ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


ஒரு உலக மகா அதிவேக கணினியைக்கட்டவும், கணிப்பு வலையை (computing grid) அமைப்பதற்கும் அமெரிக்க தேசீய அறிவியல் தளம் (National Science Foundation) என்ற அமெரிக்க அரசாங்க நிறுவனம் சுமார் 53 மில்லியன் டாலர் (சுமார் செலவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் நடக்கும் ஆராய்ச்சிகள், மற்றவகையில் பல வருடங்கள் ஏன் நூற்றாண்டுகள் கூட பிடிக்கும் எனக் கருதப்படுகிறது.

வினியோகப்படுத்தப்பட்ட டெராஸ்கேல் அமைப்பு (Distributed Terascale Facility, or DTF) என்ற இது 4 அமெரிக்க ஆராய்ச்சி மையங்களால், மூலக்கூறு மாதிரி அமைத்தல், இதன் மூலம் வியாதிகளை கண்டறிதல், மருந்துகள் கண்டுபிடிப்பு, முறைசாரா சக்தி பற்றி ஆராய்ச்சி, உலக தட்பவெப்ப, காற்றுமண்டல மாதிரிகள் அமைத்தல் போன்றவற்றில் பயன்படும்.

13.6 டிரில்லியன் கணக்குகளை (1,36,000 கோடி கணக்குகளை) ஒரே வினாடியில் போடும் இந்த அதிவேக கணினிக்குள் 600 டெராபைட் செய்திகளுக்கு இடம் இருக்கும். (146 மில்லியன் பொன்னியின் செல்வன் அளவு நாவல்களுக்கு இடம் இருக்கும்)

‘எல்லா அறிவியல் தொழில்நுட்ப கருவிகளும் ஏராளமான அறிவியல் எண்களையும் செய்திகளையும் கொண்டுவந்து தருகின்றன. இந்த அனைத்து விஷயங்களுக்குள்ளும் சென்று இவைகளிலிருந்து நமக்குத் தேவையான செய்தியை வெளிக்கொணர்வது பெரும் சவால் ‘ என்று டெனியல் ரீட் கூறுகிறார். இவர் நேஷனல் சென்டர் ஃபார் சூப்பர்கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர். ‘இது அறிவியலையும், பொறியியலையும் அங்கு நடக்கும் ஆராய்ச்சிகளின் அடிப்படையையே மாற்றும் என்று கூறுகிறார்.

2002ஆம் வருட இறுதியில் முற்றுப்பெறும் இந்த அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், அறிவியலுக்காக கட்டப்பட்ட மாபெரும் கணினிகளிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இது காரி காஸ்பரோவை 1996இல் தோற்கடித்த டாப் புளூ (ஆழ்ந்த நீலம்) என்ற ஐபிஎம் நிறுவனக் கணினியைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்தது இந்தப் புதுக்கணினி.

DTF அமைப்பை உருவாக்க க்வெஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் ஒரு வினாடிக்கு 40 கிகாபிட் வேகமுள்ள வலையை ஐபிஎம் நிறுவனத்தின் துணையோடு கட்டுகிறது. இதற்கு இன்டெல் நிறுவனத்தின் இடானியம் சில்லுகளும், லினக்ஸ் இயங்குதளமும் உபயோகப்படுத்தப்படும். சுமார் ஆயிரம் ஐபிஎம் சேவைஇயந்திரங்களும், 3300 இடானியம் சில்லுகளும் இந்த DTF அமைப்புக்குள் இருக்கும்.

இத்தோடு கூட இணைந்து வேலை செய்வது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸாண்டியாகோ சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர், அர்கோன் நேஷனல் லேபோரட்டரி, கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை.

திறந்த தரங்கள் (open-source standards) மூலம் இந்த வலையை பின்னுவதால், இன்னும் பல சூப்பர் கணினிகளும் இந்த மாபெரும் DTFவோடு இணையவும், இதன் திறமையை பலமடங்காக்கவும் இயலும், ஐபிஎம் நிறுவனம் தன்னை கிரிட் கம்யூட்டிங் என்ற வலை கணிப்பியலில் தலைவராக நிறுத்திக்கொண்டிருக்கிறது. வெகுவிரைவில், ஒரு மின்சார வினியோக நிறுவனம் போல, ஐபிஎம் தன்னை ஒரு கணிப்பு வினியோக நிறுவனமாக ஆக்கிக்கொள்ள முயன்று வருகிறது. இதற்கு அதிவேக இணையவலை வெகுவாக உதவும்.

இது ஐபிஎம்முக்கு வெற்றித்தளமாக இருப்பது போலவே, இன்டெலுக்கும் இது வெற்றிமுகம். இடானியம் என்ற இந்தச்சில்லு, இன்டெல் நிறுவனத்தின் முதல் சூப்பர் கணினிச் சில்லு. இந்த சூப்பர் கணினிச்சில்லுகளில் இன்று ஸன் மைக்ரோவும், ஐபிஎம்முமே தலைவர்கள்.

Series Navigation