உரத்துப் பேச….

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

எஸ் என் நடேசன்


தமிழர்கள் வாழ்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கவிதை வடிவங்கள் ஒட்டி உறவாடின. சராசரியான தமிழ் அறிவு கொண்ட என்போன்றவர்களுக்கு கவிதைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. சில கவிதைத் தொகுப்புகள் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கவிதைகளின் வரிகள் மனத்தில் நெருடும். சில வரிகள் குற்றவுணர்ச்சியை தூண்டும். பல மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன.

இப்படிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு

ஆழியான எழுதிய உரத்துப் பேச… இந்த கவிதைத் தொகுப்பில் இருந்த கவிதைகள் பல சம்பவங்களை நினைவு கூரவைத்தது,

கவிதையில் ஒன்று ‘ ‘நிலுவை ‘

பேராதனை பல்கலைக்கழகத்தில் எனக்குத் தெரிந்தவர் மிகவும் வலிந்து, பலகாலம் கஷ்டப்பட்டு ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண்ணும் இவரிடம் கடைசியில் பரிதாபத்தால் இவர் காதலை ஏற்றுக் கொண்டாள். இருவருடத்தின் பின் எனக்குத் தெரிந்த ஆண், காதலியை கைவிட்டு தாய் தந்தை பார்த்த வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து வெளிநாடு சென்றார். காதலித்த பெண் உடல், மனநிலை பாதிக்கப்பட்டு நடைப்பிணமாக தனது பட்டப்படிப்பை முடித்தார்.

ஆழியாளில் – நிலுவை

நீ திருப்பித்தரலாம்

மணிக்கூட்டை

கை விளக்கை, கத்தரிக்கோலை

(கன்னி மீசை வெட்ட நி.யாய் கேட்டது நினைவு)

கடும்பச்சை வெளிர் நீலக் கோடன் சேட்டுகளை தரலாம்.

-இன்னமும் மிச்சங்களை..

இன்று பல்லி எச்சமாய் போனவற்றை,

உன் முகட்டில் சுவடாய்ப்

பதித்த

என் காட்டு ரோஜா உணர்வுகளையும்,

அள்ளியள்ளி தெளித்து

பூப் பூவாய்ப் பரவிய

திவலைக் குளிர்ச்சியையும்

எப்படி மறுதலிப்பாய் ?

எந்த உருவில் திருப்பி அனுப்புவாய் ?

மற்றையது ‘ ‘தேவைகள் ‘ ‘ என்ற கவிதை

மலையகத்தில் இருந்து ஒரு இளம் சிறுமி எனக்கு அறிமுகமானவர் வீட்டில் வேலை செய்தாள். அவளுக்கு அவர்கள் போர்வை கொடுத்தார்களா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. ஆனால் அவள் சாக்குபையில் சுருண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தேவைகள் :

கோணிப் பையால் உடல் மூடி

வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும் ‘ ‘எம்

குட்டி இளவாசிகளின் சின்னக் கைகளை

அம்மா நீ அறிவாயா ?

‘ ‘விடுதலையின் பேரால் ‘ ‘ என மற்றொன்று

விடுதலைக்காக ஆயுதங்கள் எடுத்தவர்கள் எதிரியை மட்டும் குறிவைக்கவில்லை. சகோதரர்களையும் குண்டுக்கு இரையாக்கி இருக்கிறார்கள். மிக கேவலமாக,

விடுதலையின் பெயரால்….

மனிதன் கடிக்கும்

கன்னத்தில் அறையும்

தொங்க விட்டு கம்பங்களில் கடைசித் தீர்ப்பெழுதும்

தொழுகைளில் தோட்டாக்களைச் சீறிப்பாயவிடும்

காட்டிக் கொடுக்கும்

காசு பிடுங்கும்.

இந்த கவிதைத் தொகுப்பில் சில மொழிபெயர்ப்பு கவிதைகளும் உண்டு. நிகழ்கால அரசியல், சமூக நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையில் தெரிந்து எடுக்கப்பட்டவையாகும்.

இந்த கவிதைத் தொகுப்பின் சிறப்பு இன, மத வேறுபாடுகளை கடந்தவை. பல கவிதைகள் பெண்களுக்காக குரல் எழுப்பும் போது மானிடத்தின் எதிரொலியாகவே இருக்கிறது.

நாம் பிறந்து வந்த தெற்கு ஆசிய பகுதி தற்காலத்தில் பெண்களின் உரிமை பொறுத்த விடயத்தில் உலகத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக கருதஇடம் உண்டு.

சமீபத்தில் Hanifa Deen என்ற பெண் எழுத்தாளர் வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் பெண்களுக்கு சமூகம் இழைக்கும் கொடுமைகளைப் பற்றி Broken Bangles நூலில் எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியம் இந்தக் கொடுமைகளை செய்பவர்கள் இவர்களின் கணவன், சகோதரன், மற்றும் தந்தையாகும்.

இலங்கையில் இருந்து ஏராளமான பெண்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிய சென்று இருக்கிறார்கள். இவர்களது வாழ்வு மிகவும் சோகமும் கொடுமையும் உள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தெற்கு ஆசியாவில் பெண்கள் அரசாங்கங்களை நடத்தியும் பிரயோசனமில்லை. ஒவ்வொரு பெண்களும் ‘ ‘உரத்துப் பேச ‘ ‘ வேண்டும்.

—-

uthayam@ihug.com.au

Series Navigation

எஸ் என் நடேசன்

எஸ் என் நடேசன்