என்ன செய்யலாம் சக புலவீரே!

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

மாம்பலம் கவிராயர்


விழுவதால் சேதமில்லை
குலுக்கினால் குற்றமில்லை
மூலைகள் முட்களல்ல
உருவமோர் எளிமை யாகும்.

வாழ்க்கையில் மனிதன் கண்டு
பிடித்ததில் சிறந்ததாகும்
தலையணை. அதற்குள் ஒன்றும்
பொறி இயற் சிக்கல் இல்லை.

பாயில்லை என்றால் வேண்டாம்
தலையணை ஒன்றைப் போடும்.

– ஞானக்கூத்தன்

எளிமையாய்க் கவிதை சொன்ன
எக்ஸ்பெரி மெண்டல் கூத்தனை
என்ன செய்யலாம் என்ன செய்யலாம் ?

வைத்தீசு வரன் கவிதை
வாகாய்த் தொடங்குமுன்
உட்டா லக்கடி மாயஞ்செய்து
உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு
கிணற்றில் விழுந்த நிலவைக்
கீழிறங்கித் தூக்கி விடலாம்.

கல்யாண்ஜி கவிதையில் கடந்து வந்து
கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து பெருக்கிப் போக
அறை சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு.
பெருக்கிய கையில் வளைத்துப் பிடித்த
விளக்கு மாற்றால் விளக்க வைக்கலாம்.

பொடிக்கடை முன்னால் கண்கள் உருட்டி
விளம்பரம் செய்ய நிறுத்தி இருந்த
பொம்மைக் கழுத்து மூங்கில் தெரியத்
தலையைத் திருடிய பயலைத் தேடும்
முருகன் கவிதைப் போலீஸ் காரரை
முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லலாம்.

எல்லாம் தோற்றால் இருட்டறை உள்ளே
அடைத்து வைத்து வெள்ளைத் தாளில்
கட்டம் போட்டுக் கையில் கொடுத்து
ஒசமா பின்னன் லாடன் மேலே
டாங்கி பந்தமும் ஸ்டென்கன் பந்தமும்
ஆங்கி லத்தில் எழுதச் சொல்லலாம்.

அதுவும் பலிக்கலை என்றால் இருக்கு
ஆங்கிலச் சான்றோன் ஸ்பூனர்* மேலோர்
பின்முடுக்கு வெண்பா பாடச் சொன்னால்
முன்னால் பொத்திட்டு ஓட றான்பார்!

***

(* Spoonerism:- example – Instead of ‘Tale of two
cities ‘, saying ‘Sale of two… ‘) –

Series Navigation

author

மாம்பலம் கவிராயர்

மாம்பலம் கவிராயர்

Similar Posts