எஸ்.ஜெயஸ்ரீ
புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த பதினேழு கட்டுரைகள் ‘நதியின் கரையில்’ என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. நதி என்னும் சொல் மிகப்பெரிய படிமமாக மாறியுள்ளது. வாழ்க்கை என்பது வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு நதி. இதன் கரையில்தான் நம் முன்னோர்கள் நேற்று வாழ்ந்தார்கள். இன்று நாம் வாழ்கிறோம். நாளை நம் சந்ததியினர் வாழ்வார்கள். நிரந்தரமின்மையை நிரந்தரமாகச் சுட்டிக்காட்டியபடி காலம்காலமாக ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை நதி. தலைப்புக்குப் பொருத்தமாக மானுட உண்மைகளை முன்வைத்துச் செல்லும் கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது பாவண்ணனின் புதிய கட்டுரைத் தொகுப்பு.
தொகுப்பைப் படித்துமுடித்ததும் பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே’ கவிதையின் வரிகள் நெஞ்சில் புரள்கின்றன. வழக்கமாக காக்கையைப் பார்க்கிற எளிய மனம் அதன் கருமை நிறத்தைமட்டும் பார்த்துவிட்டு கடந்துவிடுகிற நிலையில், கவிஞரின் மனம்மட்டும் அந்தக் கருமையின் ஊடாக கார்மேகவண்ணனின் கரிய நிறத்தைக் கண்டு களிப்பில் மிதக்கும் அனுபவத்தை அவ்வரிகளில் நம்மால் உணரமுடிகிறது. காட்சிகளுக்குள் பல்வேறு காட்சிகளைக் காணவல்லதாக உள்ளன கவிஞரின் கண்கள். ஒரு மர்மத்திரையை விலக்குவதுபோல, வழக்கமான காட்சிகளின்மேல் படிந்துள்ள திரையை விலக்கி வேறொரு உலகத்தைக் கண்டுபிடிக்கின்றன அக்கண்கள். அத்தகு கவிதைக்கண்களால் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளையும் மனிதர்களையும் காண்கிறவராக உள்ளார் பாவண்ணன். தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள எழுதிய கட்டுரைகளில் மையப்படுத்தப்பட்ட சம்பவங்களைக் கடந்து வேறொரு விரிவான உலகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும் ஆவல் அவரிடம் பொதிந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது.
பாவண்ணனின் எழுத்துமுறையைப் புரிந்துகொள்ளத் துணையாக தொகுப்பில் இருக்கும் கட்டுரை “ஒரு துளியைச் சேமிப்பது எப்படி?” ஒரு திரைப்படத்தில் காணநேர்ந்த ஒரு காட்சியில் வெளிப்பட்ட ஒரு கேள்வியிலிருந்து அக்கட்டுரை தொடங்குகிறது. அக்கேள்வியின் அகத்தூண்டுதலால் பாவண்ணனின் படைப்புமனம் விடைகளை ஒன்றையடுத்து ஒன்றாக அடுக்கிவைக்கிறது. சிக்கலான ஒரு கணக்குக்கான விடையைப் பல்வேறு சூத்திரங்களின் அடிப்படையில் முயற்சிசெய்து பார்க்கிற ஒரு மாணவனின் மனநிலையில் பல்வேறு விடைகள் முன்வைக்கப்படுகின்றன. மனத்தின் ஒருமுனை இப்படி விடைகளை அடுக்கிவைக்கும்போது, மற்றொரு முனையில் அவ்விடைகளை காரண அறிவு ஏதோ ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்கிறது. அடுக்குதலும் தள்ளுதலுமாக கட்டுரை தன் உச்சத்துக்குச் சென்று, இறுதியில் மிக எளிய ஒரு விடையை முன்வைத்து முடிவடைகிறது. அந்த முடிவையொட்டி வாழ்க்கைக்கு மிகவும் ஆதாரமான ஒரு மானுடச்செயல்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. முடிவையொட்டி அடையாளப்படுத்தப்படும் இந்தப் புள்ளிதான் உண்மையில் கட்டுரையின் இலக்கு. வினாவிடையை ஊடுருவிக்கொண்டு ஒரு வாசகராக அந்தப் புள்ளியை அவருடன் இணைந்து நாமும் கண்டடைகிறோம். ஒரு சிறுகதைக்கு இணையான சுவாரஸ்யத்தோடு எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை பாவண்ணனின் எழுத்தாற்றலுக்குச் சான்றாக உள்ளது. தொகுப்பின் அடிநாதமாக உள்ள மற்றொரு கட்டுரை “ஏழு அதிசயங்கள்.” நம் ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ள வெவ்வேறு குணங்களையே பாவண்ணன் அதிசயங்களாக முன்வைக்கிறார். அகத்தில் அத்தகு அதிசய குணங்கள் இல்லாதவர்களே புறத்தில் மாளிகைகளாகவும் கோட்டைகளாகவும் உயர்ந்து நிற்கிற அதிசயங்களைப் பார்த்து புருவத்தை உயர்த்துகிறார்கள்.
ஒரு சுயசரிதையின் தேர்ந்தெடுத்த பகுதிகளைக் கொண்டதுபோல ஒரு தோற்றத்தைத் தரும் இத்தொகுதியில் பதினேழு கட்டுரைகள் உள்ளன. தம் வாழ்வில் கண்ட நெருக்கடியான தருணங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், கேள்விக்கு விடைதெரியாமல் தத்தளித்த தருணங்கள், மனக்காயங்களால் துன்பமுற்ற தருணங்கள் எனப் பலவித தருணங்களை இக்கட்டுரைகள் வழியாக நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பாவண்ணன். அபூர்வ மனிதர்களாக பாவண்ணன் சுட்டிக்காட்டுபவர்கள் அனைவரும் மிக அன்பும் இரக்கமும் நிறைந்த எளிய மனிதர்கள். கலவரத்தில் அகப்பட்டுத் தவிக்கிற அயலூர் இளைஞனைக் காப்பாற்றுகிற கிழவி, தன்னிடம் பயிலும் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதப் பயிற்சி தரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர், மழைநீரை வீணாக்காமல் சேமித்துவைக்க முயன்று வெற்றிகாணும் இளைஞன், அரவணைப்பையும் பாதுகாப்பையும் பாரமாக எண்ணி விலகிச் செல்கிற துறவி போன்றவர்களே அபூர்வ மனிதர்களாக பாவண்ணனால் கொண்டாடப்படுகிறார்கள். அனைவரும் வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய மனத்தில் ஊற்றைப்போல சுரக்கும் அன்பு ஒன்றே அவர்களை எளிய மனிதர்கள் என்னும் நிலையிலிருந்து அபூர்வ மனிதர்கள் என்னும் நிலைக்கு உயர்த்துவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
குழந்தைகள் உலகம், முதியோர் உலகம் என அனைத்திலும் புகுந்து வெளிவருகிறார் பாவண்ணன். சுனாமியின்போது அவருடன் தங்கியிருந்த உறவுக்காரச் சிறுவனைப்பற்றிச் சொல்லவரும் பாவண்ணன் பள்ளிப்பருவ நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் இணைத்துச் சொல்கிறார். இப்போதும்கூட சிறுபிள்ளைகள் பிய்ந்துபோன மயிலிறகை நோட்டுப் புத்தகத்தில் வைத்துக்கொண்டு பென்சிலைச் சீவி அதற்கு உணவு போடுவதும் அது வளர்ந்திருக்கிறதா என தினந்தினமும் எடுத்துப் பார்ப்பதும் பிள்ளை விளையாட்டின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
“முதுமையின் கோரிக்கை” கட்டுரை அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் முதியவர்களை முன்வைக்கிறது. உயர்ந்த வேலை வாய்ப்புகளும் கைநிறையச் சம்பளமும் கொடுத்து மேலைநாடுகள் கைநீட்டி வரவேற்க பணி, பணம், என இளையவர்கள் புறப்பட்டுவிட, முதியவர்கள் ஆதரவான வார்த்தைகளுக்காக ஏங்கி நிற்க வேண்டியுள்ளது. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை இது.
இயற்கையின்பால் தீராத காதல் கொண்டுள்ள பாவண்ணன் மரங்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்டு மனவாட்டமடையும் சில பதிவுகளும் இத்தொகுப்பில் உள்ளன. ஒரு மரத்தின் இழப்பை மனிதனின் மரணத்துக்குச் சமமாகக் கருதுகிற எழுத்தை வாசிக்கும்போது கல்மனம் கொண்டவர்கள்கூட கரைந்துபோவார்கள். நான்கு மரங்கள், மழைமரம் ஆகிய இரண்டு கட்டுரைகளும் நம்மோடு ஒட்டி உறவாடுகின்றன. பெங்களூர் மாநகரில் பல்வேறு சமயங்களில் வெவ்வேறு இடங்களில் கண்டு பிரியத்தோடு அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ளும் நான்கு மரங்களைப் பற்றிய குறிப்புகள் நான்கு மரங்கள் என்னும் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவதேவன், சுந்தர ராமசாமி ஆகிய இருவருடைய வெவ்வேறு கவிதைவரிகளை அருகருகே கொண்டுவந்து, ஒரு வினாவிடையாக மாற்றி இணைத்துக்காட்டி அன்பின் வலிமையை உணர்த்துகிற ஒரு சின்னச் சித்திரமாகத்தான் இக்கட்டுரை முதலில் தொடங்குகிறது. பிறகுதான் மரங்களைப்பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஒரு மரம் அவருடைய வழக்கமான காலைநடையில் காணக்கூடிய மரம். மற்றொன்று ஒரு பெண்கள் கல்லூரி வளாகத்தில் இருந்த மரம். மூன்றாவது மரம் பாதையோரத்தில் பேருந்து நிறுத்தமாக நிழல்கொடுத்து நின்றிருந்த மரம். நான்காவது மரம் குழந்தையாக இருந்த திப்பு சுல்தான் நட்டுவிட்டுச் சென்ற மரம். நான்கு மரங்களைப்பற்றிய குறிப்புகளும் கவித்துவத்தோடு உள்ளன. அவை தகர்க்கப்படும் காட்சிகள் மிகுந்த மனவலியைக் கொடுக்கிறது. மழைமரம் கட்டுரை, நிகழ இருந்த ஒரு பெரிய விபத்தைத் தடுத்தாட்கொண்ட ஒரு மரத்தைப்பற்றிய கட்டுரை. ஒரு புராண காலத்துப் பாத்திரத்தின் சித்திரத்தைப்போல அம்மரத்தைப்பற்றிய குறிப்புகள் ரத்தமும் சதையுமாக உள்ளன. உயிர்பிழைத்த மக்களும் மற்றவர்களும் வெட்டி அப்புறப்படுத்தப்படும் அம்மரத்துக்குச் செலுத்திய இறுதி அஞ்சலி படிப்பவர்களை மனமுருக வைக்கக்கூடியதாகும். ஒரு மாமனிதனின் இறுதி ஊர்வலம் நம் கண்முன் விரிவடைவதாக உள்ளது.
சின்னச்சின்ன விஷயங்களைக்கூட புரிந்துகொள்ளமுடியாமல் அவரவர் தன்னுடைய எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது துயரத்தில்தான் பெரும்பாலும் முடிகிறது. கசப்பில் கரைந்த இளைஞன், கனிந்து நழுவும் சூரியன் கட்டுரைகளில் காட்டப்படும் காதல் தோல்விகள் நம்மைக் கலங்கவைக்கின்றன. இதன்மூலம் அந்தக் காதலைத் தடுத்து நிறுத்திவிடும் பெற்றோருக்கோ உற்றாருக்கோ என்ன லாபம் வந்துவிடப் போகிறது என்று எண்ணும்போது, பாவண்ணன் துயரம் நம்மையும் பற்றிக்கொள்கிறது. இரண்டு தலைக்கவசங்கள் கட்டுரையில் சந்தோஷமாக பூங்காவுக்குள் வந்த காதலர்கள் அற்ப விஷயத்துக்காக பிரிந்து செல்லும் காட்சியைப் படிக்கும்போது மாதவி, கோவலன் இருவரிடையே எழுந்த ஊடலும் பிரிவும் நினைவுக்கு வருகிறது.
தத்துவ விசாரத்தைத் தூண்டும் கட்டுரைகளும் மிகவும் சுவைபட இடம்பெற்றிருப்பதால் தொகுப்பிற்குக் கனம் கூடுகிறது. சுழலில் இறங்கிக் குளிப்பவர்கள், பேயும் தெய்வமும் போன்ற கட்டுரைகள் வாசகர்கள் மனத்திலும் கேள்வி அலைகளை எழுப்பவல்லவை. சுழலில் இறங்கிக் குளிக்கும் இளைஞர்களைப் பார்த்து ‘ஊருக்கு ஒரு சுப்பக்கா போதாதா?’ என தன்னிரக்கத்தோடு சொல்லிச் செல்கிற சுப்பக்கா எத்தகைய சுழலில் மாட்டிக்கொண்டிருப்பாள்? பாவண்ணன் குறிப்பிடும் சுழல் நீரின் சுழலைத்தாண்டி, மோகச்சுழலையும் வாழ்க்கைச்சுழலையும் அடையாளம் காட்டி மேலும் விரிவடைந்து செல்கிறது. கண்ணுக்கு அருகிலேயே மிகப்பெரிய சுழல் ஆற்றின் போக்கிலேயே இருந்தாலும் தனக்கென்ற திசையில் அமைதியில்லாமலும் தீவிரத்தோடும் சுழன்றாடிக்கொண்டிருந்தது என்ற வரிகள் தீவிர சிந்தனைக்கு உரியவை. (மௌனியின் வரிகள் போன்றவை)
‘பேயும் தெய்வமும்’ கட்டுரையில் பேய் என்பது தனித்த ஒரு வடிவமல்ல என்றும் தெய்வத்தன்மையின் மாற்றுவடிவமே பேய் என்று பாவண்ணன் சொல்லும்போது மகிஷனை வதைக்க பார்வதிதானே மகிஷாசுரமர்த்தினி என காளி வேடம் பூணுகிறாள் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. கோயில் கருவறையில் பாம்பின்மீது நின்றிருக்கும் கரிய கிருஷ்ணனின் சிற்பத்தை, பாம்பை வெல்லத் தெரியாத இளநீர்க்காரனின் காமத்துக்கு ஒப்புமைப்படுத்திப் பார்க்க வைத்திருக்கும் பாவண்ணனின் எழுத்து பாராட்டுக்குரியது.
வேடிக்கை பார்க்கவந்த இடத்தில் கிடைத்தவை என்று பாவண்ணன் குறிப்பிடும் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு சிறுகதைக்குரிய சித்திரத்தை நமக்கு வழங்குகிறது. மனநிறைவான புத்தகத்தை வெளியிட்டிருக்கும் எனிஇந்தியன் பதிப்பகம் பாராட்டுக்குரியது.
(நதியின் கரையில்-கட்டுரைகள், பாவண்ணன். எனி இந்தியன் பதிப்பகம், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17, தொலைபேசி: 044-24329283, விலை.ரூ 70)
ஜூன் 2008 ‘வார்த்தை’ இதழில் வெளியான புத்தக விமர்சனம்.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)
- தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?
- காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு
- ஊடுருவிப் பார்க்கும் கண்கள்
- திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)
- நினையாத நினைவு
- குர்சி (நாற்காலி)
- இன்னும் கொஞ்சம்…!
- கவிதை௧ள்
- In Memory of Sri Lanka’s Black July
- 27-வது பெண்கள் சந்திப்பு , கனடா
- கோவையில் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம்
- நூல்வெளியீடு “பிரம்மா”
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்
- அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா
- இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!
- மதங்களின் பெயரால்
- என்றான், அவன்!
- அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது
- எல்லாம் கடவுள் செயல்
- யாதும் ஊரே
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்
- தமிழுக்கு தமிழ் என்றே பெயர்
- இரயில் நிலையப் பெஞ்சு
- கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி
- சொல்ல வேண்டிய சில… 1
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்
- வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
- நினைவுகளின் தடத்தில் – 14
- அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!
- பிரகிருதி
- இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை