ஓரினசேர்க்கை

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

செல்வன்


ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒ.சே) மீது உலகெங்கும் நடக்கும் சமூகவியல் வன்முறையைப் பற்றியும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை போக்கவும் இந்த கட்டுரை. இவர்களைப் பற்றிய எந்த விவாதமும் சமூகத்தில் எழவில்லை என்பதும் மீடியாவில் இவர்களைப்பற்றி தவறான சித்தரிப்பே நிலவுவதும் கண்கூடு.

வன்முறையில் மிகப்பெரும் வன்முறை ஒருவருக்கு அடிப்படை தேவைகள் மறுக்கப்படுதலே ஆகும். செக்ஸ் என்ற அத்யாவசிய உரிமை இவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதனால் இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி, தங்களுக்கென்று ஒரு அண்டர்கிரவுண்ட் உலகை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெண்ணோடு பழகும் உரிமை மறுக்கப்பட்டால் மாற்றின சேர்க்கையாளரான (மா.சே) பலரும் இதுபோல் அண்டர்கிரவுண்ட் உலகை ஏற்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்.சமூகத்தில் இவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சட்டபூர்வமான பாதுகாப்பும் அளிக்கப்பட்டால் இந்த அண்டர்கிரவுண்டை விட்டு இவர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.

தற்போது இவர்கள் பூங்காக்கள், பொதுகழிப்பிடங்கள், பாழடைந்த மண்டபங்கள் ஆகிய இடங்களில் சமூக விரோதிகளைபோல் பதுங்கி தமது அடிப்படை தேவையான செக்ஸ் உணர்வை பூர்த்தி செய்துகொள்ள நேருகின்றது.இவர்கள் இப்படி இருப்பதால் சமூகம் இவர்களைப் பார்த்து பயந்து ஒதுங்குவதும் நடக்கிறது.

ஓ.சே (Homosexuality & lesbian) என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி மா.சேகளுக்கு இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் ஓ.சேக்களுக்கு இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற (முட்டாள்தனமான) வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.எந்த மிருக,பறவை இனங்களிலும் 2 அல்லது 3% தொகை ஓரின சேர்க்கையாளர்தான்.மனித இனத்திலும் அதுபோலவே 2 அல்லது 3% பேர் எந்த காலத்திலும், எந்த சமூகத்திலும் ஓரினசேர்க்கையாளராகவே இருந்து வந்துள்ளனர்.

ஓரினசேர்க்கை சட்டம் போட்டு தடுக்க கூடியதல்ல. சட்டம்போட்டு ஆண்-பெண் காதலை தடுக்க முடியுமா என்ன?இவர்களை சட்டத்தால் தடுக்க முடியாது என்றாலும் ஒடுக்க அல்லது பழிவாங்க முடியும்.காலம் காலமாக சமூகம் செய்து வந்திருப்பது இதைத்தான்.

ஓரினசேர்க்கை என்பது மனோவியாதி அல்ல. அமெரிக்க மனோதத்துவ டாக்டர்கள் சங்கம் ஓரின சேர்க்கை மனோவியாதி அல்ல என தெளிவாக அறிவித்துள்ளது.

American Psychologists association

http://www.apa.org/topics/sorientation.html

Is homosexuality a mental disorder?

No, lesbian, gay, and bisexual orientations are not disorders. Research has found no inherent association between any of these sexual orientations and psychopathology. Both heterosexual behavior and homosexual behavior are normal aspects of human sexuality. Both have been documented in many different cultures and historical eras. Despite the persistence of stereotypes that portray lesbian, gay, and bisexual people as disturbed, several decades of research and clinical experience have led all mainstream medical and mental health organizations in this country to conclude that these orientations represent normal forms of human experience. Lesbian, gay, and bisexual relationships are normal forms of human bonding. Therefore, these mainstream organizations long ago abandoned classifications of homosexuality as a mental disorder.

இதை மருத்துவம் மூலமாக ‘குணப்படுத்துவது’ முடியாத ஒன்று. பெண்கள் மீது ஆண்கள் விருப்பம் கொள்வதை மனோவியல் ரீதியாக குணப்படுத்த முடியுமா என்ன?இது அவர்களின் இயல்பான உணர்ச்சி.

ஓரினசேர்க்கையால் எய்ட்ஸ் வரும் என்பது தவறான புரிதல். எய்ட்ஸ் உள்ள ஒருவருடன் உடலுறவு கொண்டால் (அது ஆணோ பெண்ணோ) அல்லது ரத்த பரிமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே எய்ட்ஸ் வரும். எய்ட்ஸ் இல்லாத இரு ஆண்கள் ஓரினசேர்க்கையில் எத்தனை முறை ஈடுபட்டாலும் அவர்களுக்கு எய்ட்ஸ் வராது. எய்ட்ஸுக்கு முன்னர் GRID (Gay related immune defeciency) என்ற பெயர் இருந்து அது பிறகு மாற்றப்பட்டதும் இதனால்தான்.

ஓரினசேர்க்கையாளர்கள் நம்மைப்போல் சாதாரண மனிதர்களே. அவர்களுடன் பழகும் நண்பர்களையும் உறவினர்களையும் ஓ.சேக்கு பழக்கப்படுத்தி விடுவார்கள் என்பது தவறான புரிதல். ஒரு ஆணோடு ஒரு பெண் நட்புகொண்டிருப்பது அவர்களுக்கிடையே இருக்கும் ஈர்ப்பையும் தாண்டி நிகழ்கிறதல்லவா?அதுபோல் ஓரினசேர்க்கையாளரோடு மா.சேக்கள் நட்புகொள்வதும் பழகுவதும் சாத்தியமே.

ஓ.சே தம்பதியினர் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகள் ஓ.சேக்களாக ஆவதில்லை.’நார்மலான’ குழந்தைகளாகத்தான் வளர்கின்றனர்.ஓ.சே தம்பதியினர் சிறந்த பெற்றோராக இருக்கமுடியும் என்பதை சமூகம் மெதுவாக உணர்ந்துவருகிறது.

ஓ.சேக்களை அங்கீகரிப்பதன்மூலம் அந்த பழக்கம் சமூகத்தில் பரவிவிடும் என்பது தவறான புரிதல். ஓரினசேர்க்கை ஒட்டுவாரொட்டி வியாதி அல்ல.அவர்களை நாம் அங்கீகரித்தாலும், மறுத்தாலும் (மனித)மிருக/பறவை இனங்களில் 2 அல்லது 3% எப்போதும் ஓ.சேக்களாகத்தான் இருப்பார்கள். சமூக கட்டுப்பாட்டுக்கு பயந்து பெயருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளை திருப்திபடுத்த முடியாத இரட்டை வாழ்வை இவர்கள் வாழவேண்டியது தவிர்க்கப்பட இவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்குவது முக்கியம்.ஓரினசேர்க்கையில் ஈடுபாடு கொண்ட ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து இயல்பாக வாழ்வது காரியசாத்தியமற்ற ஒன்று.இவர்களை நம்மால் தடுக்கவோ மாற்றவோ முடியாது எனும்போது இவர்களை ஒடுக்குவதை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமா என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஓரினசேர்க்கைக்கும்(homosexual), இருபாலின சேர்க்கைக்கும் (bi-sexual) பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.ஓரினசேர்க்கை ஆண்கள் வெட்டி போட்டாலும் ஒரு பெண்னை தொடமாட்டார்கள்.ஓரினசேர்க்கை பெண்களும் அதேபோல் ஆண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.அது கடவுளாக கொடுத்த உணர்ச்சி.பிறப்பில் வருவது.

ஜெயிலில்,பள்ளியில்,ஹாஸ்டலில் பெண் வாசமில்லாததால் ஆண்களுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இருபாலின சேர்க்கையாளர்கள்
(bi-sexual).அவர்கள் ஜெயிலை விட்டு வெளியே வந்தால், ஹாஸ்டலை விட்டுவெளியே வந்தால் தாமாக மீண்டும் எதிர்பாலினத்தவரை தேடி
போய்விடுவார்கள்.எதிர்பாலினத்தவரை திருமனம் செய்துகொண்டு குழந்தை பெற்றுநார்மலான வாழ்க்கை வாழ துவங்கிவிடுவார்கள்.

ஓரினசேர்க்கையாளனால் எந்த காலத்திலும் ஒரு பெண்ணுடன் உறவுகொள்ளவோ,குழந்தை பெற்றுகொள்ளவோ முடியாது.இவர்கள் தான் திருமனம்,ஓரினசேர்க்கைக்கானஅங்கீகாரம் என கேட்டு போராடுகிரார்கள்.இருபாலின சேர்க்கையாலர்கள் அல்ல.இருபாலின சேர்க்கையாலர்கள் கேட்பது “ஜெயிலில் எங்கள் மனைவியை சந்திக்க அனுமதியுங்கள்.ராணுவத்தில் அடிக்கடி லீவு கொடுங்கள்” என்றுதான்.

இருபாலின சேர்க்கையாளர்கள் எந்த காலத்திலும் ஓரினசேர்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.பெண் கிடைக்காத பஞ்சத்துக்கு தான் ஆணை தேடி போகிறார்கள்.
மாலுமிகள் பலர் மாதக்கணக்கில் கப்பலில் போகும்போது ஓரினசேர்க்கையில் ஈடுபட்டாலும் கப்பல் கரை இறங்கினால் முதலில் போகும் இடம் விபசாரவிடுதிதான்.இவர்களில் பலருக்கு ஊரில் மனைவி,பிள்ளை குட்டி எல்லாம் இருக்கும்.

ஓரினசேர்க்கையாளர்கள் என்பவர்கள் பிறவியிலேயே தம்மினத்தவர் மேல் தான் ஆசைவரும்படி பிறந்தவர்கள்.இது அவர்கள் தேர்வு அல்ல.ஆண்டவன் கொடுத்த சாபம்.இதை அவர்களால் மட்டுமல்ல வேறு யாராலும் மாற்றவே முடியாது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற டிவி ஜாக்கி சூசி ஆர்மன்,பிறப்பில் லெஸ்பியனாக பிறந்தவர்.54 வயதாகியும் ஆண் கை படாமல் கன்னியாக (heterosexual virgin) தான் இருக்கிறார்.அதே சமயம் ஒரு பெண்காதலி அவருக்கு உண்டு.மார்ட்டினா நவரதிலோவாவும் இதுபோன்றவர்தான்.

இந்திய சூழலில் ஓரின சேர்க்கையாளர்களை சமூகம் அருவருப்புடன் நோக்குவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆணாதிக்கம் நிலவும் எந்த சமூகத்திலும் ஆண்களின் ஓரினசேர்க்கை அறுவறுப்புடன் உற்று நோக்கப்படும். பெண்களீன் ஓரினசேர்க்கை கண்டுகொள்ளப்படாது. செக்ஸ் விடியோ கடைகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெண்-பெண் விடியோவை விரும்பி வாங்குவார்கள். ஆண்-ஆண் விடியோ என்றால் காத தூரம் ஓடுவார்கள்.

ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆண்மையும் வீரமும் இல்லை என்பது தவறான புரிதல். ஓரினசேர்க்கை ஒருவரின் குனாதிசயத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்துவதில்லை. உலகை வென்ற அலெக்சாந்தர் ஒரு ஓரினசேர்க்கையாளன் தான். தனது நண்பன் ஹெபாஸ்டியனுடன் அலெக்சாந்தருக்கு இருந்தது கிட்டதட்ட தெய்வீக காதல் என்றே சொல்லலாம்.ஹெபாஸ்டியன் இறந்த பிறகு அலெக்சாந்தர் வெகு நாள் உயிர் வாழவில்லை.ஹெபாஸ்டியன் அலெக்சாந்தரின் படையில் இருந்த ஒரு சிறந்த தளபதியாகவும் மாவீரனாகவும் கருதப்பட்டான்.

பண்டைய கிரேக்க ரோமானிய சமூகங்களில் ஓரினசேர்க்கை இழிவான பழக்கமாக கருதப்படவில்லை. பல ரோமானிய பிரபுக்களும் மன்னர்களும் ஆசைக்கு ஆணுடனும் இனவிருத்திக்கு பெண்ணுடனும் கூடுவதை பழக்கமாக வைத்திருந்தனர். இப்படி ஓரினசேர்க்கை சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோமானிய பேரரசுக்கும் மக்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பண்டைய இந்தியாவிலும் ஓரினசேர்க்கையாளர்களும் அரவாணிகளும் சமூகத்தில் மதிப்புடனே வாழ்ந்தனர்.கஜுராஹோவில் ஓரினசேர்க்கை சிற்பங்கள் ஏராளம் உள்ளன.காமசூத்திரத்தில் வாத்சாயனர் ஓரினசேர்க்கையாளரின் உடலுறவு முறைகளையும் வாய்வழி உறவையும் விவரிக்கிறார்.காமசூத்திரத்தில் ஓரினசேர்க்கை புரியும் பெண்கள் ஸ்வாரினி (சுதந்திர மங்கையர்) என்று அழைக்கப்பட்டனர்.நாரத ச்மிரிதி ஓரினசேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் பெண்களை மணக்க தடை விதித்துள்ளது.(ஆனால் ஓரினசேர்க்கையை தடை செய்யவில்லை)மகாபாரதத்தில் கண்ணனும் அரவானும் கூடுவது போன்ற ஸ்தல புராணம் கூவாகம் அரவான் கோவிலிலும், கோவை சிங்காநல்லூர் அரவான் கோவிலிலும் காணப்படுகிறது.

இதனால் எல்லாம் பண்டைய சமூகங்களில் ஓசேக்களும், இருபால் சேர்க்கையாளரும், அரவாணிகளும் சம உரிமை பெற்றிருந்தனர் என்று பொருளல்ல.பொதுவாக பண்டைய சமூகங்களில் அவர்களுக்கும் ஒரு இடம் இருந்தது, ஒடுக்குதல் இன்றி ஓரளவு உரிமைகளுடன் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.சமூகத்தில் அவ்வப்போது ஏற்படும் கலாச்சார மாற்றங்களுக்கேற்ப அவர்கள் நிலை மாறி வந்துள்ளது.

பண்டைய சமூகத்தில் அவர்களுக்கு இருந்த நிலையை விட 21ம் நூற்றாண்டில் அவர்களின் நிலை மோசமடைய நாம் விடலாமா? நமது மூதாதையருக்கு இருந்த சகிப்புதன்மையும், தாராளமனமும் நமக்கு வேண்டாமா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்து பார்க்க வேண்டும்.தானாக விரும்பி எவனும் ஓரினசேர்க்கையாளன் ஆவதில்லை. கடவுளாக கொடுத்த நிலை அது. ஓரினசேர்க்கையாளன் ஆகும் ஒவ்வொருவனும் மனதளவில் அதற்கு ஒரு கட்டத்தில் மிகவும் அஞ்சுகிறான், பயப்படுகிறான், தனது மனதை மாற்ற பல வழியிலும் முயல்கிறான். ஆனால் இயற்கையை வெல்ல அவனால் முடிவதில்லை.

சட்டபூர்வமாக இருக்கும் தடைகளை விட சமூகரீதியில் காணப்படும் புறக்கணிப்பே ஓசேக்களை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறது. அவனது ஆண் நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அவன் ஆளாகிறான். ஓசேயின் நண்பனாக நாம் இருந்தாலே நம்மையும் மற்றவர்கள் சந்தேகப்படுவார்கள் என்ற நிலைமை நமது சமூகத்தில் நிலவுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் நட்பு கொண்டு வாழமுடியும் என்பதை ஏற்கும் நமது சமூகம் ஒரு ஓசேவும் இன்னொரு ஆணும் நண்பர்களாக பழகமுடியும் என்பதை ஏற்க மறுக்கிறது.

சட்டபூர்வமாக இவர்களுக்கு செய்ய வேண்டியது பல இருந்தாலும் முதல் மாற்றம் சமூகரீதியாகத்தான் துவங்க வேண்டும். சமூகரீதியான மாற்றம் வந்தால் சட்டம் தானே மாறிவிடும்.ஓசேக்கள் நம்மைப்போல் மனிதர்கள் என்பதை நாம் முதலில் உணரவேண்டும். நமது நண்பர்கள் ஓசேக்கள் என தெரியவந்தால் அதற்காக அவர்களை வெறுத்து ஒதுக்ககூடாது. நமது தொழிலகங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படகூடாது.

ஓசேக்கள் பலருக்கும் எய்ட்ஸ், பாலியல் வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது.பாலியல் தொழிலாளர்களுக்கு காண்டம் வழங்கி விழிப்புணர்வு ஊட்டும் சமூக நல அமைப்புகள் இவர்களை கண்டு கொள்வதில்லை.இந்தியாவில் அண்டர்கிரவுண்டில் செயல்படும் சூழலில் இயங்கும் ஓசேக்களுக்கு பாலியல் வியாதிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த சமூக நல அமைப்புக்கள் முன்வர வேண்டும்.ஓரினசேர்க்கையால் எய்ட்ஸ் வரும் என்பது தவறான தகவல் என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாதுகாப்பற்ற எந்த உறவிலும் எய்ட்ஸ் வரும் என்றாலும் ஓசேக்களிடயே பாதுக்காப்பற்ற உறவு இந்திய/ஆசிய சூழலில் நிலவுவதால் இவர்களுக்கு விழிப்புணர்வும் பாலியல் கல்வியும் அளிப்பது மிக முக்கியம்.


செல்வன்

www.holyox.tk

“To get rich is glorious”

Series Navigation

செல்வன்

செல்வன்