எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

புதியமாதவி, மும்பை



வங்க தேசத்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றபோது இசுலாமுக்கு எதிராக அவர் எழுதியிருப்பதாக குற்றம் சுமத்தி அவரை ஒரு கூட்டத்தார் தாக்கியிருக்கிறார்கள். அதன்பின் பலத்த காவல்துறையின் பாதுகாப்புடன் அவர் விமான நிலையம் வந்து கல்கத்தாவுக்கு திரும்பியிருக்கிறார். இசுலாமுக்கு எதிராக அவர் என்ன எழுதியிருக்கிறார்? அவர் எழுத்தில் உண்மையாகவே இசுலாமியர்களின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டு இருக்கிறதா? அப்படி எழுதுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா? அவர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துரிமையை அடுத்தவர் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடனேயே செயல்படுகின்றாரா?… தஸ்லிமா தாக்கப்பட்டதற்கு இதுவரை இந்திய பெண் போராளிகளோ -அருந்ததிராய் உள்பட – எவரும் எவ்விதமான கண்டனமும் ஏன் தெரிவிக்கவில்லை? இத்தியாதி கேள்விகளுக்கான பதில்கள்
அவரவர் பார்வையில் வெவ்வேறாக அமையும் என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை.

அடுத்த ஒன்றிரண்டு தினங்களில் இதோ மும்பையின் அவுட்லுக் அலுவலகம்,நரிமன்பாயிண்ட், தாக்கப்பட்டுள்ளது. அவுட்லுக்கில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் கேலிச்சித்திரம், ஹிட்லர் மீசையுடனும் இராணுவ சீருடை அணிந்தும் வரையப்பட்டிருந்தது. வில்லன்கள் பட்டியல் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் நாதுராம் கோட்சே, நரேந்திரமோடி, முகமது அசாரூதின்
என்ற வரிசையில் பால்தாக்கரேயின் படமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பட்டப்பகலில் 3 மணியளவில் மும்பை மாநகரின் முக்கியமான மையமான இடத்தில் அமைந்துள்ள பெயர் பெற்ற ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஒரு கேலிச்சித்திரத்திற்காக தாக்குதல் நடத்தி சேதப்படுத்த முடிகிறது.

இப்போது பத்திரிகைகளில் அடிக்கடி அடிபடும் ஒரு செய்தி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை. 1992-93 மும்பை மதக்கலவரங்கள் பற்றிய ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை செயல்படுத்தச் சொல்லி நடுவண் அரசு மராத்திய மாநில முதல்வருக்கு கெடு வைக்கிறது.
(இதுவும் கண்துடைப்புதான்) முதல்வரான உடனேயே ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையைக் கட்டாயம் செயல்படுத்துவேன், கவனமாக என்று சொன்னவர்தான் மராத்திய முதல்வர் தேஷ்முக். ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை மிகவும் தெளிவாக சேனாவின் புலியை குண்டுக்குள் அடைக்கும் குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறது. செயல்படுத்துவதாகச் சொன்னால் இசுலாமியர்களின் ஒட்டுவங்கியை தக்கவைத்துக் கொள்ள முடியும். செயல்படுத்தினால் அதுவே தூங்கிக்கொண்டிருக்கும் புலியை உசுப்பிவிட்டு
ஆடுகளை வேட்டையாட வைத்த கதையாகிவிடும். ஏன் காங்கிரசு இருக்கின்ற இடங்களையும் சட்டசபையில் இழந்துவிடும் அபாயமும் உண்டு.

எதிரணிகள் இணையும் இந்தப் புள்ளி.. மதமும் மதம் சார்ந்த அரசியலும். மதம் அரசியலுடன் கைகுலுக்கலாம். ஆனால் அரசியலை ஆட்சி செய்யலாமா?


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை