ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

கலாசுரன்….


ஒரு மனமுடைதலின்
தாக்கத்திலிருந்து
சொல்லத் தொடங்குகிறான்

தொடத் தகாத
நிழல்களோடும்
இனம் புரியாத
கவலைகளோடும்

உள்புகும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
உருமாற்றங்கள் விரும்பாது
அடிமனதில் நெளிகின்றன

தோல்விகளுக்காக அல்ல
விற்றிகளின் சோகங்களை
சந்தித்தமைக்காக …

பலதரப்பு வெற்றிகள்
வாழ்க்கை எனும்
மாபெரும் தோல்வியை
பரிசளித்ததர்க்காக …

ஒவ்வொரு வெற்றியிலும்
தோல்விகளில்
ஆழமானதொன்றும் இல்லை என்றான்

சந்தித்த தோல்வியின்
ஆழங்களை இன்னும்
அவன் அளந்து முடியவில்லை

வெற்றிகளின் உயரங்களைத் தான்
இதுவரை ஆழங்கள் என்றிருந்தான் …!

உயிர் சதுப்பில் சிக்கிக்கொண்டபின்
வாழ்கை என்ன வாழ்வதென்ன ?

அனைத்திலும் புறக்கணிப்புகள் தான்
மிஞ்சுகின்றன….

எதுவும் சரியாக இல்லை என்றான்
பிறகு
சரியாக ஒன்றும் கையாளப்படவில்லை என்றான்

அலட்சியத்தின் வாயிலாக
சிதறடிக்கப்பட்டது
வாழ்கையின் படிமங்கள்

ஓன்று தொட்டிலாகவும்
இன்னொன்று ஊஞ்சலாகவும்

ஒவ்வொரு துன்பத்தின்
அழுத்தங்களும்
ஓய்வில்லாமல் ஆடவைக்கின்றது

தொன்குதலுக்கான கயிற்றின்
நுனி தேய்ந்து
அறுபடும்வரை….!

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்