சந்திரவதனா
பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும், மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள். ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை. கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின. ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.
‘உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது. ‘
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.
அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள். அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான். ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும். மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.
‘என்ன மகேசண்ணை நீங்கள்….! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே ? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள் ? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டாங்களோ ? ‘
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.
‘நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய். ‘ சீறினான் மகேசன்.
மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.
‘என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய் ? அவன் என்ன உனக்குப் புருஷனோடா ? ‘
அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.
‘ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்! ‘
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.
அவளது அக்கா சுபேதாவும், அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.
‘கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன். வரமாட்டேன். ‘ என்று மது மறுத்துத்தான் பார்த்தாள். சுவேதாதான் போனுக்கு மேல் போனாக எடுத்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.
வந்து ே ?ால் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள். சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.
கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.
குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும், எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மெளனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.
சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் ‘ரீ போட்டுத் தா. பக்கத்திலை இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை…. ‘ என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் ‘உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை ‘ என்று முறையிட்டாள்.
முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும் ‘என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை. ‘ புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.
வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. `மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே!` என்று சினப்பட்டாள்.
குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள். பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.
‘உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு. ‘
சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.
மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான். பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.
இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள். தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.
அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.
மகேசன் ‘அவன் உன்ரை புருசனோ… ? ‘ என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.
அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் தூங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.
நான் என்ன கெட்டவளா ? ஏன் இப்படியானேன் ? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.
– சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே! ஏன் இப்படியானது ? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா ? அல்லது கசக்க வைத்தானா ?
பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! – தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.
இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.
ஒரு பிற்குறிப்பு
—-
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி….!
சந்திரவதனா –
யேர்மனி
பிரசுரம் – ஈழமுரசு (30 செப்டெம்பர் – 06 ஒக்டோபர் 1999)
chandra1200@yahoo.de
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- உயிர்க்குடை
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- மரண தண்டனை எதற்காக ?
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- கிள்ளுப் பூ
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- காற்று
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்