என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

(தமிழாக்கம்) சி. ஜெயபாரதன், கனடா.


காற்றினிலே வரும் என் கீதம்,
உனைத் தழுவி
குழந்தாய்,
ஆசைக் கரங்கள் போல்
அணைத்துக் கொள்ளும்!
உனது நெற்றி மீது முத்தமிட்டு
இதழால் ஆசி அளிக்கும்!
தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
உன் செவியில் முணுமுணுக்கும்
என் கீதம்!
சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
அரண் அமைத்துனக்கு
ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
இரட்டைச் சிறகுகள் போல்
என் கீதம்
உன் கனவுகள் உயிர்த்தெழ உந்துசக்தி தரும்!
கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
உன் இதயத்தை
ஓட்டிச் செல்லும் என் கீதம்!
நடக்கும் பாதையில் காரிருள் சூழும் போது
நன்றியுடன் உனக்கு
வழிகாட்டும், என் கீதம்
வானத்து விண்மீனாய்!
உன்னிரு கண்ணின் மணிக்குள் அமர்ந்து
உன் நெஞ்சின் விழிகளுக்கு
ஒளியூட்டும், என் கீதம்!
மரணத்தில் என்குரல் ஊமையாகும் போது,
என்னிசைக் கீதம்
உயிருள்ள
உன்னிதயத்தில் போய் ஒலிக்கும்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan Oct 15, 2004]

Series Navigation