எளிமையின் உறையும் மேன்மை (எனக்குப் பிடித்த கதைகள் – 22 -ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘)

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

பாவண்ணன்


ஒரு கோயில் வாசல். வேப்ப மர நிழலில் கந்தலான சாக்கை விரித்துச் செருப்பு தைக்கும் சாமான்களை அடுக்கி வைத்திருந்தார் பெரியவர் ஒருவர். தளர்ந்த உடல். முடியெல்லாம் வெளுத்துக் கிடந்தது. கிழசலான மேலாடையைக் கசக்கிக் கட்டியிருந்தார். கோயிலுக்குள் செல்லும் நபர்களின் காலணிகளையும் அவரே பார் த்துக் கொண்டார். வயது வித்தியாசமில்லாமல் சின்னப் பிள்ளைகளும் பெரியவர்களும் அவரைச் சூழ்ந்து பல கேள்விகள் கேட்டபடி இருந்தார்கள். தேநீர் குடிக்க ஒதுங்கிய நான் அக்காட்சியைக் கவனித்தபடி இருந்தேன்.

‘நெஜமாவே நீங்க காந்தியைப் பாத்திருக்கீங்களா ? ‘ என்று அந்த முதியவரிடம் கேட்டான் ஒரு சிறுவன். ஆமாம் என்று தலையசைத்தார் அவர். உடனே அச்சிறுவன் ‘தடி வச்சிட்டுத்தான் அப்பவும் நடந்தாரா, இல்ல வேகமா நம்மப் போல நடந்தாரா ? ‘ என்று மறுபடியும் கேட்டான். அவர் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள் பல கேள்விகள் அவரைப் பார்த்துக் கேட்கப்பட்டன. ‘கண்ணாடி போட்டிருப்பாரா ? இல்லையா ? மேல்சட்ட போட்டிருந்தாரா, இல்லயா ? படத்துல காந்திக்கு தாங்கலா ரெண்டு பொண்ணுங்க வராங்களே, அவுங்க பாக்க எப்படி இருப்பாங்க ? அவுங்ககிட்ட காந்தி சிரிச்சி பேசுவாரா ? காந்தி கறுப்பா இருப்பாரா, செவப்பா இருப்பாரா ? ‘ கேள்விகளின் பின்னணியில் இருந்த குறும்பையும் கேலியையும் முதியவரால் புரிந்து கொள்ள முடிந்தது. எதுவும் பேசாமல் அவர்களையே அப்பாவியாகப் பார்த்தார். ‘சும்மா இருந்தா எப்படி பெரிசு ? வாயத் தெறந்து பேசு. தனியா இருக்கும் போது காந்திக்கு தண்ணி,சிகிரெட் பழக்கமெல்லாம் இருந்ததா ? இல்ல, எப்பப்பாரு, தக்கிளிய உருட்டிகிட்டேதான் இருப்பாரா ? ‘ என்று குரலைத் தாழ்த்திக் கேட்டுக்கொண்டே, கூட இருந்த நண்பர்களைப் பார்த்துக் கண்ணடித்தான் இளைஞன் ஒருவன். அவன் விரலிடுக்கில் புகைந்த சிகரெட்டையே சில கணங்களுக்கு வெறித்துப் பார்த்த பெரியவர் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தார். பிறகு, அருகில் கிடந்த தோல் ஒன்றை எடுத்துச் சுத்தம் செய்யத் தொடங்கினார். எந்தப் பதிலையும் பெற முடியாத கூட்டம் ‘இந்த வயசுலே இந்த ரீல் உடுதே இந்தப் பெரிசு, வயசுக் காலத்துல எப்படி இருந்திருக்கும் ‘ என்று முணகியபடியும் பார்வையால் கிண்டலைப் பகிர்ந்து கொண்டபடியும் நகர்ந்து சென்றது.

கும்பல் கலைந்ததும் மெல்ல அவரருகில் சென்றேன். ஏதேதோ பேச்சுக் கொடுத்த பிறகு, தற்செயலாகக் கேட்பது போல அந்த விஷயத்தைக் கேட்டேன். ‘அறியாப் புள்ளைங்க ஏதோ பேசுதுங்க, அதயெல்லாம் பெரிசா எடுத்துக்கலாமா, உடுங்க சார் ‘ என்றார் அவர். ஆனாலும் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு. அதை அவரிடம் முன்வைக்கவும் செய்தேன். என் குரலோ, என் முகமோ அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். சொல்லத் தொடங்கினார்.

சுதந்தர வேட்கையில் நாடு முழுக்க வெகுண்டெழுந்து காந்தியின் பின்னால் அணிதிரண்ட இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவர் அவர். பல முறை சிறை சென்றிருக்கிறார். ஒரு முறை காந்தியுடனேயே சிறையில் இருந்திருக்கிறார். விடுதலையான பின்னர் சேவாஸ்ரமத்தில் சேர்ந்து சேவை செய்திருக்கிறார். அல்லும் பகலும் அவர் அருகிலேயே உலவி அவர் பேச்சைக் கேட்கும் பேறு கிடைத்திருக்கிறது. எதிர்பாராத விதமாக சொந்த ஊரிலிருந்து தாய் நேரிடையாகக் காந்திக்கு எழுதிய கடிதத்தால் அவர் கிராமத்துக்குத் திரும்ப வேண்டியிருந்தது. தாய் செய்து வைத்த திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது. கட்சியிலோ, ச்முகத்திலோ அவருடைய ஈடுபாட்டுக்கோ சேவைக்கோ எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. அப்பாவின் குலத்தொழிலான செருப்பு தைக்கிற தொழிலையே அவரும் தயக்கமின்றி மேற்கொண்டார். தம்பிகளுக்கும் தங்கைக்கும் திருமணம் செயவித்தார். மரணமுற்ற தாயை நல்லவிதமாக அடக்கம் செய்தார். ஊரில் இருக்க விருப்பமின்றி நாடோடியாக அலைந்து திரிந்து இறுதியாக அக்கோயில் இருக்கும் ஊரை அடைந்தார். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ள விழையாத அவர் காந்தி ஜெயந்தி அன்று அருகில் இருந்த பள்ளியில் நடந்த கோலாகலத்தைக் கண்டு ஏதோ உற்சாகத்தில் அருகில் இருந்தவரிடம் சற்றே மனத்தைத் திறக்க, அவர் அந்த விஷயத்தை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடிக்க, நம்ப முடியாத ஜனங்களின் கிண்டலுக்கும் கேலிப் பேச்சுக்கும் அவர் தொடர்ந்து ஆளாக நேரிட்டு விட்டது.

பேசிக் கொண்டே தன் துணேமுட்டையிலிருந்து கிழிந்த தாளொன்றை எடுத்துக் காட்டினார். இரண்டு வரிகளில் ஏதோ வாசகங்களும் கீழே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற கையெழுத்தும் காணப்பட்டது அதில். ஒருகணம் என் உடம்பு சிலிர்த்தது. சிலமணி நேரங்களுக்கு முன்னர் அவர் நடத்தப்பட்ட விதம் மனத்தில் நிழலாட, வேதனை நிறைந்தது. அதையெல்லாம் நீங்க பெரிசா எடுத்துக்கக் கூடாது என்று மற்றவர்கள் சார்பில் நான் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகைத்தபடி, ‘நான் எப்பவுமே எதையும் பெரிசா எடுத்துக்கலை தம்பி ‘ என்றார். அதே கணத்தில் கோயிலிலிருந்து வந்த தம்பதிகளிடம் காலணிகளை எடுத்துக் கொடுக்கச் சென்றார்.

சிலருடைய எளிய தோற்றம் பலரைத் தவறான எண்ணத்துக்கும் முடிவுக்கும் எளிதாகத் துாண்டி விடுகிறது. கடவுளே கூட மனிதர்களாக அவதரித்துத் தன் எளிய தோற்றத்தால் அடிபட்டதையும் வசைபட்டதையும் படித்திருக்கிறோம். ஆனால் அரிய உண்மைக்கும் எளிய தோற்றத்துக்கும் உள்ள தொடர்பு காலம்காலமாகத் தொடர்ந்தபடியே உள்ளது. காந்தியின் கையெழுத்தை வைத்திருந்த பெரியவரை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் நினைவுக்கு வரும் சிறுகதை ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘. எந்தத் தருணத்தில் எடுத்துப் படித்தாலும் புதுசாகப் படிப்பதைப் போன்ற சந்தோஷத்தைத் தருக் கதை.

பல குற்றங்களைச் செய்து மாட்டிக் கொண்ட திருடனொருவன் தன் மனைவியுடனும் ஐந்து குழந்தைகளுடனும் தலைமறைவாக கீயிங்கே காட்டுப் பிரதேசத்தில் வசிக்கிறான். திருடன் வெளியே வருவதில்லை. நகரத்தவர் பார்வையில் அகப்பட்டால் சிறைப்படும் அபாயம் உள்ளது. திருடனின் மனைவியும் பிள்ளைகளும் வீடு வீடாகப் புகுந்து பிச்சை எடுத்து உண்ணுகிறார்கள். ஒருமுறை பிச்சை எடுத்தபடி ஊவிட் மடத்தை அடைகிறார்கள். அங்குள்ள தோட்டத்தின் அழகில் மயங்கி உள்ளே புகுந்து விடுகிறார்கள். விரட்டும் வேலைக்காரனின் தந்திரங்கள் எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. மடத்தலைவரான ஹான்ஸ் அவளிடம் பேச வருகிறாள். எப்படியோ பேச்சு தோட்டத்தின் மலர்களைப் பற்றியதாக மாறி விடுகிறது. அந்தத் தோட்டத்தின் மலர்களை விட அழகான மலர்களைத் தன் காட்டில் பார்த்திருப்பதாகச் சொல்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் காடே பூத்துக் குலுங்கும் என்றும் சொல்கிறாள்.

திருடனின் தண்டனையை ரத்து செய்வது பற்றி பிஷப்பிடம் பேசுகிறார் பாதிரியார். அவன் காட்டில் பூத்துக் குலுங்கும் மலரில் ஒன்றையேனும் கொண்டு வந்து தந்தால் தண்டனையை ரத்து செய்வதாகச் சொல்கிறார் பிஷப்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் பாதிரியார் காட்டுக்குள் பயணமாகிறார். திருடனுடைய குடும்பம் அவரை நல்வரவு சொல்லி வரவேற்கிறது. நள்ளிரவில் பாதிரியாருக்கும் கேட்காத தேவலோகத்து மணியோசை திருடனின் மனைவிக்குக் கேட்கிறது. எல்லாரும் வெளியே செல்கிறார்கள். நாலாபக்கமும் பனி. இருட்டு. ஒரு இலை, ஒரு பூ, ஒரு காய் கூட இல்லாத கடுங்குளிர்காலத்தில் திடாரென வெளிச்சமும் மலரும் இலையும் எங்கிருந்து வருமென்ற அவநம்பிக்கை பெருகுகிறது. அதே சமயத்தில் மணியோசையைப் பின்னணியாகக் கொண்டு வெளிச்சம் அலைஅலையாகப் பரவியது. பூமியின் மேல் போர்த்தியிருந்த மாரிக் காலத்துப் போர்வையை ஏதோ ஒரு மாயக்கை எடுத்துவிட்டது போலிருந்தது. அவர் கண்முன்னாலேயே குன்றின் சரிவுகள் பச்சைப் பசேலென்றானது. எங்கெங்கும் அழகான மலர்கள். தன் தோட்ட மலர்களைக் காட்டிலும் நிச்சயமாக இம்மலர்கள் அழகானவை என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை. தேவதுாதர் களின் யாழிசையை இப்போது பாதிரியார் கேட்டார். அவர்கள் நெருங்கி வரும் சமயம் பாதிரியாரின் சீடன் அச்சத்தால் சைத்தானே விலகிவிடு என்று அலறினான். சட்டென எல்லாம் கலைந்து விட்டது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பாதிரியார் ஒரு மலரைப் பறித்து வைத்துக் கொள்ள முயன்றார். கையில் ஏதோ கிழங்குதான் அகப்பட்டது. அதை எடுத்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. இருட்டில் அவர் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. குடிசைக்குள் சென்றபிறகுதான் தெரிந்தது. கணப்பில் எரியும் கட்டைகளுடன் தேடி வந்தபோது பனியின் மேல் அவர் இறந்து கிடப்பதைப் பார்த்தனர். அவர் சடலம் மடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவர் கையில் இருந்த கிழங்குகளை எடுத்துச் சென்று மடத்தின் தோட்டத்தில் நடுகிறார்கள். சரியாக ஒரு வருஷம் கழித்து கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் அச்செடியில் அழகான மலர்கள் பூத்தன. அன்று, காட்டில் கண்ட அதே மலர். தேவமலர். அம்மலர் பிஷப்பிடம் கொண்டு செல்லப்பட்டு, வாக்குறுதிப்படி திருடனுடைய தண்டனையும் ரத்தாகிறது.

ஒரு திருடனுடைய குடும்பம் தேவகானத்தைக் கேட்டபடியும் தேவமலர்களைப் பார்த்துப் பரவசமடைந்தடியும் இருக்கிறது என்கிற உண்மை வெளியுலகுக்குப் புலப்பட எவ்வளவு காலம் தேவைப்படுகிறது ? பக்தி மிகுந்த மடத்தின் தோட்டத்தில் மலராத தேவமலர் திருடனுடைய வனத்தில் பூக்கும் என்னும் விஷயத்தில் அவநம்பிக்கை எப்படி ஏற்படுகிறது ? எல்லாமே தோற்றம் உருவாக்கும் குழப்பம். திருடன் தாழ்ந்தவன். உலகத்தில் மதிப்பில்லாதவன். இறைவனுக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்பவன். தேவமலரோ உயர்ந்தது. பக்தி மிகுந்தவர்களின் பார்வைக்கே தென்படாதது. பக்திப் பழமானவர்களின் பார்வைக்கே தட்டுப்படாத ஒன்று சாதாரண திருடனுடைய பார்வைக்கு எப்படித் தட்டுப்படும் ? இதுதான் பலருடைய பிரச்சனை. எளிமைக்குள் மேன்மை வசப்படாது என்றே தானே ஒரு புனைவை ஏற்படுத்தி நம்பத் தொடங்குகிறார்கள். செருப்புத் தைப்பவன் காந்தியைப் பார்த்திருக்கக் கூடும் என்கிற விஷயத்தில் நம்பிக்கையை விட அவநம்பிக்கையே மிகுதி.

பெரிய புராணத்தில் ஒரு காட்சி. தான் கட்டும் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு இறைவன் எழுந்தருள வேண்டும் என்று அரசன் வேண்டுகிறான். கனவில் தோன்றிய இறைவன் அதே நாளில் வேறொரு நாயனார் கட்டும் கோயிலுக்கு வருவதாக வாக்களித்திருப்பதாகச் சொல்லிவிட்டு வேறு நாள் குறிக்கச் சொல்கிறார். கட்டுமான எழுச்சியே இல்லாத ஊரில் தன்னைத் தவிர வேறு யார் கோயில் கட்டுகிறார்கள் என்று அறியும் ஆவலில் அரசன் தேடிச் செல்லும் போது மனத்துக்குள்ளேயே கோயில் கட்டி அதைத் திறக்க நாள்குறித்த நாயனாரைச் சந்திக்கிறார். ஓட்டைக் குடிசை, கந்தல் உடை, மனத்தில் கட்டப்பட்ட கோயில் எல்லாவற்றையும் பார்த்த அரசர் நம்பமுடியாமல் வியப்பில் மூழ்குகிறார். எளிமைக்கும் மேன்மைக்கும் இருக்கிற உறவு ஆழமானது. உண்மையானதும் கூட.

*

‘தேவமலர் ‘ என்னும் சிறுகதை ஸெல்மா லாகர்லாவ் என்னும் ஸ்வீடிஷ் எழுத்தாளரால் எழுதப்பட்டது. க.நா.சு. வால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்ச்சுடர் நிலையத்தின் வெளியீடாக1953 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இத்தொகுப்பின் பெயர் ‘உயிர் ஆசை ‘. இத்தொகுப்பில் லாகர்காவின் மற்ற சிறுகதைகளான விரோதி, அடிமைப்பெண் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. விரோதி சிறுகதையை ரகுநாதனும் அடிமைப்பெண் சிறுகதையைக் க.நா.சு.வும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

**

paavannan@hotmail.com

***

http://www.mainlesson.com/display.php3 ?author=lagerlof&book=christ&story=_contents

http://www.nobel.se/literature/laureates/1909/

http://www.kirjasto.sci.fi/lagerlof.htm

http://holgersson.brobygrafiska.sunne.se/nisse/

http://digital.library.upenn.edu/women/lagerlof/nils/nils.html

Series Navigation