மலர் மன்னன்
திண்ணையில் நான் எழுதி வந்துள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு, எண்கோணம் என்பவர் என்னிடம் கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தவரை பதில்களைத் தந்திருக்கிறேன்.
1. ஹிந்து அல்லாதவர் ஹிந்துக்களுக்குத் தலைவராக வருவதை எதிர்க்கிறீர்களா?
ஹிந்து என்ற பதம் சமயம், சமூகம், நாகரிகம், பிராந்தியம் எனப் பலவாறான கோணங்களைச் சுட்டுவதாகக் கொள்ள வேண்டும். ஆகையால் ஒவ்வொரு கோணத்திற்கும் தனித் தனித் தலைமைகள் அவசியமாக இருக்கலாம்.
ஹிந்து சமய நுட்பங்களையும் தத்துவங்களையும் நன்கு அறிந்து அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும் பிறருக்கு வழிகாட்டும் தலைமைப் பண்பும் மிக்க எவரும் ஹிந்து சமயத் தலைவராகப் பொறுப்பேற்று முன் செல்வதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்பதோடு அதில் பெருமிதமும் உண்டு. இவ்வாறு ஹிந்துவாகப் பிறவாமல், சடங்கு சம்பிரதாயமின்றி ஹிந்துவாக மலர்ந்த பலரை ஹிந்துக்கள் பரவசத்துடன் தம் தலைவர்களாக ஏற்றதுண்டு. புதுவை ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்து ஸ்ரீ அன்னையைத் தம் தலைவராக ஏற்று பூஜை அறையில் வைத்து பக்தி செய்வோர் எம்மில் பலர். ஹிந்துக்களில். இஸ்கான், பரமஹம்ஸ யோகானந்தரின் யோகோதா ஸத்சங்கம் போன்ற அமைப்புகளில் சடங்காசாரம் ஏதுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் ஹிந்துவாக வாழும் ஹிந்துவாகப் பிறவாத பலரின் தலைமையை ஹிந்துக்கள் எவ்வித விகல்பமும் இன்றி ஏற்கும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறார்கள்.
அரசியல் சமூகம் முதலான கூறுகளில் ஹிந்து அல்லாத ஆனால் ஹிந்து நலன் கருதும் பொறுப்பு மிக்கவர்களின் தலைமையை மிகப் பெருந்தன்மையுடன் ஏற்கும் மனப்பக்குவம் ஹிந்துக்களுக்கு உண்டு. ஹிந்துக்களின் அரசியல் கட்சி எனவும் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பலத்தில் தோற்றுவிக்கப்பட்ட கட்சி எனவும் சொல்லப்பட்ட ஜன சங்கத்தின் தமிழ் நாடு கிளை தொடங்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பினை ஏற்றவர் ஜான் என்கிற கிறிஸ்தவரேயாவார் (சென்னை சேத்துப்பட்டுஎழும்பூர் பகுதியில் நடந்த ஜன சங்கத் தொடக்கக் கூட்டத்திற்கு நானும் என் தந்தையாரும் சென்றிருந்தோம்) .
இன்று சீக்கியரான மன்மோகன் சிங், ஹிந்துக்கள் மிகப் பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். சீக்கியம் ஹிந்து சமயத்தின் ஒரு கூறுதான் என்ற போதிலும் அது தன்னைத் தனிச் சமயமாகக் கருதிக்கொள்ளத் தொடங்கியிருப்பதால் சீக்கியரின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து சீக்கியம் வேறு சமயம் எனவே கொள்வோம். மன் மோகன் சீக்கியர் என்பதற்காக அவரது தலைமையை எந்த ஹிந்துவும் மறுக்கவில்லை. தேச நலனுக்கு அவரது போக்கு உகந்ததாக இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் மட்டுமே அவரது தலைமை எதிர்க்கப்படுகிறது. கடந்த கால வரலாற்றில் ஹிந்து நலன் கருதிய ஷேர்ஷா என்கிற இடைக்கால ஆப்கன் வமிசத்து தில்லி சுல்தானின் ஆட்சியை ஹிந்துக்கள் மனமுவந்து ஏற்றனர். 1857 கிளர்ச்சியின் போது, செயலற்றுக் கிடந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா வைக்கூட கும்பினிக்கு மாற்று தலைமையாக ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக ஹிந்துக்கள் ஏற்கத் தயங்கவில்லை. கலை, இலக்கியம், கலாசாரம் ஆகிய தளங்களிலும், ஹிந்து உணர்வுகளை மதித்து நடப்பவர்களையும் கண்ணியமான விமர்சனங்களை வைத்து சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் வலியுறுத்துவோரையும், அவர்களின் தலைமைப் பண்பு கருதி ஏற்க ஹிந்துக்கள் தவறுவதில்லை. அவர்கள் ஹிந்துக்களாகத்தான் இருந்தாக வேண்டும் என எதிர்பார்ர்பதில்லை. பிரம்ம ஞான சபை என்கிற தியாசபிகல் சொசைட்டியை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடுகளில் மனம் ஊன்றியவர்களாக ஹிந்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம்.
2. ஹிந்து மதம் சொல்வது மட்டுமே உண்மை. எனவே பிற கருத்துகள், மற்றும் மதங்களிலிருந்து அனைவரும் ஹிந்துக்களாக மாறுவதுதான் சரி என்று கருதுகிறீர்களா?
சொல்லப் போனால் மத மாற்றம் என்கிற கருத்தாக்கமே ஹிந்துக்களிடம் இல்லை. ஹிந்துஸ்தானத்தைப் பொருத்தவரை முகமதியராகவும் கிறிஸ்தவராகவும் தற்போது இருப்பவர்கள் முன்பு ஹிந்துக்களாக இருந்தவர்கள்தாம் என்பதால் அவர்கள் மனமார இதனை உணர்ந்து தனி மனித சுதந்திரமும் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையும், பிடிவாதப் போக்கு இல்லாததுமான தமது தாய் மதத்திற்குத் திரும்புவது சரியான முடிவாகவே இருக்கும். மதமானது பூஜை அறையைத் தாண்டி வெளியே வந்து தனிமனித அன்றாட வாழ்வில் மூக்கு நுழைப்பதை விரும்பாத அனைவரும் தாய் மதம் திரும்பலாம்.
ஹிந்து சமயத் தத்துவங்கள் மிகவும் விரிவானவை. இறையுணர்வை ஆய்ந்து பெறுவதற்கான ஆறு தரிசனங்களில் இறை மறுப்பையும் இணைத்துக் கொண்டிருப்பது ஹிந்து சமயம். இதனைப் பிற சம்பிரதாயமான சமயங்களுடன் ஒப்பிட்டு அநத்க் கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியாக இருக்காது. ஹிந்து சமயம் கண்டுணர்ந்து சொல்லும் உண்மைகளுள் பல பிற சமயக் கூறுகளிலும் உள்ளன என்பது சரியான புரிதலாக இருக்கும். மேலும் ஹிந்து சமய மெய்ப்பொருள் அறிந்து ஒப்புக்கொண்டவர்கள் சடங்காசாரப்படி ஹிந்துக்களாக மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.
சமயம் என்பது பௌதிக ஆதாயங்களுக்கானது அல்ல. அது ஆன்மிக முன்னேற்றத்
திற்கானது. எனவே ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வோர் தாம் பிறந்த சமயத்திலிருந்து வெளியேறாமலேயே தாம் விரும்பும் மாற்று சமயக் கோட்பாடுகளை அனுசரிக்கலாம். அதுதான் முறையானதுமாகும். என்னை அப்பாஜான் என்று அழைக்கிற முகமதிய மகள்களும் மகன்களும் அப்பா என்று உரிமை கொண்டாடுகிற பல கிறிஸ்தவ மகள்களும் மகன்களும் இவ்வாறான பக்குவத்துடன்தான் தமது மதத்திலிருந்தவாறே மனதளவில் ஹிந்துக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
3. ஹிந்து மதத்திலிருந்து ஒருவர் பிற மதத்திற்கு மாறினால் அவருக்கு
அளிக்கப்பட வேண்டிய தண்டனை என்ன?
அப்படி மாறுவதே ஒரு தண்டனைதான். ஒரு ஹிந்துவாகச் சுதந்திரக் காற்றை சுவாசித்துப் பழகியபின் அடிமைகள் போல் நடத்தப்படும் பிற சமயங்களைச் சார்வதே தண்டனைதான்!
மற்றபடி தண்டனை ஏதும் தேவையில்லை. ஆனால் மோட்சம் உள்ளிட்ட பலவாறான ஆசைகள் காட்டிப் பிற சமயத்தாரைத் தம் சமயத்திற்கு இழுக்கும் முயற்சிகளுக்குக் கட்டாயம் தண்டனை தரப்பட வேண்டும்.
4. ஹிந்துவாக இருக்கும் ஒருவர் தன்னளவில் நாத்திகராக இருக்க அனுமதி உண்டா?
நிச்சயமாக உண்டு. ஆனால் அந்த நாத்திகம் இறை நம்பிக்கையுள்ளவர்கள் மனம் புண்படாதவாறும், சமய நம்பிக்கைகளை எள்ளி நகையாடாமலும் தர்க்க பூர்வமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். நாத்திகம் பேசிய ரிஷிகள் ஹிந்து சமயத்தில்உண்டு.
நான் காலில் விழுந்து வணங்கும் சித்தர் திருவேற்காடு ஐயப்ப சாமி, நாம் பிரதட்சணமாய் போகிறோம்; நாத்திகர்கள் அப்பிரதட்சணமாய் வருகிறார்கள். இரண்டுபேரும் ஓரிடத்தில்
சந்தித்துக்கொள்ளப்போவது நிச்சயம் சாமி என்று சொல்லிச் சிரிப்பார்.
நாத்திகன் நேதி, நேதி (இல்லை, இல்லை) என்று புரட்டித் தள்ளித் தள்ளி இறுதியில் இறையுணர்வு பெறுகிறான் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
எனக்குத் தெரிந்த மட்டில் பதில்களைத் தந்துவிட்டேன். பதில்களில் சாரம் ஏதும் உள்ளதா என்பதைத் திண்ணையின் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
சமயத்தின் பேராலும், சமயத்திற்கவும்தான் எவ்வித சம்பந்தமும் இல்லாத ஆண் பெண் குழந்தைகளைக் குண்டு வீசிக் கொன்று குவித்தும் நிரந்தரமாக ஊனப் படுத்தியும் ஏராளமான தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியும் வருகிறோம்; பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்போரை வலுக்கட்டாயமாக எமது மத சம்பிரதாயப்படி இறை வணக்கம் செய்யுமாறும் எமது மதமே சாலச் சிறந்தது என்று சொல்லுமாறும் வற்புறுத்துகிறோம் என்பதாகப் பலர் மார் தட்டிக் கொள்வதையும் ஹிந்து சமயம் அனுமதிப்பதில்லை. இது எண்கோணம் கேளாமலே, ஒருவேளை பிறகு கேட்டாலும் கேட்கக் கூடிய கேள்விக்கு நான் இப்போதே தரும் உபரிபதில்!
***
malarmannan79@rediffmail.com
- வாசிப்பின் நீரோட்டம்
- திரு முருகு
- எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்
- புதியதோர் உலகம்
- தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!
- பிலாக்கோபோபியா
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…
- ” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”
- கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17
- காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் !
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- யாமறிந்த உவமையிலே
- திண்ணை. காம்
- கடிதம்
- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
- மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?
- அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்
- கூர் கலை, இலக்கியத் தொகுப்பு
- கடிதம்
- அலுமினியப்பறவைகள்
- கோவை ஞானி தந்த அங்கீகாரம்!
- திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
- பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’!
- சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7
- புறாவின் அரசியல்
- கவிதை
- “அவர்கள் காதில் விழவில்லை!”
- வாவிகள் தற்கொலை செய்தன
- மன அதிர்வுகள்
- கைக்குமேல் புள்ளடி
- கௌசல்யா
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 21
- கை நழுவிய உலகம்