகையில்
படகுகள் மெல்ல ஆடி மெளனமாய்
துக்கம் விசாரிக்குகையில்,
நெய்தலின் தீவிரம்
காற்றில் பரவி ஈரப்பதமாய்
எங்கும் வியாபிக்க…
ஓ… சோகத்தின் சிகரங்கள்
கடலின் ஆழங்களில்,
உடைந்த சிப்பிகளின் உள்சேரும் மணலில்..

நிலவின்மேல் கோபமில்லை எனக்கு…
இந்தக் கடலைப்பார்த்தால்தான் பச்சாதாபம்..
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

author

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை

Similar Posts