எறும்புடன் ஒரு சனிக்கிழமை

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

கே.ஜே. அசோக்குமார்


படியேறி மேலே வந்தபோது என் அறியருகே கரும்பூனை ஒற்று நின்றிருந்தது. திடிரென கண்டத்தில் பயமும் அதிர்ச்சியும் மேலிட்டதும், அடிப்பது போல கை தூக்கி, ‘ஏய்.. போ ஒங்க வீட்டிற்கு’ என்றேன். அது பயந்து கொஞ்ச தூரம் ஓடிப்போய், நின்று திரும்பி என்னை பார்த்து ஏதும் தாக்குதல் தொடுக்கப் போகிறேனோ என் ஊகித்துக் கொண்டு, பின் பாய்ந்து அந்தப் பக்கம் சென்று மறைந்தது. இதைக் கவனித்தப்படியே பின்னால் வந்த என் அறை நண்பன் இந்த விலங்குகளுடன் பேசும் ஒரே மனிதன் நீதான் எனக் கூறிச் சிரித்தான். பின் கால்சிரையிலிருந்து சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்றான்.
எந்த ஜீவராசிகளுடனும், அவற்றை எதாவது ஒருவகையில் எதிர்கொள்ளும்போது பேசுவது என் வழக்கம். அப்படி பேசுவது எந்தத் தவறையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவற்றிக்கு புரிகிறதா இல்லையோ என்பதைவிட, அவற்றினுடனான நம் பேச்சை அவைகள் உணர்ந்து கொள்ளும் என்பது என் வாதம். ஆனால் அறைநண்பன் எதை ஏற்றுக் கொள்ளமாட்டான். கேலி செய்வான். எதிர் வாதம் புரிவதற்கு தயாராக இருப்பான். முழுமுற்றாக என் கருத்தை நிராகரிப்பான். வீணாக அவனுடன் விவாதிப்பதைவிட பேசாமல் இருந்து விடுவது நல்லது என நினைக்கும்படி பேசுவான். எதில் என்றில்லை, எல்லா விசயத்திலும் இப்படித்தான்.
ஷிப்ட் முறையில் மாறுபட்ட நேரங்களில் வேலைக்குச் செல்லும் அவனுக்கு தினமும் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லும் என்மேல் பொறாமை. அதை இரண்டொருமுறை கூரயும் இருக்கிறான். புனேயில் பல நிறுவனங்கள் எந்தமுறையில் இயங்குகின்றன. நேற்று அவனுக்கு இரவு நேர ஷிப்ட் காலை உணவு முடிந்து விட்டது. இப்போது சென்று தூங்க ஆரம்பித்து விடுவான்.
அறை நண்பன், அவனுடைய ‘காட்’டில் படுத்து தூங்க ஆரம்பிக்க, நான், என் ‘காட்’டில் மேஜையை பக்கத்தின் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். மேஜையின் எதிர் விளிம்பில் ஒர் எறும்பு உணவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. அவன் ‘பை’யை தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டு புத்தகங்களை ஓரமாக அடுக்கி வைத்தேன். இப்போது எறும்பு முன்னோக்கி என் பக்கம் வந்திருந்தது. வாயில் காற்றை நிரப்பி ‘உப்பூ’ என்று ஊதி அந்தப்பக்கம் தள்ளினேன். திரும்பி பின்பக்க ஜன்னலிலிருந்து என் கண்ணாடியை எடுப்பதற்குள் மீண்டும் இந்தப்பக்கம் வந்துவிட்டிருந்தது. ‘இந்தப் பக்கம் வராதே… நசுங்கி சாவாய், போ அந்தப் பக்கம்’ என்று கூறிவிட்டு, என் கண்ணாடியை அணிந்துகொண்டு தினசரியை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.
‘என் விதி அப்படியிருந்தால் நான் என்ன செய்வது’ என்று ஒரு குரல்.
தூக்கி வாரிப் போட்டது. பேசியது எறும்பா? அதையே உற்று கவனித்தேன். பலமுறை பல உயிரினங்களுடன் பேசியிருக்கிறேன். ஆனால் எதுவும் திருப்பி பேசியதில்லை. ஒரு வேளை அறை நண்பன் கேலி செய்ய பேசுகிறானா? அவனையும் உற்றுப் பார்த்தேன். வாய் பிளந்து மேல்அன்னம் தெரிய, உதடுகள் அசைய அதற்குள் நன்கு தூங்க ஆரம்பித்திருந்தான்.
“பேசியது நானே தான்” என்றது எறும்பு. அதன் உதட்டசைவு நன்கு தெரிந்தது. நான் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். அவனை எழுப்பலாமா என யோசித்துக் கொண்டிருந்தது மனம். நான் பேசாமல் இருப்பதை பார்த்து, “எங்களை மாதிரி ஜீவராசிகளுடன் நீ பேசுவதால்தான் உனக்கு மறுமொழி கூறுகிறேன். உனக்கு விருப்பமில்லை என்றால் நான் சென்றுவிடுகிறேன்” என்று கூறிவிட்டு எறும்பு திரும்பிச் செல்ல ஆரம்பித்து.
“இரு இரு, திடீரென இப்படி பேசியதில் எனக்கு கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது. நீ பேசுவது ஏதோ விக்கிரமாதித்யன் கதைகளில் வருவதுபோல் உள்ளது. அதனால் பயமாக இருக்கிறது” என்று அந்த நேரத்தில் ஏதோ உளரி வைத்தேன்.
“உண்மைதான். நான் பேசுவது ஏதோ சக்தி வந்ததாக உணர்கிறாய் இல்லையா?” என்றது எறும்பு திரும்பி வந்து. “ம்… அப்படித்தான் தோன்றுகிறது. உன்னை மாதிரி நன்கு உழைக்கும் ஜீவராசிகளுக்கு பேசுவதற்குகூட நேரமிருப்பதில்லையே…”
“ஆமாம், நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்தாலே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் சத்தம்கூட போடுவதில்லை”.
இப்போது அறைநண்பனை நினைத்துக் கொண்டேன். விலங்குகளையோ, பூச்சிகளையோ ஜீவராசிகளாக நடத்துவதுகூட அவனுக்கு தெரியாது. பூச்சிகளை விரட்டுவதைவிட அடித்துக்கொல்வதே சிறந்தது. ஒன்றை விட்டால் அதன் சந்ததிகள் விரைவில் பலநூறாக பெருகிவிடும் என்பான் விலங்கியல் படித்த அவன். கழிப்பறையிலும் குளியறையிலும் இருக்கும் எறும்புகளை விளக்குமாறுகொண்டு பெருக்கி பேப்பரில் அள்ளி மாடியிலிருந்து கிழே பறக்க விடுவான். இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால் கேட்க மாட்டான். மண்ணெண்ணை இல்லையென்றால் அதை ஊற்றிக் கொல்வது எளிது என்பான். நல்லவேளை என்று நினைத்துக்கொண்டேன்.
“எறும்புகளைப் பற்றி உன்னுடைய நினைப்பு என்ன” நினைவிலிருந்து விலகி “ம்… நல்ல நுகர்வு திறன் உடையது. மழைக் காலத்திற்க்குக் தேவையான உணவை இப்போதே தேடிக் கொள்வது…”
“அதெல்லாம் முன்பு. இப்போதில்லை”
“ஏன்” என்றேன் சற்று அதிர்ச்சியோடு.
“நீங்கள் குடியிருக்கிறீர்களே இந்த இடம், முன்பு நாங்கள் குடியிருந்த பகுதி. எங்களின் மிகப்பெரிய காலனி இங்கே இருந்ததாக தாத்தா அடிக்கடி கூறுவார். உங்கள் ‘லேன்லார்டு’ இந்த இடத்தை வாங்கி பெரும் ‘மேன்ஷன்’ கட்டிவிட்டார். அதனால்தான் உணவைத் தேடி இங்கே வர வேண்டியுள்ளது” என்று அதன் பழங்கதைகளை விரிவாக சொல்ல ஆரம்பித்தது. கேட்க கஷ்டமாக இருந்தது. என்ன சொல்லி சமாதானப் படுத்துவது?
அதன் பேச்சினுடே சட்டென்று நினைத்துக் கொண்டாவனாக “ஏன் கழிவறையிலெல்லாம் சுற்றி வருகிறீர்கள். தண்ணீர் புலங்கும் இடம் எறும்புகளுக்கு ஆபத்தான பகுதிகள் தானே? அத்தோடு காய்ந்த கழிவுகளைவிட வேறு ஏதேனும் தேடலாமே” என்றேன்.
“உண்மைதான். ஆனால் போட்டி குறைவாக‌ இருக்கும் இடங்களில் தானே வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. இப்படி வைத்துக் கொள்ளலாம், நீ எதற்கு புனே வந்தாயோ அதே மாதிரிதான் இதுவும்”.
வாய்ப்புகள் அதிகம், அதேவேளையில் ஆபத்தும் அதிகம். இங்கிருக்கும் ‘புதிய நிர்மாணங்’களும் எறும்புக்கு இருக்கும் ஆபத்துகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து என் மனம் யோசிக்கலாயிற்று.
“இரு.., சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்”, என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தேன். உள்ளே சென்றதும் கழிவுகளை அது எதனுடன் ஒப்பிடுகிறது என்று யோசிக்கலானேன்.
அங்கு வேறுசில ‘குதிரை எறும்புகள்’ அங்குமிங்கும் ஒடிக் கொண்டிருந்தன. அவைகளுடன் பேசினால் திரும்பி பேசுமா? ஏதுவும் பேசும் மூடில் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை வேகம் எல்லா ஜீவராசிகளும் இப்படி பேச ஆரம்பித்தால் என்னாவது என்ற பயத்துடன் சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே வந்தேன்.
அறைநன்பன் புரண்டு படுத்து தலைக்கு மேல் ஒரு தலையணை வைத்து ஒரு கையால் அழுத்தி தூக்கிக் கொண்டிருந்தான். வெளிச்சம் அவன் கண்ணில் படக்கூடாது என்பதற்க்காக எறும்பு போயிருக்ககூடும் என்று நினைத்து மேஜை அருகே வந்து குனிந்து பார்த்தேன். கடினமான ஒரு புத்தகத்தின் ஓரத்தில் கால்களை கீழே தொங்கவிட்டு அங்கேயே அமர்திருந்தது.
அறைநன்பபனுக்கு எறும்பின் பேச்சைப் பற்றி எப்படிச் சொல்லப் போகிறேன்? அவன் புரிந்து கொள்வானா? இப்போதே எழுப்பி சொல்லிவிடலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். பின்பு எறும்பிடம் “உன்னை மாதிரி மற்றொரு எறும்பு கருப்பாக இருக்குமே எங்களுரில் அதை ‘குதிரை எறும்பு’ என்போம், சுறுசுறுப்பாக ஓடுமே..”
“தெரியும் மேலே சொல்”
“அது உன்னைவிட பலவீனமாக் இருக்கிறது. லேசாக அடிப்பட்டாலே செத்து விடுகிறது”.
“உன்மைதான். ஆமாம் நாங்கள் அதை எறும்பாக் மதிப்பதில்லை”
“ஏன்?”
“அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அதனுடன் ஒத்து வாழ்வதில் சில தயக்கங்கள் உள்ளன”.
விசித்திரமாக இருந்தது. அதெப்படி இப்படியெல்லாம் இருக்க முடியும் என்று தோன்றியது.
“நீ சொல்வது எனக்கு புரியவில்லையே” என்றேன்.
எறும்பு கால்களை இப்போது மேலே தூக்கிவைத்துக் கொண்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டது.
“சரி இங்கிருக்கும் மனிதர்களுக்கும் உன் தமிழ்நாட்டில் இருக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறாய்”.
என்ன கூறவருகிறது என்பதை மனதில் வாங்கிக் கொண்டவனாக “பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை” என்றேன். “காளியையும், துர்க்கையம்மனையும் நாங்கள் வீட்டில் வைத்து வணங்குவதில்லை. அது இங்கே இருக்கிறது. சிவனின் சிலைகள் இங்கு வணங்கப்படுகின்றன. அங்கு லிங்கவடிவம் மட்டும்தான். இங்கிருக்கும் மனிதர்கள் துளசிமாலை ஒன்றை அணிந்து “நான் புலால் உண்பதில்லை” என்று கூறி அனைத்தையும் செய்கிறார்கள். புகையிலையிலிருந்து குட்டிவரை. மற்றபடி வேறொன்றும் சொல்லமுடியாது”.
“அதைத்தான் நான் கூறுகிறேன்” என்றது எறும்பு. “மரபான சில விசயங்கள் அனைவருக்கும் உள்ளன. அவற்றை கடைபிடிப்பதில் எப்படி உனக்கும் அவனுக்கும் வேறுபாடு உள்ளதோ, அப்படியே எங்களிருவருக்கும் உள்ளது” என்று தொடர்ந்து அதன் விளக்கங்களை கூற ஆரம்பித்தது.
நானே இதைக் கூறி அதனுடன் மாட்டிக் கொண்டது பிற்பாடுதான் புரிந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தோம். என்ன பேசலாம் என்ற நினைப்பில் ஒரே இடத்தில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பேசிய களைப்பில் சற்று நேரம் படுத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.
“கழிவறை, குளியலறை பகுதியில் மட்டும் செல்லாதே. உங்களை காப்பாற்றுவது பெரும் கடினமாக உள்ளது. அத்தோடு இந்த அறைநண்பனின் தொல்லைவேறு” என்றேன் அமைதியை போக்கும் விதமாக.
“சரி, அவனிடம் இதைப்பற்றி பேசிப்பாரேன்”.
“அவன் காது கொடுத்து கேட்கும் நபராக இல்லையே! அதுதானே பிரச்சனை”
“எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கூறமுடியாது, சில நேரங்களில் அவன் கேட்கலாம். எதற்கும் எனக்காக மற்றொரு முறை முயற்சித்துப் பாரேன்”.
“சரி, இவ்வளவு தூரம் சொல்கிறாய், அவனிடம் மீண்டும் பேசிப்பார்க்கிறேன்” என்றேன்.
வேறு எதைப் பற்றி பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
“ஏ…ஃபேனை நிறுத்து, குளிர்கிறது எனக்கு” என்றான் அறைநண்பன் திடீரென தூக்கத்தின் நடுவே.
“இரு வருகிறேன்” என்று எறும்பிடம் கூறிவிட்டு ஃபேனை அணைக்கச் சென்றேன்.
“மணி என்ன?” என்று கேட்டபடி எழுந்தமர்ந்து மேஜை மீதிருந்த வாட்சைப் பார்த்தான்.
“மூணா… அடப்பாவி, ஏண்டா எழுப்பவில்லை? சாப்பிட போகவேண்டாம? இன்று சனிக்கிழமை வேறு, மதிய சாப்பாடு சீக்கிரம் தீர்ந்துவிடும். உனக்கு படித்துக் கொண்டிருந்தால் எல்லாம் மறந்து போகுமே” என்றுசத்தம் போட்டுக்கொண்டே “மேஜையை வேறு தூசியாக வைத்திருக்கிறாய்” என்று தினசரியை எடுத்து மடார் மடாரென தட்ட ஆரம்பித்தான்.
“ஏ ஏ ஏ.. இரு இரு” என்று கத்திக் கொண்டே ஓடிவந்தேன்.
கிட்ட வந்து பார்த்தபோது கால்களைப் பரப்பி மல்லாக்க கிடந்தது எறும்பு. பேனாவின் முனைகொண்டு தள்ளிப்பார்த்தேன். அது செத்துவிட்டது.
ஓன்றும் புரியாமல் கையை ஆட்டி “என்ன?” என்றான்.
சிறிய மெளனத்திற்குப் பின் “ஒன்றுமில்லை…, சாப்பிட போகலாம்” என்றேன்.

kjashokkumar.blogspot.com
kuppa.ashok@gmail.com

Series Navigation