ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பாவண்ணன்


(கறுப்பு நாய்-சிபிச்செல்வன், அமுதம் பதிப்பகம், 30, சம்பங்கித்தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. விலை. ரூ. 30 )

வலிமையான கவிமொழி கைவரப்பெற்ற இளங்கவிஞர்களில் முக்கியமானவர் சிபிச்செல்வன். சாம்பல் காடு என்னும் இவருடைய முதல் கவிதைத்தொகுதி இவருடைய மொழியாளுமைக்குச் சான்றாக விளங்கியது. ஆறாண்டுகள் கழித்து வந்திருக்கும் இந்த இரண்டாவது தொகுதியில் 58 கவிதைகள் அடங்கியுள்ளன. கவிதைகளின் வரிகளினுாடே புலப்படும் அவரது படைப்புலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கிடையே பெரிய மாற்றமில்லையெனினும் வெளிப்படுத்தும் விதத்தில் மொழியழகு கூடியுள்ளதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும்.

தொகுப்பில் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் கவிதையாக ‘இசைவெளியில் கரைந்த ரயில் ‘ கவிதையைச் சொல்லலாம். தொடக்கத்தில் எங்கும் மெளனவெளி. பிறகு அந்த வெளி மெல்லமெல்ல இசையால் நிறைகிறது. இசைவெளியின் ஊடே மனிதர்கள் கடந்து செல்கிறார்கள். இப்போது பெரும் கூவலுடன் வருகிறது ரயில். இசைவெளியில் கலக்கிறது கூவல்ஒலி. மெளனவெளியில் இசைவெளியும் இசைவெளியில் ரயிலின் கூவல்ஒலியும் மிகஇயல்பாகக் கரைந்துவிடுகின்றன. கரைதலில் நிகழ்கிற ஒத்திசைவு மிகமுக்கியமான ஒன்றாகும். தொடர்ந்து இயல்பாக உருமாறிக்கொண்டே இருக்கிற காலத்தின் படிமம் இது. வாழ்வில் எதிர்ப்படும் எல்லாச் சவால்களையும் அல்லது மேடுபள்ளங்களையும் இயல்பாக உள்வாங்கிக்கொண்டு இயங்கியவண்ணம் உள்ள வாழ்வின் படிமமாகவும் கொள்ளலாம். ஒத்திசைவு என்கிற புள்ளியிலிருந்து இக்கவிதை பிரபஞ்ச ரகசியத்தின் எல்லா எல்லைகளையும் நோக்கித் தன்னை விரித்துக்கொள்கிறது. இதே ரயிலின் கூவல் ‘மரணம் வரும் திசையறிய ‘ என்கிற கவிதையிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் முதல் கவிதையைப்போல இக்கவிதையால் விரிவுகொள்ள இயலவில்லை. மாற்றி எழுதிப்பார்த்தல் என்கிற முதற்சி அளவில் சுருங்கிவிடுகிறது.

நல்ல அனுபவத்தைக்கொடுக்கும் மற்றொரு கவிதை ‘மண்டையுள் நுழைகிறது ‘. பார்வையில் படுவது கொடிநுனியா, பாம்பா என்று தீர்மானமாகச் சொல்லவியலாத தடுமாற்றத்தைப் பற்பல தளங்களுக்கு மாற்றி விவரித்துப் பார்த்துக்கொள்ளத் தோதான சாத்தியப்பாடுகளை இக்கவிதை கொண்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சந்தித்துக்கொண்டே இருக்கிற தடுமாற்றங்கள் பற்பல. நம்மைப் பார்த்துச் சிரிக்கிற சிரிப்பு நட்பு கலந்ததா, பகை சார்ந்ததா ? நம்மை நேருக்கு நேர் பார்க்கும் கண்களில் தென்படும் வெளிச்சம் காதலின் வெளிச்சமா, வெறுப்பின் வெளிச்சமா ? தொலைவில் தெரியும்போது ஒன்றாகவும் நெருங்கிக் கரையும்போது மற்றொன்றாகவும் மாறும் விசித்திரப் புதிர்களை மானுட வாழ்வெங்கும் தரிசிக்கலாம். இதே தடுமாற்றத்தின் சித்திரத்தையே வேறொரு விதமாகத் தீட்டிக்காட்டும் மற்றொரு கவிதை ‘ஒரு குயிலும் கூவவரவில்லை ‘.

‘தொலைபேசி மொழி ‘ என்னும் கவிதையையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பறவை, மரம், செடி, மிருகம் என எல்லாவற்றுடனும் உறவாடத்தெரிகிற மனிதர்களுக்குச் சக மனிதர்களோடு உறவாடுவது பெரிய சவாலாக உள்ளது. மனிதர்களை மனிதர்களால் ஏன் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது பெரும்புதிராகவே காலமெல்லாம் திகழ்கிறது. நேருக்குநேராகப் பார்க்க நேர்ந்துவிடும் மனிதர்களுடன் வார்த்தைகளைத் தொடங்குவதற்கே ஒருகணமேனும் மனத்தயாரிப்பு தேவைப்படும் காலம் இது. கோபமுடன் தொடங்குவதா, சிரிப்புடன் தொடங்குவதா, அதிகாரத்தைக் காட்டுவதா, ஆசையை வெளிப்படுத்துவதா என முடிவெடுப்பதில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் முளைத்துவிடுகின்றன. முடிவெடுத்த பிறகு முடிவுக்குத் தோதான சொற்களுக்காகப் பெருகும் தடுமாற்றங்களும் ஏராளம். இந்த நிலையில் நேருக்குநேர் பார்க்க வாய்ப்பில்லாத, தொலைபேசியில் பேசுவதற்கு அழைக்கிற மனிதர்களுக்கு உகந்த மொழியை உருவாக்கிக்கொள்ள நேரும்போது உருவாகும் தடுமாற்றங்கள் மேலும் கடுமையானவை. ஆனால் தொலைபேசியுடன்தான் தன் வாழ்க்கை என்று தீர்மானமாகிவிட்ட சூழலில் நகரமனிதர்கள் கணந்தோறும் தடுமாற்றங்களைச் சந்தித்தபடியேதான் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல தடுமாற்றங்கள் சாமர்த்தியமாக மலர்ந்து, பிறகு பழக்கமாக மாறி, கணத்துக்குக்கணம் மொழியை மாற்றி உருவாக்கி முன்வைக்கும் தேர்ச்சி கைவரும்போது மனிதர்கள் ஆபத்தானவர்களாக மாறக்கூடும்.

‘கறுப்பு நாய் ‘ என்கிற தலைப்பில் நான்கு வெவ்வேறு கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (தலைப்புகளின் வரிசைப்படி ஐந்து இருக்கவேண்டும் போலும். ஆனால் கறுப்பு நாய்-2 கவிதையைக் காணவில்லை) வெளியாகியிருக்கும் நான்கு கவிதைகளில் முதல் கவிதை மட்டுமே பல்வேறு தளங்களுக்கு மாறக்கூடிய சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. மற்றவை மரணம் என்கிற ஒற்றைஉண்மையை முன்வைப்பவையாக மட்டுமே அமைந்துள்ளன.

முளைப்பதைப்போல தரையைப் பிளந்தெழும் சில விதைகள் வெவ்வேறு காரணங்களால் தொடர்ந்து முளைத்து வளராமல் வாடிவிடுவதைப்போல நல்ல தொடக்கத்தைக்கொள்ளும் சில கவிதைகள் தொடர்ந்து எழுச்சிகொண்டு முன்னகராமல் வாடிவிட்டதையும் குறிப்பிடுதல் வேண்டும். ‘தனிமை ‘ என்னும் கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ‘வானமெங்கும் ஒரே ஒரு கிளி பறக்கிறது ‘ என்பதுதான் கவிதை. வானம், பறத்தல் என்று பார்த்ததுமே ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச்செல்கிறது ‘ என்னும் பிருமிளின் கவிதை வரிகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இறகு பிரியும் கணம் வாழ்வின் தொடக்கம் என்றும் தரையை அடையும் கணம் மரணம் என்றும் எண்ணிக்கொண்டால் இடைப்பட்ட காலத்தில் காற்றின் பக்கங்களில் அலைவுண்டு அலைவுண்டு அது எழுதும் சரித்திரத்தின் முக்கியத்துவம் புரியும். பதற்றம், அதிர்ச்சி, சவாலை எதிர்கொள்ளும் தன்மை, அச்சமின்மை, ஆற்றலை வெளிப்படுத்தும் தீவிரம், வேகம் என மாறிமாறி வரிகளிடையே வெளிப்படும் உணர்வுகளின் அனுபவமே அக்கவிதையை மகத்தானதாக மாற்றுகிறது. இத்தகு உணர்ச்சி மோதல்களுக்கு வழியின்றி தனிமையின் வலியை லேசாக அடையாளமிட்டுக்காட்டிவிட்டு அடங்கி விடுகிறது சிபிச்செல்வனுடைய கவிதை. மன உழைப்பைக்கோருகிற ஒரு கவிதையுடன் போதுமான அளவுக்கு மனம் உறவு கொள்ளவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

துாதர்கள், முதல்உறங்கும்பகல், பெயர் அறியாப் பூமணம் எனப் பட்டியலாக மட்டுமே எஞ்சிவிடும் கவிதைகளும் ஒருசொல் போதும், கள்மறக்கும் காலம் எனச் சொற்களை இனிய ஓசையுடன் அடுக்கிப் பார்க்கும் கவிதைகளும் தொகுதியில் நிறைந்துள்ளன. இந்த அடுக்குகளின் ஊடே அலைந்து அலைந்துதான் ஒரு கவிஞனால் பறத்தலைச் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும். சிபிச்செல்வனிடம் அந்த முயற்சிகளில் நம்பிக்கையும் ஆர்வமும் தென்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

****

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்