என்ன சொல்ல…. ?

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


பெண்களின் கைகளில் வளை காப்பு.
உடலெங்கும் கருப்பை வேதனை.
உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ?
காலில் என்ன சலங்கையோ.
அதற்கு நீங்கள் அடிமையோ. ?
மூக்கில் அழகிய மூக்குத்தி.
உணர்வுகளின் சுவாசம் கூட
மூக்குத்திக்குள் அடக்கமோ.. ?
கழுத்தில் அழகிய ஆபரணங்கள்.
உங்கள் அழகே அதற்குள் ஜெ ?லிக்குமோ. ?
காலில் என்ன சலங்கையோ.
அதற்கும் நீங்கள் அடிமையோ. ?
தலையில் மலர்களை சூடினாய்
அதற்காய் நீங்கள் மலராமோ ?
இடையில் என்ன ஒட்டியாணமோ.. ?
அதற்குள் உம்மை ஒடுக்குவதோ ?
கைகளில் பலமேற்று.
தனித்தே சுவாசிக்க கற்றுவிடு.
ஆபரணமாய் நீ மிளிர்.
சலங்கையாய் கீத மிசை
மின்னலாய் உன்
சிந்தனையை தெளித்துவிடு.
ஆணுக்குள்ளும் மென்மையுண்டு.
ஆணுக்குள்ளும் பெண்மையுண்டு.
ஆணுக்குள்ளும் நளினமுண்டு.
ஆணுக்குள்ளும் அடக்கமுண்டு.
ஆணுக்குள்ளும் பெண்ணை
பலமேற்றும் வல்லமையுண்டு.
ஆணுக்குள்ளும் நந்தவனம் உண்டு.
ஆணுக்குள்ளும் தாய்மை உண்டு.
ஆண்களால் தான் பெண்கள்
மிளிர கற்றுள்ளார்கள்.
பிரிய சகியே..! என்றுதான்
பெண்களை ஆண்கள்
விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்
ஆண்களை என்ன சொல்லி
அழைக்கலாம் என
அகராதியின் பக்கங்களை
புரட்டிக்கொண்டு இருக்கிறேன்.
**
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சர்லாந்து.
17-04-2003

thamarachselvan@hotmail.com

Series Navigation