உயர்ந்த மனிதர் ஜோச்சிம் அற்புதம்

author
0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

பாரி


கடந்த மாதம், மும்பை சேரியில் வசிக்கும் ஒரு கல்லூரி சென்று கல்வி பயில முடியாத நிலையில் வளர்ந்த மனிதர் ஒருவருக்கு உலகிலேயே மிக கெளரவமான மாக்சேசே விருது வழங்கப் பட்டிருக்கிறது. 53 வயதான ஜோச்சிம் அற்புதம் ஒரு தமிழர். நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும், 16 வயது ஆகும்போது அவரது தந்தை சொத்து அனைத்தையும் இழந்து விட்டார். வறுமையின் கொடுமையால் பட்டணத்தில் வேலை செய்ய முடிவெடுத்து, தன் மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செய்வது போல, இரயில் ஏறி மும்பைக்குப் பயணித்தார். மும்பையின் ஏராளமான சேரிகளிலேயே மிக மோசமான நிலையில் இருந்த செம்பூரில் சென்றடைந்து, வேலை தேட முற்பட்டார்.

அவருக்கு தச்சு வேலை சிறிது தெரிந்திருந்தாலும், அவரால் வேலை எதுவும் பெற இயலவில்லை. வேலை கிடைக்காத ஏமாற்றத்தால் அவர் வாடி வதங்கி விடாமல், சுற்றுமுற்றுமுள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு மன்றமைத்தார். ஒவ்வொரு மாலையும் இவர்கள் ஒன்றுகூடி மூலைகளில் கிடக்கும் டால்டா கேன், பாட்டில்கள், குச்சி, கரண்டி என கிடைக்கும் எதுவையும் எடுத்து தாளமிட்டபடி பாட்டு பாடி ஒன்று கூடுவார்கள். இப்படித் தினமும் ஒன்றுகூடி, அவர்களிடம் ஒரு கூட்டுறவை ஏற்படுத்தினார். அவருடைய பெயரை அங்கு யாரும் சரியாக உச்சரிக்க முடியாததால், அவரை ஜோக்கின் என்று எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொண்டார். சிறிது சிறிதாக அந்த சேரி மக்களிடம் பிரசித்தி பெறலானார். அவர் இப்படி பிரசித்தி பெற்றதன் மூலம், அந்த சேரியில் உள்ள குழந்தைகள் கல்வி பெறுவதற்காக, ஒரு சிறிய பள்ளியை ஆரம்பித்தார்.

ஏராளமான படித்தவர்களும் வசதியான வேலை பார்த்தவர்களும் அந்த சேரியில் வசித்து வந்தாலும், மற்ற பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த சேரியில் வசிக்கும் மக்களை நடத்தும் விதம் அவரை நொந்து போக வைத்தது. அந்த சேரி, மிக அசுத்தமாகவும், தண்ணீர் வசதி இல்லாமலும், கழிப்பறை வசதிகள் இல்லாமலும் ஒரு ஆரோக்கியத்தன்மை இல்லாததாக இருந்தது. அங்கு வசித்த மக்கள் தெரு நாயினை விட கேவலமாக கருதப் பட்டனர். அந்த நகராட்சிக்காரர்கள், சேரியை சுத்தம் செய்ய வரவில்லை என்றாலும் அங்கு சேர்ந்திருக்கும் குப்பைகளை அள்ளக்கூட வரமாட்டார்கள்.

ஒருநாள், அவர் கொஞ்சம் பழைய பேப்பர்களை வாங்கி, தன் பள்ளிக்கூடச் சிறுவர்களிடம் கொடுத்து, அங்குள்ள குப்பைகளை அள்ளி சுருட்டிக் கொண்டு சிற்றுலா செல்லலாம் எனக் கூறினார். சிறுவர்களும் சுற்றுலா என்றவுடன் குஷியாக அந்த குப்பைகளை அள்ளி வந்தனர். பின் அவர், அவர்களுடன் நகராட்சி அலுவலகம் சென்று, அங்கே அந்த குப்பையை கொட்டி விட்டு, ஜோக்கடித்து, பாட்டு பாடி ஜாலியாக வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் காலையில் சில போலீஸ்காரர்கள் வந்து அவரை அழைத்துக்கொண்டு சென்று விட்டனர். அவரை ‘ஏன் இப்படி செய்தாய் ? ‘ என்று கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு துளைக்க, அவரும், ‘வேறென்ன வழி எங்களுக்கு ? ‘ என்று கூறியபடி, ‘யாருமே எங்களுக்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் இருப்பதையே யாரும் பொருட்படுத்த வில்லை. நாங்கள் நகராட்சியிடம் எங்கள் சேரியை வந்து சுத்தப் படுத்தச் சொல்லிக் கேட்கவில்லை. அங்கு சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் குப்பையைத்தான் அள்ளிச் செல்லச் சொல்கிறோம். அதுவும் அவர்கள் வேலையைத்தான் செய்யச் சொல்கிறோம். ‘ இப்படியாய் அங்கு கடும் வாக்குவாதம் நடந்தது. ஆனால், கடைசியில், ஜோக்கின் வெற்றி பெற்றார். நகராட்சி ஊழியர்கள் தினமும் வந்து குப்பைகளை அள்ளிச் செல்ல வைத்தார்.

இதுவே அவர்களின் முதல் வெற்றி, இந்த முதல் வெற்றியால் அவர்கள் ஊக்குவிக்கப் பட்டு மற்ற காரியங்களில் ஈடுபடத் தொடங்கினர். ஜோக்கின் அந்த சேரி மக்களுக்காக ஒரு சங்கத்தினை நிறுவினார். அந்த சங்கத்தின் மூலம் சேரி மக்கள் ஒருவருக்கொருவர் உதவ முற்பட்டனர். பிற்பாடு, இந்த சங்கம் ஒரு தேசிய ஸ்தாபனமாய் மாறத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாய் மகளிர் பிரிவு ஆரம்பமாகி, அந்த சேரி மக்களுக்கு உழைத்து சம்பாதித்த பணத்தை சேவிக்க உதவி செய்தது. இந்த சேமிப்பின் மூலம், அங்கு எதுவும் இல்லா மக்களுக்கு உணவு, மருந்து, குழந்தைகள் கல்வி போன்ற தேவைகளை தீர்ப்பதற்காக கடன் வழங்கப் பட்டது. அதுவும் கடன் கேட்ட 15 நிமிடத்திற்குள் கடன் வழங்கப் பட்டது. இந்த அமைப்பின் மூலம் அவர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு வங்கி நிறுவனத்தைக் காணலானார்கள்.

வருடங்கள் ஆக ஆக, இந்த அமைப்பு சர்வதேச அளவில் வளரத் தொடங்கியது. கம்போதியா, தாய்லாந்து, வியட்னாம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள், உலக வங்கி போன்ற நிறுவனங்களிலிருந்து தேசீய வீடு மற்றும் புணர்வாழ்வு சம்பந்தமாய் ஜோக்கின் உதவி மற்றும் ஆலோசனை கேட்டு வரத் தொடங்கினர். இன்று, ஜோக்கினும் அவரது நண்பர்களும் மும்பையின் சேரியிலிருந்து உலகெங்கும் சென்று நகர்ப்புற ஏழ்மையை எப்படி எதிர்நோக்குவது என்பது பற்றி கற்பித்து வருகிறார்கள்.

தற்பொழுது சீட்டா கேம்ப்பில் வசித்து வரும் ஜோக்கினைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு மாக்சேசே நிறுவனத்திற்கு ஆறு மாதங்களாகின. செம்பூர் சேரிகளிலிருந்து புணர்வாழ்வடைந்துள்ள மற்ற மனிதர்களுடன் ஒருவராகத்தான், ஜோக்கினும் தற்பொழுது சீட்டா கேம்ப்பில் வசித்து வருகிறார். தற்சமயம் 21,000 குடும்பங்கள்தான் மும்பைத் தெருக்களில் வசிப்பதாகவும் இவர்களை சிறிது நிலம் கொடுத்து வீடு கட்டிக் கொள்ள அனுமதிப்பதன்மூலம் எளிதாக புணர் வாழ்வு படுத்தி விடலாம் என ஜோக்கின் நம்புகிறார். சேரிகளில் வாழ்பவர்கள் அங்கிருந்து வெளியேரத் துடித்துக் கொண்டிருப்பதாக அவர் நம்புகிறார்.

ஜோக்கின் ஒரு தீவிரமான நம்பிக்கைக்கும், பொறுப்புணர்வுக்கும் அடையாளமாகவும் உதாரணமாகவும் திகழும் ஒரு உன்னத மனிதர். அவரைப் போன்ற உயர்ந்த மனிதர்களை நாம் வழி தொடர்ந்தால், நாம் வசிக்குமிடங்களை தூய்மையாக வைத்திருப்பதோடு, நம்மை விட ஏழ்மையாய் இருக்கும் எளிய மனிதர்களை கண்ணியத்தோடும் கனிவோடும் நம்மால் அணுக இயலும்.

Series Navigation

author

Pari

Pari

Similar Posts