எதைத்தேடி?

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

கே. ஆர். மணிவண்ணத்துப்பூச்சி
வழிதவறி எப்படி என்
வீட்டில் நுழைந்தது.

புத்தக அலமாரி மேய்தலில் அது
அமைதியாய்விடும் என்று
அற்பமாய் எண்ணினேன்.
புத்தகங்களை வேகமாய்
புரட்டிவிட்டு நகர்ந்துவிட்டது.

எந்த பக்கங்களை தனது இறக்கைகளில்
இறக்குமதி செய்துகொண்டது ?

என் அழகான கழிப்பறையில்
நுழையாததில் எனக்கு வருத்தம்தான்.

கடவுளர்களின் அறையில்
தனது சிறகுகளால் ஏதையோ
தூளாவியது.

சமையலைறையில் தனது
இறக்கை தூசுகளால் அசுத்தப்படுத்துமோ
என்று அஞ்சினாள் அவள்.

ஐந்துவயது அஸ்வத்தாமனுக்கு
அதை கண்டதும்பயம்.
அவன் பார்த்த வண்ணத்து பூச்சிகள்
புத்தகத்தைவிட்டு பறப்பதில்லை.
தொலைக்காட்சிக்கு வெளியே வருவதில்லை.

அவன் பயந்த கண்களை கண்டதும்
அதற்கும் சந்தோசம் பிறந்திருக்கலாம்.

எலி, கொசு, கரப்பான்பூச்சி
விரட்ட இருக்கிறது மருந்துகள்.
வண்ணத்துப்பூச்சியை
எதை எடுத்து அடிக்க, விரட்ட ?
யோசனையிலே படுத்தோம்.

மூடிய வீட்டில் அது எங்கேயோ
சுற்றிக்கொண்டிருக்கலாம்.
மின்விசிறியில் அடிபட்டு
செத்துபோயிருக்கலாம்.
ஏதாவது இடைவெளி கண்டு
தப்பிப்போயிருக்கலாம்.

எதற்காக வந்ததோ அதை
எடுத்துக்கொண்டுபோயிருந்தால் சரிதான்.

அது சரி,
அது எதற்காக வந்திருக்கும் ?


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி