என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

ஜெயமோகன்


1

மிகக் குறைவான தமிழ்ப் படங்களையே நான் குறைந்த அளவிலேனும் ரசித்திருக்கிறேன் என்று சொன்னால் அது அறிவுஜீவித் தோரணை என்றே தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்ளப் படும். ஆயினும் அதுவே உண்மை . தமிழ் படங்களைபலவகையிலும் பார்த்தாக வேண்டியுள்ளது.ஒன்று மனைவிக்கு தேவைப்படுகிறது .இரண்டு இங்கு வெளியே குடும்பத்துடன் போகவேண்டுமென்றால் சினிமாவுக்குத்தான் போகவேண்டும் .தமிழ்ப் படங்களை பார்ப்பது மோசமான தனிப்பட்ட அவமானம் ஒன்றுக்கு ஆளாவது போன்ற அனுபவம் எனக்கு .பல நாள் அதன் குமட்டலும் பொருமலும் எனக்குள் இருக்கும்.

ஒரு அனுபவம். சமீபத்தில் ஒரு படம் . ‘ பூவெல்லாம் உன் வாசம் ‘ என்று பெயர்.அனேகமாக எல்லா தமிழ் வார இதழ்களும் அதை ஒரு நல்ல படம் ,மனித உணர்வுகளை நுட்பமாக சொல்லக் கூடிய படம் என்று சொல்லியிருந்தன.அதை நம்பி அருண்மொழி என்னை அழைத்துச் சென்றாள் .அப்படத்தின் முதல் காட்சியே ஆபாசம். ஆபாசம் என்றால் காமம் சார்ந்தது அல்ல .மனித வாழ்க்கையை முதிர்ச்சியில்லாமலும் செயற்கையாகவும் ,கொச்சையாகவும் சித்தரிப்பது எல்லாமே ஆபாசம்தான்.அதில் பாசம் காதல் எல்லாமே மிக மிக அபத்தமான முறையில் காட்டப் பட்டிருந்தன .அதிலும் அஜித் என்ற ஒரு நடிகர் அழுது புலம்பி நடிப்பது காண்பதற்கு கொடூரமான ஓர் அனுபவம் 15 நிமிடங்களுக்கு மேல் நான் பார்த்த தமிழ் படங்கள் சிலவே .நானும் பாப்பாவும் வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் வீட்டுக்கு வந்த பிறகும் அப்படம் தந்த குமட்டல் அப்படியே இருந்தது .தூக்கமே வரவில்லை .என் அந்தரங்கமான உணர்வுகள் அவமானப்படுத்தப் பட்டது போல. ஏதேனும் சி டி இருக்குமா என்று தேடினேன். நள்ளிரவில் தேடி எடுத்தேன் . ‘ ‘மதுர நொம்பரக் காற்று ‘ ‘ .[கமல் இயக்கிய மலையாளப் படம் ] அப்படம் என் அழகுணவின் ரணத்தை ஆற்றியது .நிறைவுடன் தூங்கச் சென்றேன்.

சினிமாவில் நான் ஓர் பாமர ரசிகனே .என் இலக்கிய நண்பர்கள் பலர் ஏராளமான நல்ல படங்களை உலக மொழிகளில் இருந்தெல்லாம் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார்கள் . திரைப்பட விழாக்கள் தோறும் அலைந்திருக்கிறார்கள் .நான் அப்படியெல்லாம் பார்த்தது இல்லை .ஒரு கேளிக்கையாக மட்டுமே நான் சினிமாவை பார்க்கிறேன்.இசையும் எனக்கு அப்படி ஒரு கேளிக்கை மட்டுமே. திரைப்படங்களை பார்க்க நான் ஒருபோதும் முயன்று நேரம் ஒதுக்கியது இல்லை. இலக்கியம் சார்ந்து அதீத மனநிலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது என் வாழ்வில் சாதாரணம் .அதை அறுக்கும் அனுபவங்களை ஒதுக்கிவிடுவேன். நான் அதிகமாகப் பார்த்தது மலையாளப்படங்கள் தான். காசர்கோட்டில் இருந்த காலத்தில் அங்கிருந்த பெரிய திரைப்பட இயக்கத்தில் தொடர்பு இருந்தது ,சில முக்கிய வெளிநாட்டு படங்களை பார்த்தது உண்டு .எனக்கு பிடித்தவர் பர்க்மான் .

நான் பிறந்து வளர்ந்ததும் படித்ததும் தமிழ் நாட்டில் குமரிமாவட்டத்தில்தான் .ஆனால் அது கலாச்சார அளவில் அப்போது முற்றிலும் ஒரு கேரளப் பகுதி. அரசியல் , சினிமா ,சாப்பாடு எல்லாவற்றிலும்.மலையாளம் தமிழ் மாதிரி இருக்கும் ,தமிழ் மலையாளம் மாதிரி இருக்கும். தமிழக அரசியல் அலைகள் ஏதும் அங்கு அடித்தது இல்லை. ‘ ‘ நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை ‘ ‘ என்றார் கருணாநிதி ஒருமுறை .சமீப காலம்வரை குமரி மாவட்டத்தின் அரசியல் முற்றிலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்ததுதான்.அதன் எல்லா நல்ல அம்சங்களும் எங்களூர் அரசியல் சூழலுக்கு உண்டு.

சினிமாவும் அப்படித்தான் .நாகர்கோவிலில் தமிழ் படங்களுக்கு மவுசு உண்டு .ஆனால் அப்போதெல்லாம் குலசேகரம் சென்ட்ரல் தியேட்டரிலும் ஸ்ரீபத்மநாபா தியேட்டரிலும் எப்போதுமே மலையாளப் படங்கள் மட்டும்தான் .என் ரசனையும் அளவுகோல்களும் மலையாளப் படங்கள் மூலம் உருவானைவையே.மலையாளப் படவுலகுக்கு எங்கள் பகுதியின் கொடை அதிகம். மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்த டானியல் [மார்த்தாண்ட வர்மா] குமரிமாவட தமிழரே. மலையாளத் திரையுலகின் மாபெரும் நடிகரான சத்யன் [சத்தியநேசன் ] குமரிமாவட்ட தமிழரே.

தமிழ் திரைப் படங்களில் எனக்கு பிடித்தவை சிலவே . முள்ளும் மலரும் , உதிரிப் பூக்கள் , அவள் அப்படித்தான், ஒரு கை ஓசை என்று ஒரு மிகக் குறுகிய பட்டியல்தான் தரமுடியும்.கணிசமான படங்களின் ஒரு சில காட்சிகளில் கற்பனையும் நல்ல நிகழ்த்துதலும் இருக்கும். உதாரணமாக மண் வாசனை படத்தில் பெரிய தேவர் [விஜயன்] மாமியாரை [காந்திமதி] தன் பெண் சடங்கான விஷயத்தை [ஆட்டின் காதை தடவிய படியே ] சொல்லி அழைப்பு வைக்கும் இடத்தை சொல்லலாம். சமீபத்தில் நந்தா படத்தில் பெரியவர் [ராஜ் கிரண்] நந்தாவிடம் [சூர்யா] போதையில் தர்மோபதேசம் செய்யும் காட்சி இன்னொரு உதாரணம் . ஆனால் இப்படங்களில் மொத்தக் கதை பெரிதும் செயற்கைத்தன்மையுடன் போலியான தீவிரம் செலுத்தப்பட்ட சம்பவங்களுடன் உள்ளது.

பொதுவாக தமிழ் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் படத்தைவிட ரசிக்கத் தக்கனவாக உள்ளன .தெருக்கூத்துக் கட்டியங்காரனின் சாயல் கொண்ட கவுண்டமணி யின் நடிப்பு பலசமயம் அதிக வசனம் கொண்டதாக இருந்தபோதிலும் நயமான நக்கல்கள் பலவற்றை கண்டிருக்கிறேன்.வடிவேலுவின் நடிப்பிலும் அப்படிப்பட்ட பல நல்ல சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துள்ளன . பொதுவாக தமிழில் கிராமப்புற நகைச்சுவைக் காட்சிகளில் உள்ள உயிர் நகர்ப்புற நகைச்சுவை காட்சிகளில் இருப்பது இல்லை.

தமிழில் நான் வெறுக்கும் ஒரு போக்கு உண்டு .அதை ‘ பாலசந்தர் மரபு ‘ என்று சொல்லலாம் . செயற்கையான கதை ,செயற்கையான சம்பவங்கள் ,செயற்கையான காட்சிச் சித்தரிப்புகள் , செயற்கையான நடிப்பு ,இவற்றை அடிக்கோடிட்டுக் காட்டும் செயற்கையான தீவிரம் என்று அதன் இயல்பை கூறுவேன்.கமலஹாசன் ,மணிரத்தினம் ,சுகாசினி ,விசு என்று அப்போக்கின் வாரிசுகள் பல .

கலைப்படைப்பின் அடிப்படை இயல்புகளில் ஒன்று எல்லா சிறப்பியல்புகளும் அதில் சகஜமாக நிகழ்ந்திருக்கும் என்பதே. அதாவது ஒவ்வொரு முறையும் நாம் அதில் நுட்பமாகக் கண்டடைய ஏதாவது இருந்துகொண்டே இருக்கும் . அதில் பாதி அப்படைப்பாளி கவனத்துடன் வெளிப்படுத்துவது. மீதி அவனது அகம் இயல்பாக வெளிப்படுவதன் விளைவு-அதன் முக்கியத்துவத்தை ரசிகன் அறியுமளவு அவன் அறிவதில்லை .பாலசந்தர் மரபின் முக்கியமான இயல்பு அதில் சகஜமான வெளிப்பாடு என்று ஏதும் இருப்பது இல்லை என்பதே.அத்துடன் அதில் ‘உருவாக்கபட்டுள்ள ‘ ஒவ்வொரு நுட்பத்தையும் படைப்பாளி ஒன்றுக்கு இரண்டுமுறையாக அடிக்கோடிட்டு காட்டியிருப்பார் .

தமிழ் நடிப்பில் நான் விரும்பாதது சிவாஜி பாணி நடிப்பு .சிவாஜியின் புருவம் நேராக இருந்த ஒரு புகைப்படத்தைக் கூட நான் பார்த்தது இல்லை.இயல்பாக இருப்பதென்றால் கூட அப்படி நடித்துக் காட்டக் கூடியவர் அவர் .மன உணர்வுகள் முகத்திலும் உடலிலும் வெளிப்படுவதன் நுட்பங்கள் எண்ணற்றவை .அவற்றை சிவாஜி எப்போதுமே வெளிப்படுத்தியது இல்லை . ‘நடிக்கும்போது ‘ சிவாஜியின் கைகளை பாருங்கள் , அவை கூறும் மொழி அவர் முக பாவனைக்கு சற்றும் தொடர்பு இல்லாதது . கமலஹாசனின் நடிப்பிலும் இதையே நான் காண்கிறேன்.நகைச்சுவை நடிகரான கமலஹாசனே நான் விரும்பும் நடிகர் . அனேகமாக எந்த படத்திலும் தங்கள் சொந்த ஆளுமையையும் சொந்த உடல்மொழியையும் மீறி ஒரு கதாபாத்திரத்தை நடித்துக் காட்ட இவர்களால் முடியவில்லை என்பதே என் மனப்பதிவு . ஓம்புரி ,நஸிருத்தீன் ஷா ,மோகன் லால்,நெடுமுடி வேணு,கோபி ,முரளி ,திலகன் ஆகியோர் தோற்றத்தை சற்றும் மாற்றிக் கொள்ளாமலேயே விதவிதமான மனிதர்களாக உடலாலும் குரலாலும் முகபாவங்களாலும் மாறிவிடுவதை காணலாம்

தமிழ் சினிமாவும் நானும் சந்திக்கும் புள்ளி மிக மிக அபூர்வமாக நிகழக் கூடிய ஒன்றுதான்.அப்படிப்பட்ட ஒரு புள்ளி தங்கர் பச்சான் இயக்கிய ‘அழகி ‘.

* 2 *

தங்கர் பச்சானின் அழகி யின் தொழில் நுட்பம் குறித்து எனக்கு ஏதும் சொல்வதற்கில்லை.முற்றிலும் ஒரு ரசிகனாக ,ஒரு கதாசிரியனின் உபரி பார்வையுடன் அதைப்பற்றி பேச விரும்புகிறேன்.

முதல் விஷயம் இப்படம் சகஜமாகவும் சற்று வேகமாகவும் நகர்கிறது என்பதே .கலைப்படங்கள் என்ற பேரில் சில படங்கள் பொறுமையை சோதிப்பது உண்டு .பொதுவாக திரைப்படம் சற்று மெல்ல [நிதானமாக] நகர்வதுதான் எனக்கு பிடிக்கும் .ஆரம்ப காலம் முதலே மலையாளப் படங்கள் அந்த நிதானத்தை தங்கள் ரசிகர்களுக்கும் பழக்கிவிட்டிருக்கின்றன.அப்போதுதான் நடிகர்களின் நடிப்பின் நுட்பங்களும் ,சூழலின் அழகும் அர்த்தமும் நம் கண்களில் படும் என்பது என் எண்ணம்.அதிவேகம் பலசமயம் படத்தின் பற்பல நுட்பங்களை தவறவிடச் செய்துவிடும் ,திரைக்கதையால் முன்வைக்கப் படும் மைய ஓட்டம் மட்டுமே நம் கவனத்துக்கு வரும்படிச் செய்துவிடும் .இதற்கு நேர் எதிர் திசையில் சில கலைப்படங்கள். [குறிப்பாக அரவிந்தனின் படங்கள் .அவற்றை நான் ஊர்வன வகையில் சேர்த்துள்ளேன்].சீரான திரைக்கதையும் அதையொட்டிய படத்தொகுப்பும் இல்லாதவை அவை என்பது என் மதிப்பீடு. அதி வேகப் படங்கள் செயற்கையான முறையில் சம்பவங்கள் அடுக்கப் படுவதன் மூலம் உருவாகின்றவை. நத்தைப் படங்கள் திறனின்மையின் விளைவுகள்.அழகி இரண்டிலும் சேர்த்தி இல்லை. கதை முற்றிலும் நம்பகமான நிகழ்ச்சிகளுடன் யதார்த்தமான நடிப்புடன் சகஜமாக நகர்கிறது .அதே சமயம் சீரான திரைக்கதை மூலம் பட ஓட்டத்தில் தேக்கமும் இல்லாமல் செய்யப் பட்டுள்ளது.

தமிழில் கதைக்களன் பெரும்பாலும் மிகச் செயற்கையானது . சமூக அடையாளமே இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் ஒரு உலகம் அது.மாற்றாக இயற்கையான சூழலை பாரதி ராஜா ,தேவராஜ் மோகன் ,மகேந்திரன் முதலியோர் கொண்டு வந்தபோதிலும் கூட அச்சூழலில் நிகழும் கதை மிகைப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. ‘பதினாறு வயதினிலே ‘, ‘கிழக்கே போகும் ரயில் ‘ போன்ற படங்களின் கதையை மட்டும் தனித்து எடுத்துப் பாருங்கள் .எத்தனை அபத்தமான கதை ,எத்தனை ஜோடனையான சம்பவங்கள் இல்லையா ?அழகி யின் சூழல் யதார்த்தமான ‘செம்புலச் ‘ சூழல் .[பண்ருட்டி ] நடிப்பும் மிக இயற்கையானது . கதை சம்பவங்கள் மிகையற்ற யதார்த்தச் சம்பவங்கள் .

மூன்றாவது அம்சமே மிக முக்கியமானது .காமம் , வன்முறை [காதல் ! வீரம் !] என்ற இரு விஷயங்களும் பொதுவாக உடனடியாக ரசிகர்களை உத்வேகம் கொள்ளச் செய்பவை.வன்முறைக்கு தார்மீகமான பழிவாங்கும் உணர்ச்சி என்று ஒரு நியாயத்தை கற்பிதம் செய்துவிட்டால் ரசிகர்கள் மனத்தடை இல்லாமல் அதில் ஆழ்ந்துவிடுவார்கள் .எழுத்துவடிவத்தில் இவ்வுணர்ச்சிகளின் தருக்க ஆழத்துக்கோ அக மனச் சலனங்களுக்கோ போக இடமுள்ளது.ஆனால் காட்சி ஊடகம் இவற்றை உத்வேகமூட்டும் விஷயங்களாகவே பொதுவாக காட்ட முடியும்.ஆகவே ‘சுளுவில் ‘ உத்வேகத்தை உருவாக்க விரும்பும் திரைப்பட ஆசிரியர்கள் இவற்றையே பல்வேறு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .[உதாரணமாக பாரதிராஜாவின் எல்லா படங்களும் இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே ].மெல்ல தமிழ் சினிமாவில் வேறு நுண் உணர்வுகளுக்கு இடமே இல்லை என்று ஆகிவிட்டிருக்கிறது.தங்கர் பச்சானின் அழகி இவ்வுணர்வுகளை விட சூட்சுமமான உணர்ச்சிகளை முதன்மைப்படுத்துகிறது .மனசாட்சியின் உந்துதலும் ,கருணையும் ஒரு திரைப்படத்தின் உச்சத்தை அமைப்பதை தமிழ் படத்தில் பார்த்து எத்தனை காலமாகிறது!

இன்னுமொன்றைச் சொல்லலாம் .தமிழ் படங்களில் சிக்கலில்லாத ஒற்றை ஓட்டக் கதை கூறு முறையையேஎ கண்டுவருகிறோம் .பின்னகர்வு உத்திகள் கூட அந்த ஒற்றை ஓட்டத்தின் அம்சமாகவே இங்கு வரும் . மலையாள வணிகப் படங்களில் வரும் வித்தியாசமான கதை நகர்வினைக்கூட தமிழின் ‘நல்ல ‘படங்களில் காணமுடிவதில்லை. அழகி யின் கதையோட்டம் நம்பகமாகவும் ,வித்தியாசமாகவும் இருக்கிறது.புகைப்படத்திலிருந்து விரியும் நினைவு ,பிறகு நேரடியாக ரசிகனிடம் பேசுதல் ,பிறகு பின்னகர்வு காட்சி உத்தி என. எதுவுமே உத்தியாக உறுத்தி நிற்கவுமில்லை.

காட்சி ரூபமாக படத்தை எடுத்திருப்பது எனக்கு மிகவும் உவப்பூட்டுவதாக இருந்தது .இதிலும் தமிழில் சில மிகைகள் உண்டு.ஒன்று வளவளவென்ற வசனம் .அல்லது அதைவிட மிகையாக அழுத்தி காட்டப்படும் காட்சிகள் இவையே இங்கு நாம் பொதுவாக காண்பது. அக்காட்சிகளைவிட வசனமே மேல் என்று படும்.காட்சிகள் நுட்பமாகவும் சகஜமாகவும் இருக்கும்படி அமைத்திருக்கிறார் பச்சான். உதாரணமாக நினைவுகளில் விரியும் பள்ளிக்கூட காட்சிகள் மிக சுமுகமாக மின்னி மின்னி செல்கின்றன.அவற்றுக்கு இடையே அர்த்த ரீதியான ஒத்திசைவு இல்லை ,காட்சி ரீதியான ஒத்திசைவு மட்டுமே உள்ளது —நம் நினைவுகள் நகர்வது போலவே .முகங்கள் முகங்களாக ,உதிரியுதிரி நிகழ்ச்சிகளாக அந்நினைவுகள் ஓடுவது மிக யதார்த்தமான கற்பனை.இந்த அடக்கமான கலை யுணர்வினை படம் முழுக்க தக்க வைத்துள்ளார் பச்சான்.

கலை நுண்ணுணர்வு என்பது திட்டவட்டமாக விளக்கிவிடக் கூடிய ஒன்றல்ல .அது வாழ்க்கை மீதான அவதானிப்பும் ,பொதுவான விவேகமும் ,அழகியல் பிரக்ஞையும் ,தத்துவார்த்தமான கணிப்பும் ஒன்றாக சேரும் ஒரு தருணம்.அழகியில் இருந்து ஒரு காட்சியை சொல்லலாம். தனலட்சுமி பெரியமனுஷி ஆன பிறகு அவளை முதல்முதலாக சண்முகம் பார்க்கும் சந்தர்ப்பம் . அது பல வருடங்களுக்கு பிறகு நினைவில் விரிகிறது .இங்கு ஒரு சுவாரசியமான சம்பவத்தை கற்பனை செய்வதே முதிர்ச்சியற்ற கதாசிரியனின் இயல்பாக இருக்கும் .சுவாரசியமாக ஏதேனும் நடந்திருக்கக் கூடும்தான் .ஆனால் நினைவு எப்போதுமே ‘காட்சி ‘ ‘களையே பாதுகாக்கிறது . சிம்மிணி விளக்கின் செவ்வொளியில் மின்னும் தனலட்சுமியின் சிரித்து வெட்கும் முகம் தான் சண்முகத்தின் மனதில் எழுகிறது.அது ஒருபோதும் மறையாத் ஓவியம் .

இத்தகைய நுட்பத்தை படம் முழுக்க காண முடிகிறது .இன்னொரு உதாரணம் மழையில் ,சாலையோரத்தில் விபத்தில் அடிபட்ட மகன் ஓரமாக படுத்திருக்க தனலட்சுமி சண்முகத்தை உபசரிக்கும் காட்சி .அவளில் துக்கம் இல்லை.அவனுக்கு மிக லாவகமாக ஓடி ஓடி அவள் பணிவிடை செய்கிறாள் .அதில் அவளுக்கு நுட்பமான ஒரு இன்பம் இருக்கிறது. நந்திதாதாஸ் அதை அழகாக காட்டவும் செய்கிறார். அவர் சண்முகத்தின் பாதுகாப்பிலிருந்த தன் செருப்பையும் கடிதத்தையும் எடைக்கு போடும்போது அந்த வியாபாரி சாக்கின் வாயை கட்டும் ஒலி கிழிபடும் ஒலி போல கேட்கும்படி சற்று அழுத்தியிருப்பது இன்னொரு உதாரணம்.

கதைக்கு எவ்விதத்திலும் முக்கியமற்ற விஷயங்களிலும் உள்ள கவனமும் கற்பனையுமே ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காட்டுபவை. உதாரணமாக சண்முகத்தின் அம்மா தனலட்சுமியிடம் அவனது படிப்பு குறித்து கூறும் இடம் .அவன் கண்டிப்பாக அச்சமூகத்தில் மிக புத்திசாலியான பையனாக இருக்கவேண்டும் .அது குறித்து அவன் அம்மாவுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமையும் இருக்கவேண்டும் .ஆனால் அவள் சலித்துக் கொள்கிறாள். அதில் பலவிதமான பவனைகள் உள்ளன.கண்பட்டுவிடுமென்ற பயமும் இருக்கலாம்.தமிழ்நாட்டு அம்மாவின் நிஜ முகம் அது .அதைப்போல தனலட்சுமியின் கணவனை பயங்கரக் கொடுமைக்காரனாகக் காட்டி இரக்கம் தொட முயலாமல் எளிய மனிதனாக காட்டியிருக்கும் விவேகத்தையும் சொல்லலாம்.

படத்தின் எல்லா குழந்தைகளுக்கும் தெளிவான ஆளுமை உருவாக்கப் பட்டிருப்பதை நான் மிகவும் ரசித்தேன் .ஒவ்வொரு முகமும் மிகக் கவனமாக தெரிவு செய்யப் பட்டிருக்கிறது .அந்த ஆளுமைகள் அப்படியே வளர்ந்து விரிவதிலும் கவனமான செதுக்கல் தெரிகிறது.குறிப்பாக கட்டையன் .குறும்புத்தனமும் தந்திரமும் நிரம்பிய எளிதில் தோற்று விடாத மனிதர் அவர். [ பையன் தலையில் பேன் வளர்ந்ததனால் முடிவெட்டி காது குத்தும் விழா வைத்திருப்பதாக சொல்லி அழைப்பு கொடுக்கிறார் மனிதர் ]ஆனால் இப்படத்தில் அவர் ஒரு கீற்று போலத்தான் வருகிறார்.

நடுவயதின் முதிர்ச்சியும் ஆழமும் உள்ள சண்முகமாக பார்த்திபன் நன்றாக நடித்திருக்கிறார் .உண்மையில் இவரை நான் இதுவரை கவனித்ததில்லை .இவர் நடித்த எந்த படமும் பார்க்க நேரிட்டதில்லை .தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்ததோடு சரி. அழகான ,கம்பீரமான தமிழ் அடையாளம் உள்ள முகம்.இம்மாதிரி முகங்கள் தான் தமிழில் நடிக்கவேண்டும் .

இன்னுமொரு முக்கிய விஷயம் ஒரு கலைப்படைப்பில் அதன் முக்கிய ஓட்டத்தை முற்றிலும் புறக்க்ணித்துக் கூட பல நுடெபமான விஷயங்களை நாம் அவதானித்தபடியே இருக்கலாம். அழகியில் அப்படி பல நுட்பங்கள் இருக்கின்றன.உதாரணமாக இதில் வரும் பள்ளிகள் இனிய நினைவுகளாகவே உள்ளன .ஆனால் அவற்றில் வன்மமுறை நிரம்பியுள்ளது.ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு துவந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .ஆசிரியர்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .காலம் நீண்டு சென்ற பிறகு தான் அவை இனிய நினைவுகளாக மாறியுள்ளன.

உறுத்தல்களும் ,குறைகளும் இல்லையா ? உண்டு.நகைச்சுவைக் காட்சிகள் அபத்தமாக இருந்தன.இளைய ராஜாவின் இசை மட்டம் . 80 களின் உணர்ச்சிக் கொந்தளிப்பான படங்களுக்கு அமைத்த இசையை இதற்கும் போட்டிருக்கிறார் .பல இடங்களில் பார்த்திபனின் மெளனம் நிரம்பிய அழகிய அசைவுகளின் பின்னணியில் இளையராஜாவின் இசை கூச்சலிடுகிறது . மிக மெளனமான இசையே இப்படத்துக்கு போதுமானது. இளையராஜாவின் ரசிகன் நான்.தமிழ் திரைப்பட உலகில் உருவான முதல்தர கலைஞன் அவர் ஒருவரே.ஆனால் இப்படத்தில் அவர் படைப்பூக்கத்துடன் இல்லை. தனலட்சுமி காணும் கனவு தமிழ் சினிமாத்தனத்துடன் உள்ளது.

அழகி ஒரு மகத்தான சினிமாவா ? எனக்கு தெரியவில்லை .ஆனால் தமிழில் உடனடியாக நாம் எதிர்பார்க்கவேண்டிய ,வரவேற்க வேண்டிய நல்ல படத்தின் முழுமையான முன்மாதிரி இதுவேயாகும். உலகப் பெரும்படைப்புகளுடன் இதை ஒப்பிட்டு விமரிசிக்க நான் முனையவில்லை –இலக்கியத்தில் கண்டிப்பாக அதை செய்வேன் என்றாலும் . சினிமா ஒருவகை நிகழ்த்துகலை .அது ரசிகச் சூழலுக்கு கட்டுப்பட்டது.

ஆனால் ஒரு திரைப்படம் எளிய மனக் கொந்தளிப்புகளையோ ,கழிவிரக்கத்தையோ , தற்காலிகமான அதீத துக்கத்தையோ உருவாக்காமல் வாழ்க்கையின் விரைந்தழியும் வண்ணங்களைப்பற்றியும் ,மனிதனுக்கு அப்பாற்பட்ட நியதியின் ஆட்டத்தைப்பற்றியும் ஆழ்ந்த துக்கத்துடன் நம்மை எண்ணச் செய்வதென்பது மிக மிக முக்கியமான விஷயம்.

எத்தனை சிறியவன் மனிதன்,எத்தனை சாதாரணமானது அவன் வாழ்வு என மீண்டும் மீண்டும் நம்மை யோசிக்கச் செய்கிறது அழகி.

பி கு

ஒரு விஷயத்தை சொல்லாமல் இக்கட்டுரையை முடிக்கக் கூடாது.இப்படத்தை நாகர்கோவிலில் நான் பார்த்த திரையரங்கு . ஏற்கனவே கடல் பூக்கள் படத்தை இதே அரங்கில் பார்த்தேன் .படங்கள் புகை மூட்டம் படிந்திருந்தன.வெளிச்சம் மங்கியபடியே போய் இருண்டு அணைந்து மீண்டும் மெல்ல தெளிந்து வந்தது காட்சி.கார்பனை சேமிக்கும் பொருட்டு அப்படி காட்டும்படி சொல்லப்பட்டிருப்பதாக விசாரித்த போது தெரிந்தது. பச்சானின் புகழ் பெற்ற ஒளிப்பதிவின் எந்த சிறப்பையும் நான் காண முடியவில்லை.குறைந்த பட்சம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையான நந்திதாவின் அழகைக் கூட ஒழுங்காக பார்க்க முடியவில்லை.தரை கூட்டப்பட்டு பலநாட்களாகியிருக்கும். எறும்புகடி சகிக்க முடியவில்லை.எச்சில் நாற்றம் .நாகர் கோவிலில் பெரும்பாலான அரங்குகள் இந்த லட்சணத்தில்தான் உள்ளன.

நண்பரிடம் படம் பற்றி ஆர்வமாக சொன்னேன் .எந்த அரங்கில் என்றார்.சொன்னபோது ‘ ‘அங்கேயா ?அதுக்கு பேசாம கேபிள்ல போடுவான் ,பாக்கலாம் ‘என்றார் .எப்படியும் ஓரிரு வாரத்தில் திருட்டு வீடியோ கிடைக்கும்.நல்ல சிங்கப்பூர் பிரதி.தங்கர் பச்சானின் அழகிய ஒளிப்பதிவை ரசிக்ீக வேண்டுமென்றால் வேறு வழியே இல்லை

===

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்