ஓசைகள் பலவிதம்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com

ஓசைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எழும். இடத்திற்கேற்ப ஓசைகள் தோன்றுகின்றன. அவற்றுள் காற்று, கடல், ஆறு, அருவி, பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட இயற்கையாக எழும் ஓசைகளும், அவ்வவ்விடத்தில் வாழும் மக்களால் ஏற்படுத்தப்படும் செயற்கையான ஓசைகளும் அடங்கும். தமிழில் ஓசைகளைப் பற்றிக் கூறும் நூல்களுள் குறிப்பிடத்தக்கது பத்துப்பாட்டின் பத்தாவது பாட்டாக அமைந்துள்ள மலைபடுகடாம் ஆகும். 583 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆன இந்நூல், மதுரைக்காஞ்சிக்கு அடுத்து இரணடாவது பெரிய பாட்டு ஆகும். மலைபடுகடாம் என்பதற்கு “மலையில் தோன்றும் ஒசை“ என்பது பொருளாகும். மக்கள் வாழும் மலையில் பல்வேறு வகையான ஓசைகள் எழுவது உண்டு. அவற்றுள் சிறப்பாக உள்ள இருபது வகையான ஓசைகளைப் பற்றி இந்நூலுள் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் விவரிக்கின்றார்.
இந்நூல் ஆற்றுப்படை நூலாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிற ஆற்றுப்படை நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளனவோ அதுபோன்று இந்நூலும் அமைந்து, கூத்தராற்றுப்படை என வழங்கப்படுகிறது. பெருங்கௌசிகனார் காட்டுவழிகளிலும், மலைவழிகளிலும், ஊர்ப்புறங்களிலும் தாம் கண்ட பல்வேறு நிகழ்ச்சிகளையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இக்கூத்தராற்றுப்படையைப் படைத்துள்ளார்.
அருவியின் ஓசை
ஆண்குரங்கானது பெரிய பலாப்பழத்தைப் பிளந்து அதில் உள்ள பலாச்சுளையை உண்பதற்கு முயல்கின்றது. அப்போது அப்பழத்திலிருந்து பழச்சாறு கீழே ஊற்றுகின்றது. அதன் நறுமணம் எல்லாத் திசைகளிலும் கமழ்கின்றது. தேவமாதர்கள் இச்சாற்றுடன் கலந்து மணக்கும் அருவியின் இன்பத்தை நுகர்கின்றனர். அவர்கள் விரைந்து வீழும் அவ்வருவியைக் கையால் ஏந்திக்கொண்டு அதில் நீராடுகின்றனர். அதனால் ஏற்பட்ட ஓசையானது கூத்தரது இசைக்கருவிகளைப் போன்று ஒலிக்கின்றது. இதனை,
‘‘கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின்
மலைமுழுதும் கமழும் மாதிரந்தோறும்
அருவிநுகரும் வான்அரமகளிர்
வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்
தெரியிமிழ் கொண்ட நும் இயம்போல் இன்னிசை“
(மலைபடு., 292-296-வது வரிகள்)
என்ற மலைபடுகடாமின் வரிகள் மொழிகிறது.
குறவர்களின் சங்கின் ஓசை
தன் இனத்தைப் பிரிந்து வந்த ஆண் யானையானது தினைப்புனத்திற்குள் புகுந்து அதனை அழிக்க முற்பட்டது. அவ்வாறு காட்டிற்குள் புகுந்த யானை தினைப் புனத்தை அழிக்காத வண்ணம் இருப்பதற்காகவும், அந்த யானையை விரட்டுவதற்காகவும் பரண்மேல் இருக்கின்ற குறவர்கள் சங்கினை எடுத்து வாயில் வைத்து ஊதி ஆரவாரம் செய்கின்றனர். அதனைக் கண்ட யானையானது தினைப்புனத்தைவிட்டு ஓடிவிடுகிறது என்பதனை,
‘‘இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரிஒருத்தல்
விலங்கல், மீமிசைப் பணவைக்கானவர்
புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்” (297 – 299-வது வரிகள்)
என மலைபடுகடாம் ஆசிரியர் படைத்துக் காட்டுகிறார்.
கானவர் அழும் ஓசை
கானவர்கள் குகைக்குள் பதுங்கி இருக்கும் முள்ளம் பன்றியைப் பிடிக்க முயல்கின்றனர். ஆனால் அம்முள்ளம் பன்றியானது வெளியில் இருக்கும் அவர்கள் மீது கூர்மையான முட்களை வீசுகிறது. அது கானவர்கள் மேல்பட்டு காயம் ஏற்படுத்துகிறது. காயம்பட்ட கானவர்கள் அழுகின்றனர். கானவர்கள் அழுகின்ற ஓசையை,
‘‘சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவர் அழுகை“ (300 – 301-வது வரிகள்)
என மலைபடுகடாம் எடுத்துரைக்கிறது.
கொடிச்சியர்களின் பாடல்
மலையில் வசிக்கின்ற கொடிச்சியர்களின் கணவர்கள் மீது புலிகள் பாய்ந்து தாக்குகின்றன. அதனால் அவர்களின் மார்பில் புலியின் நகம் கீறியதால் புண் ஏற்படுகிறது. கொடிச்சியரின் கணவர்கள் துன்புறுகின்றனர். அவர்கள் மார்பின்மீதுள்ள புண் ஆற வேண்டும் என்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடுகின்றனர். அப்பாடல் மலையில் பட்டு எதிரொலித்த்தை,
“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்“
(302 – 306-வது வரிகள்)
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.
மங்கையரின் மகிழ்ச்சி ஆரவாரிப்பு
மலையில் பெண்கள் மலர்கள் பறித்து விளையாடுகின்றனர். அவ்வாறு விளையாடுகின்றபோது முதன் முதலிலே பூத்த வேங்கை மரத்தின் மலர்களைப் பார்க்கின்றனர். அம்மலர்களைப் பறிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். மரத்தில் உள்ள மலர்கள் பார்ப்பதற்கு புலியைப் போன்று இருந்த்தால் ‘புலி புலி‘ என்று கூச்சலிட்டனர். இதனை,
“தலைநாட் பூத்த பொன்இணர் வேங்கை
மலைமார் இடூஉம் ஏமப் பூசல்“ (305 – 306-வது வரிகள்)
எனப் புலவர் காட்சிப்படுத்துகின்றார். விளையாட்டிற்காக முதன்முதலாக வேங்கையில் பூத்துள்ள மலர்களைப் பார்த்துப் பெண்கள் மகிழ்ச்சியில் ஆராவாரிக்கும் ஓசை மலையை நிறைத்தது.
ஆண் யானையின் கதறல்
கன்று போடும் நிலையில் உள்ள பெண் யானையை அதன் துணையான ஆண் யானை மலைவழியில் பாதுகாப்புடன் அழைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிர்பாரா நிலையில் பெண் யானையின் மீது புலியானது பாய்ந்து அதனைக் கொன்றுவிட்டது. அதனைக் கண்ட ஆண் யானை தன்னுடன் வந்த தனது சுற்றத்துடன் மலையே அதிரும் வண்ணம் கதறி அழுகின்றது. உள்ளத்தை உருக்கும் ஆண் யானையின் அன்பினை,
‘‘கன்றரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்கு குரல்“
(307 – 310-வது வரிகள்)
என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. தனது பெண் யானையின் முடிவினைப் ஆற்றமாட்டாது இடி ஓசை போன்று கதறிய ஆண் யானையின் அன்பானது கல்மனதையும் கரைய வைக்கக் கூடியதாக உள்ளது.
குட்டியை இழந்த மந்தியின் கூச்சல்
பிறந்த சிலநாள் ஆகிய குரங்குக் குட்டி தனது தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் தவறிவிட்டது. அக்குட்டியின் தாயும் அதனைக் கையாற் பிடித்துக் கொள்ளத் தவறிவிட்டது. அவ்வாறுள்ளபோது மந்தியானது மரத்தில் தாவி ஏற முயலும்போது குட்டியானது ஆழமான மலைப்பிளவில் விழுந்து இறந்துவிடுகிறது. அதனைக் கண்ட மந்தியானது தனது சுற்றத்துடன் சேர்ந்து கூச்சலிடுகிறது. இத்தகைய துயரக் காட்சியினை,
‘‘கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையாப் பூசல்“ (311 – 314-வது வரிகள்)
என்ற வரிகள் எடுத்துக்காட்டுகிறது. மந்தியின் துயரத்தில் பிற குரங்குகளும் பங்குபெறுவது தன்னலம் மிக்க இக்கால மனிதர்களுக்கு ஒரு பாடமாக அமைகின்றது.
கானவரின் மகிழ்ச்சி ஆரவாரம்
யாராலும் ஏற முடியாத மலையுச்சியில் தேன் அடை தொங்குகின்றது. அம்மலைஉச்சிக்கு குரங்குகள் கூடஏறிச் செல்ல இயலாது. அப்படிப்பட்ட மலைஉச்சியில் உள்ள தேனடையை எடுப்பதற்கு கானவர்கள் கண்ணேணியின் மூலம் முயல்கின்றனர். நீண்ட நேர முயற்சிக்குப்பின் அத்தேனடையினை எடுத்து அதிலிருந்து தேனைஎடுத்துவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அம்மகிழ்ச்சியினால் அவர்கள் ஆரவாரம் செய்கின்றனர். கானவர்களின் இவ்ஆரவர ஓசையினை,
‘‘கலை கையற்ற காண்பின் நெடுவரை
நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை“
(315-317-வதுவரிகள்)
என்ற மலைபடுகடாம் வரிகள் குறிப்பிடுகின்றது.
குறுநில மன்னர்கள் அம்மலைப் பகுதியில் பாதுகாவல்களை அமைத்துள்ளனர். அவற்றை கானவர்கள் அழித்தொழித்து மகிழ்ச்சியால் ஆராவராம் செய்கின்றனர். கானவர்களின் அவ்வெற்றி ஆராவாரத்தினை,
‘‘அக்குறும்பு எறிந்த கானவர் உவகை“ (318-வது வரி)
என்று மலைபடுகடாம் தெளிவுறுத்துகிறது.
குறவர்களின் குரவைக் கூத்தின் ஓசை
மலையில் வாழும் குறவர்கள் அரசனுக்கு திறைப் பொருள் கொடுத்து வாழ்ந்தனர். தங்களுக்குக் கிடைத்த புதிய தரமான தேனையே அவர்கள் அரசனுக்குத் திறைப்பொருளாகக் கொடுத்தனர். அவ்வாறு திறையாகக் கொடுக்க அக்குறவர்கள் சிறுகச் சிறுகத் தேனை எடுத்துச் சேர்த்தனர். போதிய அளவு தேன் சேர்ந்தவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியைத் தங்கள் குல மகளிருடன் சேர்ந்து மான்தோலால் செய்யப்பட்ட சிறுபறையை முழக்கிக் கொண்டு மலைஉச்சியில் குரவைக் கூத்தாடினர். அக்கூத்தின் ஒலியும் மலையில் எழுந்தது. இச்செய்தியினை,
‘‘திருந்து வேலண்ணற்கு விருந்துஇறை சான்ம் என,
நறவுநாள் செய்த குறவர், தம் பெண்டிரோடு
மான்தோல் சிறுபறை கறங்க்க் கல்லென
வான்தோய் மீமிசை அயரும் குரவை“ (319 – 322-வதுவரிகள்)
என்ற மலைபடுகடாம் வரிகள் புலப்படுத்துகின்றன. அரசனுக்குத் திறைசெலுத்தவில்லை எனில் அரசனால் துன்பம் வரும். திறைசெலுத்திவிட்டால் அசனால் ஏதும் துன்பம் வராது. அதனாலேயே தங்களது கடமை நிறைவேறியதில் உள்ள மகிழ்வை தமது மகளிருடன் பகிர்ந்து கொண்டு கூத்தாடுகின்றனர் எனலாம்.
வெள்ள நீரின் ஓசை
மலையில் உள்ள ஆற்றில் நீர் பெருக்கேற்படுகிறது. அவ்வெள்ள நீரானது மலைப் பிளவுகளில் விழுந்து ஓடுகிறது. அவ்வாறு ஓடும் ஆற்று வெள்ள ஓசை,
‘‘நல்டிழில் நெடுந்தேர் இயவு வந்தென்ன
கல்யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கிசை“
(323-324-வதுவரிகள்)
என நல்ல அழகுமிக்க தேரானது ஓடிவரும்போது கேட்கும் ஓசையைப் போன்று உள்ளதாக மலைபடுகடாம் ஆசிரியர் படைத்துக் காட்டுகிறார். தேரின் ஓசையையும், ஆற்றுநீரின் ஓசையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ள புலவரின் புலமைத்திறம் போற்றுதற்குரியதாகும்.
பாகர்களின் பேச்சொலி
பெரிய யானையானது கோபம்கொண்டு ஓடிச்சென்று பெரிய நீர்ச்சுழலிலே மாட்டிக் கொண்டது. அதனைக் கண்ட பாகர்கள் அதன் கோபத்தைத் தணிக்க எண்ணினர். மேலும் அதனைக் மீண்டும் கொணர்ந்து கட்டுத்தறியில் கட்டுவதற்கு எத்தனித்தனர். ஆனால் அவ்யானை முரண்டு பிடித்தது. அவ்யானையை தம்வசப்படுத்த யானைப் பாகர்கள் யானையின் மொழியிலேயே சத்தமிட்டுப் பேசுகின்றனர். அவ்வோசையும் மலையில் கேட்கிறது. இதனை,
‘‘நெடுஞ் சுழிப்பட்ட கருங்கண் வேழத்து
உரவுச் சினம் தணித்துப் பெருவெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை“
(325 – 327-வது வரிகள்)
என்று மலைபடுகாடாம் புலவர் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார். முல்லைப்பாட்டில் யானையை உணவருந்த வைப்பதற்காகப் பாகர்கள் யானையின் மொழியில் பேசி யானைக்குக் கவளம் கவளமாக உணவினை அள்ளிக் கொடுக்கும் காட்சி இதனுடன் ஒப்பு நோக்குதற்குரியதாக அமைகின்றது.
கிளிகளை விரட்டும் பெண்களின் குரலோசை
தினை விதைத்திருக்கிறார்கள். தினைக் கதிர்கள் முற்றி விட்டன. அதனைத் தின்பதற்கு கிளிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. தினைக்கதிர்களை த்தின்ன வரும் கிள்ளைக் கூட்டத்தை விரட்டுவதற்கு பெண்கள் மூங்கில் தட்டையை எடுத்துக்கொண்டு வருகின்றனர். தாங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த மூங்கில் தட்டையைத் தட்டி ஒலி எழுப்பி கிளிகளை விரட்டுகின்றனர். மூங்கில் தட்டையின் ஒலியும், பெண்களின் குரல் ஒலியும் சேர்ந்து மலையில் ஒலிக்கின்றன. இதனை அழகுறு காட்சியாக,
“ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளப்படு பூசல்“ (328 -329-வது வரிகள்)
என்று புலவர் வடிக்கின்றார்.
இடையர், குறவர் ஆரவாரம்
இடையர்களின் கிடையிலிருந்து காளையொன்று ஓடி வந்துவிடுகின்றது. அதனைத் தேடி இடையர்கள் மலைப்பக்கம் வருகின்றனர். அப்போது காட்டுப்பசுவின் காளையொன்றுடன் தங்களது காளை முட்டிக்கொண்டு போர் செய்வதைக் காண்கின்றனர். அந்தப்பக்கமாக வந்த மலைக்குறவரும் அக்காட்சியைக் கண்கின்றனர். இடையரும், குறவரும் ஆரவாரம் செய்கின்றனர். ஆனால் காளைகள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு வெறியுடன் போர் செய்கின்றன. முல்லை நில இடையர், குறிஞ்சி நில குறவர் இருவரின் ஆரவாரமும் மலையில் எழுகின்றது. இத்தகைய திணை மயக்கக் காட்சியை,
‘‘இனத்தில் தீர்ந்த துளங்கு இமில் நல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறாமைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரொடு ஒருங்கியைந்து ஆர்ப்ப“
(330 – 333-வது வரிகள்)
என்று புலவர் படைத்துக் காட்டுகின்றார். இது,
“திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே“
(தொல். பொருள்.அகத்.நூற்பா)
என்ற தொல்காப்பியனாரின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்வது இன்புறத்தக்கது.
எருமைக் கடாக்கள் போர் செய்யும் ஒலி
மலையில் மலை எருமைகள் தானாக மேய்ந்து வாழும். தன்னிச்சையாக வாழும் அத்தகைய எருமைகளில் கடாக்கள் முல்லைப் புதர்களும், குறிஞ்சிப் புதர்களும் சிதையும் வண்ணம் ஒன்றோடென்று முட்டிமோதிக் கொண்டு போர் செய்யும். அவ்வாறு போர் செய்யும்போது பேரொலி எழும். இதனை,
‘‘வளஇதழ்க் குவளையும் குறிஞ்சியும் குழைய
நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை“ (334 – 335-வது வரிகள்)
என்று புலவர் எடுத்துரைக்கின்றார்.
கன்றுகளை அடித்து ஓட்டும் ஓசை
மலையில் பலாப்பழங்கள் அதிகம் கிடைக்கும். சிறுவர்கள் பலாச்சுளைகளை நிறைய தின்கின்றனர். அவர்களால் அனைத்துச் சுளைகளையும் தின்ன முடியவில்லை. அவர்கள் தின்று எஞ்சிய பலாச்சுளைகளைக் கீழே பரப்பி அவற்றிலிருந்து கொட்டைகளை எடுக்க நினைத்தனர். அதனால் அங்கு நின்ற கன்றுகளைக் கயிறுகளில் பிணைத்துக் காந்தள் மடலால் அடித்து அதன்மேல் ஓட்டுகின்றனர். அக்கன்றுகளை சத்தமிட்டு பலாச்சுளைகள் மீது ஓட்டும் ஓசை மலைகளில் கேட்பதை,
‘‘காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டு படும் மிச்சில்காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கும் மகாஅர் ஓதை“ (336 – 339-வதுவரிகள்)
என மலைபடுகடாம் எடுத்துக் கூறுகிறது. இவ்வரிகள் மலைவளத்தை தெளிவுறக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.
கரும்பாலையில் எழும் ஓசை
மேகத்தைப்போல கரும்பாலை கொட்டகைகள் அமைந்துள்ளன. அக்கொட்டகைகளில் மூங்கிலைப்போன்று செழித்து வளர்ந்துள்ள கரும்புகள் சாறு பிழிவதற்காக வந்து குவிந்து கிடக்கின்றன. அக்கரும்புகளை பிளக்கும் வண்ணம் உடைத்து ஆலையில் இட்டு ஆட்டுகின்றனர். அப்போது கரும்பாலையில் எழும் ஓசையும் மலையில் எழுந்ததை,
‘‘மழைகண்டன்ன ஆலைதொறும் ஞெரேர் எனக்
கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்“
(340 – 341-வதுவரிகள்)
என்று மலைபடுகடாம் உரைக்கிறது.

மகளிர் இசை
உணவு சமைப்பதற்குத் தேவையான தினையை உரலில் இட்டுக் குற்றுகின்றனர். அப்போது களைப்பு ஏற்படாதிருக்க பாடுகின்றனர். அவர்கள் பாடிக்கொண்டே தினையைக் குற்றுகின்றனர். அவர்கள் பாடலுக்கு தினைகுற்றும்போது ஏற்படும் ஓசை தாளமாக அமைகிறது. இத்தகைய இனிய காட்சியை
‘‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்“ (342-வது வரி)
என்று புலவர் குறிப்பிடுகிறார். தினைகுற்றும்போது மகளிரால் பாடப்படும் பாடல் வள்ளைப்பாடல் எனப்பட்டது என்பதை இதன வாயிலாக அறிய முடிகிறது.
பறையடிக்கும் ஓசையும் எதிரொலியும்
தங்களது விளைநிலங்களில் மலைவாழ்மக்கள் சேம்பு, மஞ்சள் உள்ளிட்ட கிழங்கு வகைகளைப் பயிரிட்டுள்ளனர். அதனை பன்றிகள் தின்பதற்கு முயல்கின்றன. இக்கிழங்குகளைப் பன்றிகள் பாழ்செய்யாமல் இருப்பதற்காக மலைவாழ் மக்கள் காவல் காக்கின்றனர். அவர்கள் பன்றிகளை விரட்டுவதற்காகப் பறைகளை அடித்து ஒலி எழுப்புகின்றனர். அப்பறையோசையைக் கேட்ட பன்றிகள் விளைநிலங்களுக்கு வராது ஓடுகின்றன. மலையில் அப்பறைஓசையும் எழுந்தது என்பதை,
‘‘சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்“ (343 – 344-வது வரிகள்)
என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.
இவ்வாறு ஒலிக்கும் பல்வேறு ஒலிகளும் சேர்ந்து மலையில் மோதி எதிரொலிக்கின்றன. மலையின் எதிர்ஒலி பற்றி,
‘‘குன்றகச் சிலம்பும்“ (345-வதுவரி)
என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
மலைபடுகடாம் ஆசிரியர் இந்நூலில் இருபது வகையான ஓசைகளைக் குறிப்பிடுகிறார். இவ்வோசைகளே, “மலைபடுகடாம்“ ஆகும். அவ்வகையில் ‘மலையில் தோன்றும் ஓசை‘ என இந்நூலிற்குப் பெயர் அமைந்திருப்பது பொருத்தமானதாகும். இவ்வோசைகளின் வாயிலாக மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், மலையின் இயற்கை வளங்கள் ஆகியனவும் பெருங்கௌசிகனாரால் விளக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவ்வோசைகளுள், மக்களின் மகிழ்ச்சியான ஆராவாரிப்பும், அச்சத்தின் காரணமாக எழுந்த கூக்குரலும், வலியின் காரணமாக எழுந்த துன்பக் குரலும், விலங்குகளுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக எழுந்த துயர ஓலமும், விலங்குகள் தங்களுடன் சினத்துடன் போர்புரியும்போது ஏற்பட்ட கர்ஜனைகளும் கலந்து அமைந்திருப்பது நோக்குதற்குரியதாகும். எண்சுவைகளுள் நகை, அழுகை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, ஆகிய ஆறுசுவைகள் இடம்பெற்றிருப்பதும் படித்து இன்புறத்தக்கதாகும்.

Series Navigation