உரத்த சிந்தனைகள்- 6

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ராமச்சந்திரன் உஷா


காணாமல் போகாத வாசகர்கள்

எழுத்தாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படிப்பவர்களைப் பற்றி ஒரு செய்தி கூறினார். நல்ல படிப்பாளிகள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் முன்பு பாக்கெட் நாவல் வாசிப்பவர்கள் இப்போது தொலைக்காட்சித் தொடருக்குத் தாவி விட்டார்கள் என்றார்.

நல்ல எழுத்தைத் தேடிப் படிக்கும் ரசிகர்கள் இன்னும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இணையம் நல்ல தகவல் தொடர்ப்புச் சாதனமாய் விளங்குவதால், இத்தகைய விஷயங்கள் பரவலாய் அறியப்படுகின்றன. சமீபத்தில் பலராலும் பாராட்டப் பட்ட தொடர், தமிழிழோவியம் இணையத்தளத்தில் ‘சித்ரன் ‘ எழுதிய ‘கோடிட்ட இடங்கள் ‘ . இவர் பல பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதியுள்ளார். சின்ன கரு, அதை சுவைப்பட திரைப்படமாய் எடுக்கும் அளவிற்கு நாவலாய் மாற்றியுள்ளார். நாயகனிடம் அவன் நண்பன் ரயில் ஏறும் அவசரத்தில், போகிற போக்கில் அலுவலகத்தில் ஒரு பெண் அவனைக் காதலிப்பதாய்ச் சொல்லிவிட்டுப்

போகிறான். அலுவலகத்தில் இருக்கும் அரைடஜன் பெண்களில் இவளா, அவளா என்று ஒரே குழப்பம்தான் அவனுக்கு.

கடைசியில் …. படித்துப் பாருங்கள். கதையின் ஹைலைட் ,ஆரம்பத்தில் வரும் டைரிக் குறிப்புக்கள்.

இக்கதையைக் குறித்து நான் எழுப்பிய கேள்விகளும், அதற்கான சித்ரன் அவர்களின் பதிலும்,

இது நீங்கள் எழுதிய முதல் நாவலா ? இந்த மிக சிறிய நாட்( கரு), கதையாக உருவானக் கதையைப் பற்றி சொல்லுங்கள் ?

சித்ரன் அவர்களின் பதில்

கோடிட்ட இடங்கள் என் முதல் நாவல்தான். இதற்கு முன் கல்கியில் ‘மனதில் உனது ஆதிக்கம் ‘ என்கிற ஒரு 4 வாரத் தொடர் எழுதியிருக்கிறேன். நாவலெழுதுவதைவிட சிறுகதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம் எனக்கு. கதைக் கரு! அது எப்படி உருவானது என்பது பற்றி கேட்டிருக்கிறீர்கள். ‘கரு ‘ எல்லாம் என் மற்றும் என் நண்பர்களின் அனுபவத்திலிருந்து கிடைத்ததுதான். இதில் வரும் கேரக்டர்களில் கொஞ்ச பேர் நான் முன்பு வேலை செய்த அட்வர்டைசிங் கம்பெனியில் உலவிக்கொண்டிருந்தவர்கள். இதில் வரும் சம்பவங்களைக்கூட நிஜ வாழ்விலிருந்தே உருவியிருக்கிறேன். அளவான கற்பனை நெய்யும் கலந்த கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாக்கு இது. அத்தியாய முகப்பில் வரும் ‘கிருஷ்ணாவின் டைரிக்குறிப்பிலிருந்து ‘-ல் வரும் அம்மா ஒரு 80% நிஜ மனுஷி. அந்தக் கேரக்டரை சரசுராம் மிக அழகாக எனக்கு எழுத்தில் வடித்துக் கொடுத்தார். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைத்திருந்தால் இதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்றுகூடத் தோன்றுகிறது. என் முதல் நாவல் நிறைய பேருக்குப் பிடித்திருந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி திரு சித்ரன்.

அடுத்து மதுரைத் திட்டத்தில் மலேசிய எழுத்தாளர். ரெ.கா அவர்களின் இரு நாவல்கள்- அந்திமகாலம், காதலினால் அல்ல. இரண்டுமே மலேசியப் பிண்ணணியில் எழுதப்பட்டது.

அந்திமகாலம். மனிதனுக்கு நாலாப்புறமும் வரும் பல்வேறு பிரச்சனைகள். கதையை எப்படி முடிப்பார் என்று ஆவலைத் தூண்டிவிடுகிறார். சில இடங்களில் மனம் நெகிழ்ந்து கண் கலங்கிவிடுவது உறுதி. ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையாய் விறுவிறுப்பாய்ப் போகிறது. மிகவும் அருமையாய் வந்துள்ள நாவல், யார் கண்ணிலும் படாமல் போனது மிக வருத்ததிற்குரியது. கடல் போன்று விரிந்துள்ள இணையத்தில் இப்படிச் சில முத்துக்களும் மூழ்கிப் போகின்றன. இணைய இதழ் ஏதாவது எழுதியிருக்கலாம்.

அதன் சுட்டி,

http://www.tamil.net/projectmadurai/pub/pm0172/antima.html

காதலினால் அல்ல!

காதல் கதைதான், அதை வேறு ஒரு திசையில் கொண்டு செல்கிறார்.

http://www.tamil.net/projectmadurai/pub/pm0148/reka3.html

ஜனரஞ்சகமான பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதியவர்கள் ஜெயகாந்தன், பிரபஞ்சன், பி. வி. ஆர், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராதாரமணன், ரமணிசந்திரன், இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் . ஆனால் இவர்களுக்குப் பிறகு பத்திரிக்கைகள் ஏன் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை ? கல்கியில் ஓரளவு கதைகள் நன்றாக இருக்கிறது. ஆ.வி எப்பொழுதாவது நல்ல சிறுக்கதை கண்ணில் படும். ஆனந்தவிகடன், அமுதசுரபி, கலைமகள் இவை எல்லாம் ஏன் சிறுகதை, நாவல்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படுவதில்லை ? தொடர்கதைகள் முழுவதுமாய் நின்றுவிட்டது. படிக்க ஆள் இல்லை என்று வாசகர்கள் மீது பழியைப் போட வேண்டாம், நல்ல எழுத்தைத் தேடித்தேடி, வெறுத்துப்போய் இன்று பத்திரிக்கையில் வரும் கால், அரை பக்கக் கதைகளைத்தான் யாருமே படிப்பதில்லை. இலக்கிய இதழ்களில் வரும் தலையும் புரியாத, காலும் புரியாத கதைகள் அல்லது வணிகப் பத்திரிக்கையில் வரும் கடைசி வரியில் மனம் திருந்தும், மாறும் கதைகளை எத்தனை வகையாய் படிப்பது ?

காதல் என்பது எதுவரை

சித்ரன் அவர்களின் கதையில் வருவதைப் போல, அலுவலகத்தில் உடன் பணிப்புரிபவர்கள் காதல் கல்யாணம் செய்து கொள்ளுவது அதிகரித்து வருகிறது. இவற்றை காதல் கல்யாணம் என்று சொல்லிக் கொண்டாலும் இது கணக்குப் போட்டு செய்யப்படும் காதல். இனம், சாதி- சாதியில் உட்பிரிவுகள் பரவாயில்லை, குடும்பம், சொத்து, அழகு அனைத்தையும் அலசி ஆராய்ந்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லும் பொழுதே இந்த பிளஸ் பாயிண்டுகளைச் சொன்னதும், பரவாயில்லையே பெண்/பையன் புளியங்கொம்பாய்த்தான் பிடித்திருக்கிறான் என்று பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். ஆரம்பத்தில் ஆண்/பெண் எதிர்பாலரைக் கவர நல்ல வேஷம் போடுகிறார்கள். ஆனால் கல்யாணம் ஆகி சில மாதங்களிலேயே இந்த வேஷம் பல்லிளித்து விடுகிறது. பெற்றோர்களும் நீயாகப் பார்த்துக் கொண்ட வாழ்க்கைதானே என்று கைகழுவிவிடுகிறார்கள்.

ஆனால் சுயநலம் பார்க்காமல், வருடக்கணக்காய்க் காதலித்து பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே நடக்கும் காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதில்லை. தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்கிறார்கள். பரஸ்பர மரியாதையும், விட்டுக்கொடுத்தலும் இத்தகைய காதல் திருமணங்கள் வெற்றிக்குக் காரணம். தயவு செய்து சினிமா நட்சத்திரங்களின் காதல்களைக் கணக்கில் கொள்ள வேண்டாம்.

சொல்ல முடியாத கதைகள்

வளைக்குடா நாடுகளில் வீட்டுவேலைக்கு வரும் பெண்களில் இந்தியர்கள் மிகக்குறைவு. வேலையில் சுமார் என்றாலும் இந்தோனிஷிய பெண்களின் வெள்ளை தோல் அழகால் அவர்களுக்கு பணக்காரக்குடும்பங்களில் நல்ல மவுசு.

அடுத்ததாய் பங்களாதேஷ் பெண்கள். இந்த இரண்டு நாட்டு பெண்களும் இஸ்லாமியர்களாய் இருப்பதாலும் வெகுவாய்

வரவேற்கப்படுகின்றனர். அடுத்ததாய் ஸ்ரீலங்காவை சேர்ந்த சிங்களவர். இவர்கள் தொகைதான் மிக அதிகம்.

பொதுவாய் மெயிட் விசாவில் வந்து ஒரு வீட்டோடு தங்கி வேலை செய்பவர்களும் உண்டு. பலர் விசா தந்து ஊரில் இருந்து ஆளை அழைத்து வந்துவிடுகிறார்கள். அந்த பெண்கள், தாங்கள் தங்கும் வீட்டில் வேலையை முடித்துவிட்டு, பிறகு மற்ற வீடுகளில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று பேசிக்கொண்டு வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். வேலை என்றால் மிக சுத்தமாய், ஒழுங்காய் இருக்கும். ஆனால் ஊரில் பெற்றவர்கள், உடன்பிறந்தோர், பிறகு கணவன், பிள்ளைகள் ஊதாரிதனமாய் செலவழிக்க இவர்கள் பாடுபடுகிறார்கள். சில பெண்கள் இந்த விஷயத்தில் சாமார்த்தியமாய் இருக்கிறார்கள். கல்யாணம், பிள்ளைக்குட்டி தொந்தரவே வேண்டாம் என்று சம்பாதிக்கும் பணத்தில் நகை, ஊரில் வீடு, நிலம் வாங்கிக் கொண்டு சுதந்திரமாய் இருக்கிறார்கள்.

அதிலும் ரம்ஜான் மாதத்தில் இவர்களுக்கு வேலை இருபத்திநாலு மணிநேரமும் பெண்டு கழண்டு விடும். எஜமானர்களின் பாலியல் தொல்லைகள், எஜமானியின் கொடுமை என்று இவர்களின் கண்ணீர் கதைகள் மாறாத தொடர்கதைதான். ஆனாலும் இன்றும் ஸ்ரீலங்காவில் இருந்தும், பங்களாதேஷ்ஷில் இருந்தும் சிறுபெண்கள் வந்து குமிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

படித்தது, பார்த்ததும்

பங்களாதேஷ் தனிநாடாக மாறுவதற்கு முன்பு கிழக்கு வங்காளம் என்று அழைக்கப்பட்டது. என் கணவர் கீழ் அஸ்ஸாமில், பொங்கைகாவ் ரீபைசரீஸ் பணியில் இருந்தார். சில மைல்களில் பங்களாதேஷ் ஆரம்பிக்கும். இன்னொரு பக்கம் பூடான். அஸ்ஸாம் மிக அழகானது. குளிரும் மிதம், வெய்யிலும் இதமாய் இருக்கும். தினமும் மத்தியானம் இரண்டு மணியானால் மழை கொட்ட ஆரம்பிக்கும். அங்கு பார்த்த விசித்திர அம்சம், கிணற்றில் தண்ணி இழுக்கப்படாமல் மொள்ளப்படும். அதாவது கிணற்றில், சிறு கயிற்றைப் பக்கெட்டில் கட்டி மொண்டு கொள்ளுவார்கள். எந்தக் கிணற்றிலும் நீர் சேந்துவது என்பது கிடையாது, காரணம் நீர் அவ்வளவு மேலே இருக்கும். அவர்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றாலே புரியாது.

வீட்டுப் பக்கத்திலேயே சிறு, சிறு ஓடைகள், நீர் அவ்வளவு தெளிவாய் இருக்கும். மக்களும் மிகவும் நல்லவர்கள். ஆனால், சட்டவிரோதமாய் குவியும் பங்களாதேஷ் அகதிகளால் வேலை வாய்ப்பு குறைந்து நாற்பத்தி எட்டு மணி நேரம், அறுபது மணி நேரம் எல்லாம் கதவடைப்பு, பந்த் நடக்கும். வருடத்தில் மூன்று மாதங்கள் உருளைக்கிழங்கு தவிர வேறு காய்கறியே கிடையாது.

கிழக்குவங்காளத்தைக் களமாய்க் கொண்டு படித்த நாவல் அதீன் பந்தோபாத்தியாய எழுதிய ‘ நீலகண்டப் பறவையைத் தேடி ‘ . மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ண மூர்த்தி. சாகித்ய அகாதமி பரிசுப் பெற்ற நாவல் இது. கதை சுதந்திரப் போராட்ட காலம். முஸ்லீம் லீக் உருவான காலக்கட்டம். அரசியல் எப்படி மதத் துவேஷத்தை உண்டு பண்ணுகிறது என்பது கதை. கதையிலும் எங்கும் காணப்படுவது மழை, தண்ணீர், ஆறு தான்.

மொழி பெயர்ப்பு என்ற உணர்வேயில்லாமல் படித்த இன்னொரு புத்தகம் காண்டேகரின் ‘யயாதி ‘. கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழி பெயர்த்தது. மகாபாரதப்பாத்திரங்களை தன் படைப்பில் கொண்டு வந்த முதல் எழுத்தாளர் இவரா ? முன்னுரையையே பிரமாதமாய் ஆரம்பித்திருப்பார். ஏன் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன ? ஏதோ கணவனும், மனைவியும் சேர்ந்து வாழுகிறார்களே தவிர, மனதில் அடியில் கசப்பு மிஞ்சியே கிடக்கிறது. யயாதிக்கு மூன்று உலகில் இருக்கும் அத்தனையும் கிட்டியும், சந்தோஷம் மட்டும் கிடைக்கவில்லை என்பது சாபம். நாமும் இன்றைய தேதியில் யயாதிப் போல் ஆகிவிட்டோமா ? எல்லாம் கிடைக்கிறது சந்தோஷம், நிம்மதி ? ஏதோ ஒரு குறை மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அது என்னவென்று நமக்கு தெரிவதில்லை.

ஆனால் இந்த வருத்தமெல்லாம் கொஞ்சம் வயதாக ஆக மறைந்துவிடுகிறது. அதில் ஆண்கள் அப்படியே மனைவி சொல்லே மந்திரம் என்று மாறிவிடுகிறார்கள். வாலிப வயதில் காணாத அந்நியோயம் இப்பொழுது வந்து விடுகிறது. இந்த பழைய கதை

தெரியாத மருமகள்கள் மாமியார் பேச்சைக் கேட்டு மாமனார் ஆடுவதாய் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த ஐம்பதில் வரும் காதலை, பெண்கள் பெரியதாய் பாராட்டுவதில்லை. அடிமனதில் பழைய காயங்கள் மாறாமல் அப்படியே இருப்பதால், கணவனைக் கிள்ளுக்கீரையாய் நடத்த ஆரம்பிக்கிறார்கள்.

பயணம்

சோழமண்டலத்தில், ‘கோவில் இல்லாத தெருவில் குடியிருக்க வேண்டாம் ‘, என்று சொல்லப்பட்டதோ என்னும் அளவு

எங்குபார்த்தாலும் பிரமாண்ட கோவில்கள். நாங்கள் சென்றது நவக்கிரக யாத்திரை மற்றும் சில பெரிய

கோவில்கள். திருவையாற்றில் இருந்து ஆலங்குடிக்குப் போகும் வழியெல்லாம் பச்சைப்பசேல் என்ற வயல்கள்.

காவேரித்தண்ணீர் வழியெங்கும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அத்தனைக் கோவில்களும் தருமபுர ஆதீனம்

அல்லது தமிழக அரசின் அறங்காவல் துறைக்கு கீழ் வருவது. கஞ்சனூர் மட்டும் மதுரை ஆதீனம். ஆனால், கோவில் மிகவும் பழுதடைந்து எந்தவிதப் பராமரிப்போ, சுத்தமோ செய்யப்படாமல் இருந்தது. மற்றபடி அனைத்துக் கோவில்களும் மிக நல்ல

முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட பத்துவருடங்களாய்தான் இந்த நவக்கிரக யாத்திரை பிரபலமாகியுள்ளது.

குருபெயர்ச்சி போன்ற சமயங்களில் கட்டுக்கடங்காத கூட்டமாம்.

கிராமங்களின் ஊடே காரில் பயணிக்கும்பொழுது கண்ணில் பட்ட சுவாரசியமான சங்கதி, பல இடங்களில், முச்சந்திகளில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பெரியார் சிலைகள்.

பார்த்தப்படம்

மலையாளப்படம் ‘நந்தனம் ‘. நம் ‘அழகிய தீயே ‘ நாயகி நவ்யா நாயர், பிரிதிவிராஜ் (மறைந்த நடிகர் சுகுமாரனின் மகன்), கவியூர் பொன்னம்மா, ரேவதி நடித்தது. கதை சாதாரணக் காதல் கதைதான், ஆனால் கடைசியில் ஏழைப் பெண்ணின் நம்பிக்கையைச் சொல்கிறது. கதை முழுவதும் குருவாயூரில் நடைப்பெறுகிறது. கதையில் முக்கிய பாத்திரம் குருவாயூர் கிருஷ்ணன்தான். நாயகி சின்ன படத்தை வைத்துக் கொண்டு, தன் சுக, துக்கத்தையெல்லாம் தெய்வத்திடம் முறையிடுவது அழகு. படத்தில் எல்லாருமே நடிக்கவில்லை, பாத்திரமாகவே தெரிகிறார்கள். இக்கதை அங்குள்ள ‘தரவாட்டில் ‘ நடந்த உண்மை சம்பவமாம். படத்தில் ஒருக்காட்சியில் ஜேசுதாஸ் பாடுவதாய் வருகிறது. அந்தப் பாடல் ‘ஸ்ரீல வசந்தம் ‘ பாட்டில் அப்படியே ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ ‘ வில் முடிப்பார். புரந்தரதாசரின் கீர்த்தனைகள் என்றால் பீம்சேன் ஜோஷி தான் நினைவில் வருகிறார். அவர் பாடிக்கேட்க வேண்டும். புரந்தரதாசரின் கீர்த்தனைகள் பக்தி மட்டும் இல்லாமல் பல சோஷியலிச

கருத்துக்களையும் சொல்லும்.

வெறுப்படைந்த மாலைப்பொழுது

வெள்ளியன்று மாலை பார்த்திபன் நடித்த ‘குடைக்குள் மழை ‘ என்றபடத்தை, ஓரிஜினல் காசேட் என்று கடையில்

கொடுத்ததைப் போட்டுப் பார்த்தால், வசனம் புரியவேயில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. அதிலும் தம்பியாய் வரும் பார்த்திபனின் பாடிலாங்கலேஜ்ஜூம், வசனங்களும் வக்கிரத்தின் உச்சம். குணா, மூன்றாம் பிறை, காதல் கொண்டேன் இன்ன சில ஹிந்தி, ஆங்கில படங்களின் கதையை மொத்தமாய்ப் போட்டு, குலுக்கி எடுத்து புதுக்கதையாய் உருவாக்கியுள்ளார். கதை பரவாயில்லை என்றாலும் நாயகனாய் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். பல பத்திரிக்கைகள் இந்த படத்திற்கு எப்படி நன்றாக இருக்கிறது என்று நற்சான்றிதழ் தந்தார்கள் தெரியவில்லை. எனக்கு எப்போது தோன்றும் ஆச்சரியமான விஷயம்- பார்த்திபனின் பேட்டி மாறி மாறி ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வந்துக் கொண்டேயிருக்கிறதே அது எப்படி ? அந்தளவு பத்திரிக்கையாளர்களின் மனம் கவர்ந்தவரா பார்த்திபன் ?

தோழியர் வலைப்பதிவு

31- 10- 2004

—-

Series Navigation

author

ராமச்சந்திரன் உஷா

ராமச்சந்திரன் உஷா

Similar Posts