எடின்பரோ குறிப்புகள் – 3

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

இரா முருகன்


தோப்புத் தெருவில் ஒரு வீடு பார்த்து, ஐநூற்றுத் தொண்ணூறு பவுண்ட் குடக்கூலி பேசிக் குடிபுகுந்தானது. வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் மசமசவென்று நாலாக மடித்த காகிதத்தில் ‘வீட்டைத் தற்போது ஆக்கிரமித்துள்ளவருக்கு’ என்று ஒரு கடிதம் கண்ணில் பட்டது. அந்த ‘பிரசண்ட் ஆக்குப்பையர்’ நானானபடியால் என்ன சமாசாரம் என்று சடுதியில் கடுதாசைப் பிரிக்க, சர்க்கார் நோட்டாஸ்.

‘இதனால் தெரிவிப்பது என்னவென்றால், மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகாராணியின் சாம்ராஜ்ஜியத்தில் நீர் சட்ட விரோதமாக ஒரு டெலிவிஷன் பெட்டியை வீட்டில் வைத்து சுகமாக எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கிறீர். ஆனாலும் அதற்கான வருடாந்திர கிஸ்தியான நூற்று இருபத்தொன்பது பவுண்ட் தொகையை மாட்சிமை பொருந்திய மகாராணியாரின் அரசாங்க கஜானாவில் அடைக்கிற விஷயத்தை மட்டும் ஏனோ செய்யாதிருக்கிறீர். உடனே அதை ஃபைசல் செய்கிறீரா அல்லது மேற்படி மா.பொ.ம ஏற்படுத்திய கோர்ட்டுக் கச்சேரிப் படியேறி அங்கே மா.பொ.ம நீதிபதி விதிக்கும் மா.பொ.ம உச்சபட்ச தண்டனைக்கு உட்படுகிறீரா ? உடனே பதில் தேவை”.

கப்பம் கட்டத் தாக்கீது வந்த கட்டபொம்மனாக மீசை துடிக்க, விஷயத்தை ஆராய்ந்தபோது பிரிட்டாஷ்காரர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் டெலிவிஷன் பெட்டி லைசன்ஸ் சமாச்சாரமும் இன்னும் 1940 களிலேயே சர்ச்சில் விட்ட சுருட்டுப் புகையாகச் சுற்றிக் கொண்டிருப்பது அர்த்தமானது. தாட்ச்சர் அம்மையார், ஜான் மேஜர், டோனி பிளேர், அவருடைய இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் கார்டன் ப்ரவுன், எதிர்க்கட்சிக்கார இளைஞர் டேவிட் காமரூன் இப்படி யார் பிரதமராக வந்து லண்டன் மாநகரத்தில் பத்து, டவுணிங்க் தெரு வீட்டுச் சுவரில் ஆணியடித்து காலண்டர் மாட்டினாலும், பொதுஜனம் தரும் டெலிவிஷன் லைசன்ஸ் பணத்தை வைத்துத்தான் மா.தா.ம.பிரிட்டாஷ் சாம்ராஜ்ஜியம் திவாலாகாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விஷயம் புரிந்தது.

ஆனாலும் முந்தாநாள் குடியேறிய வீட்டுக்கு ஒரு வருட டெலிவிஷன் லைசன்ஸ் பாக்கியை அடைக்க எனக்கு என்ன மா.பொ,ம கிறுக்கா பிடிச்சிருக்கு ? உடனே கிஸ்தி கேட்ட பானர்மான் துரைக்கு விஷயத்தை எடுத்தோதி, சல்லிக்காசு கூடத் தரமுடியாது என்பதை அறிவித்தேன். ‘உன்னை யாருப்பா கட்டச் சொன்னது ? உனக்கு முன்னாடி இருந்த ஆள் பணம் தராமல் டிமிக்கி கொடுத்திட்டான். அதான் நோட்டாசு விட்டோம்’ என்று அடுத்த நாளே டாணென்று பதில் கடிதாசு வந்து சேர்ந்தது.

மீசையை டிரிம் செய்தேன். புது டெலிவிஷன் பெட்டி வாங்கி, எழவெடுத்த லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

போன வாரம் டெலிவிஷனும் பத்திரிகைகளும் கால்பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் பெஸ்ட் பற்றிய செய்திகளாலேயே நிரம்பி வழிந்தன. அறுபதுகளில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் விளையாடி உள்நாட்டிலும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் தூள் கிளப்பிய பெஸ்ட், அப்புறம் அடிக்கடி புதுஜோடி சேர்த்துக்கொள்கிற, குடித்துவிட்டு கலாட்டா செய்கிற விஷயங்களுக்காக மாத்திரம் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்தியாக வந்து கொண்டிருந்தார். அவர் கல்லீரல் மோசமடைந்து ஆள் பிழைப்பது கஷ்டம் என்று தெரியவந்ததும் மறுபடி மீடியா ‘பெஸ்ட் பெஸ்ட்’ என்று ஜபம் செய்ய ஆரம்பித்தது.

பிரக்ஞை தவறிய பெஸ்டின் ஆஸ்பத்திரிப் படுக்கையைச் சுற்றி அவருடைய அந்தக்கால சகபாடிகள் நின்று உரக்கக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினார்கள். அதைக் கேட்டாவது பெஸ்ட் பழைய கால்பந்தாட்ட நினைவு திரும்ப உடனே விழித்துக்கொள்ள மாட்டாரா என்ற அவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்ச்சேர்ந்தார் அவர். அப்போது அவருக்கு வயது 59.

வடக்கு அயர்லாந்து பகுதிக்காரரான பெஸ்டின் உடல் பெல்பாஸ்ட் நகரில் அவருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வாசலைச் சுற்றிப் பெருந்திரளாக ரசிகர் கூட்டம். செடியும் கொடியுமாக ஒருவர் மட்டுமே உள்ளே நுழையக்கூடிய அந்த வாசலில் ஒரு தள்ளுவண்டியை வைத்து ஒருவர் இழுக்க, பின்னால் ஒருவர் தள்ள சவப்பெட்டியை மெல்ல உருட்டிப் உள்ளே எடுத்துப்போனார்கள். துக்கத்தையும் கண்ணியமாக, சுற்றுச் சூழலுக்கு இடைஞ்சல் இல்லாமல் காட்டக்கூடியதில் பிரிட்டாஷ்காரர்களுக்கு இணை அவர்கள் தான்.

****

பிரிட்டாஷ் இளவரசர் சார்லஸ் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்பதற்கு, அறுபது வயதை நெருங்கியபோதும் இன்னும் அவர் இளவரசராகவே இருப்பதே சான்று. அன்னாரின் அம்மா எலிசபெத் மகாராணியார் தள்ளாத வயதிலும் திடகாத்திரமாக நடமாடிக் கொண்டிருக்க வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து முழுவதும் உள்ள தேவாலயங்களில் பூசை நேரம் முடிந்து நிகழ்த்தப்படும் ரெகுலர் பிரார்த்தனை காரணமாக இருக்கலாம் – “பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே, எங்கள் மகாராணியை திடகாத்திரமாக நாடாள வைப்பீராக”.

இப்படி எலிசபெத் மகாராணிக்கான பிரார்த்தனை முடிந்ததும் இன்னொரு கொசுறுப் பிரார்த்தனையும் எல்லாத் தேவாலயங்களிலும் அரங்கேறுவது வழக்கம். “பிதாவே, அப்படியே ராணியம்மாவின் வீட்டுக்காரரும் எடின்பரோ கோமகனும் ஆன ராஜகுமாரர் பிலிப், ராணியம்மாவின் மகனும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் இவங்களும் நல்லா இருக்கட்டும். ஆமென்”.

காலம் சென்ற டயானா, சார்லஸ் இளவரசருக்கு மனைவியாக இருந்தவரை அவருடைய பெயரும் பிரார்த்தனையில் இடம்பெற்றது. அவர் விவாகரத்து வாங்கியதும் கர்த்தர் காக்க வேண்டிய லிஸ்டில் அவர் பெயரை ஞாபகமாக அடித்து விட்டார்கள். ராஜாங்க உத்தரவு.

இப்போது சார்லஸ் இளவரசர் திரும்பக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். எலிசபெத் ராணிக்கு இந்தக் கல்யாணத்தில் கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடியான கமீலா அம்மையார் சகிதம் சார்லஸ் இளவரசர் அமெரிக்காவுக்கு ஆர்ப்பாட்டமாகப் போய், புஷ்ஷோடு விருந்து சாப்பிட்டுத் திரும்பி வந்து பக்கிங்க் ?ாம் அரண்மனையில் அசதி தீர ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் போனவாரம் பக்கிங் ?ாம் அரண்மனை அதிரடியாக ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வாராவாரம் தேவாலயப் பிரார்த்தனையில் இடம் பெற வேண்டிய பெயர்கள் – எலிசபெத் மகாராணி, அவங்க வீட்டுக்காரர் பிலிப், அவங்க மகன் சார்லஸ். அவ்வளவுதான். மேற்படி அறிக்கை மென்று முழுங்கிச் சொல்வது என்னவென்றால், கமீலா அம்மையாருக்காக நாட்டு மக்கள் பிரார்த்திக்க வேண்டாம்.

பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே, வழக்கம்போல் ராணியம்மா, கணவர் பிலிப், மகன் சார்லஸ் இவர்களை, இவர்களை மட்டும் காப்பாற்றவும். கமீலா எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆமென்.

—-

eramurukan@gmail.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்