என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

ஜெயமோகன்


நண்பர்களே,

பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும்

*

பல வருடங்களுக்கு முன் ஊட்டியில் என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியின் அலுவலகத்தில் வைத்து ஆரோன் என்னும் ஆஸ்திரேலிய நாட்டு இளைஞர் ஒருவரை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் இந்திய குடிசைப்பகுதிகளில் சேவை செய்யும்பொருட்டு வந்திருந்தார். அழுத்தமான கிறித்தவ உணர்ச்சியில் இருந்து உருவான சேவை மனநிலை அவருடையது. ஆஸ்திரேலியாவில் நித்யா பல்கலைகழக ஆசிரியராக இருந்தபோது இவர் நித்யாவின் மாணவராக இருந்தாராம். எர்ணாகுளத்தில் ஒரு சேரியில் அவருக்கு நிகழ்ந்த ஓர் அனுபவத்தைச் சொன்னார்.

அந்தச் சேரி எங்கும் ஏராளமான தெருச்சிறுவர்கள் அலைந்தனர். சில்லறை வேலைகள் செய்பவர்கள், துறைமுகத்தில் சிறிய இரும்பு போன்ற பொருட்களை திருடி விற்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், பிச்சை எடுப்பவர்கள். அவர்கள் சிறுகசிறுக எங்கிருந்தோ வந்து சேர்ந்து வானமே கூரையாக சேரியே தாய்தந்தையாக வாழும் ஒரு தனிச்சமூகம்.

ஆரோன் அவர்கள் மத்தியில் ஏதாவது செய்ய விரும்பினார். ஒரு நாள் உள்ளூர் உதவியாளர் ஒருவருடன் ஒரு ஒலிப்பதிவுக் கருவியை எடுத்துக் கொண்டு அவர் தெருக்களுக்குச் சென்றார்.கருவியை ஓடச்செய்துவிட்டு தெருப்பையன்களைக் கூப்பிட்டு அவர்கள் விரும்பியதை பேசச்செய்து பதிவு செய்வது அவரது நோக்கம். அவற்றிலிருந்து அவர்களைப்பற்றி ஒரு பொதுவான புரிதலை அடைய இயலுமென்பது திட்டம்.

முதலில் அவர்கள் தெருவில் சந்தித்த சிறுவர்கள் அவர்கள் அழைத்ததுமே சிதறி ஓடினார்கள். அதேசமயம் ஆர்வத்துடன் பின்னாலேயே வந்தார்கள். நக்கலாக கூச்சலிட்டார்கள். கூடவந்த உதவியாளார் ஆஸ்திரேலியரிடம் ”இவர்கள் மனிதப்பண்பு குறைந்தவர்கள். ஒருவகை மிருகங்கள். இவர்கள் நெஞ்சில் கருணை அன்பு ஈரம் என்பதற்கெல்லாம் இடமே இல்லை. இவர்கள் வாழும் சூழலும் வாழ்க்கையும் இவர்களை அப்படி ஆக்கியுள்ளன.” என்று சொல்லியபடியே இருந்தார்.

ஆரோன் ஒரு சாக்லேட்டை நீட்டியபடி மீண்டும் மீண்டும் சிறுவர்களை அழைத்தார். கடைசியில் ஒரு சிறுவன் தயங்கியபடி வந்து சாக்லேட்டைப் பெற்றுக் கொண்டான். மைக்கை நீட்டியபோது தயங்கி ஓரக்கண்ணால் அவரை பார்த்த பின் சரசரவென ஏழெட்டு உக்கிரமான கெட்டவார்த்தைகளை கொட்டிவிட்டு ஓடிப்போனான். உதவியாளர் ”பார்த்தீர்களா சார்? நன்றியே இல்லை. இவன்கள் இப்படித்தான்…. இவர்கள் மனம் முழுக்க வன்முறையும் வக்கிரமும்தான்” என்றார்

ஆரோன் புன்னகையுடன் அவனைப்பார்த்து பரவாயில்லை என்பதுபோல தலையை அசைத்தார். சிரித்தபடி மீண்டும் வந்து பேசும்படி அழைத்து சாக்லேட்டைக் காட்டினார். அவன் அருகே மிகமிகத்தயங்கியபடி வந்தான். ஓடத்தயராக நின்றபடி சாக்லேட்டை வாங்கிவிட்டு மைக்கருகே குனிந்து மீண்டும் ஒரு மிகப்பெரிய கெட்டவார்த்தை சொல்லிவிட்டு ஓடினான்.

ஆனால் அவர் துரத்தவில்லை என்பதை அவந் கண்டான். மருமுறை அழைத்தபோது அதிக தயக்கமில்லாமல் வந்தான். சாக்லேட்டை அவநம்பிக்கையுடன் வாங்கினான். மைக்கில் ”போடா!” என்று மட்டும் சொல்லிவிட்டு அருகே சற்று தள்ளி நின்றான். ஆரோன் மீண்டும் அதே அன்பான புன்னகையுடன் மைக்கை கொடுத்து பேசச்சொன்னபோது அவன் கனத்த கால்களை நீட்டி வைத்து மைக்கருகே வந்தான். தலைகுனிபவன் போல அதன் முன் நின்றான். சொற்கள் வரவில்லை. குனிந்த தலை மட்டும் ஆடியது. சட்டென்று நெஞ்சு பிளப்பது போல் ஓர் அழுகை. ஆரோன் அவன் தோள்களைப்பற்றிக் கொண்டார். நிறுத்தாமல் அழுகை. அவனை அழவிட்டார் அவர்.

ஒலிப்பதிவுக்கருவி ஓட அந்த அழுகை நிசப்தமான குருகுல அறையில் ஒலித்தது. வெளியே பைன்மரங்களில் காற்றின் நெடுந்தொலைவு ஓலம். அது ஏதோ அருவமான ஆத்மா ஒன்றின் அழுகை போல கேட்டது.

வெகுநேரம் கழித்து நித்யா பேசினார் ” ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”

நித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”

”ஜெர்மனியில் ஆஸ்டர்விட்ஸ் நினைவிடத்தில் நான் என்னை இழந்து நின்றிருக்கிறேன். நாகஸாகி அணுகுண்டு நினைவகத்தில் நின்று அழுதிருக்கிறேன்.மனிதகுரூரத்தின் உச்சம். அதற்கு முடிவேயில்லை. ஒருமுறை வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தேன். ஏதோ கொள்ளை நோயால் குழந்தைகளும் பெண்களும் செத்துக் கொண்டே இருந்தனர். கங்கைகரையெங்கும் பிணங்கள். மனம் கலங்கி பேதலித்து இரவைக் அக்ழித்தேன். காலையில் கங்கைமீது அற்புதமான சூரிய உதயத்தைப் பார்த்தேன். ஒளியுடன் எழுகின்ற பொற்கோபுரம்! அதன் ஒளி¨யை உண்ட சருகுகள் கூட அமரத்துவம் பெற்றன. ஒரு கணத்தில் என் கவலைகளும் ஐயங்களும் பறந்தன. ஆம், அனைத்துக்குள்ளும் அளவிட முடியாத ஆனந்தமே உறைகிறது என சொல்லிக் கொண்டேன். ”

”இங்கு நோயும் மரணமும் உள்ளது. இங்கு கொடுமையும் சீரழிவும் உள்ளது. ஆயினும் இதன் சாரம் அளவிலா கருணையும் ஆனந்தமும்தான். மானுட மனமெங்கும் காமகுரோதமோகங்களே கொந்தளிக்கின்றன. ஆயினும் சாராம்சத்தில் உறைவது உண்மையும் நன்மையும் அழகுமே. அதை நான் ‘சத்யம் – சிவம் – சுந்தரம்’ என்பேன்”

ஆனால் இன்றைய வாசகன் ஒருவன் சென்ற ஐம்பதாண்டுக்கால மேலை நாட்டு இலக்கியங்களைப் படித்தானென்றால் மீண்டும் மீண்டும் மானுட இருளை காட்டும் கதைகளையே வாசிப்பான். சாமர்செட் மாம் முதல் பீட்டர் ஷா·பர் வரை, மார்சேல் புரூஸ்ட் முதல் அல்பேர் காம்யூ வரை, ஹெர்மன் மெல்வில் முதல் ஹெமிங்வே வரை, ஆல்பர்ட்டோ மொராவியோ முதல் லூகி பிராண்டலோ வரை மீண்டும் மீண்டும் அவன் காண்பது இதைத்தான்.

மனிதன் அவனை ஆக்கிய சக்திகளினால் கைவிடப்பட்ட மிருகம்’ என்றார் சார்த்ர். ‘நான் மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவன், ஆனால் நம்பிக்கை உள்ளவன் என்று என்னைச் சொல்லிக் கொள்வேன்’ என்றார் காம்யூ. மனிதனின் அன்பு கருணை பாசம் தியாகம் அனைத்தையும் திரை விலக்கி நோக்கினால் மனித அகத்தில் நிறைந்திருப்பது அடிப்படை விலங்கியல்புகளே [இட்] என்ற நம்பிக்கை. மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை கோட்பாடாக மாற்றியது ·ப்ராய்டிய உளவியல். அதற்கு அறிவியலின் வண்ணத்தை அளித்தது. மனிதன் உளச்சிக்கல்களின் பெருந்தொகுப்பு என்று சொன்னது ·ப்ராய்டியம். அந்தச் சிக்கல்களை வெற்றிகரமாக சித்தரித்துக் காட்டுவது பெரும் படைப்பு என்று கொள்ளப்பட்டது. இக்காலக் கதைகளுக்கெல்லாம் ஒரு எளிய பொதுச் சூத்திரம் உள்ளது. ஒரு மனித¨னைச் சித்தரிப்பது. அவனுடைய நல்லியல்புகள் வழியாக கதை நகர்ந்து சென்று ஓர் உச்சத்தில் அவனுள் உறையும் ‘ உண்மையான’ சுயம் வெளிப்படும். வாசகன் அதிர்ச்சி அடைகிறான். அந்த அதிர்ச்சிதரும் உச்சமே அக்கதையின் மையம்!

உளச்சிக்கல்களில் மீட்பின்றி மாட்டிக்கொண்டுள்ள இந்த எளிய மிருகம் மனிதன், அவனுடைய பண்பாடு என்பது அந்த உளச்சிக்கல்களினால் உருவானது, அவ்வுளச்சிக்கல்களை மறைத்துக் கொள்ள அவனுக்கு உதவுவது என்றார் ·ப்ராய்ட். மானுடம் பற்றிய சோர்வு நிறைந்த இந்த தரிசனம் ஏறத்தாழ ஐம்பதாண்டுக்காலம் மேலைச்சிந்தனையின் பெரும்பகுதியை ஆண்டது. இரு உலகப்போர்களும் அவற்றின் பின்விளைவுகளான சோர்வும் அவநம்பிக்கையும் இதற்குக் காரணமாகியிருக்கலாம்.

தன் மீதான அவநம்பிக்கையிலிருந்து இது தொடங்குகிறது. தன் நல்லியல்பு மேல் நம்பிக்கை இல்லாதவனுக்கு சகமனிதன் மேலான அவநம்பிக்கை இயல்பான ஒன்று. ” இரு மனிதர்களுக்கு இடையே உள்ள உறவின் சாரம் மோதலில் உள்ளது” என்றார் சார்த்ர். ”நரகம் என்பது சக மனிதனே” என்றார். அதன் விளைவாக வாழ்க்கை என்பது மாபெரும் அபத்த நாடகம் என்ற சித்திரம் உருவாயிற்று.

சார்த்ர் எழுதிய ‘சுவர்’ என்ற சிறுகதையை நினைவுகூர்கிறேன். லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடுகிறார்கள் புரட்சிக்குழுக்கள். அக்குழு ஒன்றின் அதிதீவிர உறுப்பினராகிய கதாநாயகன் தற்செயலாக கைதுசெய்யபப்டுகிறான். அவனை சித்திரவதைக் கூடத்துக்குக் கொண்டு வருகிறார்கள். தலைவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்று கேட்டு அவனையும் மேலும் பத்துபேரையும் கடுமையாக சித்திரவதை செய்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் அவன் ஒருவனுக்கு மட்டுமே தலைவனைப்பற்றி தெரியும். அவர் மலைமீது பழங்குடிக் குடியிருப்பில் இருக்கிறார். அவனுடன் உள்ள ஒவ்வொருவராக கொல்லபப்டுகிறார்கள். கடுமையான சித்திரவதையிலும் மரண பயத்திலும் அவன் தன்நிலையை இழக்கவில்லை. மெல்ல ஆட்சியாளர்களுக்கு தெரிகிறது, அவனுக்கு தெரியும் என.

சித்திரவதைக்குழுத்தலைவன் மேஜர் வருகிறான்.அவனிடம் சொல்கிறான், ”உன் தலைவனை காட்டிக்கொடுத்தால் உனக்கு விடுதலை. நான் தனிப்பட்ட முறையில் உறுதி அளிக்கிறேன்.” வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொருவராக கொலைத்தண்டனைக்கு இட்டுச்செல்லபப்டுகிறார்கள். அவன் முன் நின்றவன் தன்னிச்சையாகவே கால்சட்டையில் சிறுநீர் பெய்கிறான். பித்தன் போல் புலம்பி அழுகிறான். தன்னை விடுவிக்கும் பொருட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது இன்னமும் வந்துசேரவில்லை என்றும் சொல்லி அழுகிறான்

சட்டென்று அவனுக்கு ஓர் எண்ணம் உதிக்கிறது. கொலைத்தண்டனையை சற்று தாமதிக்க வைத்தால் ஒருவேளை அக்கைதி தப்பக்கூடும். ஒரு திட்டம் வகுக்கிறான். மேஜரை அழைத்து தன் தலைவன் கீழே நகரத்துச் சேரியில் ஏதோ ஒரு வீட்டில் இருப்பதாகச் சொல்கிறான். நகரச்சேரி மிகப்பெரிது. அதை அவர்கள் தேடி முடிக்க இரவும் பகலும் ஆகிவிடும். அதற்குள் ஒருவேளை ஒருவன் மரணத்திலிருந்து தப்ப உத்தரவு வரமுடியும்.

அவனை ஓர் அறையில் போட்டு மூடுகிறார்கள். ‘உனக்கு இது ஒரு வாய்ப்பு. உன் தலைவன் பிடிபட்டால் உனக்கு விடுதலை. நீ ஏமாற்றினாயென்றால் கடுமையான சித்திரவதை காத்திருக்கிறது” என்று சொல்கிறார்கள். அவன் தனக்குள் சிரிக்கிறான்.

ஆனால் மறுநாள் காலையிலேயே அவனது அறைக்கதவு திறக்கப்படுகிறது. மேஜர் கசப்புடன் சிரித்தபடி சொல்கிறான் ” நீ தைரியசாலி என்றும் விசுவாசமானவன் என்றும் நினைத்தேன். ஆகவே நீ என்னை ஏமாற்றுகிறாய் என்று தோன்றியது. இருந்தாலும் தேடிச்சென்றோம். உன் தலைவன் பிடிபட்டுவிட்டான். உனக்குவிடுதலை”

ஆம், தலைவர் ரகசியமாக அன்று முன்னிரவில்தான் சேரிக்கு வந்திருக்கிறார்! அவன் அதிர்ந்து வாய்டைந்து நிற்கிறான். அவனை அவர்கள் விடுதலைசெய்கிறார்கள். மேஜர் வெறுப்புடன் சொல்கிறான் ”நீ ஒரு கோழை! துரோகி! நான் உன்னை வெருக்கிறேன். ஓடிப்போ”

அவன் சட்டென்று சிரிக்க ஆரம்பிக்கிறான். சிரித்தபடியே இருக்கிறான். விலா வலிக்க சிரிக்கிறான். கண்ணீர் கொட்டி சீறி அழ ஆரம்பிப்பதுவரை சிரிக்கிறான்.

நண்பர்களே இந்தச்சிரிப்பை நாம் முன்னரே சொன்ன அழுகையுடன் ஒப்பிடவேண்டும். அந்த அழுகைக்கு நேர் எதிரானதல்லவா இந்தச் சிரிப்பு? மானுட வாழ்க்கை என்ற வெங்காயத்தை தோல் உரித்து பார்த்து சாராம்சமாக ஒன்றுமே இல்லை என்றறிந்தபின் வரும் சிரிப்பு இது. அத்தனை லட்சியங்கள், மன மயக்கங்கள் அனைத்துக்குள் உள்ளே உறையும் அபத்தத்தை கண்டடைந்தபின் வரும் சிரிப்பு இது. அவன் செய்த தியாகம் அவனது வீரம் அவனது அர்பப்ணிப்பு எதற்குமே பொருள் இல்லை. இனி அவன் எங்கும் எப்போதும் துரோகிதான்!

ஐம்பது வருடம் இச்சிரிப்பே ஐரோப்பிய இலக்கியத்தை ஆட்சி செய்தது. வாழ்வின் பெட்டகத்தை திறந்து வெறுமையை பெயர்த்து எடுத்து நம் முன் போடும் படைப்புகள் வந்தபடியே இருந்தன. இந்த நோக்கை நவீனத்துவம் [மாடர்னிஸம்] என்றார்கள்.

நவீனத்துவத்தின் அடிப்படை கருத்துநிலையை தர்க்க நோக்கு, தனிமனிதவாதம், ஒருங்கிணைவுள்ள வடிவம் என்று மூன்றாக வகுத்துச் சொல்லலாம். இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.

வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் உணர்ச்சிபூர்வமாக அணுகாமல் அறிவியல் சார்ந்த தர்க்கபூர்வமாக அணுகுவது நவீனத்துவம். பிரித்து பகுத்து பின்னர் தொகுத்து பொதுமுடிவுகளுக்கு வருவது அது. தர்க்கம் என்னும்போது யாருடைய தர்க்கம் என்ற கேள்வி எழுகிறது? யார் வாழ்க்கையையும் வரலாற்றையும் ஆராய்கிறானோ அவனுடைய தர்க்கம். அதாவது தனிமனிதனின் தர்க்கம். இவ்வாறாக காலத்தின்முன் தனிமனிதனாக நின்று அதை நோக்கும் நிலைப்பாடு உருவானது.தர்க்கபூர்வமாக விஷயங்களை கண்டு சொல்லும்போது கச்சிதமான ஒருங்கிணைவுள்ள வடிவம் உருவாகிறது. தர்க்கமே அந்த வடிவத்தை ஒருங்கிணைக்கும் சக்தி. இவ்வாரு நவீனத்துவம் மேற்கே உருக்கொண்டது

தனிமனிதன் அவன் எவ்வளவு மகத்தானவனாக இருந்தாலும் காலத்தின் முன் ஒரு துளி. வாழ்க்கையின் ஒரு தெறிப்பு. வரலாற்றின் ஒரு கணம். அவனை பிரம்மாண்டமான அதன் விரிவு அச்சுறுத்துகிறது. அதன் முன் நிற்கையில் தன் இருப்பு அர்த்தமில்லாதது சாரமில்லாதது என்று அவன் நினைக்கிறான். தனிமையும் சோர்வும் கொள்கிறான். அச்சிந்தனையின் தத்துவ வடிவமே இருத்தலியம் [எக்ஸிஸ்டென்ஷலியசம்] இருத்தலியமே நவீனத்துவத்தின் தத்துவதரிசனம் எனலாம்.

சார்த்ரும் காம்யூவும் இருத்தலியத்தின் பிதாமகர்கள். முன்னர் நான் சொன்ன சொற்றொடர்கள் இருத்தலியத்தின் மூலவரிகள் போன்றவை. முன்னர் நான் சொன்ன படைப்பாளிகலின் வரிசையை ஒட்டுமொத்தமாக நவீனத்துவர்கள் என்று அடையாளம் காட்டலாம்.

நான் வாசிக்க வந்த காலத்தில் நவீனத்துவத்தின் கொடி பறந்தது. இருத்தலியமே எங்கும் முழங்கும் தத்துவமாக இருந்தது. இந்திய மொழிகளில் நம் உடனடி முன்னோர்கள் அனைவருமே நவீனத்துவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் சுந்தர ராமசாமி சா கந்தசாமி இந்திரா பார்த்த சாரதி … மலையாளத்தில் ஓ.வி.விஜயன், எம் டி வாசுதேவன் நாயர் ,எம் முகுந்தன் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி, பி.லங்கேஷ், வங்காளத்தில் சுனில் கங்கோபாத்யாய அதீன் பந்த்யோபாத்யாய…

ஆனால் நம்முடைய நவீனத்துவம் அப்படி உள்ளார்ந்த பெரும் வெறுமையைச் சென்றடைந்ததா? சார்த்ரின் கதாநாயகனின் அந்த சிரிப்பு இங்கே ஒலித்ததா?

ஓ.வி.விஜயனின் புகழ்பெற்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. ‘கடல்கரையில்’ என்ற அக்கதையை நான் மஞ்சரி இதழில் முன்பு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

வெள்ளாயியப்பன் தன் சிற்றூரிலிருந்து அதிகாலையிலேயே கால்நடையாகக் கிளம்புகிறான்.கையில் வழியில் சாப்பிட ஒரு பொட்டலம் சோறு அவன் மனைவியால் கட்டி கொடுக்கப்படுகிறது.

கண்ணீர் கனத்த முகத்துடன் நிற்கும் மனைவியடம் அவன் விடைபெறுகிறான் .நடக்கிறான் . வழியில் எதிர்பட்ட ஊரார் அவனிடம் துயரத்துடன் நகரத்திற்கா செல்கிறாய் என்கிறார்கள். ஆமாம் கூடாளிகளே நான் சென்றுவருகிறேன் எனக்கு விடை கொடுங்கள் என்கிறான்

ஊரின் மரங்களும் பாறைகளும் சிற்றோடைகளும் அவனிடம் துயரமாக கேட்கின்றன. ‘நகரத்திற்கா செல்கிறாய்?’ ஆமாம் எனக்கு விடைகொடுங்கள் என்று அவன் சொல்கிறான்

நீண்ட செம்மண் பாதை வழியாக அவன் நடக்கிறான். கால்களில் புழுதிபடிகிறது. உடல் வியர்த்து களைக்கிறது. அந்த சோற்று பொட்டலம் கனக்கிறது. வெயிலில் தும்பிகளும் சிறுபறவைகளும் நீந்திக் களிக்கின்றன. கவலையே அறியாத வானம் ஒளியுடன் கண்நிறைத்து விரிந்திருக்கிறது. வெள்ளாயியப்பன் அதைக் கண்டு மனம் உருகிக் கண்ணீர் விடுகிறான்.

மாலை வெள்ளாயியப்பன் நகரத்தை அடைகிறான். நகர் நடுவே ஒரு கோட்டை. அதற்குள் ஒரு சிறை. சிறை வாசலில் பொட்டலத்துடன் அவன் காத்து நிற்கிறான். காவலர் அவனை அனுதாபமாகப் பார்க்கிறார்கள். அவன் மேலும் மேலும் பல வாசல்களில் நிற்கவேண்டியுள்ளது.

கடைசியில் அவன் தன் ஒரே மகனை இரும்புக்கம்பிகளுக்கு அப்பால் காண்கிறான். அவன் வெளுத்துப்போய் நடுங்கிக்கொண்டே இருக்கிறான். ”அப்பா நீ வந்தாயா?” என்கிறான். ”மகனே நான் வரவேண்டுமல்லவா?”என்கிறான் வெள்ளாயியப்பன்

”இனி நான் இருக்கமாட்டேனே அப்பா.. அம்மாவை இனி என்னால் பார்க்க முடியாதே” என்கிறான் மகன். ”மகனே நீ தவறு செய்தாய் என்றல்லவா அவர்கள் சொல்கிறார்கள்?” என்கிறான் வெள்ளாயியப்பன்

”நான் எந்த தவரும் செய்யவில்லை அப்பா” மகன் சொன்னான். ” அதை அவர்கள்தானே தீர்மானிக்கிறார்கள்?” என்கிறான் வெள்ளாயியப்பன். அந்த சோற்றை மகனுக்குக் கொடுக்கிறான். அவன் வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.

அன்றிரவு முழுக்க வெள்ளாயியப்பன் தூங்காமல் சிறை வாசலில் அமர்ந்திருந்தான். வானம் இருண்டது.நட்சத்திரங்கள் ஆழம் கானமுடியாத இருளில் மின்னிக் கொண்டிருந்தன.

மறுநாள் அதிகாலையில் அவன் மகன் தூக்கில் இடப்பட்டான். அதை அவன் பார்க்கவில்லை. ”உன் மகனின் சடலத்தை நீ பெற்றுக்கொள்ளலாம்”என்கிறார் சிறையதிகாரி. ”இல்லை எஜமானே. ஊருக்குக் கொண்டுபோக எனக்கு வசதி இல்லை. ”என்கிறான் வெள்ளாயியப்பன் ”நீங்களே அடக்கம் செய்யுங்கள்”

விடிய ஆரம்பிக்கிறது. சோற்றுப்பொட்டலத்துடன் வெள்ளாயியப்பன் கடல்கரைக்குச் செல்கிறான். வெண்நீலப்பட்டு விதானம் போல வானம் காலை ஒளிகொண்டிருக்கிறது. அலை ஓயாத அமைதியில்லாத கடல் தொலைவில்.

வெள்ளாயியப்பன் மகனை எண்ணினான். அவனுக்குக் கண்ணீர் வரவில்லை. என் மூதாதையருடன் நலமாக இரு மகனே என்று எண்ணிக் கொண்டான்.அந்த சோற்றுப்பொட்டலத்தை கடற்கரையில் வீசினான். ஒளிமிக்க வானிலிருந்து காக்கைகள் வடிவில் மூதாதையர் கூட்டம் கூட்டமாக இறங்கிவந்தனர் அந்த பலிச்சோற்றை உண்ண.

நண்பர்களே, இந்தக்கதை ஒரு இந்திய இருத்தலியல் கதை. அரசு, தர்மநியாயங்கள் எல்லாமே தனிமனிதனை மீறி அவனை பந்தாடுவதை இது காட்டுகிறது. இக்கதையிலும் தனிமனிதன் தன் விதியுடன் அகண்ட காலத்தின் முன் தன்னந்தனியாக நிற்கிறான். அந்தக்கடல்தான் அலைபுரளும் முடிவிலியாகிய காலம் , இல்லையா?

ஆனால் எந்த மேலைநாட்டு இருத்தலியல் கதையிலும் இல்லாத ஒரு கனிவு இதில் உள்ளது . அதை நான் மேலும் விளக்க விரும்பவில்லை. வெள்ளாயியப்பன் எதிர்கொள்ளும் காலம் இரக்கமற்ற விரிவு கொண்டதுதான். ஆனால் அவன் தன் மூதாதையர் வரிசை மூலம், தன் வாரிசுவரிசை மூலம் அந்த முடிவிலியை எதிர்கொள்கிறான். அவன் முன் வாழ்க்கையின் பொருளாக அது விரிந்து கிடக்கிறது. தன் தந்தையும் தானும் தன் மகனும் கொள்ளும் அறுபடாத அன்பின் சங்கிலி அது. அவனைப்பொறுத்தவரை அது உண்மை. அதுவே சாரம். அதுவே மையம். அது அவனுக்கு நிறைவை அளிக்கிறது.

உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் கானூம் இக்கதையை இந்திய நவீனத்துவத்தின் உச்சம் என்று நான் எண்ணுகிறேன்.

ஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காமகுரோதமோகம்’ என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன?

ஏன் மனிதன் காமகுரோதமோகம் கொள்கிறான்? இன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது? ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டபப்டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது

எப்படி தன் ஆனந்தநிலையை மனித மனம் இழக்கிறது? தன்னை தனித்துணரும்போது. தான் வேறு என உணரும்போது. இப்பிரபஞ்சம் முழுக்க உயிராக உடல்களாக பொருட்களாக நிறைந்திருப்பதில் இருந்து எப்போது வேறுபட்டு உணர்கிறதோ அப்போது மனிதமனம் துயரம் கொள்கிறது

மனிதமனம் ஆனந்தம் கொள்ளும் கணங்களை எண்ணிப்பாருங்கள். உணவின் ருசியில், உடலுறவில், இயற்கைக்காட்சியன்றை பார்க்கையில், கலைகளில் ஈடுபடுகையில் மனிதமனம் ஆனந்தம் கொள்கிறது. இவ்வாவனந்தத்தின் உச்சநிலைகளில் எல்லாம் அது ‘தன்னை இழந்து’ விடுகிறது. மெய்மறக்கிறது. தான் இல்லாத நிலையையே அது பேரின்பமாக உணர்கிறது. கரைந்து அழிதலையே அது இருத்தலின் உச்சமாக உணர்கிறது’

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது. எழுதுபவனும் வாசிப்பவனும் தன் அகங்காரத்தை இழந்து கரைந்து ஒன்றாகும் பெருநிலை அது. கலையின் பணியே அதுதான். தன் அகங்காரத்தால் சுயநலத்தால் தன்னை வேறிட்டு உணர்ந்து துயருறும் மனிதமனத்துக்கு தன்னை உதறி விரிந்து எழும் பேரனுபவத்தை அளிப்பதே அதன் நோக்கம்.

மனிதனுக்கு இந்தியப் பேரிலக்கியங்கள் விடுக்கும் செய்தி என்று இதையே சொல்லமுடியும். உன் அகங்காரத்தின் எல்லைக்கோடுகள் அழியும்போது நீ உணரும் எல்லையற்ற தன்மையே உன் இருப்பின் சாரம். அப்போது நீ உன்னையே மானுட இனமாக, வரலாறாக, முடிவிலாத காலமாக உணர்வாய். வெள்ளாயியப்பன் கடற்கரையில் காலத்தின் முடிவிலாத அலைவெளிமுன் நின்று உணர்ந்த சாரம் அதுதான்.

நண்பர்களே இந்திய இலக்கியம் அதன் செவ்வியல்தளத்தில் உணர்ந்ததும் இதையே. நவீன இலக்கியமாக மாரியபோது அதன் பெரும்படைப்புகள் வழியாக அது அறிந்ததும் இதையே. மீண்டும் மீண்டும் அது சொல்லிக்கொண்டிருப்பதும் இதையே.

பிரேம்சந்தின் ஒரு இந்திக் கதை. ‘லட்டு’ என்று பெயர். கதா நாயகிக்கு தொண்ணூறு வயது. திரும்பவும் குழந்தை ஆகிவிட்டாள். நடக்க முடியாது, தவழ்வாள். பொக்கைவாயில் மழலைச்சொல்தான் பேசுவாள். காது சரியாகக் கேட்காது. பெரும்பாலும் சிரிப்புதான் அவள் மொழி.

வீட்டில் அவள் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். மருமகளுக்கு இந்தக்குழந்தையை பராமரித்து அலுத்துவிட்டது. கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டும். சாப்பாடு ஊட்டிவிடவேணும். மலஜலம் கழிக்க கொண்டுபோகவேண்டும். படுக்கவைத்து போர்த்திவிடவேண்டும். கொஞ்சம் கண்ணசந்தால் எங்காவது போய்விடும். விழுந்து அடிபட்டு வந்துசேரும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். இது செத்து ஒழிந்தால்தான் எனக்கு வாழ்க்கை என்று வைகிறாள் மருமகள்

பேத்திக்குக் கல்யாணப்பேச்சு அடிபடுகிறது. கல்யாணம் என்ற சொல் எப்படியோ காதில் விழுந்ததும் கிழத்துக்கு லட்டு நினைவு வந்துவிட்டது. அதன் கல்யாணத்தன்றைக்கு தேங்காயளவுக்கு லட்டு செய்தார்கள். லட்டு வேண்டும் லட்டு என்று கிழவி முனக ஆரம்பித்தாள். ‘எப்போது கல்யாணம், கல்யாணத்துக்கு லட்டு உண்டா ?’ என்று வாய் ஓயாமல் நச்சரிக்க ஆரம்பித்தாள்.

சும்மாகிட .உனக்கு இந்தவயசில் லட்டு ஒரு கேடா என்றாள் மருமகள். திட்டெல்லாம் கிழத்துக்கு பொருட்டே அல்ல. லட்டு லட்டு என ஒரே ஜபம். வேரு நினைப்பே இல்லை. ‘கல்யாணத்துக்கு லட்டு செய்வேன். உனக்கு ஒரு கூடை லட்டு தருவேன் தின்றுவிட்டு செத்துத்தொலை என்ன ?’ என்கிறாள் மருமகள்.

கல்யாணம் நெருங்குகிறது. ஊரையே அழைத்துவிட்டார்கள். ஆயிரம் லட்டு தேவை. கொல்லைப்பக்கம் அடுப்புமூட்டி லட்டு செய்கிறாள் மருமகள். கைவலிக்க லட்டு உருட்டுகிராள். மூன்றுநாள் லட்டு சேய்யும் வேலை. நடுவே கிழவி லட்டு வெறியேறி அலைகிறாள். எங்காவது அடுப்பில் விழுந்துவிடப்போகிறது என்று மருமகள் அவளை அறையிலேயே வைத்திருக்கிறாள். கல்யாணம் முடிந்தபின் உனக்கு லட்டுதருவேன் என்கிறாள்

கல்யாணம். விருந்தினர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். கிழவி நடுவே லட்டு லட்டு என்று தவழ்கிறாள். யாரோ சிரிக்கிறார்கள். மருமகளுக்கு அவமானமாக இருக்கிறது. கிழவியை இழுத்துச்சென்று ஒரு அறையில்போட்டு பெரிய பூட்டால் பூட்டிவிடுகிறாள். லட்டு லட்டு என்கிறாள் கிழவி. கல்யாணம் முடிந்தபின் உனக்கு லட்டுமலையே இருக்கிறது சும்மா கிட என்கிறாள் மருமகள்.

கல்யாணத்தில் பயங்கரமான கூட்டம். சாப்பாடும் பலகாரங்களும் போதவில்லை. உபசரித்து முதுகு ஒடிகிறது. களைத்து சோர்ந்து எழ முடியாமல் மருமகள் உட்கார்ந்துவிடுகிறாள். வந்தவர்கள் எல்லாரும் போய்விடுகிறார்கள். மிச்சபேர் தூங்கிவிட்டார்கள். வீடே சூனியமாக கிடக்கிறது. எங்காவது அப்படியே விழுந்து தூங்கினால்போதும் என்றிருக்கிறது.

யாரோ கதவைத்திறந்துவிட்டார்கள். கிழவி ஆவேசமாக தவழ்ந்து சென்று பந்தி போட்ட இடத்தில் சிதறிக்கிடந்த லட்டுத்துளிகளை பொறுக்கிச்சேர்க்கிறாள். ‘லட்டுலட்டு”என மகிழ்ச்சிப்பரவசத்துடன் சொல்லியபடியே தின்கிறாள். மருமகள் தற்செயலாக அப்படி வந்தவள் அதைக் காண்கிறாள். கிழவியின் முகத்தில் குழந்தையின் தூய சிரிப்பு. ”லட்டு பார்த்தாயா? நிறைய இருக்கிறது”

அப்படியே அலறியபடி கிழவி காலில் விழுகிறாள் மருமகள். ”என் தாயே உனக்கு ஒரு லட்டு கொடுக்கத் தோன்றவில்லையே!”என்று கதறுகிறாள். நள்ளிரவில் அடுப்பு மூட்டி லட்டுசெய்ய ஆரம்பிக்கிறாள்.

நண்பர்களே, மகத்தான ஏதோ ஒன்று பேரிலக்கியங்களில் உள்ளது. அது மனிதாபிமானமா அன்பா என்ன என்று நான் சொல்ல விரும்பவில்லை. மனிதன் தன் வாழ்க்கையின் சாரமாக மீண்டும் மீண்டும் கண்டடையும் ஒன்று. நம்மை கன்னீஈர் விடவைக்கும் ஒன்று. அதைக் காணும்போது மனிதமனம் ஆனந்தம் நிறைந்து ததும்புகிறது. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.

பல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.

நன்றி

[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]


jeyamohanb@rediffmail.com

Series Navigation