எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

பாவண்ணன்


தமிழ் வாசகர்களின் அன்புக்கும் ஆதர்சத்துக்கும் உரியவராக இருந்த படைப்பாளரான சு.ரா. என்றழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் மறைவுச் செய்தி உருவாக்கியிருக்கும் அதிர்ச்சி மிக அதிகமானது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் தொடர்ச்சியான தன் படைப்பாக்கச் செயல்பாடுகள் வழியாக தமிழிலக்கியப் பரப்பில் மிகச்சிறந்த ஆளுமையாக தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டவர் அவர். படைப்புகள் குறித்தும் பண்பாடு குறித்தும் அவர் எழுதியும் பேசியும் வந்த கருத்துகள் நம் தமிழ்ச்சூழலை புத்துணர்ச்சி மிகுந்ததாக வடித்தெடுக்கும் சக்தியுடையனவாக இருந்தன.

இக்கருத்துகள் சுந்தர ராமசாமியின் படைப்புகளை அணுகும் ஓர் இளம்வாசகனுக்கு படைப்பு சார்ந்த கூர்மையான அணுகுமுறையையும் சுவையுணர்வையும் வழங்குகின்றன. உறுதியான வாழ்க்கைப் பார்வையுடைய வாசகன் இக்கருத்துகளுடன் நிகழ்த்தும் ஆழமான விவாதங்களின் விளைவாக மேலும் புதிய கேள்விகளுடன் புதிய விடைகளைநோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் சாத்தியப்பாடுகள் உண்டு. தமிழிலக்கியத்தின்பால் ஈர்க்கப்படும் இருபது இருபத்தைந்து வயதுள்ள இளம் வாசகர்களின் குழுவொன்று எல்லாக் காலகட்டத்திலும் அவருடைய படைப்புகளை ஆழ்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டி வந்திருப்பதை கண்கூடாக நம்மால் பார்க்கமுடியும். இளம்நெஞ்சங்கள் எழுப்பும் எல்லாவிதமான கேள்விகளையும் எதிர்கொண்டு உரிய விடைகளை வழங்கி, அவர்களை மேலும்மேலும் கேள்விகளைக் கேட்கக்கூடியவர்களாக கூர்மைப்படுத்தி அன்பார்ந்த ஒரு நட்பை உருவாக்கிக்கொள்வதில் சு.ரா.வின் முதுமை ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இளம் வாசகர்களின் ஆதர்சத்துக்குரிய அந்தச் சக்தி இன்று அணைந்துவிட்டது என்னும் செய்தி தாளமுடியாத மிகப்பெரிய வெறுமையை மனத்தில் உருவாக்குகிறது.

புதுமைப்பித்தனால் தகவமைக்கப்பட்ட தமிழின் நவீனத்துவ முகத்தை மேலும் புத்தொளியுடன் செம்மையுறச் செய்தவர் சு.ரா. அவர் எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை – நாவலில் நவீனத்துவம் தனது அடுத்தகட்டத்தைநோக்கித் தானாக நகர்ந்து வந்துவிட்டது. புளியமரம் தந்திரமாக வீழ்த்தப்படுகிறது. அஃறிணைப்பொருளான ஒரு சாதாரண மரத்துடன் தன் திறமையையும் வலிமையையும் காட்டும் அளவுக்கு மதிப்பிழந்துவிடுகிறான் மனிதன். மனித வாழ்வில் திருட்டுத்தனங்களும் ஏமாற்றுகளும் பொய்களும் அதிகரிக்கத் தொடங்குகின்றன. முன்னேற்றமும் தன்னலமும் கைகோர்த்துக்கொள்கின்றன. நாலாபக்கமும் வெள்ளம் சூழ்வதைப்போல தன்னலம் மானுட வாழ்வைச் சூழந்துகொள்கிறது. அழிவின் சித்திரங்களை ஒவ்வொன்றாகக் காட்டிவரும் நாவல் அவற்றுக்கு இணையாக இன்னொரு காட்சியையும் அமைதியாகச் சுட்டிக்காட்டுகிறது. அது தாத்தாவின் அன்பில் மழலைகள் சிரிக்கும் காட்சி. வீழ்ச்சியையும் தவிப்பையும் சமப்படுத்துகிற அந்தப் புன்னகை¢காட்சியை யாராலும் மறக்கமுடியாது. புதுமைப்பித்தன் வழியாக நவீனத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட சு.ரா. விரக்தியின் விளிம்பில் வீற்றிருக்கிற இப்புன்னகைக் கீற்றைக் கண்டடைந்ததை முக்கிய நிகழ்வாகச் சொல்லவேண்டும். இந்த அம்சமே, புதுமைப்பித்தனுக்கு அடுத்த படைப்புச் சிகரமாக சு.ரா.வைக் கணிப்பதற்கு உறுதுணையான நிற்கிறது. புளியமரத்தைப்போல இந்த மண்ணில் இன்னும் எத்தனை மரங்கள் வேண்டுமானாலும் வீழ்த்தப்படலாம். ஆனால் வீழ்த்தப்பட முடியாத மாபெரும் சக்தியாக மானுடம் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இந்தப் புன்னகையும் பற்றற்ற நேசமுமல்லவா.

ஒரு படைப்பாளியாக சு.ரா. அடைந்திருக்கிற வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது அவருடைய கவனிப்புத்திறன். பார்வையில் படுபவை அனைத்தும் சேர்ந்தே ஒரு புறச்சித்திரம் அமைந்திருக்கிறது என்றாலும் ஒரு கலைப்படைப்பில் அவை அனைத்தையும் பதிவுசெய்யவேண்டியதில்லை. படைப்பாளியிடம் எப்போதும் ஒரு தேர்வு இருக்கிறது. கொட்டிக்கிடக்கிற ஏராளமான பொம்மைக் குவியலிலிருந்து சட்டென எடுப்பாகத் தெரிகிற ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு புன்னகைத்தபடி ஓடும் ஒரு சிறுமியைப்போல, புறச்சித்திரங்களில் ஒன்றிரண்டைமட்டுமே படைப்பாளியின் மனம் தற்செயலாகக் கண்டடைவதைப்போல தேர்ந்தெடுத்துக்கொள்கின்றது. ஓர் ஓவியத்துக்கும் ஒரு புகைப்படத்துக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டுக்கு இணையானதாக இத்தேர்வைச் சொல்லலாம். ஒன்றிரண்டு தகவல்கள் அல்லது பொருள்களின் இருப்பு ஆகியவற்றைமட்டுமே சு.ரா. எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். மிகக்குறைந்த வரிகள்மூலம் புறஉலகை அசையும் ஒரு சித்திரமாகக் காட்டும் அவருடைய திறமை அசாத்தியமானது. பிறகு, புற உலகத்தையும் மன இயக்கத்தையும் மிக நேர்த்தியாக இணைத்துவிடுகிறார். ஆக்கரீதியாக இப்படிப்பட்ட இணைப்புகளை உருவாக்குவதில் ஈடுஇணையற்ற படைப்பாளியாகவே அவர் இறுதிவரை இயங்கிவந்தார். ஒவ்வொரு வரியிலும் அவருடைய கூர்மையான மொழி அவருக்குத் துணையாக நிற்கிறது.

தமிழ் உரையாடலில் சு.ரா.வுடைய தாக்கம் மிக ஆழமானது. சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் கலையில் அவருடைய படைப்புகள் என்றென்றும் முன்மாதிரியாக இருக்கக்கூடியவை. உரைநடைக்கு மிக நெருக்கமான வரிகள்மூலம் அவர் புனைந்தளித்திருக்கிற கவிதைகள் அவை வாசிக்கப்பட்ட ஒரே நொடியில் வாசகர்களின் மனவானில் சிறகசைத்து பறக்கவல்லவையாக அமைந்திருக்கின்றன. அந்த வரிகள் மிதந்துமிதந்து ஒரு மனத்துக்குள்ளேயே வெவ்வேறு கிளைகளில் அமர்கின்றன. இளைப்பாறுகின்றன. சோர்வை மறைத்து மீண்டும் சிறகசைக்கின்றன. வட்டமிடுகின்றன. சுழன்று தாவும் ஒரு கணத்தில் மனம் தானாக இன்னொரு கவிதையைக் கண்டடைகிறது. நல்ல படைப்புகள் தரும் அனுபவம் என்பது மீண்டும்மீண்டும் அது தன்னைநோக்கி ஈர்த்துக்கொண்டே இருப்பதாகும். வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நமக்குக் காட்டும் புதுப்புது அனுபவத்தின் அடிப்படையில் அசைபோடுவது மகத்தான அனுபவமாகும். சு.ரா.வின் பெரும்பாலான படைப்புகள் விரிவான அத்தகைய அனுபவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வலிமை கொண்டவை.

புராதன வாழ்விலிருந்து மனிதன் இன்று பலபடிகளைத் தாண்டி வெகுவேகமாக முன்னேறி வந்துவிட்டான். அறிவியல் அவனுடையமுன்னேற்றத்துக்கு சகலவிதமான ஒத்தாசைகளையும் செய்துகொடுத்திருக்கின்றன. வெளிச்சம் வேகவேகமாகப் படர்கிற அதே அளவுக்கு இருளின் அடர்த்தியும் அதிகரித்தபடி செல்கிறமானுட மனத்தின் விசித்திரம் கடந்த நுாற்றாண்டுகளின் எல்லா மொழிப்படைப்பாளிகளையும் வியப்புக்குள்ளாழ்த்திய வினாவகும். தானே வளர்த்தெடுத்த வாழ்வின் வனத்தில் ஏதோ அடையாளம் தெரியாத இருளின் பகுதிக்குள் அவன் தன்னையறியாமலேயே அகப்பட்டுக்கொண்டு மீள முடியாமல் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. மீட்சியற்ற இந்த அவஸ்தைகளை பல தருணங்களில் அவன் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்கிறான். நெருக்கடியான சில தருணங்களில் தானாக அச்சிக்கல்கள் உருவாகிவிடுகின்றன. வெளிச்சத்தையும் இருளையும் ஒருசேர தன்னில் சூழ்ந்துகொள்ள ஏன் மனிதன் அனுமதித்துக்கொள்கிறான் என்கிற கேள்வி சமூகத் தளத்தில் மிக முக்கியமான கேள்வி. மானுடக் கலாச்சாரத்தை ஆய்வுக்கட்படுத்த நினைக்கும் படைப்பாளிகள் தொட்டுப் பேச விழையும் ஆதாரக்கேள்வி அதுவாகும். புதுமைப்பித்தனில் வெளிப்பட்ட இந்த விழைவு சு.ரா.வின் இறதிவரை ஒரு பெருஞ்சுடராக ஒளிர்ந்தது.

சு.ரா.வின் படைப்புகளாக இன்று நம் முன் பல சிறுகதைகளும் மூன்று நாவல்களும் சில கட்டுரை நுால்களும் உள்ளன. அவை வெறும் வரிகளால் நிரம்பிய நுால்கள் மட்டுமல்ல. அவற்றில் வெளிப்படும் விழைவு என்பது மிகமுக்கியமான அம்சமாகும்.

தாழ்விலிருந்து மானுடத்தை மீட்டெடுத்துவிடும் நம்பிக்கை மிகுந்த அந்த விழைவு சு.ரா. தமிழ் உலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய சொத்து. அந்த விழைவின் வழியே சு.ரா. நம் நெஞ்சில் என்றென்றும் வாழ்வார்.

(24.10.05 அன்றைய தினமணி நாளேட்டில் இடம்பெற்ற கட்டுரை)

Series Navigation