இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)


அன்பு நண்பரே:

நவம்பர் 2001-ல் (கிளாஸ்கௌவில் என்று நினைக்கிறேன்) நடைபெற்ற மாபெரும் போர் எதிர்ப்புக் கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் வந்து, நீங்கள் இறை நம்பிக்கைக் கொண்டவரா என்று என்னிடத்தில் கேட்டது நினைவிருக்கிறதா? நான் இல்லை என்றவுடன் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், அல்லது (எங்களின் பெற்றோர் உங்களுக்கு எதிராக எங்களை எச்சரித்துள்ளனர் என்று) உங்களது நண்பர் கூறியதையும், அல்லது உங்களில் இருவர் கோபத்துடன் என்மீது தொடுத்த கேள்விக் கணைகளை நான் மறந்திடவில்லை. அவையனைத்தும் என்னைச் சிந்திக்க வைத்தன. அத்துடன் உங்களுக்கும், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பல இடங்களில் உங்களைப் போன்றே கேள்வி எழுப்பிய அனைவருக்குமான எனது பதில்தான் இச்சிறு நூல். இது அதிகமும் வரலாற்றுடன் இடையிடையே கலந்துள்ளது; எனினும் இது போதும் என்று நான் நம்புகிறேன். நாம் பேசிக்கொண்டிருந்தபோது, மதம் பற்றியும் அரசியல் நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துவோர் பற்றியுமான எனது விமர்சனம், பொது இடத்தில் ராஜதந்திர ரீதியில் பேசுவது என்பதாக இருக்கவில்லை. சுரண்டுவோரும், மாற்றியமைப்போரும் தங்களின் சுயநல நோக்கங்களை முன்கொண்டு செல்லும் பொருட்டு மதத்தைச் சுய உரிமையுடன் எப்போதுமே பயன்படுத்தியுள்ளனர். முழுவதுமே இதுதான் என்றில்லை என்பது உண்மைதான். இயல்பாகவே ஏழைகளுக்காக உண்மையில் பாடுபடுகின்ற, ஆழ்ந்த அக்கறை கொண்ட மதம் சார்ந்த நபர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் வழக்கமாகவே, அமைப்பாகவுள்ள மதத்துடன் அவர்கள் முரண்பட்டே இருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரண்ட தொழிலாளர் அல்லது குடியானவப் பாதிரிகளை கத்தோலிக்கச் சர்ச் பலிகொடுத்தது. முற்போக்கான ஒரு சமூகத்திற்கு ஆதரவாகப் போதனை செய்த இஸ்லாமியர்களை இரானிய அயதுல்லாக்கள் கடுமையாக நடத்தினர்.

இந்த முற்போக்கு இஸ்லாமானது மனித சமூக முன்னேற்றத்திற்கான வழி என்பதாக உண்மையிலேயே நான் நம்பியிருந்தால், விளைவுகள் என்னவானாலும், பொது இடத்தில் அதை அப்படியே சொல்வதற்கு நான் தயங்க மாட்டேன். உங்களது நண்பர்களில் பலரும் ‘ஒசாமா’ என்ற பெயரை உச்சாடனம் செய்ய விரும்புவதை நான் அறிவேன். மேலும், 2001 செப்டம்பர் 11ல் அவர்கள் பேருவகை அடைந்ததையும் நான் அறிவேன். அவர்கள் தனித்து இருக்கவில்லை. உலகம் முழுவதிலுமே இது நடந்தது, இருப்பினும் இதற்கும் மதத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ஒரு ஆசிரியர் ஒசாமாவை விமர்சித்தார் என்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்ற அர்ஜென்டின மாணவர்களைப் பற்றி நான் அறிவேன். ‘வாழ்த்துக்கள்’ என்கிற ஒற்றைச் சொல் செய்தியை தனது ருஷ்ய நண்பர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பிய, நியூயார்க்கின் புறநகரில் வசித்துக்கொண்டிருந்த பெற்றோர்களின் வாரிசான ஒரு பதின்வயதுப் பருவ ருஷ்ய இளைஞரை நான் அறிவேன். அதற்கு, ‘நன்றி, அது மாபெரும் செயல்’ என்பதாக அவர்கள் பதிலும் அனுப்பியிருந்தனர். கால்பந்துப் போட்டிகளை ரசித்துக்கொண்டிருந்த கிரேக்க மக்கள் கூட்டத்தினர் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தை மறுத்து, அதற்குப் பதிலாக அமெரிக்க எதிர்ப்பு வாசகங்களை முழங்கி அமைதியைக் குலைத்தது பற்றி நாம் பேசினோம்; எனக்கு நினைவிருக்கிறது.

ஆயினும் இவை எதுவும் நடந்ததை நியாயப்படுத்திவிடாது. ஏதோவொன்றுக்கான இந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் பின்புலமாக இருக்கக்கூடியது வலுவுணர்வாக இல்லாமல், பயங்கரமான ஒரு பலவீனமாக இருக்கிறது. எந்தவொரு இஸ்லாமிய நாட்டையும்விட இந்தோ-சீன மக்களே அமெரிக்க அரசின் கைகளில் சிக்கித் தவித்தனர். பதினைந்து ஆண்டுகள் அவர்கள் மீது குண்டு மழை பொழியப்பட்டது பத்து இலட்சக் கணக்கான மக்களை அவர்கள் இழந்தனர். அமெரிக்காவின் மீது குண்டு வீசவேண்டும் என்றாவது அவர்கள் நினைத்தார்களா? அல்லது கியூபர்களோ அல்லது சிலி நாட்டவரோ அல்லது பிரேசில் நாட்டவரோ அப்படி நினைக்கவில்லை. இதில் கடைசியாகச் சொன்ன இரு நாடுகளும் தங்கள் நாட்டில் ஐக்கிய அமெரிக்கா திணித்த இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி இறுதியில் வெற்றி பெற்றனர். இன்றைக்கு, மக்கள் பலமிழந்தவர்களாக உணர்கின்றனர். எனவே அமெரிக்கா தாக்கப்படும்போது அவர்கள் கொண்டாடுகின்றனர். அத்தகைய செயல் எதைச் சாதிக்கப்போகிறது, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும், அதனால் பலன் அடையப்போவது யார் என்றெல்லாம் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் மறுவினை என்பது அச்சம்பவத்தைப் போலவே வெறுமனே குறியடையாளமானதுதான்.

ஒசாமாவும் அவரது குழுவும் ஒரு அரசியல் முட்டுச் சந்தை வந்தடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அது ஒரு மாபெரும் காட்சி என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. ஐக்கிய நாடுகள், ஒரு போரின் மூலம் பதிலடி கொடுப்பதன் வழியே அச்செயலின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது ஆனால், எதிர்காலத்தில் தெளிவின்மையிலிருந்து அது மீட்குமா என்பது கூட எனக்கு ஐயமாக இருக்கிறது. இந்நூற்றாண்டின் வரலாற்றில் அது ஒரு அடிக்குறிப்பாக இருக்கும். அதற்கு மேல் இல்லை. அரசியல், பொருளாதாரம் அல்லது ராணுவ வகையில் அது ஒரு சிறுதொல்லை மட்டுமே.

இஸ்லாமிய மதவாதிகள் முன்வைப்பது என்ன? பதினேழாம் நூற்றாண்டுக்குக் கருணையோடு மக்களை அழைத்துச் செல்லும், ஒருபோதும் இருந்திராத, கடந்த காலத்திற்கான ஒரு பாதை. உலகின் மீது அவர்கள் திணிக்க விரும்புவது ‘ஆப்கானிஸ்தானிய அரசாட்சி’ என்கிற மாதிரியைத்தான் என்றால் இஸ்லாமியர்களில் கணிசமானவர்கள் அவர்களுக்கு எதிராகக் கையில் ஆயுதம் ஏந்துவார்கள். ஒசாமாவோ அல்லது முல்லா ஓமரோ இஸ்லாத்தின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கற்பனை செய்யாதீர்கள். அதுதான் நிகழப்போகிறது என்றால், நம் இருவருக்கும் பொதுவாகவுள்ள பண்பாட்டுக்கான ஒரு பேரழிவாக அது இருக்கும்.

அத்தகைய நிலைமைகளின் கீழ் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? உங்களது சகோதரி, உங்களின் தாய் அல்லது நீங்கள் விரும்புகின்ற பெண், பொதுப் பார்வையிலிருந்து மறைந்திருப்பதையும் ஒரு பிணத்தைப் போல முக்காடிட்டு மறைந்திருக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? நான் உங்களிடத்தில் நேர்மையுடன் இருக்க விரும்புகிறேன். சமீபத்திய ஆப்கான் போரை நான் எதிர்க்கிறேன். தங்களின் நலன்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அரசாங்கங்களை மாற்றுகின்ற வல்லரசுகளின் உரிமையை நான் ஏற்கவில்லை. அதே நேரத்தில் தலிபான்கள் தங்கள் தாடிகளை மழித்துக்கொண்டு வீடுகளை நோக்கி ஓடியதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை. அதற்காக, சிறைப் பிடிக்கப்பட்டவர்களை விலங்குகளைப் போல நடத்த வேண்டும் என்றோ அல்லது ஜெனீவா தீர்மானங்களின்படியான அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்திட வேண்டும் என்றோ இதற்குப் பொருளல்ல. ஆனால் இந்நூலின் மற்ற இடங்களில் நான் வாதிட்டுள்ளதைப் போல பேரரசின் அடிப்படைவாதத்திற்கு இன்றைக்கு ஈடே இல்லை. அனைத்துத் தீர்மானங்களையும், சட்டங்களையும் தங்களின் விருப்பப்படி அவர்கள் மறுத்தொதுக்க முடியும்.

ஆப்கானில் சட்டவிரோதமான ஒரு போரைத் தொடுத்த பிறகு, அவர்கள் சிறைப்படுத்தியக் கைதிகளை வெளிப்படையாகவே அத்துமீறி நடத்துவதற்குக் காரணம், உலகின் முன்னிலையில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டவும், – தங்களின் இந்த அசிங்கமான வேலையைக் கியூப மண்ணில் செய்வதன் மூலம் அந்நாட்டை அவர்கள் இழிவு செய்கின்றனர் – புலி வாலைத் திருக யத்தனிக்கின்ற மற்றவர்களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கவும்தான். பனிப்போரின் போது, இலத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் சி.ஐ.ஏ. வும் அதன் உள்நாட்டு ஊழியர்களும் அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்திக் கற்பழித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதுதான், சி.ஐ.ஏ. வின் கள அலுவலரான பிலிப் ஏகீ, அவர்களை (சி.ஐ.ஏ.வை) விட்டு வெளியேறி, இலத்தீன் அமெரிக்காவில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அம்பலப்படுத்திய, இன்சைட் த கம்பெனி என்ற நூலை எழுத வைத்தது. வியத்நாம் போரின் போது, ஜெனீவா தீர்மானங்கள் பலவற்றையும் ஐக்கிய அமெரிக்கா மீறியது. அவர்கள் சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்தி, உயிரைப் பறித்தனர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர், கைதிகளை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று வானத்திலிருந்து கீழே வீசியெறிந்து சாகடித்தனர், கடலில் மூழ்கடித்தனர். இவையனைத்துமே சுதந்திரம் என்ற பெயரில் செய்யப்பட்டன. மேற்கில் உள்ள மக்கள் பலரும், ‘மனிதாபிமானக் குறுக்கீடுகள்’ பற்றிய மதியீனத்தை நம்பிக்கொண்டிருப்பதன் காரணமாக இச்செயல்களால் அதிர்ச்சியடைந்தனர்; ஆனால், கடந்த நூற்றாண்டில் பேரரசு செய்த குற்றங்களைப் பார்க்கில் இது ஓரளவு மிதமானதுதான்.

செப்டம்பர் 11க்குப் பின்னர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நமது மக்கள் பலரையும் நான் சந்தித்தேன். ஒரு வினா, மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது: ‘இதைச் செய்வதற்குப் போதுமான அளவு இஸ்லாமியர்கள் புத்திசாலிகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ நான் எப்போதுமே ‘ஆம்’ என்று பதில் சொன்னேன். அப்படியானால் இதற்குக் காரணம் யார் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று நான் திருப்பிக் கேட்டேன், மாற்றம் ஏதுமின்றி ‘இஸ்ரேல்’ என்றே பதில் வந்தது. ஏன்? ‘நமக்கு அவப்பெயர் உண்டாக்கவும், நம் நாடுகளின் மீது அமெரிக்காவைத் தாக்குதல் தொடுக்க வைக்கவும்’ என்றார்கள். அவர்களின் விருப்ப பூர்வ கற்பனையை நான் மென்மையாக அம்பலப்படுத்தினேன், ஆனால், அந்த உரையாடல் என்னை வருந்த வைத்தது. இஸ்லாமியர்கள் பலரும் இந்தச் செயலின்மையில் மூழ்கியிருப்பது ஏன்? அவர்கள் இவ்வளவு அதிகமான சுய பச்சாதாபத்தில் தடுமாறுவது ஏன்? அவர்களின் வானம் எப்போதுமே மேகமூட்டத்துடன் இருப்பது ஏன்? ஏன் எப்போதுமே பிறரைக் குற்றஞ்சொல்ல வேண்டும்? நாம் பேசும்போது, சிலநேரங்களில், உண்மையிலேயே அவர்கள் பெருமைப்பட முடியும் என்கிற வகையில் ஒரேயொரு இஸ்லாமிய நாடு கூட இல்லை என்பதாக எனக்குத் தோன்றுகிறது. தெற்காசியாவிலிருந்து குடிப்பெயர்ந்தவர்கள் சவுதி அரேபியா அல்லது வளைகுடா நாடுகளில் நடத்தப்படுவதைவிட பிரிட்டனில் நல்ல விதமாக நடத்தப்படுகிறார்கள். இங்கேதான் ஏதோ விஷயங்கள் நிகழவேண்டியுள்ளது.

அரேபிய உலகம் ஒரு மாறுதலுக்காகத் தவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் இராக்கியர்கள், சிரியர்கள், சவுதியர்கள், எகிப்தியர்கள், ஜோர்டானியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுடன் நிகழ்ந்த ஒவ்வொரு விவாதத்திலும் அதே வினாக்கள் எழுகின்றன, அதே பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. நாம் புழுங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் ஏன் மூச்சு விடக் கூடாது? ஒவ்வொன்றுமே நிலைத்திருப்பதாகத் தோன்றுகிறது. நமது பொருளாதாரம், நமது அரசியல், நமது அறிவுஜீவிகள் மற்றும் இவை அனைத்துக்கும் அதிகமாக, நமது மதம் என அனைத்துமே நிலைத்திருப்பதாகத் தோன்றுகிறது. பாலஸ்தீனம் ஒவ்வொரு நாளும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகள் ஒன்றுமே செய்யவில்லை. நமது அரசாங்கங்கள் செத்துவிட்டன. நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். நமது மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்குச் சிலர் மறுவினையாற்றுவது வியப்பளிப்பதாக இருக்கிறது. இந்நாட்களில் யார்தான் எதையாவது கொடுக்கிறார்கள்? ஐக்கிய அமெரிக்கா? அது ஜனநாயகத்தைக் கூட விரும்புவதில்லை, சின்னஞ்சிறு கட்டார் நாட்டிலும் கூட, அதுவும் வெறும் ஒரு அற்ப காரணத்திற்காகத் தான். நாம் நமது சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தோமானால், அவர்கள், ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவத் தளங்களை மூடவேண்டும் என்று கேட்கக்கூடும். அது கேட்குமில்லையா? ஏற்கெனவே அவர்கள் அல்-ஜசீரா தொலைக்காட்சியை எதிர்க்கிறார்கள். அதற்குக் காரணம், அத்தொலைக்காட்சி அவர்களிடமிருந்து மாறுபட்ட முன்னுரிமைகளை வைத்திருக்கிறது. அரேபிய மேட்டுக்குடிகளுக்குள் உள்ள ஊழலைத் தாக்கியபோது அது நன்றாக இருந்தது. நியூ யார்க் டைம்ஸ் -ல் அல்-ஜசீராவைப் புகழ்ந்து எழுத ஒரு முழுப் பத்தியையே டாமி [தாமஸ்] •ப்ரீட்மன் ஒதுக்கினார். அரேபிய உலகில் ஜனநாயகம் தழைப்பதற்கான அறிகுறியாக அவர் அதைப் பார்த்தார். அந்தப் பார்வை இப்போது இல்லை. இதற்குக் காரணம், ஜனநாயகம் என்பதன் பொருள் மாறுபட்டு சிந்திப்பதற்கான உரிமை என்பதனால், அமெரிக்கத் தொலைக்காட்சி வலைப்பின்னலில் காட்டப்படாத ஆப்கான் போர்க் காட்சிகளை அல்-ஜசீரா காட்டியதுதான். நட்பான வகையில் அல்லாத ஒலி-ஒளிபரப்புகளை நிறுத்தச் சொல்லி புஷ்ஷ¤ம் பிளெயரும் கட்டார் நாட்டை நிர்ப்பந்தித்தனர். மேற்குலகைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பதன் பொருள், அவர்கள் நம்புகிற அதே விஷயங்களையே துல்லியமாக நீங்களும் நம்புவதுதான். உண்மையில் அதுதான் ஜனநாயகமா?

ஓரிரு நாடுகளில் நாம் நமது சொந்த அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்போமானால், இஸ்லாமியவாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடும். மேற்கத்திய உலகு நம்மை தனியே விட்டுவிடுமா? பிரெஞ்ச் அரசு அல்ஜீரிய இராணுவத்தைத் தனியே விட்டதா? இல்லை. 1990 மற்றும் 1991 தேர்தல்களை செல்லாது என்று பிரகடனப்படுத்தச் சொல்லி அவர்கள் வலியுறுத்தினர். இஸ்லாமிய சலாவுத் முன்னணி தேர்தலில் வெற்றிபெற்றது என்கிற உண்மையைப் புறக்கணித்து, அவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பதாக பிரெஞ்ச் அறிவுஜீவிகள் விவரித்தனர். அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர்களை அனுமதித்திருந்தால் ஏற்கெனவே அவர்களுக்குள் இருந்த பிரிவினைகள் வெளியில் வந்திருக்கும். குடிமக்களுக்கென அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்க முயற்சி எதுவும் செய்யப்படுமானால் அதைச் சகித்துக் கொள்ளமுடியாது என்று இராணுவம் எச்சரித்திருக்க முடியும், இஸ்லாமிய சலாவுத் முன்னணியின் உண்மையான தலைவர்கள் ஒழித்துக்கட்டப்பட்ட பிறகே நிறைய உதிரிகள் மேல்நிலைக்கு வந்து குழப்பத்தை விளைவித்தார்கள். உள்நாட்டுப் போருக்காக இவர்களைக் குற்றஞ்சாட்ட வேண்டுமா அல்லது அல்ஜியர்களிலும் பாரிஸ்காரர்களிலும் இருந்த, அவர்களின் வெற்றியைத் திருடிக்கொண்டவர்களைக் குற்றஞ்சாட்ட வேண்டுமா? அல்ஜீரியாவில் நிகழ்ந்தப் படுகொலைகள் கொடூரமானவை. இஸ்லாமிய மதவாதிகள் மட்டுமேவா இதற்குக் காரணம்? 1997 செப்டம்பர் 22 அன்று அல்ஜியருக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் இருந்த பெண்டல்ஹாவில் என்ன நடந்தது? அந்நகரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளில் 500 பேரைக் கொன்றது யார்? யார்? இவ்விஷயம் பற்றி அனைத்தும் தெரிந்த பிரெஞ்சுக்காரர் பெர்னார்ட் ஹென்றி லெவி, இக்கொடூரச் செயலைச் செய்தவர்கள் இஸ்லாமியவாதிகள்தான் என்று உறுதியாகச் சொல்கிறார். அப்படியானால் உள்ளூர் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்க இராணுவம் மறுப்பது ஏன்? அந்த இரவில் உள்ளூர் காவல்படையை விலகி இருக்கும்படி அது ஏன் சொல்ல வேண்டும்? நடந்துகொண்டிருப்பது என்ன என்பதை தாங்கள் பார்க்க முடிகிறபோதே பாதுகாப்புப் படையினர் குறுக்கிடாதது ஏன்?

பிரெஞ்சுக் குடியரசின் தேவைகளுக்கு மாக்ரெப் அடிமைப்படுத்தப்பட்டே ஆகவேண்டும் என்று எம்.லெவி நம்புவது ஏன்? இத்தகைய அடிப்படைவாதத்தை ஒருவருமே தாக்காதது ஏன்? நாங்கள் செய்யவேண்டியது என்ன என்பது எங்களுக்குத் தெரியும் என்கின்றனர் அரேபியர்கள். ஆனால் ஒவ்வொரு முறையுமே மேற்கத்திய நாடுகள் குறுக்கிட்டு நமது இலட்சியங்களைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. எனவே, அவர்கள் உதவி செய்ய விரும்பினால், அவர்கள் விலகி நிற்கவேண்டும்.

இதைத்தான் எனது அரபு நண்பர் சொல்கிறார். இந்த அணுகுமுறையுடன் நான் உடன்படுகிறேன். ஈரானைப் பாருங்கள். ஆப்கான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோது, அவர்கள் மீதான மேற்குலகின் பார்வை கனிவானதாக இருந்தது. ஈரான் போருக்குத் தேவைப்பட்டது. ஆனால், மேற்குலகு தொலைவிலிருந்து கவனிகும்படி விடப்பட்டிருந்தது. ஏகாதிபத்திய அடிப்படைவாதிகள் ‘தீமையின் அச்சாணி’ குறித்துப் பேசுகின்றனர்; அது ஈரானையும் சேர்த்துதான். அங்கே ஒரு குறுக்கீடு மரணத்தை விளைவிக்கும். புதியதொரு தலைமுறை மதகுருக்களின் ஒடுக்குமுறையை அனுபவித்திருக்கிறது. அதைத்தவிர வேறொன்றையும் அது அறிந்திருக்கவில்லை. ஷாக்கள் குறித்த கதைகள் அதன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் பகுதியாகும். அயதுல்லாக்கள் இனியும் தங்களை ஆளுவதை அவர்கள் விரும்பவில்லை. சமீப ஆண்டுகளில் ஈரான், சவூதி அரேபியாவைப்போல அல்லது முடிந்துபோன ‘ஆ•ப்கானிஸ்தான் அரசாட்சி’யைப் போல மோசமாக இல்லை என்றாலும் அது மக்களுக்கு நல்லதாக இல்லை.

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் இளம் இரானிய படத் தயாரிப்பாளர் ஒருவரை நான் சந்தித்தேன். அவரது பெயர் மோஸ்லெம் மன்சௌரி. அவர் தயாரித்துக் கொண்டிருந்த ஆவணப்படம் ஒன்றுக்காகப் பல மணி நேரங்களுக்கு எடுக்கப்பட்ட பேட்டிகளின் படச்சுருளுடன் அவர் தப்பித்து வெளியேற முடிந்தது. டெஹ்ரானைச் சேர்ந்த மூன்று விலைமாதர்களின் நம்பிக்கையைப் பெற்ற அவர் இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக அவர்களைப் படம் பிடித்திருந்தார். அப்படக் காட்சிகள் சிலவற்றை அவர் எனக்குக் காண்பித்தார். அவர்கள் மிக வெளிப்படையாக அவரிடத்தில் பேசியிருந்தனர். மதப் பண்டிகைகளின் போது கிடைத்த சிறந்த வாடிக்கையாளர்கள் குறித்து அவர்கள் விவரித்திருந்தனர். அந்தப் படத்தின் தன்மை, அவர் எனக்கு அனுப்பியிருந்த குறிப்புகளிலிருந்து கிடைத்தது. ஒரு பெண் அவரிடத்தில் சொல்கிறார்:

இன்றைக்கு ஒவ்வொருவருமே தங்களின் உடலை விற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எங்களைப் போன்ற பெண்கள் 10,000 டூமன்களுக்காக ஒரு ஆணைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. . . பத்து நிமிடங்களுக்குக் கூட இளைஞர்களுடன் படுக்கையில் சேர்ந்திருக்க வேண்டியிருக்கிறது . . . அது ஒரு முதன்மையான தேவையாக இருக்கிறது . . . அது அவர்களை அமைதிப்படுத்துகிறது. அரசாங்கம் அதை அனுமதிக்காத போது வேசைத் தொழில் அதிகரிக்கிறது. வேசைத் தனம் பற்றிக் கூட நாம் பேசவேண்டியதில்லை. பொது இடத்தில் எதிர்ப் பாலினருடன் வெளிப்படையாகப் பேசுகின்ற உரிமையைக் கூட அரசாங்கம் எடுத்துக்கொண்டு விட்டது . . . பூங்காக்களிலோ, திரையரங்குகளிலோ, அல்லது தெருக்களிலோ உங்களின் பக்கத்தில் இருப்பவருடன் நீங்கள் பேசமுடியாது. தெருக்களில், ஒரு ஆணுடன் நீங்கள் பேசீனீர்கள் என்றால், ‘இஸ்லாமியப் பாதுகாவலர்கள்,’ ‘அந்த ஆடவன் யார்? உனக்கு அவன் எந்த வகையில் உறவு? உனது ஆவணங்கள் எங்கே? . . .’ என்பதாக முடிவின்றி உங்களிடம் விசாரணை செய்வார்கள். இன்றைக்கு நமது நாட்டில், யாருக்குமே நிறைவு இல்லை! யாருக்குமே பாதுகாப்பு இல்லை. ஒரு வேலை தேடி நான் ஒரு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். அந்நிறுவனத்தின் மேலாளர், தாடி வைத்திருந்த நபர், எனது முகத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: ‘நான் உன்னை சேர்த்துக் கொள்கிறேன், உனக்கு சம்பளத்திற்கும் அதிகமாக 10000 டூமன்கள் தருகிறேன்.’ நான் சொன்னேன்: ‘எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதற்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எனது கணிணித் திறனையேனும் சோதிக்கலாமே . . .’ அவர் சொன்னார்: ‘உனது தோற்றத்திற்காகத்தான் நான் உன்னை சேர்த்துக்கொள்கிறேன்!’ நான் அங்கே வேலை பார்க்கவேண்டும் என்றால் அன்றாடம் ஒரேயொரு முறையாவது அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அது அந்த அளவுக்குப் பயனுடையதில்லை என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். நானாகவே வேலை செய்தால், நான் இன்னும் அதிகமாகவே சம்பாதிக்க முடியும். நீங்கள் எங்கே போனாலும் நிலவரம் இப்படித்தான் இருக்கிறது! விவாகரத்து கோருவதற்காக, நான் சிறப்பு குடும்ப நீதி மன்றம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். எனது குழந்தையை எனது பொறுப்பில் வைத்துக்கொள்ள, மத குருவான ஒரு நீதிபதியிடம் இறைஞ்சினேன். நான் அவரிடம் சொன்னேன்: ‘ஐயா, கெஞ்சிக் கேட்கிறேன், தயவு செய்து எனது குழந்தையை என்னிடம் விடுங்கள். நான் உங்களின் கனிஜ் (கனிஜ் என்பதன் பொருள் வேலைக்காரர், இது ஒரு பெர்சியச் சொல். அதன் அடிப்படையான பொருள், ‘நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்.’) ஆக இருப்பேன்.’ அந்த ஆள் என்ன சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் சொன்னான், எனக்கு ஒரு வேலைக்காரி தேவையில்லை! எனக்குத் தேவை ஒரு பெண்! மத குருவான நீதிபதியே இப்படிச் சொல்லும்போது, மற்றவர்களிடம் நீங்கள் எதை எதிர்ப்பார்ப்பது? அவன் முகத்தில் தாடியும் முக உரோமமுமாகச் சேர்ந்து 50 கிலோவுக்கு இருக்கும்! அவன் சொல்கிறான், எனக்கு ஒரு பெண் தேவை என்று! நான் அவனிடம் கேட்டேன்: உங்களுக்கு ஒரு மனைவி இல்லையா? அவன் சொன்னான்: எனக்கு பலர் வேண்டும்! எனது விவாகரத்தில் கையெழுத்து பெறுவதற்காக நான் அதிகாரியிடம் சென்றேன், அதற்கு பதிலாக நான் விவாகரத்து பெறக்கூடாது என்றும், மாறாக விவாகரத்து இன்றியே, சட்டவிரோதமாக மறுமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அவன் சொன்னான். ஒரு கணவன் இல்லாமல் ஒரு வேலை கிடைப்பது கடினம் என்பதால் அவன் அப்படிச் சொன்னான். அவன் சரியாகத்தான் சொன்னான், ஆனால், அவனுக்குக் கொடுக்க என்னிடம் பணம் இருக்கவில்லை. . .இந்த விஷயங்கள் எல்லாம் உங்களின் வயதை அதிகமாக்கிவிடுகிறது . . . நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறீர்கள் . . . உங்களுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு அது உங்களை நாசம் செய்துவிடுகிறது. ஒருக்கால், இதை விட்டு வெளியே வருவதற்கு ஒரு வழி இருக்கிறது . . .
(அடுத்த பக்கத்தில் தொடர்கிறது)

Series Navigation

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)


மேற்கத்திய நாடுகளில், வேசிகளுக்கு நலத் திட்டங்களும் அரசு ஆயுள்காப்பீடும் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இதர வசதிகளும் கிடைக்கிறது. இங்கே நமக்கு வாழ்வதற்கே உரிமையில்லை . . . ஏன்? நாங்களும் கூட உழைப்பாளர்கள்தான் தெரியுமா . . .

தனது உடலை விற்க நிர்ப்பந்திக்கப்பட்ட மற்றொரு பெண் அவரிடம் சொல்லுகிறார்:

எனது சேவைகளுக்காக, கடைக்காரர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், கல்வியறிவற்றவர்கள் என எல்லா வகையான ஆண்களும் என்னிடம் வருகின்றனர் . . . அடிப்படையில், யாருக்கெல்லாம் ஒரு பெண்ணை சிறிது காலம் வைத்துக்கொள்ள வசதி இருக்கிறதோ அவர்களெல்லாம் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையில் எங்களை மிக மோசமாக நடத்துகின்றனர் . . . எங்களுக்கு அவர்கள் பணம் தருவதாலேயே, தாங்கள் எங்களிடத்தில் என்னவும் செய்யலாம் என்கிற உரிமை தங்களுக்கு இருப்பதாக நினைக்கிறார்கள் . . . நாங்களும் அதை சகித்துக்கொள்கிறோம்.

இன்றைக்கு நமது சமூகத்தில் எவருமே பொருளாதார வகையில் பாதுகாப்பாக இல்லை. நான் எனது (வீட்டு) வாடகையைக் கொடுக்க முடியவில்லை . . . நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். இன்றைக்கு இரவு எனது உடலை நான் விற்கவில்லை என்றால் நாளைய செலவுக்கு என்னிடம் பணம் கிடையாது . . . வேலை வாய்ப்பில்லாத, பாதுகாப்பு இல்லாத, உரிமைகள் இல்லாத ஒரு சமூகத்தில், ஒருவர் என்னதான் செய்யமுடியும்? தெருவிலே நீங்கள் நடந்து செல்லுங்கள். இஸ்லாமியப் பாதுகாவலர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் உங்களைக் கைது செய்யக்கூடும் என்று எப்போதுமே உங்களுக்கு பயம் இருக்கும். உங்களின் முக்காடுக்கு வெளியே ஒரு முடிக்கற்றை வெளியே தெரிவது, ஒரு மெல்லிய உதட்டுச் சாயம், என எதற்காகவும் . . .

யாரையும் சார்ந்திராமல் தன்னந்தனியாக நானே வேலை செய்து எனது செலவுகளைப் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற உத்தரவாதம் இருக்கின்ற ஒரு சமூகத்தில் நான் வாழ்ந்திருந்தேன் என்றால், எனது உடலை விற்கின்ற செயலில் நான் ஒருபோதும் இறங்கியிருக்க மாட்டேன். அப்போதும் எனக்கு உடல் தேவை இருந்திருக்கக்கூடும் என்கிற நிலையில் நான் யாரோ ஒருவரைத் தேர்தெடுத்திருப்பேன் . . . எனது உணர்வுகளுடன், நான் விரும்பிய வகையில் . . . மகிழ்ச்சியாக வாழ முடிந்திருக்கும் . . . ஆனால் இப்போதிருக்கிற நிலையில், ஆண்களை வாங்குவோராகவும் என் போன்றவர்களை விற்போராயும் அரசாங்கம் ஆக்கியிருக்கிறது . . .

அந்தப் படத்தை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் தயாராக இல்லை என்பதால் மோஸ்லெம் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். கட்டாமியின் ஆட்சியை நிலைகுலையச் செய்ய அவர்கள் விரும்பவில்லை! மோஸ்லெம்மேயும் கூட புரட்சியின் ஒரு குழந்தைதான். அது நிகழ்ந்திராவிட்டால் அவர் ஒரு படத் தயாரிப்பாளர் ஆகியிருக்கமாட்டார். அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார். மோஸ்லெமின் தந்தை ஒரு தொழுகை அழைப்புக் குரலாளர் (muezzin) என்பதுடன் தீவிர-மதவழியில் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். தற்போது அவர் அதிதீவிரமாக மதத்தை வெறுக்கிறார். என்னாலும் கூட திருப்பிச் சொல்லமுடியாதபடிக்கு அவரது வெறுப்பு இருக்கிறது. ஈராக்குக்கு எதிரான போரில் சண்டையிட மோஸ்லெம் மறுத்துவிட்டார். அதற்காக கைது செய்யப்பட்டார். இந்த அனுபவம் அவரை மாற்றிய விதம் வருமாறு:

சங்சாவில் மக்கள் கூட்டம் நிறைந்த வீதியொன்றின் மூலையில் சிறிய செய்தித்தாள் விற்பனைக் கடை ஒன்றை நான் தொடங்கியது 1978-79ம் ஆண்டு. ஒவ்வொரு வாரமும் அரசியல் குழுக்களின் செய்தித் தாள்களும், வார, மாத இதழ்களும் புத்தகங்களும் எனக்கு வந்து சேரும். அவற்றை நான் எனது கடையில் வைத்து விற்பனை செய்து வந்தேன். சிறிது காலத்திற்குப் பிறகு ஆர்வமுள்ள இளைஞர்கள் கூடி, அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கின்ற ஒரு இடமாக அது ஆயிற்று.

தங்களை ஹெஸ்பொல்லா என்று சொல்லிக்கொண்ட இஸ்லாமியப் பாதுகாவலர்கள், ஓரிரவில் செய்தித் தாள் கடையைத் தாக்கி அதை எரித்துவிட்டனர். பாதி எரிந்த புத்தகங்களை நான் எடுத்துவைத்து அவற்றை ஒருவாரத்திற்கு அன்றாடம் எனது கடையின் முன் (காட்சிக்கு) வைத்திருந்தேன். பிறகு அவர்கள் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.சிறை கடினமாக இருந்தபோதிலும் அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவு முதிர்ச்சியின் ஒரு கட்டத்தை நான் அடைந்து கொண்டிருப்பதாக சிறையில் இருந்தபோது நான் நினைத்தேன். நான் தாங்கிக்கொண்டிருந்ததுடன், எனது வலிமை குறித்த உணர்வினை அனுபவித்தேன். மத குருக்களின் ஊழல் நிறைந்த உலகிலிருந்து எனது வாழ்க்கையை நான் காத்துக்கொண்டதாக நினைத்ததுடன் அதற்காக நான் கொடுக்கின்ற ஒரு விலையாக இதை (சிறை வாழ்க்கையை) நினைத்தேன். இதற்காக நான் பெருமைப்பட்டேன். சிறையில் ஓராண்டு கழிந்த பின்னர், வெள்ளிக் கிழமை தொழுகையிலும் மத நடவடிக்கைகளிலும் நான் பங்கேற்பேன் என்று உறுதி கூறுகின்ற தாள்களில் நான் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் என்னை விடுவிப்பதாக அவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். நான் கையெழுத்திட மறுத்தேன். மேலும் ஓராண்டுக்கு என்னை சிறையில் வைத்தனர்.

சிறையிலிருந்து என்னை விடுவித்தபோது எனக்கு, நான் பிறந்த ஊர் மிகவும் சிறியதாகத் தெரிந்தது. அங்கே மூச்சுமுட்டுவதைப் போலிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே, நான் டெஹ்ரானுக்கு வந்து சேர்ந்தேன். பகல் நேரங்களில் நான் வேலை பார்த்தேன், இரவுகளில், ‘இலவசப்’ பல்கலைக் கழகத்திற்குச் சென்றேன். (இலவசப் பல்கலைக் கழகம் என்பது அதிக கட்டணம் வசூலிக்கின்ற தனியார் பல்கலைக் கழகம்.)

எண்பதுகளின் முற்பகுதியில், சினிமாவில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. எனது ஆழ்மனச் சிந்தனைகளும் போராட்டங்களும் சினிமாவில் கவனம் செலுத்தவோ அல்லது எந்த ஒரு நீண்ட காலத் திட்டத்தை வைத்திருக்கவோ என்னை அனுமதிக்கவில்லை. ஈரானில் உள்ள நிலைமைகளுக்குத் தக ஒருபோதும் என்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதாக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த சமூக – அரசியல் நிலைமைகள் மிகக் கடுமையாக என்னை கவலைக்குள்ளாக்கியது.

போர் முடிந்த பின்னர் (1989) தங்களின் பழைய பிறப்புச் சான்றுகளைப் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென அரசாங்கம் புதியதொரு சட்டம் கொண்டுவந்தது. எனது பிறப்புச் சான்றை மாற்றுவதற்காக நான் சென்றால், எனது போலி ஆவணங்களை நான் ஒழித்துவிட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நியமிக்கப்பட்ட ஒரு இராணுவ வீரரான நான் போருக்குச் செல்லவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். மறுபக்கத்தில் பல்கலைக் கழகக் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. எனவே எனது இராணுவ சேவையை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். நான் திரும்பி வந்த பிறகு, ஒரு வேலை தேடினேன். திரைப்பட இதழ் ஒன்று, ஒரு நிருபரைத் தேடிக் கொண்டிருப்பதை தற்செயலாக நான் பார்க்க நேர்ந்தது. அந்த வேலையை நான் ஏற்றுக்கொண்டேன். அரசு சாரா படத் தயாரிப்பாளர்களையும் இலக்கியக் கர்த்தாக்களையும் பேட்டி எடுக்க நான் முயற்சித்த போதிலும், நான் எதையாவது -விமர்சனமாக இருந்தாலும் கூட- எழுதினால், தாங்கள் விமர்சனத்தைக் கூட அனுமதிப்பதாக, அதனால் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லி, ஆட்சியாளர்கள் ஜம்பம் அடித்துக்கொள்ள வாய்ப்பாகி விடும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். திரைப்படம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் படத் தயாரிப்பாளர்கள் அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.

மெர்ஜூயி, மக்கமல்ப•ப் அல்லது கியரோஸ்டமி போன்ற படத் தயாரிப்பாளர்களை நான் பேட்டி எடுப்பேனாயின், இறுதியில் அது அரசியல் அமைப்பிற்கே சாதகம் செய்யும். இருப்பினும் என் மூலமாக அத்தகைய சாதகத்தை அது (அரசாங்கம்) எடுத்துக்கொள்வதைத் தற்காலிகமாக அனுமதிப்போம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் . . . ஊடகத்திலான எனது பணி, எனது சொந்தத் திட்டங்களுக்கான – எனது திட்டங்கள், ஆட்சி அதிகாரத்தின் இரகசியக் குற்றங்களை ஆவணப்படுத்துவது – ஒரு திரையாக இருக்குமென நான் நினைத்தேன். உண்மையில் நான் விரும்புவதைப் போன்ற படங்களைத் தயாரிப்பது தணிக்கைக் கட்டுப்பாடுகளின் காரணமாக என்னால் இயலாதென்று எனக்குத் தெரியும். நான் எழுதக்கூடிய காட்சி எதற்கும் இஸ்லாமியத் தணிக்கை அலுவலகத்தின் அனுமதி ஒருபோதும் கிடைக்காது, எனது நேரமும் உழைப்பும் வீணாகிப்போகும் என்பது எனக்குத் தெரியும். எனவே இரகசியமாக, எட்டு ஆவணப் படங்களைத் தயாரிக்க நான் முடிவெடுத்தேன். 1994-1998க்கும் இடைப்பட்ட காலத்தில் நான் எனது காட்சிகளைப் படமாக்கி, ஈரானுக்கு வெளியே அதைக் கடத்தினேன். நிதிப் பிரச்சினைகளின் காரணமாக, எனது படங்களில் இரண்டை மட்டுமே எடிட் செய்ய முடிந்தது. அதில் ஒன்று, க்ளோஸ் அப், லாங் ஷாட், மற்றொன்று ஷாம்லூ, பொயட் ஆ*ப் லிபர்ட்டி.

முதலாவது படம், கியரோஸ்டமி தயாரித்த க்ளோஸ் அப் என்ற நாடக-ஆவணப்படத்தின் பிரதான பாத்திரமாக இருந்த ஹோசெய்ன் சாப்ஜியன் பற்றியது. பிந்தையது, ஒரு குடும்பத்திடம், தன்னை மக்மல்ப•ப் ஆகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற, அவரைப் போலவே உருவச் சாயல் கொண்ட ஒரு இளைஞனின் கதை. அந்தக் குடும்பம், அவன்தான் பிரபல மக்மல்ப•ப் என்று நினைத்து, அவனது கதையை வாங்கிக்கொண்டதுடன் அவனது திரைப்படம் ஒன்றுக்கு நிதி ஆதரவு செய்ய முயன்றது. அவன் அந்தக் குடும்பத்துடன் நான்கு நாட்கள் தங்கியிருந்ததுடன் இறுதியில், அவன் செய்கின்ற அனைத்துமே ஏமாற்று வேலை என்பதை அக்குடும்பத்தினர் உணருகின்றனர். அவர்கள் அவனைக் கைதாக வைக்கின்றனர். கியரோஸ்டமியின் படத்திற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகள் கழித்து நான் சாப்ஜியனை சந்திக்கச் சென்றேன். அவர் சினிமாவை நேசிக்கிறார். அவரது மனைவியும் குழந்தைகளும் அவரிடத்தில் வெறுப்பு கொள்வதுடன் இறுதியில் அவரைப் பிரிந்து செல்கின்றனர். இன்றைக்கு அவர் டெஹ்ரானின் புறப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். திரைப்படத்தின் மீதான தனது நேசம் துயரைத் தவிர வேறெதையும் விளைவிக்கவில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். எனது படத்தில் அவர் சொல்கிறார்: ‘நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு சமுதாயத்தில் என்னைப் போன்றவர்கள் அழிந்து போகிறார்கள். ஒருபோதுமே நாம் நம்மை முன்வைக்க முடியவில்லை. இரண்டு வகையான மரணங்கள் உண்டு. ஒன்று பிரேதமாகக் கிடத்தப்பட்டிருப்பது, மற்றது நடமாடிக் கொண்டிருப்பது. நாமெல்லாம் நடைபிணம்தான்ம்’

ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் இது போன்ற கதைகளையும், இன்னும் மோசமான கதைகளையும் நாம் காண முடியும். மேலும் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு நான் முடித்துக் கொள்கிறேன். மேற்கு நாடுகளுக்குக் குடிப்பெயர்ந்த பெற்றோர்களின் வாரிசுகளுக்கும்… இப்போதும் இஸ்லாத்தின் பிறப்பிடத்தில் வாழ்கின்றவர்களுக்குமான . . . இஸ்லாமியப் பிரிவினர்களுக்கிடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. பிந்தையவர்கள் அதிகமும் விமர்சனப் பார்வை கொண்டிருக்கின்றனர்; அதற்குக் காரணம் அவர்களின் அடையாளத்திற்கு மதம் தீர்மானகரமானதல்ல. அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது சொல்லாமலே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விஷயங்கள் மாறுபட்டு இருக்கின்றன. மற்ற அனைவரின் செலவில், அதிகாரப்பூர்வமான ஒரு பன்முகப் பண்பாடு, வேறுபாட்டை அழுத்தமாக ஆக்கியிருக்கிறது. அதன் எழுச்சி, முற்போக்கு அரசியலின் ஒரு வீழ்ச்சியுடன் அப்படியே தொடர்புடையதாகிறது. ஏற்றத் தாழ்வை விட வேற்றுமையைப் போல தோன்றக் கூடிய- இடக்கரடக்கலாக, ‘கலாச்சாரம்’ மற்றும் ‘மதம்’ என்பதாக, மென்மையான மாற்றுச் சொற்களால் குறிப்பிடப்படுகின்ற சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மைதான் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சமூகத்தின் மையப் பிரச்சனையாக இன்றைக்கு இருக்கிறது. (•ப்ரான்ஸில்) மக்ரெப்பிலிருந்து வந்த, (ஜெர்மனியில்) அனடோலியாவிலிருந்து வந்த, (பிரிட்டனில்) பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்த, (ஐக்கிய அமெரிக்காவில்) எல்லா இடங்களிலிருந்தும் வந்த மற்றும் ஸ்கேண்டிநேவியாவிற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெற்காசியாவிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்களிடம் நான் பேசினேன். பலரும் உங்களைப் போல இருப்பது ஏன் என்பதாக எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். நான் மிகவும் நன்றாக அறிந்த, உடலுரம் மிக்க, சுறுசுறுப்பாயும் உள்ள கஷ்மீர் மற்றும் பஞ்சாப் விவசாயிகளை விட மிகவும் மதம் சார்ந்தவர்களாக, கடுமையாக அதைக் கடைப்பிடிப்போராக அவர்கள் ஆகியிருக்கின்றனர். பிரிட்டன் பிரதமர், ஓரிறைக் கோட்பாட்டில் மாபெரும் நம்பிக்கைக் கொண்டவர். அமெரிக்க அதிபர், தனது ஒவ்வொரு உரையையும் ‘கடவுள் அமெரிக்காவைக் காப்பாற்றட்டும்’ என நிறைவு செய்கிறார். ஒசாமாவோ, ஒவ்வொரு தொலைக்காட்சிப் பேட்டியின் தொடக்கத்திலும் இறுதியிலும் அல்லாவைப் போற்றுகிறார். அறிவொளியின் விழுமியங்கள் பலவற்றிலும் ஈடுபட்டிருக்கின்ற உரிமை எனக்கிருப்பதைப் போலவே, அவர்கள் மூவருக்கும் அவ்வாறு செய்வதற்கு உரிமை இருக்கிறது. அறிவொளி, இரண்டு காரணங்களுக்காக மதங்களை -முதன்மையாகக் கிறித்துவத்தைத்- தாக்கியது. ஒன்று, அது கருத்தியல் பிரமைகளின் ஒரு தொகுப்பாக இருந்தது. இரண்டாவதாக, நிறுவன வகை ஒடுக்குமுறைக்கான ஒரு அமைப்பாக, தண்டனையளிப்பதற்கான அளவிலா அதிகாரம் பெற்றதாயும் சகிப்புத்தன்மையற்றதாயும் இருந்தது. அப்படியானால், பிறகு நான் ஏன் மதத்தை விமர்சிக்காமல் இருக்கவேண்டும்?

இவ்விரு மாண்புகளையும் நாம் ஏன் இன்றைக்கு ஒழித்திட வேண்டும்? ஹோல்பாக் மற்றும் கிப்பானின் காலத்திலிருந்து மதங்கள் வெறும் ஒரு மாயைக்கும் குறைந்ததாக ஆகிவிட்டதென யார் கற்பனை செய்வார்? இன வழி உறவையோ அல்லது சிறப்பு வேண்டுதலையோ நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஒவ்வோர் ஆண்டும் பௌதீகவியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்போது ஒரேயொரு இஸ்லாமியப் பெயர் கூட ஒருபோதுமே இல்லாதது ஏன் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஊக்கம் ஆகியன இஸ்லாமிய மரபணுக்களில் இல்லாதிருக்கின்றனவா? கடந்த காலத்திலும் அவை இருந்திருக்கவில்லை. இந்தப் பிண விரைப்பு எதை விவரிக்கிறது?

வேடிக்கையான சோகம்: பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்ற ஒரேயொரு இஸ்லாமியர் எனக்குத் தெரிந்த ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பாகிஸ்தானியக் குடிமகன், பேராசிரியர் அப்துஸ் சலாம். அனைத்துக்கும் பிறகு, அவர் அஹமதி பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் பிரிவு இஸ்லாமியர் எனும் தகுதி அளிக்கப்படாத ஒரு பிரிவாகும். பரிசு பெற்றபோது அவர் ஒரு இஸ்லாமியர், சில ஆண்டுகள் கழித்து, அவர் இஸ்லாமியர் அல்ல என்பதாக சட்டத்தினால் அவருக்குச் சொல்லப்பட்டது. வருத்தத்துடன் அவர் நகைச் சுவையாகச் சொல்வதுண்டு, பாகிஸ்தானில் நான் இஸ்லாமியன் இல்லை என்கிற போதிலும், இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இப்போதும் நான் இஸ்லாமியன்தான் என்பார் அவர்.

நீங்கள் என்னை தவறாகப் புரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. மதம் குறித்த எனது வெறுப்பு என்பது எந்த வகையிலும் இஸ்லாமிய மதத்துடன் மட்டும் கட்டுப்பட்டதில்லை. அன்றியும், இந்தப் புத்தகம் குறித்துக் காட்டுவதைப் போல, உலகை முன்னேற்றுவதில் மதங்களின் சித்தாந்தங்கள் கடந்த காலத்தில் ஆற்றியுள்ள பங்கினை நான் புறக்கணிக்கவுமில்லை. கிறித்தவம் குறித்த -புரோடஸ்டண்ட் சீரமைப்பு மற்றும் கத்தோலிக்க சீரமைப்பு எதிர்ப்பு ஆகிய- இரு போட்டி விளக்கங்களுக்கிடையிலான சித்தாந்த மோதல்கள் ஐரோப்பாவில் மாபெரும் எரிமலை வெடித்தது போன்ற நிலைக்குக் கொண்டு சென்றது. உள்நாட்டுப் போருக்கும், அதைத் தொடர்ந்து புரட்சிக்கும் இட்டுச்சென்ற இறையியல் வெறியினால் உந்தப்பட்ட அறிஞர்களுக்கிடையிலான கத்தி போன்ற கூர்மையான விவாதங்களின் ஒரு உதாரணம் இதோ: ஸ்பானிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பதினாறாம் நூற்றாண்டிலான டச் எழுச்சி, பாவமன்னிப்புத் திருத்தத்தின் பெயரால் புனித உருக்களின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலினால் தூண்டிவிடப்பட்டது. புதியதொரு வேண்டுதல் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது, பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தூய்மைவாதப் புரட்சிக்கான காரணங்களில் ஒன்றாகும். கத்தோலிக்க மதத்தைச் சகித்துக்கொள்ள மறுத்தது, 1688 இல் அதை அடுத்து வந்தவரைத் தூண்டிவிட்டது. அறிவொளிப் பெருக்கு நின்று விடவில்லை; அத்துடன் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அறிவொளியின் கருத்துகள் புரட்சிகர •ப்ரான்ஸ்-ன் உலைகளுக்குத் தீமுட்டியது. ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தின் சர்ச்சும் வாடிகனும் தற்போது இணைந்துகொண்டன. ஆனால், இறையாண்மை மற்றும் குடியாட்சியின் பிரபலமான கருத்துகள் எளிதில் ஓரங்கட்ட முடியாதபடி மிக வலிமையாக இருந்தன.

உங்களின் வினா கிட்டத்தட்ட என் காதில் விழுகிறது. இவையனைத்துக்கும் எங்களிடம் என்ன வேலை? ஒரு மாபெரும் விஷயத்தைச் செய்யவேண்டியிருக்கிறது எனது நண்பர்களே. மேற்கு ஐரோப்பா இறையியல் வெறியினால் எரிக்கப்பட்டது, அவை இப்போது மாற்றிவிடப்பட்டுள்ளது. புதுமை தற்போது தொடுவானில் இருந்தது. ஓட்டோமான் அரசாட்சியின் பண்பாடும் பொருளாதாரமும் ஒருபோதும் மீண்டும் ஏற்படுத்த முடியாத ஒரு இயங்குதலாக இது உள்ளது. சுன்னி-ஷியா பிரிவினை வெகுவிரைவிலேயே வந்துவிட்டதுடன் போட்டி நம்பிக்கைகளில் உறைந்திருக்கிறது. இந்நேரத்தில் எதிர்ப்புகள், இஸ்லாத்திலிருந்து முழுமையாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. தனது மத அறிஞர்களால் வழிகாட்டப்பட்ட சுல்தான், உதிர்ந்து இறந்து போகவிருக்கிற அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இதுதான் நிலவரமெனில், இன்றைக்கு எவ்வளவு அதிக உண்மையாக இது இருக்கும். ஒருவேளை, ஈரானைப்போல, இஸ்லாமியர்கள் இதைத் தெரிந்துகொள்ள ஒரே வழி தங்களின் சொந்த நடைமுறைகளின் மூலம்தான் என்றிருக்கலாம்.

நவீன-தாராளமயத்தின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு வேறெந்த மாற்றும் இல்லை என்பது மத எழுச்சியைப் பகுதியளவு விளக்குகிறது. உலக நாடுகள் நுழைவதற்கு இஸ்லாமிய அரசாங்கங்கள் தங்களின் நாடுகளை திறந்து வைக்கின்ற வரை சமூக-அரசியல் தளத்தில் தாங்கள் செய்ய விரும்புவதைச் செய்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அமெரிக்கப் பேரரசு இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. அதைப்போலவே அது மீண்டும் செய்யக்கூடும். இங்கேதான் சவால் இருக்கின்றது. அடிப்படைவாதிகளின் பயித்தியக்காரத்தனமான பழமைவாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் துடைத்தழிக்கின்ற ஒரு இஸ்லாமியச் சீர்திருத்தத்திற்கான அத்தியாவசியத் தேவை நமக்கிருக்கிறது. ஆனால் அதற்கும் அதிகமாக மேற்கில் இருந்து தற்போது அளிக்கப்படுவதைக் காட்டிலும் இன்னமும் முன்னேறியதாகத் தெரிகிற புதிய கருத்துகளுக்கு இஸ்லாமிய உலகைத் திறந்துவிடுகின்ற அத்தியாவசியத் தேவை நமக்கிருக்கிறது. அரசையும் மசூதியையும் உறுதியாகப் பிரிக்கின்ற ஒரு தேவையையும்; மத குருக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதையும்; இஸ்லாமியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த சொத்தாக இருக்கின்ற நூல்களுக்கும் முழுமையாக விளக்கமளிக்கின்ற தங்களின் உரிமையை இஸ்லாமிய அறிவுஜீவிகள் உறுதிப்படுத்திக்கொள்வதையும்; தளையின்றி, பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற சுதந்திரத்தையும் கற்பனை செய்வதற்கான சுதந்திரத்தையும் அவசியப்படுத்தும். இந்த வழியில் நாம் நகரவில்லையெனில், இன்னும் வசதி-வாய்ப்புகள் நிறைந்த, மனித மாண்புகள் நிறைந்த எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையின்றி, நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் செல்லுகிறபடியாகப் பழைய சண்டைகளிலேயே உழன்றுகொண்டிருக்க விதிக்கப்பட்டுவிடுவோம். இது ஏற்கமுடியாத ஒரு பார்வையாகும்.

எனது எழுதுகோலை எனது சிந்தனையின் போக்கில் விட்டு, மதத்துடன் முரண்பட்ட எனது கருத்துகளை நெடுநேரம் போதித்துள்ளேன். நான் மாறுவேனா என்பதில் எனக்கு ஐயம்தான், ஆனால் நீங்கள் மாறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

(நன்றி: The Clash of Fundamentalisms – Crusades, Jihads and Modernity, Tariq Ali, Verso, 2002.)

Series Navigation

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)