எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

பாவண்ணன்


பதினோராம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு கூடிவிட்டது. தினந்தினமும் காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பள்ளிஇறுதியின் வெற்றிக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பைப் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் பள்ளியின் முன்னால் மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மேற்கு வங்காளத்துக்குப் போன கதை ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கம் வழங்கும் பொருட்டுச் சொல்லப்பட்டது. ஆங்கிலம் எடுத்த ராமநாதன் ஐயா (எஸ்.ஆர்.ஒன்) வழக்கமாக நாங்காள் செய்யும் எங்கள் எழுத்துப் பிழைகளையும் வாக்கியப் பிழைகளையும் எடுத்துச் சொல்லித் திருத்தினார். பலவித தலைப்புகளைக் கொடுத்துக் கட்டுரைகள் எழுதச் சொல்லித் திருத்தி அளித்தார். தலைமை ஆசிரியர் ஆங்கிலத்துக்குச் சிறப்பு வகுப்பு எடுத்தார். குலசேகரன் சாயங்காலங்களில் கூடுதலாக இரண்டுமணிநேரம் தங்கி அறிவியல் பாடங்களை ஆணியடித்த மாதிரி சொல்லிச் சந்தேகங்களைப் போக்கினார். குடிப்பழக்கத்துக்கு ஆளான சுப்பையா சார் கூட தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, தெளிவோடு வந்து பாக்கி வைத்திருந்த வரலாறு, புவியியல் பாடங்களையெல்லாம் சிறப்பு வகுப்பு வைத்துக் கடகடவென்று நடத்தி முடித்தார். தலைவர்களின் பெயர்களையும் தேசங்களின் பெயர்களையும் அவர் நினைவிலிருந்து எடுத்துச் சொல்லி விளக்கும் விதம் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கி விடும். ‘நம்ம சார் வருஷம் பூரா இப்படி குடிக்காம வந்து பாடம் நடத்தனா எவ்வளவு நல்லா இருக்கும் ? ‘ என்று பேசிக் கொள்வோம்.

இந்த மாதிரிக் கவலைகள் கொஞ்சமும் இல்லாமல் மணியடித்தால் வகுப்புக்கு வந்து மீண்டும் மணியடித்தால் எழுந்து போன சார் எஸ்.ஆர்.டு. ‘மாசமே கோ, சம்பளமே கம் ‘ என்பது அவர் கொள்கை. ‘நான் பாடம் நடத்தலைன்னு எவன் வந்து என்ன கேள்வி கேக்க முடியும் ? ‘ என்று அதட்டுவார். ‘நீங்கள் உருப்பட்டா உருப்படுங்க. உருப்படலன்னா, எங்கனா, சாணிவாரி, மாடு மேய்ச்சி பொழைச்சிக்குங்க . அதப்பத்தி எனக்கு எந்தக் கவலயும் கெடையாது. என் சம்பளம் என் கைக்கு வர்ரத எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது ‘ என்று தத்துவம் பேசுவார். அவர்தான் கணக்குப் பாடத்துக்குப் பொறுப்பு. சாக்பீஸை எடுத்து ஒருநாள் கூட கரும்பலகையின் அருகில் போனதில்லை அவர்.

அந்த வயதில் அந்த சாரைப் பற்றி எந்தக் கருத்தையும் உருவாக்கிக் கொள்ள இயலவில்லை. ஏதோ ஒரு ஆழமான துக்கம் அவரை அப்படி ஆக்கியிருக்க வேண்டும் என்று நாங்களாகவே பேசிக் கொள்வோம். வளர வளர பலரை அப்படிப் பார்க்கிற வாய்ப்பு ஏற்பட்டது. கல்வித் துறையில் மட்டுமன்றி அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல துறைகளில் பலபேரை இவ்விதம் பார்க்க நேர்ந்தது.

பெயருக்கு மட்டுமே இவர்கள் அரசு ஊழியர்கள். ஒன்பது மணி அலுவலகத்துக்கு எந்த விதமான குறுகுறுப்பும் குற்ற உணர்வும் இல்லாமல் பத்து மணக்கு வருவார்கள். வந்ததும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கழிப்பறையில் கால்மணிநேரம். தேநீர்க்கடையில் கால்மணிநேரம். செய்திப் பத்திரிகைப் பரிமாற்றம் கால்மணிநேரம். தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிய சர்ச்சை கால்மணிநேரம். பிறகு, ஒப்புக்கு ஒருமணிநேரம் வேலை செய்வது போன்ற பாவனை. பக்கத்தில் இருப்பவர்களிடம் சலித்துக் கொள்தல். புகார்கள். வீட்டுக்கதைகள். வதந்திகள். வம்புகள். கிண்டல்கள். துாக்கம். இடையிடையே தேநீரும் புகையும். பிறகு உணவு இடைவேளை. அந்த மந்தத்தைப் போக்கிக் கொள்ள மறுபடியும் புகையும் தேநீரும். ‘சீக்கரம் போனாத்தான் பஸ்ல சீட்டு கெடைக்கும். இல்லன்னா ஸ்டேன்டிங்க்தான் கதி. வரட்டுமா ? ‘ என்று ஒருமணிநேரம் முன்னதாகவே பயணம். பாதிக்கு மேல் அரசு ஊழியர்களை இப்படிப் பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டது. வேலை தெரிவதில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. சொல்லிக் கொடுத்தாலும் கற்றுக் கொள்ள துடிப்புடன் முன்வருவதில்லை. ‘சார், இது என் டேபிள் வேலை இல்லை ‘ என்று தட்டிக் கழித்து விடுவார்கள். தப்பித்துக் கொள்ள ஆயிரம் சட்ட ஓட்டைகள், வசதிகள். மேலிடத்துச் சிபரிசுகள். சங்கங்கள். ‘வேலை செய்கிறவனிடம் வேலை கொடு, வேலை செய்யாதவனுக்குச் சம்பளம் கொடு ‘ என்று சொல்லப்படும் வாசகம் அனுபவப்பட்டவன் வார்த்தை. மாடு போல பத்து பேர் எல்லா வேலைகளையும் தோளில் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடிப்பவர்கள் எல்லா அலுவலகத்துக்கும் எப்படியோ இரண்டிரண்டு பேர் கிடைத்து விடுவதால்தான் அரசுத் தொழில் ஸ்தம்பிக்காமல் இருக்கிறது. மற்றபடி பலருக்கும் ‘மாசமே கோ, சம்பளமே கம் ‘ தத்துவம்தான்.

வயிற்செரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இத்தகையோரைக் காணும் போதெல்லாம் மனசில் படரும் சிறுகதை பூமணியின் ‘பொறுப்பு ‘ . பூமணியின் எல்லாச் சிறுகதைகளும் சிக்கனத்துக்குப் பேர்போனவை. மிகக் குறைந்த வார்த்தைகளால் சித்திரத்தை உயிர்ப்புடன் உருவாக்கி விடுவதில் வல்லவர். ஏபொறுப்புஏ கதையிலும் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் சித்திரம் இடம்பெறுகிறது. ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகளில் உள்ளவர்களை ஒரே அறையில் வைத்துப் பாடம் நடத்தும் ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர். சுற்றிச் சுற்றி வரும் பிணையலடிப்பாக, பிள்ளைகளின் சத்தங்களினுாடே நாட்களைத் தள்ளுபவர். ‘கழுதைகளா, பண்ணிகளா ‘ என்றுதான் பிள்ளைகளை விளிப்பவர். தலைக்கு எண்ணெய் தேய்க்காத பையனிடம் ‘நாளைலேருந்து உங்கப்பனுக்கு பின்னால காட்டப் பாத்து போயித்தொலை ‘ என்று சத்தம் போடுவார். இரண்டு பென்சில் வைத்திருந்தவனிடம் ஏதுமில்லாதவன் ஒன்றைப் பிடுங்கிக் கொண்ட வழக்கு வந்ததுமே ‘எழுதிட்டு அவங்கிட்ட குடுத்துத் தொலை ‘ என்று தீர்ப்பு சொல்வார்.

பிள்ளைகள் படிப்பு பற்றி அவருக்கு எதுவும் இல்லை. சொல்லிக் கொடுப்பது தன் கடமை என்கிற எண்ணம் கூட இல்லை. பள்ளிக்கு வந்ததும் ‘ஒன்னாம் வகுப்பு ஆனா ஆவன்னா எழுது. மூணுக்காரன் பெருக்கல் வாய்ப்பாடு எழுது. நாலு அஞ்சி சரித்திரம் படி, ரெண்டாம் வகுப்பு பாட்டுப்பாடு ‘ என்று வேலை சொல்லி விட்டு மேசைமீது முட்டியை வைத்துத் தோதுப்படுத்தி துாங்கத் தொடங்கி விடுவார். சுதந்திரத் தினத்தன்று, கொடியேற்றும் போது எந்த நிறம் மேலே இருக்க வேண்டும் என்பதைக் கூட மறந்து விட்டவர் அவர். மாச சம்பளம் தவறாமல் வந்து விடுகிறது அவருக்கு. அதை வீட்டில் உட்கார்ந்து கூட வாங்கிக் கொள்ளலாம். ஆனால், வீட்டில் உட்கார்ந்தால் மனைவி சொல்லும் வீட்டு வேலைகளைச் செய்ய உடம்பு வளைவதில்லை. சம்பளம் கொடுக்கிற பள்ளிக்கும் உழைக்கக் கூடாது. சமைக்கிற மனைவிக்கு கூடமாட வீட்டு வேலைகளும் செய்யக் கூடாது. உழைக்காமலேயே உடம்பு வளர்ந்து விடுகிறது. துாக்கம், சாப்பாடு, சுகம் மூன்றைத் தவிர உலகில் எதையும் தெரிந்து கொள்ளாத சுகஜீவிகள் இவர்கள்.

இந்தியாவின் ஒரு பக்க முகம் இந்த முகம்தான். இவர்களின் படிமமாகத்தான் காளிமுத்து வாத்தியாரைச் சித்திரிக்கிறார் பூமணி. பல கதைகள் தம் முடிவாலும் முடிச்சினாலும் மறக்கப்பட முடியாததாக இருக்கும். சில கதைகள் தம் சித்தரிப்பாலும் சித்திரத்தின் வலிமையாலும் மறக்க முடியாதவை ஆகி விடும். இங்கே, பூமணியின் ‘பொறுப்பு ‘ கதையில் எந்த முரணும் அல்லது முடிவில் எந்தத் திருகலும் இல்லை. ஒரு சோம்பலின் சித்திரம் மட்டுமே உள்ளது.. அது காளிமுத்து வாத்தியாரின் சோம்பல் சித்திரம் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் அனைவருடைய மொத்தச் சோம்பலின் சித்திரமும் கூட. அதன் வரிகளைப் படிக்கப் படிக்க ஒரு பக்கம் சிரிப்பு கூடிக் கொண்டே போனாலும் மறுபக்கம் எரிச்சலும் பொங்கிக் கொண்டே இருக்கிறது.

கதையில் பள்ளிச் சிறுவன் பாடுவது போல ஒரு பாடல் இடம் பெறுகிறது.

‘பனைமரமே பனைமரமே

ஏன் பிறந்தாய் பனைமரமே ‘

காளிமுத்து வாத்தியாரைப் பார்த்தும் கூட இந்தப் பாடலை மாற்றிப் பாடலாம் என்று தோன்றுகிறது. ‘மாசமே கோ சம்பளமே கம் ‘ என்கிற தத்துவம் கொண்ட உடல் வளையாத சோம்பல் மிகுந்த ஊழியர்களைப் பார்த்ததும் இந்தப் பாடலைப் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன். ஒரு பக்கம் சிரிப்பாக இருக்கிறது. மறுபக்கம் எரிச்சலாக இருக்கிறது.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்