உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

மலர்மன்னன்


‘ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காதுதான் ‘ என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கோல்வல்கர் பரம்பரை என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத

பாராட்டு என்பது கோல்வல்கர் யார் எனத் தெரிந்தால் புரிந்துவிடும்!

இன்ைறைக்கு ஜம்மு-காஷ்மிர் மாநிலம் பாரதத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றதென்றால் அதற்கு முழு முதற் காரணம் கோல்வல்கர்தான். ஆனால் நமது வரலாற்றுப் புத்தகத்தைப் பார்த்தால் இந்த உண்மை அதில் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஏதோ ஷேக் அப்துல்லாதான் அதற்கு ஒத்துழைத்தார் என்பது

போல் ஒரு மாயத் தோற்றமே அதில் புலப்படும். கோல்வல்கர் எடுத்த முயற்சியினால்தான் 1947-ல் காஷ்மிர மன்னர் ஹரி சிங் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்புக்

கொண்டார் என்ற உண்மை ஆவணங்களில் புதைந்து கிடக்கிறது. நல்லவேளையாக அந்த ஆவணம்அழிக்கப்பட்டுவிடவில்லை. இணயத்திலேயே கூட அகப்பட்டுவிடும், கூகிளில் தேடினால்! காஷ்மிர் என்று எழுத்துகளைத் தட்டினாலேயே போதும், கொண்டு வந்து கொட்டிவிடும், மறைக்கப்பட்ட உண்மைகளை!

காஷ்மிர் நம் பாரதத்தின் ஓர் பகுதியே என உறைக்கச் செய்தவர் கோல்வல்கர். ஏனெனில் புராதனமான சைவ சித்தாந்தத்தின் உறைவிடம் புனிதம் வாய்ந்த காஷ்மிர் என்பது அவருக்கு உறைத்திருந்தது. மேலும், 1947-ல் பாகிஸ்தான் தோன்றிய சூட்டோடு சூடாகவே காஷ்மிர் மாநிலத்தை வஞ்கமாகக் கவர ஜின்னா முற்பட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதில்

பாரத ராணுவத்துடன் இணைந்து நின்று ரத்த சாட்சிகளாய் உயிர்த் தியாகம் செய்த திருக் கூட்டம், அந்த கோல்வல்கரின் ஆணைக்கு இணங்கவே அவ்வாறு தன்னைப் பலி கொடுத்தது. ஆகவே கோல்வல்கர் பரம்பரை என்று குறிப்பிடப்படுவோமானால் எமக்கு அதனைக் காட்டிலும் வேறு பெருமை என்ன இருக்க முடியும் ?

கோல்வல்கர் என்று சொல்லப்பட்டாலும் ‘குருஜி ‘ என்றே அறியப்பட்ட மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியுள்ள ஆண்டு, இது. தக்க தருணத்தில் அவரது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டு, அவரைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பு நண்பர் கற்பக விநாயகம் அவர்களால் எனக்குத் தரப்பட்டிருக்கிறது. இதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

திண்ணையை நான் எனது பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக்

கொள்கிறேன் என எவரும் குறை கூறமுடியாது அல்லவா ? பாருங்கள், இதுதான் இறையருள் என்பதும், கருவிலே

திருவானதும்! கோல்வல்கர் என்கிற பெயரை நண்பர் கற்பக விநாயகம் வாயினால் உச்சரிக்கப்பண்ணி, யார் அவர் என்று அறிவதற்கான ஆர்வத்தைத் தோற்றுவித்து, என் மூலமாக அது தெரிவிக்கப்பட வேண்டும் என்று விதித்திருக்கிறது பாருங்கள், இது என்ன, நான் முன்கூட்டியே எழுதத் திட்டமிட்டிருந்த விஷயமா, என்ன ? கோல்வல்கர் அவர்களைச் சந்தித்துப் பேசிய அரிய வாய்ப்பினையும் பெற்றிருக்கிறேன்தான்; ஆனால் அந்த அனுபவத்தைப் பதிவு செய்யும் திட்டமே என் நினைவில் இல்லை! தானாகவே அமைந்துவிட்ட சாதகம் இது! கருவிலே திரு!

1969 ஆம் ஆண்டு, யூனிவர்சல் பிரஸ் சர்வீஸ் என்ற பாரத-மேற்கு ஜெர்மனி தனியார் கூட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றில் கர்நாடக மாநிலம் முழுமைக்குமான செய்தியாளனாகப் பணியிலிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னையில் இருக்க விரும்பாமல் பெங்களூருக்கு மாற்றல் கேட்டுப் போய்விட்டிருந்த சமயம். மேற்கு குமாரப் பார்க்கில் ஒரே கட்டிடத்தில் விசாலமான அலுவலகம், வசிக்குமிடம் என அளித்திருந்தாலும், எனக்குக் கீழே ஒரேயொரு டெலிபிரிண்டர் ஆப்பரேட்டர், ஒரு ஆபீஸ் பாய் என மிகச் சிறிய நிர்வாகம். செய்தியைப் பொருத்தவரை மாநிலம் முழுவதுமே நான்தான் சென்று வந்தாக வேண்டும். கணக்கு வழக்குகளைப் பார்த்துகொள்வதும் அலுவலக நிர்வாகமும் ஆப்பரேட்டர் பொறுப்பு. நான் பீரோ சீஃப் என்று அழைக்கப்பட்டேன். மூன்றே பேர் இயங்கும் அலுவலகம்; எனவே பிரச்சினைகள் இல்லாமல் வேலை நடந்தது.

தினமும் கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்குப் போவேன். வீரேந்திர பாட்டால் முதலமைச்சராகவும், ராமகிருஷ்ண ஹெக்டே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்று நிர்வாகத்தை அருமையாக நடத்தி வந்த காலகட்டம். முதல்வரும் நிதியமைச்சரும் பிற அமைச்சர்களும் செய்தியாளர்களுடன் எவ்வித வித்தியாசமும் இன்றி நெருங்கிப் பழகுவார்கள். மாநிலத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு நேரில் செல்வதும் மற்ற சாதாரண நிகழ்வுகளை செய்தித்தாள்களிலிருந்தே எடுத்து அனுப்புவதுமான நடைமுறையனைக் கடைப்பிடிப்பதுதான் சாத்தியமாக இருந்தது. பிற மாநிலத்தில் பணிசெய்தாலும் சொந்த மாநிலத்தின் மீதும் நாட்டம்மில்லாமல் போகாது அல்லவா ? தினமும் தமிழ் நாட்டு நிலவரம் பற்றி டெலிப்ரிண்டர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து

கொள்வேன்.

தமிழ் நாட்டில் எம்ஜிஆரும் மதியழகனும் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றதில் இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் முதல்வராகும் வாய்ப்பினை இழந்துவிட்டிருந்தார். கருணாநிதி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நான் பெங்களூருக்குச் சென்றுவிட்டிருந்தேன்.

நெடுஞ்செழியன் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசித் தாமே ஒரு கேலிப் பொருளாக ரசிக்கப்படுகிறோம் என்கிற பிரக்ஞையின்றித் தமது பேச்சைத்தான் ரசிக்கிறார்கள் என்ற நினைப்பில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாரேயன்றி, நிர்வாகத் திறமை ஏதும் இல்லாதவர். மேலும் அரசியல் சாதுரியமும் அற்றவர். முதல்வர் பதவிக்கு அவர் வராமல் போனது நல்லதுதான். அந்தச் சமயத்தில் கருணாநிதிதான் முதல்வர் நாற்காலியில் அமர முற்றிலும் தகுதி பெற்றவராக இருந்தார். அவர் மட்டும் சுய நலமில்லாதவராகவும், முதல்வர் பதவியை மக்கள் நலனுக்காகவே பயன் படுத்தவேண்டும் என்று கருதுபவராகவும், உண்மையிலேயே அண்ணாவின் இருதயத்தை இரவலாகப் பெற்றவராகவும், முகஸ்துதியை விரும்பாதவராகவும், தற்புகழ்ச்சியில் திளைக்காதவராகவும் இருந்திருப்பின் அவரால் தமிழகம் எவ்வளவோ பயனடைந்திருக்கும். 1998 ல் நான்காம் தடவையாக முதல்வரானபோது அவருக்கு இருந்த பொது நல அக்கரை 1969-ல் முதல் தடவை முதல்வரானபோதே இருந்திருக்கலாகாதா ?

ஆனல் 1971-ல் கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்வரானபோது அவரால் தமிழகம் பெற முடிந்த சில நற்பலன்களையும் இந்திரா தமக்கு ஏற்பட்ட நெருக்கடியை இந்தியாவுக்கே ஏற்பட்டுவிட்ட நெருக்கடியாக மாற்றியபோது (இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்பது அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பருவா தேசதிற்குத் தந்த கோஷம்!) மிகத் துணிகரமாகவும் நடுநிலையோடும் நெருக்கடிக் கால அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமலும் நடந்துகொண்டதையும் காமராஜரே ஒருமுறை சொன்ன மாதிரி நாம் மறக்கலாகாது. அந்தச் சமயத்தில் நெருக்கடி நிலையை வெறும் ஏட்டளவிலேயே வைத்திருந்த இரு தீவுகளாக இருந்தவை தமிழ்நாடும் குஜராத்தும்தான்.

கருணாநிதியின் முதல் முறை முதல்வர் பதவிக் காலத்தில்தான் பஸ் போகாத ஊரே இல்லை என்னும்படியான அளவுக்குத் தமிழ் நாட்டில் சாலைப் போக்குவரத்து அதிகரித்தது. போக்குவரத்து வசதி என்பது பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான

ஊக்குவிப்பு அல்லவா ? அதேபோல் துறைகளின் கவனிப்பில் இருந்த தொழில்-வர்த்தகம் சார்ந்த பிரிவுகளையெல்லாம் வேறுபடுத்தித் தனித்தனி அரசு நிறுவனங்களாக அமைத்த புத்திசாலித்தனமும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது. உலக வங்கியிடமிருந்து ஒவ்வொரு அரசு நிறுவனமும் தனித்தனியே நீண்ட காலக் கடனாக நிதி உதவி பெற்றுச் செயல்பட இவ்வாறான ஏற்பாடு வழிசெய்தது. இது மாநிலத்தில் தாராளமான பணப் புழக்கத்திற்கு மறைமுகமாக உதவியது. வேலை வாய்ப்பும் பெருகச் செய்தது. நிலத்தடி நீரைப் பெருமளவில் பயன் படுத்தச் செய்து வேளாண்மையை விஸ்தரித்தது மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம்.

வீரேந்திர பாட்டாலும், ராமகிருஷ்ண ஹெக்டேவும் ராம லக்ஷ்மணராக நிர்வாகம் செய்ததில் நான் பணியாற்றிய கர்நாடகம் சிறப்பாகவே வளர்ச்சிபெற்று வந்தது. முதல்வர், நிதியமைச்சர் இருவருமே அடக்கமானவர்கள், பதவி வகிப்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே என்று உணர்ந்து செயல்பட்டவர்கள். அந்தச் சமயத்தில் உடுப்பியில் விசுவ ஹிந்து பரிஷத் மிக விரிவாக ஏற்பாடு செய்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் அதுபற்றிச் செய்தி திரட்டி அனுப்ப உடுப்பிக்குச் சென்றேன். மாநாட்டின் மேடையில் ஓர் அரிமாபோல் அமர்ந்திருந்த புருஷோத்தமனைப் பார்த்தேன். விசாரித்தபோது, அவர்தான் குருஜி என்றார்கள். ஒரு மந்திரச் சொல் மாதிரி அது மிக விசையுடன் என்னுள் இறங்கியது. துறவின் தூய்மையும், தொண்டின் தீவிரமும் ஜொலிக்கும் அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் அசாதாரணமானவர் எனப் புரிந்துகொண்டேன். மாநாட்டின் இடைவேளையில், உணவுக்குப் பிறகு அவரைச் சந்தித்துப் பேச அவகாசம் கேட்டேன். மிகுந்த கனிவுடன் சம்மதித்தார்.

ஒரு செய்தியாளானாக அவரை நெருங்கியபோதிலும், அவரது கம்பீரமும், அதே சமயம் அவரது எளிமையான பழகும் தன்மையும், ஆசானிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்கும் ஒரு சீடனைப் போல என்னை மாற்றிவிட்டன. காந்திஜி கொலை தொடங்கிப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் பெற்றேன் என்றாலும், அதிகம் வெளிவராத காஷ்மிர் விவகாரத்தில் அவரது பங்கையும், அவருடைய இயக்கத்தினர் அவரது கட்டளைக்கு இணங்க உயிரைத் துச்சமாகக் கருதி ஆற்றிய துணிகரச் செயல்களையும் பற்றி அவர் வாயிலாகவே கேட்டறிந்த தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்தால்

போதுமானது.

1947-ல் ஜம்மு–காஷ்மிர் சமஸ்தானத்தை ஆண்டுவந்தவர் ஹரி சிங். இன்று தம் சொந்த மாநிலத்திற்கு வெளியே வாழ்ந்துவரும் கரண் சிங்கின் தந்தையார். முஸ்லிம் காஃன்பரன்ஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய ஷேக் அப்துல்லா, அதனை நேஷனல் கான்ஃபரன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்துகொண்டிருந்தார். ஹரி சிங்கின் பிரதான அமைச்சராக இருந்தவர் மெஹர் சந்த் மஹாஜன் என்பவர். அந்தக்காலத்தில் ஜம்மு- காஷ்மிருக்கு பாரதத்தின் வழியாகப் போக்கு வரத்து வசதி எதுவும் இல்லை. லாஹூர்தான் அவர்களுக்கு ஆசார வாசல்போலிருந்தது. அந்த லாஹூர், பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அது பாகிஸ்தானுக்கு மிகவும் வசதியாகவும் ஹரி சிங்கிற்குச் சங்கடமாகவும் ஆயிற்று. சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மிரை பாரதத்துடன் இணைக்க முற்பட்டபோது இதைக் காரணம் காட்டினார், ஹரி சிங். ‘எனது சமஸ்தானம் சுதந்திரமாக இயங்குவதையே விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமல் பாரதமா, பாகிஸ்தானா என்ற கேள்வி எழுமானால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பாரதத்துடன் எப்படி இணைவது ? மேலும் இங்கு அரசியல் என்ற பெயரில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற ஷேக் அப்துல்லாவுடன் சகோதர பாசத்துடன் பழகும் நேரு பிரதமராக உள்ள பாரதத்துடன் இணைவது அப்துல்லாவின் கொட்டத்தை வேறு அதிகரிக்கச் செய்துவிடுமே ? ‘ என்று தயங்கினார், அரசர் ஹரி சிங். பட்டேல் எவ்வளவு சொல்லியும் மன்னர் இணங்கவில்லை. சமஸ்தானத்தின் பிரதமர் மஹாஜனை அழைத்தார், பட்டேல்.

‘நீங்கள் ஒருவரிடம் தூது செல்ல வேண்டும்; அவர் உங்கள் மன்னரிடம் பேசினால் மன்னர் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்கச் சம்மதித்துவிடுவார் ‘ என்று மஹாஜனிடம் கூறினார். அப்படி வல்லபாய் பட்டேல் அடையாளங் காட்டிய பெருமகன்தான் குருஜி எனஅனைவராலும் மரியாதையுடனும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட கோல்வல்கர்.

குருஜி ஸ்ரீநகர் சென்று மன்னர் ஹரி சிங்கைச் சந்தித்தார்.மன்னருக்குப் பலவாறு அறிவுரைகள் கூறி சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க இணங்க வைத்தார்.

இந்த மாபெரும் சரித்திர சாதனையைச் செய்த குருஜி, நான் பலவாறு கேள்விகளால் துளைத்தெடுத்த பிறகுதான் காஷ்மிர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையத் தாமே ஒரு கருவியாக இருந்ததை வெளிப்படுத்தினார். எனது கேள்விகளைப் புன்னகைத்தே தவிர்த்து வந்த குருஜி, இறுதியில் ‘நீ விடமாட்டாய் போலிருக்கிறதே ‘ என்று நகைத்துத் தமது முயற்சியை ஒப்புக்கொண்டார்.

‘குருஜி, நீங்கள் இதனை ஏன் மறைத்து வைக்கவேண்டும் ? பல விஷயங்கள் இப்படி வெளியே தெரியாமல் போய்விடுவதால்தானே நமது சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப் படாமல் போகிறது ? ‘ என்று மிகவும் ஆவேசப்பட்டு வினவினேன்.

‘நிகழ்ச்சி நடந்ததாகப் பதிவு ஆகிவிட்டதல்லவா. அது போதாதா ? யாரால் என்றும் பதிவாவது அவ்வளவு முக்கியமா ? சரித்திரத்தில் முக்கியமாக ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் இருந்தால்தான் முழு விவரங்களையும் தவறாமல் பதிவு செய்வது அவசியம். நாம் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக. மேலும் பொதுவாக எமது இயக்கத்தில் நாங்கள் அவ்வளவாக விளம்பரம் செய்துகொள்ள விரும்புவதில்லை ‘ என்று சொன்னார் குருஜி.

ஹரி சிங் இணைப்பிற்குச் சம்மதித்த சந்தர்ப்பத்தில்தான் ஜின்னாவும் காஷ்மிரத்தைக் கபளீகரம் செய்ய அடியெடுத்து வைத்தார். அவர் தனது ராணுவ சிப்பாய்களை வனவாசிகள் போல வேடமணியச் செய்து காஷ்மிருக்குள் நுழைக்கப் போவதை உளவறிந்து வந்து முன்கூட்டியே எச்சரித்தவர்கள் குருஜியின் தொண்டர்கள்தாம். அதேபோல் ஸ்ரீ நகரை கபடவேடதாரிகளான பாகிஸ்தான் சிப்பாய்கள் அணுகிவிட்டபோது, அதற்கு முன்னர் இருபத்து நான்கு மணி நேரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று, பாரத ராணுவ வீரர்கள் போதிய எண்ணிக்கையில் வந்து சேரும்வரை நகரைப் பாதுகாத்த இருநூறு இளஞர்கள் குருஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட தொண்டர்களாவார்கள். ஸ்ரீநகர், பூஞ்ச், ஜம்மு ஆகிய இடங்களில் மின்னல் வேகத்தில் விமான தளங்களைச் சீரமைத்து பாரத ராணுவம் வந்திறங்கவும், பாகிஸ்தானின் தயவு இன்றி, மக்களுக்குத் தேவையான

பொருள்கள் சீராகக் கிடைக்கவும் வழி செய்த கண்மணிகளும் குருஜியால் வளர்க்கப்பட்டவர்களே. அதுமட்டுமா, பாரத விமானப்படையினர் தவறுதலாகப் பாகிஸ்தானிய சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகள் பாயக் கூடிய பகுதியில் வெடிமருந்துப் பெட்டிகளைப் போட்டுவிட்டு கையைப் பிசைந்து

கொண்டிருந்தபோது, எட்டு இளைஞர்கள் துணிவுடன் பெட்டிகள் இருந்த பகுதிக்குப் பாய்ந்து சென்று அவற்றை மீட்டுவந்தனர். இந்தசாகசச் செயலில் நால்வர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்தனர். அந்த தீரர்களும் குருஜியின் சீடர்கள்தாம்.

காஷ்மிர் மீட்புப் போரில் குருஜியின் சீடர்கள் ஆற்றிய கடமையைக் கண்டு வியந்த ராணுவ அதிகாரி ஒருவர் பிற்பாடு குருஜியிடம் கேட்டார்: ‘உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதைப்பற்றறியும் கவலைப் படாமல் இவ்வளவு சாகசம் புரிகிறார்களே, நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் கற்றுக் கொடுக்கிரீர்கள் ? ‘

குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம்: ‘கபடி1 ‘

இவ்வாறு குருஜியின் தொண்டர்கள் குருதி சிந்திக்

கொண்டிருந்தபோது நேருவால் காஷ்மிரச் சிங்கம் எனப் பாராட்டப்பட்ட ஷேக் அப்துல்லா என்ன செய்துகொண்டிருந்தார் எனத் தெரிந்துகொள்ள ஆவல் எழுவது இயற்கைதான். அந்தச் சிங்கம் கர்ஜனை செய்தவாறு பாகிஸ்தான் சிப்பாய்கள் மீது பாய்வதற்குப் பதிலாகத் தன் மனைவி, பிள்ளை குட்டிகளுடன் இப்போது மும்பை என அறியப்படுகிற பம்பாயில் போய் பதுங்கிவிட்டது! வெடி குண்டுச் சத்தம் கூட எட்டாத தொலைவு! ஆனால் அதே சிங்கம் துப்பாக்கி ஓசையெல்லம் அடங்கியான பிறகு ஓடோடி வந்து ஆட்சிபீடத்தில் ஏறி அமர்ந்து

கொண்டது, நேருவின் பேராதரவுடன்!

குருஜியின் வாய்மூலமாகவே அவரது சீடர்களின் வீரஞ்செறிந்த காஷ்மிர் சாகசச் செயல்களைக் கேட்டறிந்தவன் நான். இதுதான் கருவிலே திருவென்பது! ஆனால் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்கத் தோன்றலாம். குருஜியிடம் விவரம் கேட்டு நான் பதிவு செய்த செய்தி வெளிவந்த கன்னட, ஆங்கில செய்தித்தாள்கள் என்னிடம் உள்ளன. ஆனால் 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சாதாரண நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் அச்சான அவை எந்த நிலையில் இருக்குமோ தெரியாது. மேலும் எனது ஆவணங்களும் புத்தகங்களும், சென்னையிலும் பெங்களூரிலுமாகச் சிதறிக் கிடக்கின்றன. எனது ஆவணங்கள் உடனடியாகக் கிடைக்கவிடினும் ‘காஷ்மிர் ‘ என கூகிளில் தேடினால் நான் பதிவு செய்திருப்பது அவ்வளவும் உண்மை என்று தெரியவரும். என்ன, சிறிது பொறுமை தேவைப்படும், அவ்வளவுதான். ஏதேனும் ஒரு இடத்தில் விவரங்கள்

சிக்கிவிடுவது உறுதி.

சரி, இதில் ஹிட்லர் எங்கிருந்து வந்தார், கோல்வல்கர் விதந்தேத்தும் விதமாக ?

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மிரளச் செய்த ஹிட்லரின் ஜெர்மனியை அனைவருமே வியந்து பாராட்டிய காலம் ஒன்று இருந்தது. அது ஹிட்லரின் இன வெறியாட்டம் வெளிவராத காலம். சுபாஷ் பாபு கூட பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட ஹிட்லருடன் கை கோத்தவர்தாம். ஹிட்லரின் இனவெறி அப்போது வெளிப்பட்டிருக்கவில்லை. முதலாம் உலகப் போரின் போதே சாகசம் செய்த தேசம் ஜெர்மனி. ஆகையால் தொடக்க காலத்தில் ஹிட்லரைப் பலரும் விதந்தேத்தியதுபோலவே கோல்வல்கரும் விதந்தேத்தியிருந்தாலும் அதில் குறையேதும் காணத் தேவையில்லை. இந்த சமாசாரம் எனக்கு அன்று தெரிந்திருந்தால் இது பற்றியும் அவரிடமே நேரில் கேட்டிருப்பேன்.

குருஜி, குருஜி என்று சீடர்கள் கொண்டாடுவது அவர் விலங்கியல் பேராசிரியராகக் காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோதே தொடங்கிவிட்டது. எனவே அவர்

பொது வாழ்விற்கு வந்த பிறகு வெறும் மரியாதைக்காக இடப்பட்ட பெயர் அது என எண்ணவேண்டாம்.

விவரம் தெரிந்த பெரியவர்கள் அனைவரும் குருஜியைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறர்கள். அவற்றையெல்லாம் அடுக்கிகொண்டு போவது சூரியனை அகல் விளக்கால் அடையாளம் காட்டுவதுபோலாகும். எனக்கு எதற்கு அந்த வீண் வேலை ?

இவ்வளவும் சொன்ன பிறகு கோல்வல்கரின் பரம்பரை என எம்மை அடையாளப்படுத்துவது எமக்குப் பெருமை சேர்க்கும் மரியாதையே என்பதில் ஐயமிருக்காது. ஆனால் சிலருக்கு குருஜி, குருஜியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்கிறேனே யார் அவர், எது அவரது அமைப்பு என்ற ஐயம் எழலாம். அதையும் மறைப்பானேன் ?

குருஜி என லட்சக் கணக்கானோர் இன்றளவும் போற்றும் மாதவ சதாசிவ கோல்வல்கர், அகில பாரதத் தலைவர் என்ற நிலைக்கு ஈடான சர் சங்க சாலக்காக அவர் சார்ந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாருக்குப் பிறகு பொறுப்பேற்றவர். அவர் சார்ந்திருந்த அமைப்புதான், ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் என்கிற பேரியக்கம். குருஜியின் வழிகட்டுதலில்தான் அது மாபெரும் சக்தி

யாக உருவெடுத்தது.

சர்வ தேச வியாபகம் உள்ள திண்ணை இணைய தள இதழில் நான் முன்கூட்டியே திட்டமிடாத நிலையில், அது பற்றி எழுதிப் பெருமை பெற வாய்ப்பளித்த நண்பர் கற்பக விநாயகம் அவர்களை என்றென்றென்றும் என்னால் மறக்கவியலாது!

++++

malarmannan79@rediffmail.com

Series Navigation