ஊர்க்கதை

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் விரக்தியுற்றுத் திரிகிறது பார்க்கவே சங்கடமாய் இருந்தது. அவர்கள் சிரிப்பைத் தொலைத்தவர்களாய், சிரிக்க ஏங்கியவர்களாய்த் திரிகிறார்கள். திரிந்த பாலாய் அவர்கள் ஆகிவிடக் கூடும் என்று பெற்றவர்கள் ஊர்ப் பெரியவர்கள் கவலைப் பட்டார்கள். தவிரவும் பண முதலைகளும் சமூக விரோதிகளும் அரசியல் ஆதாயஸ்தர்களும் அவர்களை எப்படி வேணுமானாலும் வளைத்துவிட முடியும் அல்லவா ? காலகாலமாய் எடுப்பார் கை அநாதைப் பிள்ளைகளாய் அவர்கள் ஆட்டுவிக்கப் படுவதை எத்தனை பார்த்தாயிற்று ?

சிறிய ஊரே அது. இந்துக்கள் கிறித்தவர்கள் என்று ஒரு கலப்படமான ஊர். பள்ளிக்கூடம் என்று பெரிய எடுப்பாய் எடுத்துச் செய்தது ஊர்க் கிறித்தவர்கள். ஊர் வெளியே ஒரு தேவாலயம். பழமை அதன் பெருமை என்கிறாப் போல தனித்து நிமிர்ந்து நிற்கிறது. தலைக்குமேல் விதானத்தில் வண்ண வண்ணங்களில் ஒளிக் கண்ணாடிகள் வழியே ஊடுருவும் சூரியன். மேலே வெண்புறாக்கள் சமாதானம் பேசி கூவித் திரிகின்றன… ஊர் நுழைகையில் எங்கிருந்தும் அதை அடையாளம் தெரியும். யாரோ வெள்ளைக்காரன் எப்போதோ கட்டிய கோவில். இப்போது பள்ளிக்கூடமும் அமைந்து அதனுடன் புதிய தேவாலயமும் ஏற்பட்டதில் இந்தப் பழைய கட்டட வளாகம் பராமரிப்பின்றிப் போயிற்று.

வெள்ளைக்காரனின் ஆவிதான் வெண்புறாவென உள்ளே அலைகிறதோ ?!…

கோவில் எடுத்த ஊர். தேவாரம் பாடப்பட்ட ஸ்தலம். புராணக் கதைகள் மிகுதி. நஞ்சுண்ட ஈஸ்வரன் கோவில்… ஊரின் பெயரே அதுதான். சிலுவையில் பிறரின் வருத்தங்களைச் சுமந்து திரிகிற மகானும்… நஞ்சுண்ட ஈஸ்வரனும்… ஆச்சரியமான கலவை கொண்ட ஊர் அல்லவா ?

எட்டினாப் போல கடல் என்பது ஒரு சுகம். வெயில் எடுக்க, படமெடுக்கிற பாம்பைத் தலையில் நச்சென்று போட்டுப் பார்த்தாப் போல கடல்காற்று ஊய்யென்று உற்சாகம் கொண்டு ஊருக்குள் ஊடுருவி ஆறுதல்ப் படுத்தி விடும். அந்த ஊருக்கு வந்து போகிற யாருக்குமே பிரிய மனம் வராது…

எவர் கண் பட்டதோ ? பிடித்தது கேடுகாலம்…

புதுத் தண்ணியும் புதுப்பணமும் எப்போதுமே நிலைகொள்ளும் வரை ஆபத்தையே துாண்டுகின்றன ஏனோ. ஊர் இளைஞர்களை வெளிநாட்டில் வேலை என ஆசைகாட்டி ஒரு கும்பல் இழுத்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை வளாகங்களில் பெற்றவர்கள் காத்திருப்பதைப் போல பாஸ்போர்ட் வாங்க என இளைஞர்கள் வரிசை. பட்டணம் நோக்கி அவர்கள் படையெடுக்கிறார்கள்.

இதில் பாஸ்டரின் சகோதரன் பிரகாசம் கையில் பணம் புரள்கிறது. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திடாரென அவன் வெற்றி பெற ஆரம்பித்திருந்தான். வாயில் சுருட்டும் புது வண்டியும்… கையில் தங்கவாட்ச் மோதிரங்கள்… திருமகள் அவனிடம் ‘தங்க ‘ ஆரம்பித்திருந்தாள். புதிய மனிதன். இப்போது அவன் வேறு மனிதனோ என பழமைவாதிகள் பயங் கொண்டார்கள். பண நடமாட்டம் பாம்பு நடமாட்டம் போல, பயத்தையும் குழப்பத்தையும் சிக்கல்களையும் எற்படுத்தி விடத்தான் செய்கிறது… பாதாளம் வரை பாய்கிற வேதாளம் அல்லவா அது ?

இவைகள் கட்டாய சமூக மாற்றங்களா ? கலவரத்துக்கான முன்நிகழ்வுகளா ?

கண் சிறுத்த பெரியவர்கள் அவன் பிரகாசத்தில் கண் கூசினார்கள்… புதிய மடிப்புவிழாத கரன்சி நோட்டுக்களை அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். வதந்திகள். வாய்வழித் தந்திகள்… காற்றின் கலவை மாறியிருந்தது.. மழை இருட்டுப் போல… பிரகாசம் ஒரு புறம் எனில் இருள் உள்ளே மெல்ல தன் நங்கூரத்தை இறக்க இறுக்க ஆரம்பித்தது…

பருந்துகளிடம் உஷாராய் இருங்கள் கோழிக் குஞ்சுகளே… என்றார் வேதநாராயணன். நேற்றுவரை அவரது கொடியைப் பார்த்த ஜனங்கள். புதுக்காற்றில் அதன் படபடப்பை அவர்கள் வெறித்துப் பார்க்கிறார்கள்… ஊரில் அவரது சொல்வாக்கு செல்வாக்கு பெற்றிருந்தது. அரசியல் வாக்கும் பெற்றிருந்தது. புதுக் கவலைகள் அவர் நெற்றியின் திருநீற்றுப் பட்டைகளில் வியர்வைத் துளியாய்… சாம்பல் நிறங் கொடுத்தன… பட்டையொளி சற்று வெளிர் வாங்கினாப் போல பிரகாசம் மங்கியது.

மழைக்காலம் வெகு சீக்கிரமே வந்து விட்டது அந்த வருடத்தில். பருத்திக் காடென வெண்மை பூத்துக் கிடந்த மேகங்கள் தாமே கருப்புக் குடை விரித்தன. மேகங்கள் இரையெடுத்த பாம்பாய் நகரவியலாமல் தவித்தன. ஜனங்கள் அரைக்கண்ணாய்த் திரிகிறார்கள். மழை எப்போது வேணுமானாலும் தரையிறங்கக் கூடும். கருப்பு வெண்ணெய்த்திரளல். மேகப்பானையை கண்ணன் உருட்டி விடக் கூடும்…

இருட்டு- மழையிருட்டு மானுடத்தில் மயக்கங்களை நிகழ்த்தினாலும் இயற்கை அதன் மாயாஜாலத்துக்குக் காத்திருக்கிறது. மழை வேண்டி உற்சாகங் கொள்ள அவை காத்திருக்கின்றன. புது மழை நோக்கி தாவரங்கள் தவமிருந்தன. பணமழை… என உள்ளூர் இளைஞர்கள் தவங கிடக்கிறாப் போல. அரைக்கண் மூடிய கனவுகள்.

ஆவதும் மழையாலே. அழிவதும் மழையாலே…

மழை சூலிறக்கி காலிறக்குகிறது. அதன் வருகையை முன்னறிவிக்கிற குளிர்காற்றிலேயே இளம்படை சிலிர்க்கிறது. யானை வரும் மணியோசை கேட்ட குழந்தையின் உற்சாகம் அவர்கள் முகத்தில். மழை இருட்டுக்கு அவர்கள் முகத்தில் பிரகாசம் வந்தது. கையில் பாஸ்போர்ட்டைப் பார்த்து அவர்கள் புன்னகை செய்து கொள்கிறார்கள்.

வானத்தில் இருந்து… விமானத்தில் பணம் வருகிறதாய்க் கனவுகள். தத்தளித்துக் கிடந்த இளைஞர்களுக்கு, பொம்மைகளுக்கு… தளிர்களுக்கு உயிர் வருமா ? இந்த மழை அதைத் தருமா ? காலம் ஒத்துழைக்க வேண்டுமே ? காலவரம் பெற தீரும் கலவரம்.

மழை வந்தே விட்டது. ஊரில் அதுபோல் பெய்ததில்லை பெருமழை. கடல் அடுத்த ஊர் அல்லவா ? நஞ்சுண்ட ஈஸ்வரன் கோவில். மழை நஞ்சா அமுதமா ? அளவுக்கு மீறிவிடுமா மழை ?

ஆ மழை விமானம் தரையிறங்குகிறது. புது மழை. புதுப் பணம். இருள். பிரகாசம். சமூக மாற்றம். மாற்றங்கள்…

மழை. முதலில் அது பொது அழுக்குகளைக் களைந்து தெருவில் பெருக்கெடுக்கும்.

‘பற்றிக் ‘ கொண்ட பெருமழை. காட்டு நெருப்பு! குளிர் தாங்காத பெரியவர்கள் கதவைச் சார்த்திக் கொள்கிறார்கள். மழை காணாத பெருங் கூட்டம் வெளியே வந்து நனைகிறது. ஆகாய விமானம் அல்ல அது – ஆதாய விதானம்.

அடாடா… மழைக்கு அந்த ஊரெல்லை தேவாலயத்தின் கோபுரம் இடிந்து விழுந்தது.

யார் எதிர்பார்த்தார்கள் இதை ? பராமரித்திருக்கலாம் அதை யாரேனும். நாட்டின் புராதனச் சின்னம் அல்லவா அது ? எப்படியோ எடுப்பாரின்றி எற்பாரின்றி தவித்துக் கிடந்த கோபுரம சரணாகதி என தரையில் வீழ்ந்தது. புறாக்கள் படபடத்து வெளிப் பறந்தன…

யார் செய்த சதி வேலை இது ?… என புது வதந்தி கிளம்பியது. நிலைமை சிலாக்கியமாய் இல்லை. மழையின் குளிர் ஊரில் சூடேற்றுகிறது. கட்சிகட்டி ஜனங்கள் இரண்டாகப் பிளந்து விடுவார்களோ ? சந்தேகந்தான் வியாதி மனிதனுக்கு. மதகுகள் என்ற கதவுகள் படபடவென்று அப்போது சாத்திக் கொள்கின்றன. உளளே எகிறுகிற குழந்தையை அப்போது பிடிவாத அம்மாக்கள் பலவந்தமாக… அதன் சிரிப்பைப் புறக்கணித்து, அழவைத்துப் பிரித்து எடுத்துப் போகிறார்கள்.

விதானம் இடிந்ததில் ஜனஙகளின் மனசெங்கும் குப்பையாகிப் போனது. மழைத் தண்ணீரில் ஊரில் இப்புறம் அப்புறம் என இரு கரைகள் உருவாயின. நடுவே சமூக விரோதிகள் பரிசில்களை ஓட்டத் துவங்கினார்கள். வதந்திகள். வாய்வழித் தந்திகள்…

இளைஞர்கள் கூட்டம் இரண்டாகப் பிரியுமோ ? இப்போது விஷயம் இளைஞர்கள் கைக்கு வந்தது. இக்கரையில் நஞ்சுண்ட ஈஸ்வரன். அக்கரையில் பாவச்சிலுவை சுமந்த மகான். நடுவே பரிசல்காரர்கள்.

கடல்காற்று என வெயிலை நோக்கி அவர்கள் – இளைஞர்கள்… எழவேண்டி வந்தது. கூடிக் கலந்தன இளைஞர்கள் கூட்டம். வெண்புறாக் கூட்டம். புதுப் பிரகாசம் கண்ட கூட்டம்.

முதல் தண்ணி கலங்கலாகத்தான் வரும். தெளியக் காத்திருப்பது அவசியம் அல்லவா ? தெளிந்தால்தானே எல்லாம் விளக்கம் பெற முடியும் ? அடைப்புகள் நீங்கவும் நீக்கவும் வழி கிடைக்கும்….

ஆம், அதுதான் சரி. அவன் இளைஞனே. ஆனால் இன்றைய மனிதன். அவன் எழுந்தான். கூட்டத்தில் அவன் குரல் தனிக்குரல் என ஓங்கி ஒலிக்கிறது. சந்தேகங்கள் வளருமுன் புயல் என எடுக்குமுன் நாம் செயலில் இறங்குவோம் ‘தோழர்களே ‘

‘ ‘நாம் இளைஞர்கள். உலகம் நம்முடையது… வழி நடத்தப்பட வேணடியவர்கள் நாமல்ல… வழி நடத்த வேண்டியவர்கள். இதை நாம் நிரூபிப்போம். நிருபிக்க நல்வாய்ப்பு அல்லவா இது ? ‘ ‘

‘ ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? ‘ ‘ என்கிறார் வேதநாராயணன் எரிச்சலுடன். ‘ ‘ஆக வேண்டியதைப் பேசுங்கள்…. ‘ ‘ என்கிறார் கவலையாய்ப் பிரகாசம். ‘ ‘முடியாததல்ல இது. சாத்தியம் இல்லாததல்ல. தேவை மனதில் சிறு இடம். அந்தச் சிறு இடம் இருந்தால் கட்டலாம் பெரிய கோவில். வழிபடு சந்நிதி. பிரம்மாண்டமான சந்நிதி… ‘ ‘

‘ ‘அப்படியானால் ? ‘ ‘ என்றார் வேதநாராயணன்.

‘ ‘ஐயா அவர்கள் ஐயுறுகிறார்கள். நாம் அதைப் போக்கலாம். நாமே அந்த இடிந்த தேவாலயத்தைக் கட்டித் தந்துவிட்டால் என்ன ? ஆளுக்கொரு செங்கல் செலவில் ? ‘ ‘ என்கிறான் அந்த இளைஞன்.

இன்றைய மனிதன்…

மழை அடங்க ஆரம்பித்திருந்தது.

***

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்