என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

கே.பாலமுருகன்(மலேசியா)


பூச்சாண்டி பேசுகிறது

அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.
“உன் கை காலு சுருங்கி நீ குள்ள பிசாசு போல ஆயிடுவே”
“உன்னோட கண்ணுலாம் சிவந்து முகம் கறுத்து நீ கொள்ளிவாய் பிசாசு போல பூச்சி போல கெடப்பெ”
“நீ ரத்தம் குடிச்சி, உன் வயிறு உப்பி, வெடிச்சி நீ பூச்சாண்டியா ஆயிடுவே”
அசரீரிகளின் குரல்கள் எனக்கு சாதகமாகவும் முரணாகவும் எனக்காக உயிர்பெற்று அறைக்குள் அலைந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு அசரீரிகளுக்கும் வயதும், பிறப்பும் , மரணமும் உருவமும் இருந்தன. காலையில் எழுந்ததும் கழிவறைக்குள் பேழ தெரிந்த ஒரு சராசரியான அசரீரிகள்தான் என் அறையில் உருவம் சிதைந்து, காலம் தொலைந்து, வெவ்வேறு வயதுகளில், மாற்றுக் குரல்களில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
அறைக்குள்ளாக என்னை நான் சுருங்கிய ஒரு வடிவமாக மாற்றியிருந்தேன். அறைக்கதவின் இடைவெளி இந்த வீட்டிலிருப்பவர்களுடன் என்னை ஆசுவாசமாக ஒரு எல்லைக் கோட்டின் பிரிவினையில் பரவசம் கொள்ளும் திடத்தின் உருவமாக ஆக்கியிருந்தது. இது பிரயத்தனம். அல்லது ஒரு தியானம் என்று சொல்லலாம். கதவுக்கு வெளியில் எப்பொழுதும் சொற்கள் ஒட்டிக் கொண்டும், எங்கேனும் தெரியக்கூடும் இடைவெளியின் வாயிலாக உள்ளே நுழைய காத்திரமாக முயன்று கொண்டிருக்கும் சாகசங்களுடனும் இருக்கின்றன. சொற்களை நிராகரிக்கும் வன்மத்துடன் தர்க்கமாக என்னைப் பழக்கி வைத்திருக்கிறேன்.
சுவரிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும் குரல்கள் எனக்கானவை. அதன் அழைப்பு சிறுக சிறுக என்னை ஒரு நிராதவரான பூச்சாண்டியாக மாற்றியிருக்கக்கூடும். அதன் சேமிப்பிலுருந்து என்னை நான் புரிந்துகொள்ளத் துவங்கினேன். தினமும் இரவில் அறையில் கரைந்துகொண்டிருக்கும் இருளின் முணுமுணுப்பும் அசைவும் என்னை அறையிலிருந்து அறுத்து ஒரு பறக்கும் தட்டில் தூக்கி வீசுகிறது.
“பூச்சாண்டி பறக்கற தட்டுல வருவான் இரு”
வீட்டிற்கு வெளியில், அல்லது எங்கள் ஊரின் எல்லைவரை அல்லது நகரம் முழுக்க என்னைச் சுமந்துகொண்டு அந்தப் பறக்கும் தட்டு பீதி ஏற்படுத்தும் அதிர்வுகளுடன் உலாவிக் கொண்டிருகிறது. அறுந்த சிறு சிறு துண்டமாக பிறர் சொல்லில் உருவான ஒரு வடிவமாக பூச்சாண்டியாக எல்லோரையும் பார்த்து பல்லிலிழித்து, கண்களை உருட்டி, நாக்கை வெளியே நீட்டி, அசூரக் குரலுடன் கதறிக் கொண்டே பறக்கும் தட்டில் அமர்ந்திருக்கிறேன்.
“பூச்சாண்டி நாயெ! ஏஞ்சிருடா”

பூச்சாண்டியின் அசரீரி – 1
பூச்சாண்டிக்கு இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரு மூக்கும் அதில் எப்பொழுதும் கொஞ்சம் சளியும் ஒழுகிக் கொண்டிருக்கும். யாரும் அதைத் துடைத்துவிடவோ சுத்தப்படுத்தவோ மாட்டார்கள். பூச்சாண்டியின் சளி ஒழுகி மேல் உதட்டின் மேட்டில் தேங்கி நிற்கும். அதை நாக்கில் அள்ளி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் பூச்சாண்டி. சட்டை அணியாமல் வியர்த்த உடலுடன் அக்குளில் பிசுபிசுத்துக் கொண்டிருக்கும் துர்நாற்றத்துடன் அம்பாங் பாய் தோட்டம் முழுக்க பேய் மாதிரி சுற்றி அலைந்துவிட்டு மதிய உணவிற்காக வந்து வாசலில் நிற்கும்.
“தோ வந்திருச்சி சனியன், திண்றதுக்குனா கரட்டா வந்துரும்”
அதுதான் முதல் அசரீரியின் குரல். பூச்சாண்டியின் பாட்டி. பெயர் நல்லம்மா. ஆனால் நெருப்புத் துண்டம் போல எப்பொழுதும் வீட்டின் நடுப்பகுதியில் அல்லது வாசலின் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரை வார்த்தைகளால் எரித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி கிழவி. அதற்குத் தெரிந்ததெல்லாம் காறி துப்பும் போது, “என்னா மசிரு. . .கழுதெ” என்று சொல்லி வைப்பது மட்டும்தான். பூச்சாண்டியாகிய நான் கற்றுக் கொண்ட அசரீரியின் முதல் சொல் அதுவாகக்கூட இருக்கலாம்.
பூச்சாண்டி படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு வீட்டினுள்ளே எக்கிப் பார்க்கும். அம்மா வந்தால் மட்டுமே சோறு கிடைக்கும். வீட்டுக்குள் அதிக நெருக்கடி. மூலைக்கு ஒரு குழந்தை என்று வீட்டில் மொத்தம் 12 பிள்ளைகள். பூச்சாண்டிக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் 4 என்று கணக்கு வைத்தாலும், மீதி குழந்தைகள் அப்பாவின் இரண்டாம்தாரத்தின் குழந்தைகள். எல்லோரும் ஒரு-இரு வருட வித்தியாசத்தில் பிறந்ததால், சிறியதும் பெரியதுமாக வீடு முழுக்க குழந்தைகளால் நிரம்பியிருக்கும்.
“டெ, மசிறாண்டி என்னா பாக்குறெ? பொறந்து தொலைஞ்சிருக்கு பாரு பூச்சி மாதிரி. . சோறு கிடைச்சா நாக்கெ தொங்க போட்டுக்கிட்டு வந்துருவான் எருமெ”
அம்மா வந்துவிடுவார். அம்மாவிற்கு இந்தப் பூச்சாண்டியைப் பிடிக்குமா என்பதில் சந்தேகம் இருக்கவே செய்தது. பூச்சாண்டியின் ஒரு கை அவ்வளவு எளிமையாக இயக்க முடியாததால், அம்மாதான் சோறு பிசைந்து ஊட்டி விடுவார். ஆரம்ப காலத்தில் இதை ஒரு சேவை போல செய்த வந்த அம்மா, கொஞ்ச காலத்திற்குப் பிறகு அதை ஒரு உபத்திரமான செயலுக்கு நிகராக வைத்து நினைக்க ஆரம்பித்திருக்கலாம்.
“கமலா. . வந்துட்டான் நாசமா போறவன்”
அசரீரி நம்பர் 1 அதிகபடியாக என்னை வசைப்பாடிக் கொண்டு ஒரு குழந்தையைத் தனது மடியில் வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டும் இன்னொரு குழந்தை படுத்திருக்கும் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தது. குழந்தையின் இரண்டு கால்களும் அரைகுறையாக வெளியே தொங்கிக்கொண்டிருந்தன. பூச்சாண்டியால் முறைத்துப் பார்க்கவோ அழுத்தமான முகத்துடன் பார்க்கவோ இயலாது. அதன் முக இயல்பு ஒரு பூச்சியைப் போல குறுகி முகத்தின் சதை பிடிப்பு தளர்ந்தும் காட்சியளிக்கும்.
பிறந்து 4-5 மாதக் குழந்தையாக இருக்கும் போது பூச்சாண்டியைக் கண்டாலே வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடிக்காது. குறிப்பாக பாட்டிக்கு நாள் முழுக்க பூச்சாண்டியின் ஊனத்தைப் பற்றியும் பிறப்பைப் பற்றியும் பேசிக் கொண்டே குறைப்படுவது பொழுது போக்காக மாறியிருந்தது. கால்களை அகல விரித்துக் கொண்டு கைளியின் ஊடாக அவளின் வெற்று தொடை வெளியே தெரிய, பூச்சாண்டியைக் கண்டு எட்டி உதைக்க வேண்டும் என்கிற மனநிலைக்குள் சிதறுண்டு கிடப்பாள்.
“அப்பயே சொன்னேன், பொறந்தோனே இதெ எங்கயாவது தூக்கி வீசிருங்கனு, நானும்தான் பெத்தென் 12 பிள்ளைங்களெ அந்தக் காலத்துலெ, எல்லாம் நல்லா கடவுளோட பிள்ளிங்க மாதிரிலெ பொறந்துச்சிங்க, இது என்னா உனக்கு சாவமோ, சனியன் பேய் மாதிரி பொறந்துருக்கு. . உன் உசுறே போயிறும் போல”
ஒருவேளை அம்மாவின் பாதுகாப்பு வளையத்தில் இல்லாமல் இருந்திருந்தால், கிழவி என்னை எப்பொழுதோ எட்டி உதைத்துப் படிக்கட்டுகளில் தள்ளிவிட்டிருக்கும். எங்கள் வீட்டில் அபாயகரமானதாகக் கருதப்படுவது அந்தப் படிக்கட்டுகள்தான். சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து வீட்டுத் தரையைத் தழுவி கீழே இறங்கும் படிக்கட்டுகளில் மட்டும் பூச்சாண்டி 7 முறை விழுந்து கிழவியின் சனியன் பிடித்த வாய்க்கு இரையாகிருக்கிறது.
“செத்துருடா. . அப்படியே உழுந்து செத்துரு கட்டைலெ போறவன்”
அசரீரியின் குரல் என்னை ஒவ்வொருமுறையும் உயிர் கூட்டிலிருந்து அறுத்து வீட்டிற்கு வெளியே கண்களுக்கு எட்டாத தூரத்திற்குத் தூக்கி வீசும். பறப்பது போல தரையிலிருந்து நழுவி, இருட்டுத் தேசத்தில் மிதப்பததற்குச் சமமான சூழலில் பிரக்ஞை இழந்து மயங்கி வீழ்வது போல கிழவியின் சொற்கள் பூச்சாண்டி என்கிற இந்த மயிராண்டியை வதைத்துவிடும்.

பூச்சாண்டியின் அசரீரி – 2
குரல்களைச் சேமித்து எனக்குள்ளே தற்காத்துக் கொள்ளும் பலவீனங்களுக்கு ஆளாகியிருந்தேன். பூச்சாண்டி கற்றுக் கொண்ட முதல் முதிர்ச்சி அது. தனக்கான முதிர்ச்சியை அடையாளங்கண்ட முதல் துர்சிந்தனை அதுவாகக்கூட இருக்கலாம். வீட்டில் இருப்பவர்களின் கூச்சல், உக்கிரமான கதறல்கள் பூச்சாண்டியின் மனதைச் சிறுக சிறுக சிதைத்துக் கொண்டிருந்தது.
“யேண்டா வீட்டுலே இருக்காமெ வெளில போயிர்றெ? எங்காவது தொலைஞ்சித்தான் போயேன், களிச்சிலெ போவ”
அம்மாவின் குரல்கள் எப்பொழுதும் தோல்வியடைந்த ஒரு பெண்ணின் குரலைப் போலத்தான் வீட்டின் பலகைச் சுவரைக்கூட தாண்ட முடியாமல் சிக்கி கரைந்து கொள்ளும். அது ஒரு முனகல் போல குழந்தைகளின் கூச்சல்களுக்கு நடுவே தனது சுயத்தை இழந்து அவளுக்குள்ளே ஒலித்து காணாமல் போய்விடும். பூச்சாண்டியின் அம்மாத்தான் இரண்டாவது அசரீரி.
“யேண்டா பொறந்து தொலைஞ்சே? எல்லாத்தையும் படனும்னு விதி மொளைச்ச பொணமா ஆய்ட்டேன். . ஒங்கப்பனுக்கு முடியல! ரெண்டு பொண்டாட்டி சொகம் கேட்டுருச்சி. தேடி பெத்துக்கிட்டு கெடக்கறான் பாரு படுக்கையிலே”
அம்மாவின் விரக்தி ஒரு பொழுதிலோ அல்லது சில வசை சொற்களிலோ விவரிக்கப்பட முடியாதவை. தினமும் எல்லாம் வேலைகளும் முடிந்து ஓய்வெடுக்க அமரும் கணத்தில்தான் அம்மாவின் வாழ்வு குறித்த மீள்பார்வை தொடங்கும். கடந்த வாழ்க்கையை அசைப்போடத் துவங்குவாள். கழுத்துப் பகுதியிலிருந்து எப்பொழுதும் ஒழுகிக் கொண்டிருக்கும் அவளின் வியர்வை அவளின் தீராத உழைப்பையும் பொழுதுகளையும் மிக வலிமையுடன் வெளிப்படுத்துவது போலவே இருக்கும்.
கட்டியிருக்கும் கைலியை தொடைவரை தூக்கிக் கட்டிக் கொண்டு குழந்தைகள் ஒவ்வொன்றையும் பின்புற வாசலின் அருகேயுள்ள தொட்டியில் போட்டு முக்கி எடுக்கும்போது எல்லோருக்கும் கடைசியில் நின்று கொண்டு எதுமறியாத முட்டாள் போல பார்த்துக் கொண்டிருப்பேன். அதுதான் எங்களுக்கான மாலை குளியல். அம்மாவின் எல்லாம் அசைவுகளிலும் அப்பா கொடுத்த வாழ்வின் மீதான எரிச்சலும் துன்பமும் கலந்திருக்கும். மிக அவசரமாக எல்லாம் குழந்தைகளையும் குளிக்க வைத்துவிட்டு என் சுற்று வரும்போது, என்னைப் பார்த்ததும் வசைப்பாடத் துவங்குவாள்.
“நீ யேண்டா குளிக்கனும், அப்படி அம்பாங் பாய் ஆத்துலே உழுந்து செத்துரு. உங்கப்பன் பத்தாதுக்கு உன்னையும் பெத்து என் மேல கட்டிட்டான். காலெ ஒழுங்க நேரா நிமுத்துடா”
என் உடலை உலுக்கும்போது கைகளில் இருக்கும் வேகமும் குரூரமும் அவளது கண்களில் இருப்பதில்லை. ஏக்கங்களை அல்லது ஆசைகளைக் கண்களுக்குள் புதைத்து வைத்திருந்தாள். தண்ணீரைத் தொட்டியிலிருந்து அள்ளி என் முதுகில் அறையும்போது அது சில இயலாமை சொற்களைப் போன்ற இறுக்கத்துடன் வலிந்தோடும்.
அம்மா வீட்டைவிட்டு இதுவரை வெளியே சென்றதில்லை. எல்லாம் பொழுதுகளிலும் வீட்டுக்குள்ளே தன்னை இருத்திக் கொண்டு நாள் முழுக்க யாரையாவது சபித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் பாட்டியுடன் போராடிக் கொண்டும் சொற்களை அள்ளி வீசிக் கொண்டும் இருப்பார். பாட்டிக்கு அம்மா ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது பிடிக்காது. அம்மா நகர்ந்து ஓடியாடி வீட்டுக்குள் அலைந்து திரிவதைத்தான் அவர் விரும்பியிருந்தார்.
“உக்காந்துட்டா வேலையில்லாதவ. ஏதோ சூரிய குஞ்சே பெத்த மாதிரித்தான். சனியன் பிடிச்ச பிசாசெ பெத்துப் போட்டுட்டு உனக்கு என்னாடி சொகுசு நாயே”
அம்மா விரக்தியுடன், பார்வையை நிமிர்த்தி என்னைப் பார்ப்பார். சட்டென்று எழுந்து என்னால் ஓடவும் இயலாது. முதுகு தண்டு அவ்வளவு பலவீனமானது. அம்மா எழுந்து வந்து காலால் ஒரு உதை கொடுக்கும்போது பாட்டியின் முகத்தில் எச்சில் துப்ப வேண்டும் என்று தோன்றும். சுருண்டு தரையில் கன்னத்தின் ஒரு பகுதி அழுந்தும்போது பாட்டியின் விரிந்த கால்களுக்கிடையில் அவளின் இருண்ட யோனி தெரியும். சொற்களை அவளுக்குள் விழுங்கிக் கொண்டு கைலியைச் சரி செய்து கொள்வாள்.
“உலுசுலுவாரு போடாத கெழவி” என்று கத்திவிட்டு வெளியே ஓட முதலில் கடவுள் எனக்கு ஒரு வலுவான உடலை வரமாகக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நிகழாத தண்டமாக அங்கேயே படுத்திருப்பேன். வாய் நீரை தரையில் ஒழுகவிட்டு எனது இயலாமையைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் தெரியாத முட்டாளாக வீட்டின் அவமானத்தில் சிக்கிக் கொண்டு இருந்துவிடுவேன்.
“பூச்சாண்டி படுத்துருக்குப் பாரு. . உ உ உ உ “
பாட்டி தனது வசையைத் துவங்கும்போது வழக்கமான கையொன்று எப்பொழுதும் போல என்னை அள்ளி மெத்தை நாற்காலியில் போடும். சரிந்து ஒரு பூச்சாண்டியைப் போல பார்த்துக் கொண்டிருப்பேன்.

பூச்சாண்டியின் அசரீரி – 3
எங்கள் வீட்டில் இரண்டாவது அறை எப்பொழுதும் சாத்தியே கிடக்கும். உள்ளே அப்பா படுத்திருப்பதால் அவருக்குச் சத்தம் உடல் உபாதையை அளித்துவிடக்கூடும் என்பதால் அறைக் கதவை சாத்தியே வைத்திருந்தார்கள். அம்மா மட்டும் உள்ளே சென்று வர அனுமதி இருந்தது. அப்பாவால் பேச முடியும் ஆனால் உடலை அசைக்கவோ அல்லது எழுந்து நடக்கவோ முடியாது. நரம்பு தளர்ச்சி என்று அவ்வப்போது வீட்டிற்கு வரும் கடன்காரர்களிடம் அம்மா பதிவு செய்து வைத்த வானொலி போல பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.
எப்பொழுதாவது இரவில் எல்லோரும் வரிசையாக வரவேற்பறையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அப்பாவின் முனகல் மட்டும் மிகத் தெளிவாக ஒலித்துக் கொண்டிருக்கும். யாரையோ அழைப்பது போல வீட்டின் மூலையில் அவரின் குரல் முனகிக் கொண்டிருக்கும். அம்மா ஒருகளித்துப் படுத்துக் கொண்டு குரட்டையொலியில் தொலைந்திருக்கும் தருணத்தில் எனக்கு விழிப்புத் தட்டிவிடும். எழுந்ததும் வீட்டின் கூரையை வெறித்துக் கொண்டு அப்பாவின் இரவு முனகலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எங்கோ யாருக்கும் எட்டாத ஒரு தொலைவில் அப்பாவின் குரல் சன்னமாகக் கேட்டுக் கொண்டிருக்க, வீடு முழுக்க பிறரின் சுவாச ஒலியும் குரட்டை ஒலியும்தான் பெருகிக் கொண்டே போகும். கொஞ்சம் இடைவெளிவிட்டு, அப்பா இரும்பத் துவங்கி விடுவார். அப்படியொரு இரும்பலை வேறெங்கிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. பேசாமல் அவருக்குள்ளே அமிழ்ந்து போன சொற்களெல்லாம் அவரின் இரும்பலினூடாக வெளியே தெறித்து சுவரில் ஒழுகிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வேன்.
காலையில் அம்மா எழுந்ததும் அப்பாவின் ஆடைகளைக் களைத்து அவரின் உடலை வெந்நீரால் துடைப்பார். கதவை இறுக சாத்திவிட்டுத்தான் எல்லாமும் நடக்கும். சுவரில் சாய்ந்துகொண்டு உடலில் படிந்திருக்கும் சோம்பலை முறிக்கவும் தெம்பில்லாமல் காலை வசைகளைக் கேட்கத் துவங்குவேன்.
“எங்கடி ராத்திரிலாம் கூப்டறேன் கொரட்டெ உட்டு தூங்கறே பேய் மாதிரி. . உங்கம்மாளே”
அம்மா ஏதும் பேசமாட்டாள். அந்த அறைக்குள் நுழைந்ததும் அப்பா மட்டும்தான் பேச முடியும். அவரின் குரல் மட்டுமே ஒலிப்பதற்கு காரணங்கள் இருந்தன. இயலமைகளுக்கு ஒரு உர்வம் இருக்கும். அந்த உருவம் எப்பொழுதும் தனது தோல்விகளை பலவீனங்களைக் கக்கிக் கொண்டேயிருக்கும். அப்பாவும் அப்படியான ஒரு மனநிலையில்தான் இருந்திருப்பார்.
“இப்படிப் படுக்கைலெ கெடந்தே சாகப் போறேன் உங்கம்மாளே. . . சாகறத்துக்குள்ளே உங்க எல்லாத்தையும் அடிச்சி கொன்னுட்டுத்தான் சாவேன்”
அப்பாவின் உடல் துர்நாற்றம் கதவின் இடுக்குகளிலிருந்து கரைந்து வெளியே ஒழுகிக் கொண்டிருக்கும். ஒரு காட்டு மிருகம்போல அப்பா கட்டிலில் கால்கள் இரண்டையும் விரித்துக் கொண்டு படுத்திருப்பார். அம்மா அப்பாவின் உடலைச் சுத்தப்படுத்தி முடிக்கும்வரை அப்பாவின் வசைகளை மிக நெருக்கத்தில் அமர்ந்துகொண்டு கேட்டாக வேண்டும்.
அப்பாவைப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டிருக்கும் தருணங்களில் அறையின் ஓரமாக நின்று கொண்டு கதவின் கீழடியிலிருந்து அவரின் உருவத்தைப் பார்க்கலாம் என்று தோன்றும். எப்பொழுதாவது அம்மா அறைக்கதவைச் சரியாக சாத்தாமல் உள்ளே நுழைந்துவிட்டால், அப்பாவின் கட்டிலையும் அவரின் நிர்வாண உடலையும் பார்க்க நேரிடும். அப்பாவை 8 முறை நான் அப்படியான நிலையில்தான் பார்த்திருக்கிறேன்.
“தோ. . எட்டிப் பாக்கறான் பாரு சனியன். நாயி. . .பைத்தியம் பைத்தியம். செத்துருடா பூச்சி! கதவெ சாத்துடி உங்கம்மாளெ”

பூச்சாண்டி பேசுகிறது

இப்பொழுது எனக்குத் தனியான ஒரு அறை கொடுக்கப்பட்டிருக்கிறது. வீடு மாறி நகரத்திலிருக்கும் ஒரு நவீன குடியிருப்பிற்கு வந்தாயிற்று. அப்பா இறந்த பிறகு கொஞ்சம் பணம் கிடைத்தது. அம்மாவும் சித்தாப்பாவும் சித்தியும் எல்லாம் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இங்கு வருவதற்கு 2 மாதங்கள் தேவைப்பட்டது. எல்லாவற்றையும் சித்தாப்பாதான் கவனித்துக் கொண்டார்.
நல்லாம்மா பாட்டி அப்பா இறப்பதற்கு 2 வருடத்திற்கு முன், வீட்டின் வரவேற்பறை நாற்காலியில் வாயில் இரத்தம் கசிய செத்துக் கிடந்தது. முதல் அசரீரியின் மரணம் அப்பொழுதுதான் நிகழ்ந்தது. வீடு முழுக்க மரண வாடை. எல்லோரும் அழுந்து புலம்பி கொண்டிருக்க அசரீரியின் மரணத்தை நான் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்தேன். நினைத்த நேரம் வெளியே ஓடி சேற்றில் விளையாடிவிட்டு, பசிக்கும்போது வீட்டு படிகட்டுகளில் நின்று கொண்டு கத்தும் சுதந்திரம் கிடைத்திருந்தது. “சனியன் வத்திருச்சி பாரு” என்று கத்துவதற்கு அசரீரி 1 இல்லை.
படிக்க வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தம்பி தங்கைகளின் புத்தகங்களை எழுத்துக்கூட்டி வாசிக்கும் உரிமை கிடைத்திருந்தது. “நீயெல்லாம் படிச்சி எவன் மசுறெ புடுங்க போறே?”. அசரீரி 1 இல்லாத வீட்டில் எனக்கு நிறையவே வசதி இருந்தது. அடுத்தது அசரீரி 3, அப்பாவின் மரணம். அம்மாவிற்குத்தான் நகர வேதனையிலிருந்து விடுதலை கிடைத்திருக்கக்கூடும். அவரின் புலம்பல் சிறுக சிறுக அடங்கி போயிருந்த காலக்கட்டம்.
இந்தக் குடியிருப்பிற்கு வந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. அறைக்குள்ளாகவே என்னை நான் சுருக்கியிருந்தேன். தலை மட்டும் உப்பி, கை கால்கள் சிறுத்து போயிருக்கும் எனக்கு வேறு என்ன தெரியும்?
“டே. . வீட்டுக்கு விருந்தாளி வந்துருக்காங்க, கொஞ்ச நேரம் ரூம்புலே இரு”
“இனிமே எங்க போயி இவன் என்னா படிக்கப் போறான். . சுக்குல்லே சேத்துக்க மாட்டாங்க. இப்படியே வீட்டுலே கெட”
சித்தியின் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் கணங்களிலெல்லாம் நான் மட்டுமே அவர்களின் அச்சுறுத்தும் கருவியாக பாவிக்கப்பட்டேன்.
“சாப்பிடுடா. . பூச்சாண்டியெ கூப்டட்டா?. . பூச்சாண்டி வெளிய வா. . இவன் சாப்ட மாட்டறான். . ஆங்ங்ங் வருது வருது. . பூச்சாண்டி”
உடைந்து சிதறிவிடலாம். அத்தகையதொரு உலகம் என்னுடன் வளர்த்து என்னை முதிர்ச்சிப்படுத்தியது. உடல் வளராத எனக்குள் ஒரு உலகம் எப்பொழுதும் உரையாடிக் கொண்டே இருக்கிறது. அது பூச்சாண்டியின் உலகம். பாட்டி, அம்மா, அப்பா குழந்தைகள் இப்படி என் குடும்பம் எனக்குள் வளர்ந்து அவர்களை ஒவ்வொருவராக விழுங்கியபடியே நாட்களைக் கடந்து வந்து இப்பொழுது என் குடும்பம் எதிர்பார்த்த ஒரு முழு பூச்சாண்டியாக வெளியில் வர இயலாத உலகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.
“இந்தப் பூச்சாண்டிக்கு வேறு என்ன தெரியும்?”
நன்றி: உயிர் எழுத்து இதழ்
-முடிவு-
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்