என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னோடு வாவெனச் சொன்னேன் !
எவருக்கும் தெரிய வில்லை
எப்படி எங்கே வலி
என்னைத்
துடிக்க வைக்கு தென்று ?
முடி சூடா வேண்டாம்
எனக்கு !
படகோட்டிகளின்
தாளப்
பாடலும் வேண்டாம் !
காதல் புண் உண்டாகிக்
காயம் எனக்கு
ஆறாத போது !

என்னோடு வாவென்று
மீண்டும் ஒருதரம் அழைத்தேன் நான்
மாண்டு போவது போல் !
எவரும் காண வில்லை
என் வாயிக்குள்
உதிரம் பீறிடும் நிலவை ! அல்லது
உறைந்து
ஊமை யான குருதியை !
காதலே !
மறப்போம் நாம் இப்போது
அத்தகைய
முட்கள் கொண்ட ஓர்
நட்சத் திரத்தை !

உன் குரலும் திருப்பி
“என்னோடு வா” வென நீ
அழைப்பதை நான் கேட்டதும்
கோபம், காதல், சீற்றலை
அவிழ்த்து விட்ட தாய்த்
தெரிந்திடும் எனக்கு
கார்க்கை எடுத்ததும்
பீச்சிடும் ஒயின் போல் !

பூதாள அரணைப் பிளந்து
பீறிட்டெழும்
வெந்நீர் ஊற்றுகள் ஆற்று
வெள்ளமாய் ஓடும் !
தீயின் சுவையை
வாயினில் நான்
திரும்பவும் உணர்ந்தேன்
குருதி, கிரீடம், பாறைக் கல்
எரித்த தடமோடு !

++++++++++++++++++

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2008)]

Series Navigation