ஏ.தேவராஜன் 5 கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

ஏ.தேவராஜன்


ஏ.தேவராஜன் 5 கவிதைகள்
1
இரவு பொழியும் வெப்பத்தில்
அன்றைக்கான பகலின் அதிருப்திகள்
குரூரங்களின் குரலாக
நாற்சுவர் விட்டங்களில்
மோதி மோதி விழுந்தன

சுழல் காற்றாடியில்
அவை அடிபட்டும்
தீரா ஆவேசங்களுடன்
திரட்சியுடன் எழும்புகின்றன

விழுந்தவற்றிற்குக் கால் முளைக்கவும்
அவற்றின் விரல்களில்
கூர் நகங்களும்
திடுதிப்பென இறக்கைகளுமாக மாறி
பேரொலியுடன் எழுந்தன

தடைபட்டுத் தடைபட்டு நீளும் நித்திரையில்
முடிவற்று நீளும்
கனவு நனவுகளின் உணர்வுப் போராட்டங்கள்
நகர இடுக்குகளின் யுகங்களை
நொடிப்பொழுதேனும் கடந்தேக
வகையிழக்கச் செய்துவிடுகிறது

2
ஐம்புலன்களும் விரயமாகிக்
கல்லாகித் துகளாகி
மாயையாகி நிற்கையில்
ஒளியாகிக் கதிராகிப்
பிரமாண்டமாய் ஜொலிக்கிறது
சாக்காட்டின் மொழி !

3
வெட்டவெளிதனில்
நிர்வாணமாய்த் திரிகையில்
பிரபஞ்சம் தன்னை
அர்ப்பணித்தது எனக்கு
அதன்பின்
வாழ்கிறது எல்லாமும்!

4
இன்னும் என்ன
ஒன்றுமே
இல்லையைத் தவிர
வேறென்ன

5
எனது காகிதங்களில்
வந்தமர்ந்துகொள்கிறார்
கடவுள்
அடித்தல் திருத்தல்
அத்தனையும் தாங்கிக்கொண்டு

Series Navigation