ஒரு பேறு

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

விக்கிரமாதித்தன்


நான் போகும் பொழுதெல்லாம்
அவன் ஊரில் இருந்துகொண்டுதான் இருக்கிறான்.

அந்தி
சந்தி
அர்த்த ஜாமம்
அதிகாலை
நண்பகல்
எந்த நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறான்

என்றாலும்
இருப்பானோ
இருக்க மாட்டானோ
என்ற பயம் மட்டும்
இருந்து கொண்டேயிருக்கிறது

ஞாயிற்றுக் கிழமைகள்
விடுமுறை நாள்கள்
விழா நாள்கள்
முகூர்த்த நாள்கள்
எந்த சமயத்திலும்
எங்கும்
அவன் போனதில்லை
இது வரை
ஆனால்
போயிருந்தால்
என்ற பதற்றம்
அவனைப் பார்க்கிற வரை இருக்கும்

அவன்
அவ்வளவு சுலபத்தில்
எங்கும் போக முடியாதவன்
அவன் தொழில் அப்படி

காலை நடை
போகலாம்
வீடியோ கேசட் கடை
பீர் பார்லர்
இது போல
சில இடங்கள் உண்டும்
அவன் போவதற்கு
பக்கத்து நகரத்துக்கு
போகக் கூடும் வீட்டுப் பொருள்கள் வாங்க

எங்கு போனாலும்
இரவு எந்நேரமானாலும்
திரும்பி வந்தாக வேண்டும் அவன்

ஆனாலும்
அவ்வப்பொழுது
எப்படியோ
எங்கேயாவது
போய் வந்து கொண்டு தான் இருக்கிறான்

திரைப்பட விழாக்கள்
நண்பர்கள் சந்திப்பு
சிறு சுற்றுலாக்கள்
இடம் வாங்க/ விற்க
இப்படியெல்லாம்
போவதுண்டு தான்

என்னவோ
நான் போகும் போது மட்டும்
அவன் இல்லாமல் இருந்ததில்லை

ஒரு முறையாவது
ஊரில் இல்லாமலிருக்க வேண்டுமென்று
உள்ளூர ஆசைப்பட்டுக் கொள்வேன்.

இந்த முறை
அப்படியானது
என் பேறு

******

Series Navigation

விக்கிரமாதித்தன்

விக்கிரமாதித்தன்