இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

கண்ணன்


(kalachuvadu@vsnl.com)

தமிழக வரட்டுச் சிந்தனையாளர்களால் மதவாத எதிர்ப்பு என்பதும் அடிப்படைவாத மறுப்பு என்பதும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சிறுபான்மையினர் அடிப்படைவாதம் என்ற பார்வையில், இந்துத்துவத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், சாதகமானதாக, ஆதரிக்கப்பட வேண்டியதாக, குறைந்த பட்சம் மன்னித்து விட்டுவிடக் கூடியதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பார்வை இன்றைய காலகட்டத்தில் காலாவதியாகிப் போன பார்வை என்று தோன்றுகிறது. இந்திய அரசும் இந்து அமைப்புகளும் கட்சிகளும் இஸ்லாமியர் மீது நடத்திவரும் தாக்குதல்களை எதிர்த்து இஸ்லாமியர் உரிமைகளுக்காக இயங்குவது வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிப்பது வேறு. தீவிரமானச் செயல்பாடுகளின் மூலம் மதவாத எதிர்ப்பில் ஈடுபட்டுவரும் பல அமைப்புகள் சலுகை எதையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு வழங்காமல் அவசியமானப் புள்ளிகளில் எல்லா அடிப்படைவாதங்களையும் கண்டிக்கத் தயங்குவதில்லை. ஒரு உதாரணத்திற்கு Communalism Combat என்ற இதழைக் குறிப்பிடலாம் (www.sabrang.com).

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக அளவில் பலப் பொதுத்தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்துத்துவத்திற்கு எதிரானச் சக்தியாகவும் உலக அளவில் கிறிஸ்துவ மேற்கத்திய கலாச்சார ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கமாகவும் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அதன் பண்புகளில் உலகப் பொதுவான ஒரே அலைவரிசையை எட்டும் புள்ளியை நோக்கி முயங்கிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பிரதேசம் சார்ந்து உருவான எதிர்ப்புப் பண்புகள் என்று எதையும் அடையாளம் காண முடியவில்லை. (பாலஸ்தீன இயக்கம் போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன.)

‘சிறுபான்மை ‘, ‘பெரும்பான்மை ‘ என்ற பிரிவினையின் அடிப்படையில் மதவாதப் பிரச்சனையை அணுகுவது சரியல்ல. ஏனெனில் மத அடிப்படைவாதத்தைத் தாலுக்கா முதல் தேசம் வரைப் பிரிவினை செய்து வரையறுக்க வாய்ப்பில்லை. இந்து அடிப்படைவாத அமைப்புகளுக்கு இன்று உலக அளவில் கிளைகள் உண்டு. ராமர் கோயில் கட்ட வாஷிங்டனில் பணம் திரட்டப்படுகிறது. எனவே எல்லைகளைக் கடந்து இயங்கும், பரவும் அடிப்படைவாதத்தைத் தேச வரைபடங்களின் அடிப்படையில் அணுகமுடியாது. மேலும் இந்தியா என்ற கற்பிதத்தை விடுத்து, தெற்காசியா என்றோ பூகோளம் என்று முழுமையாகவோ வரையறுத்துக் கொண்டால் இந்து மதம் சிறுபான்மையாகிவிடும்! எனவே அடிப்படைவாத எதிர்ப்பில் ஆதாயம் தேடாதவர்களுக்கு இஸ்லாமிய பாசிசமும் உவப்பானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

மேற்கத்திய கிறிஸ்தவ கலாச்சாரத்திற்கும் இஸ்லாமிற்கும் இடையிலான மோதல் வருங்காலத்தில் உலகளவில் பெரிய முரண்பாடாக அமையும் என பல மேற்கத்திய அரசியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மோதலில் இந்துத்துவ சக்திகளை தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வை மேற்கில் வலுப்பெற்று வருகிறது. இந்தப் பின்னணியில் சிறுபான்மை என்ற வாதத்தை எல்லாவற்றிற்கும் பதிலாக கருதி இயங்குவது அறிவார்த்தமானதல்ல. மேலும் சிறுபான்மை என்ற அந்தஸ்து ஏற்படுத்தித் தரும் அரண் இஸ்லாமிய மத அமைப்பினுள் துளிர்விடும் மாற்றுச் சிந்தனைகளை அடக்கவும் பெண்களை ஒடுக்கவும் பயன்படுகிறது. இந்துத்துவ எதிர்ப்பென்ற அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தனது சமூகத்தினுள் நிகழ்த்தும் அடக்குமுறைகளை யாரும் ஆதரிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அஸ்கர் அலி எஞ்சினியர் போன்ற பழுத்த மதநல்லிணக்கச் செயல்பாட்டாளர்கள் மதவாதத்தைப் பிரித்து அணுகுவதில்லை. ஒன்று மற்றொன்றை உண்டு வளர்கிறது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறார்கள். என்ஜினியர் அயராமல் எழுதிவரும் கட்டுரைகள் இந்து – இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உருவாக்கும் பல கட்டுக்கதைகளை தகர்க்க வல்லவை. என்ஜினியரின் நம்பகத்தன்மை அவருடைய எழுத்தின் நடுநிலை பேசும் தொனியில் இருக்கிறது. முழுமுற்றான நடுநிலை என்ற ஒன்றில்லை என்பது உண்மைதான். ஆனால் திட்டமிட்ட, உள்நோக்கமும் ஆதாயமும் கொண்ட ஒரு பக்கச் சார்பான வக்கீல் பாணி வாதங்களுக்கும், அஸ்கர் அலி என்ஜினியரின் இருபக்கத் தவறுகளையும் சுட்டிக் காட்டியபடி விவாதிக்கும் எழுத்தின் தன்மைக்கும் அடிப்படையான வேறுபாடு உள்ளது. இதற்காக கடுமையான விலையை அவர் கொடுக்க நேர்ந்துள்ளது. இந்துத்துவ எதிர்ப்பென்ற போர்வையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து அதற்குரிய சாதகங்களை அனுபவிக்கும் அறிவுஜீவிகளின் எதிர்நிலை இது. நடுநிலை இல்லை என்று கூறுவதன் மூலம் இரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது. அடிப்படைவாத போக்குகளால் அடித்துச் செல்லப்பட்ட, சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒருவரைச் சரியான திசைக்குத் திருப்பிவிடும் ஆற்றல் அஸ்கர் அலி எஞ்சினியருக்கு உண்டு. அந்த வகையில் அவருடைய எழுத்தை சமத்துவமான சகவாழ்வுக்கானப் பங்களிப்பாக அணுகலாம்.

இதற்கு நேர்மாறாகத் தீவிரவாத மொழியில் இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொள்ளும் எழுத்தின் தாக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம். இத்தகைய எழுத்துகளின் தாக்கத்தை உணரும் வாசகர்களை ஒரு வசதிக்காக மூன்று விதமாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. இந்துத்துவச் சார்பாளர்கள் : இத்தகைய எழுத்துகள் இந்துத்துவச் சார்பாளர்களின் மனப்பாங்கை மாற்றும் ஆற்றல் கொண்டவை அல்ல. மாறாக இவை முன்வைக்கும் அரை உண்மைகள் மண்டிய ஒரு பக்கச் சார்பான வாதங்களின் எதிர்வினையாக அவர்களுடைய நிலைபாடு மேலும் உறுதிப்படுகிறது.

2. இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் : தட்டையான அணுகுமுறையோடு தடாலடியாக முன்வைக்கப்படும் இத்தகைய எழுத்துகள் தீட்டும் கறுப்பு வெள்ளை பிம்பங்கள் இவர்களுக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. முற்போக்கு முலாமை இவர்களுக்குப் பூசி இனிய ஆனால் ஆபத்தான மயக்கத்தில் இவர்களை ஆழ்த்துகின்றன.

3. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் : தங்கள் மதத்தின் மேன்மை, உணர்ச்சிகளின் நியாயம் ஆகியவற்றுக்கான நவீன மொழியிலான வாதங்களை, மார்க்சியம் பின்நவீனத்துவம் எல்லாம் கலந்து வழங்குவதன் மூலம் அவர்களுடைய நிலைபாட்டை மேலும் இறுக்கமாக்குகின்றன.

(இந்தப் பிரிவுகளின் அடங்காதோரின் எதிர்வினை வகைப்படுத்துவது கடினம் என்பதால் அவற்றை இங்கே கருதவில்லை)

சுருக்கமாகச் சொன்னால் இத்தகைய நூல்கள் எழுதியவர்களுக்குச் சாதகமானப் பிம்பங்களை உருவாக்குகின்றன. ஆனால் வாசகத் தளத்தில் அடிப்படைவாதிகள் ஏற்படுத்தியுள்ள பிரிவை மேலும் உறுதிப்படுத்தவே செய்கின்றன.

தமிழ் பேசும் நல் உலகில் ஏற்பட்டு வரும் இந்து -இஸ்லாமிய பிளவைப் பதமாக எடுத்துச் சொல்லப்படும் வாதங்களின் மூலம் இணைக்க முயலும், மனமாற்றத்தை ஏற்படுத்தும், இளைய தலைமுறையின் மனங்களில் வேர்பிடிக்கும், எல்லா அடிப்படை வாதங்களுக்கும் எதிராக ஆற்றலோடு எழுதும் போக்கு வலுவாக இல்லாதது துரதிருஷ்டவசமானது. மார்க்சியப் பார்வையின் தாக்கத்துடன் மதவாதத்தை அணுகும் எஸ்.வி.ராஜதுரை, ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் இந்த நோக்கில் சாதகமாக குறிப்பிடத் தக்கவை.

ஒரு நவீனச் சிந்தனையாளருக்கு தமிழக இஸ்லாமிய குழுக்களுடன் உருவாகக்கூடிய கருத்தொற்றுமைகள் வேற்றுமைகள் என்ன ? இந்துத்துவ எதிர்ப்பென்பது சாதகமானதாகத் தென்படக்கூடிய ஒரு செய்தி. இன்னொன்று இஸ்லாமிற்கு மதம் மாறி வருபவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சமத்துவமாக நடத்தும் பண்பு. இன்னும் சில.

ஆனால் இன்று தமிழகத்தில் செயல்படும் எந்த இசுலாமியக் குழுவிற்கும் இஸ்லாமிய மூல நூல்களை நவீன பார்வையில் அணுகும் போக்கு இல்லை. மனித உரிமை, பெண் உரிமை, குற்றமும் தண்டனையும், தமிழ்வழிக் கல்வி, மரணதண்டனை எதிர்ப்பு, ஒழுக்கம், தூய்மை, மதப்பற்று, கருத்துச் சுதந்திரம், நூல்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தடை கோருதல், ஆச்சாரம், இலக்கியம் என எண்ணற்ற கூறுகளில் இஸ்லாமியக் குழுக்களுடன் ஒரு நவீனச் சிந்தனையாளர் பகிர்ந்துகொள்ளக்கூடிய தளம் எதுவும் இல்லை. இவற்றில் இஸ்லாமிய குழுக்களின் பார்வைக்கும் இந்துத்துவ இயக்கங்களுக்கும் ஒத்த கருத்து பெருமளவிற்கு உண்டு. இஸ்லாமிய அமைப்புகளுடன் இருக்கும் அடிப்படையான பல கருத்து வேறுபாடுகளைப் பற்றிய உரையாடலை அவர்களுடன் மேற்கொள்ள எந்தச் சிறுமுயற்சியையும் எடுக்காமல் நிபந்தனையற்ற ஆதரவை அறிவு ஜீவிகள் வழங்கி வருவது சரியான அணுகுமுறை தானா ? இதை நீண்டகால உறவாகக் கருதாமல் எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையிலான தந்திரமான குறுகிய கால உறவாகப் பார்க்கின்றனர் என்று ஐயம் கொள்ள இந்த அணுகுமுறை இடமளிக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தை விமர்சிப்பதைப் பலரும் தவிர்ப்பதற்குச் சில காரணங்கள் உண்டு. முதல் காரணம் விமர்சிப்பவர் இந்துத்துவவாதியாக அடையாளம் காணப்படுவது அல்லது இந்துத்துவத்திற்குத் துணைபோவதாகப் பார்க்கப்படுவது. வரட்டுச் சிந்தனையாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிணவாடை அடிக்கும் கருத்துகளைத் தாண்டி சிந்தனையின் பயணத்தை எந்தத் துறை சார்ந்து மேற்கொண்டாலும் வக்கிரமான தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. விமர்சனம் என்பது ஆக்கபூர்வமானதாகப் பார்க்கப்படாமல் அழிவிற்கானதாக அணுகப்படுகிறது. ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கும் காட்டிக்கொடுப்பதற்குமான வேறுபாட்டை அழித்துவிடும் அணுகுமுறை இது.

இந்திய இஸ்லாமியர்கள் பலரும் ஜாதி ஒடுக்குமுறையிலிருந்து மீள மதமாற்றத்தை மேற்கொண்டவர்கள் என்பது பரவலானக் கருத்து. இஸ்லாமியர்கள் தம் மதத்தைத் தழுவியவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் சமத்துவத்தை அளிக்கிறார்கள். (இதே சமத்துவம் பிற மதத்தினருக்கும் உரியதா என்பதில் சிக்கல் இருக்கிறது.) ஆனால் இது 100% சமத்துவமா என்பதை ஐயத்துடனேயே அணுக வேண்டும். ஒரு தலித் சமஸ்கிருதமயமாதலும், மேற்கத்தியமயமாதலும், கிறிஸ்துவராதலும், இஸ்லாமியராவதும், புத்த மதத்தைத் தழுவுவதும், பாதிரியாகவோ, கன்னியா ஸ்திரீயாகவோ, கம்யூனிஸ்டாகவோ தொழிற்படுவதும் சமத்துவத்தை நோக்கிய பயணம்தான். ஆயினும் மேற்படிப் போக்குகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள், அவமானங்கள் விவாதிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுவதற்கு உதாரணங்கள் உள்ளன – இஸ்லாம் நீங்கலாக. ஒரு தலித் இஸ்லாமியராக மாறும்போது அவரது விமர்சன வெளிப்பாடுகளில் இரும்புத் திரை விழுந்துவிடுகிறது.

80களில் இந்துத்துவ இயக்கம் புத்துயிர்ப்பு பெற மூலக் காரணங்களில் ஒன்றான மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாமை தழுவிய நிகழ்ச்சி நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதை அடுத்து இந்த இஸ்லாமிய – தலித்துகள் பற்றிச் சிலப் பதிவுகள் ஊடகங்களில் பிரசுரமாயின. மதம் மாறியத் தலித்துகள் தமக்கு இஸ்லாமில் அளிக்கப்பட்டிருக்கும் கெளரவம் பற்றி மிகுந்த நிறைவுடன் பேசியிருந்தார்கள். இருப்பினும் இவற்றைப் படித்தபோது சில ஐயங்கள் தோன்றின. இவற்றைச் சில தலித் மற்றும் பெண்ணிய எழுத்தாளர்களோடு பகிர்ந்து கொண்டபோது இது தொடர்பாகக் களப்பணி மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். இருப்பினும் ஒரு விவாதத்திற்காக என்னுடைய ஐயங்களை இங்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

ரோமிலா தாப்பர் போன்ற அறிஞர்கள் இந்தியாவில் மேல்சாதிப் பெண்களோடு ஒப்பிடும்போது சில அம்சங்களில் தலித் பெண்களுக்கு இருக்கும் அதிக சுதந்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். தலித் பெண்கள் தங்கள் மீதிருக்கும் ஒடுக்குமுறைக்காக வருந்தினாலும், மேல் சாதி பெண்கள் நிலையைப் பார்த்து அவர்கள் பச்சாதாபப்படுவதையும், அவர்களோடு இடம் மாற்றிக்கொள்ளத் தலித் பெண்கள் தயாரில்லை என்பதையும் சில ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. பணிக்குச் செல்லும் சுதந்திரம், தனியான வருவாய், பாலியல் சுதந்திரம், மறுமணம் செய்யும் சாத்தியங்கள் என சில அம்சங்கள் தலித் பெண்களின் நிலையை மேல்சாதிப் பெண்களின் நிலையிலிருந்து சாதகமானதாக அணுகக் காரணங்களாகின்றன. தலித் பெண்கள் எதிர்கொள்ளும் தீண்டாமை, மேல்சாதியினரின் பாலியல் ஒடுக்குமுறை போன்ற எதிர்மறையான அம்சங்களை நாம் மறக்க வேண்டியதில்லை. இருப்பினும் மீனாட்சிபுரத்தில் இஸ்லாமிற்கு மாறியத் தலித் பெண்களின் நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. மேல் சாதியினரின் அடக்குமுறைக்கும் இழிவுகளுக்கும் அவர்கள் இப்போது ஆளாக வேண்டியதில்லை எனும்போதே பல சுதந்திரங்களும் கூடவே பறிபோய்விட்டன என்பதும் உண்மை. இத்தகைய இழப்புகள் ஏதும் ஆண்களுக்கு இல்லை. இங்கு பெண்களின் சுதந்திரம் ஆண்களின் சுயமரியாதைக்காக பண்டமாற்றம் செய்யப்பட்டுள்ளதா ?

இந்துத்துவதற்குத் துணைப் போகக்கூடாது என்ற தர்க்கத்தில் இஸ்லாமில் பெண்களின் நிலை பற்றிய மெளனத்தை நம் அறிவுஜீவிகள் நியாயப்படுத்தலாகாது. முதலில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறவேண்டும்; பின்னர்தான் இங்குள்ள சாதிப் பிரச்சனையைப் பேசவேண்டும் என்ற தேசியவாதிகளின் வாதத்தை, சமூக விடுதலை வேண்டும் இயக்கங்களுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதத்தை, ஒத்த பார்வை இது. விடுதலை என்பது வரிசை முறையில் பெறக்கூடியது அல்ல. எனவே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிக்க இந்துத்துவ அலை ஓயும் வரைக் காத்திருக்க வேண்டியதில்லை.

மேலும் தமிழக இஸ்லாமியர்களைப் பொறுத்தவரைக் கவலை அளிப்பது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடுகள் அல்ல. இஸ்லாமிய மிதவாதிகளின் தீவிரங்கள்தான். தீவிரவாதிகள் எல்லாச் சமூகங்களிலும் இருப்பார்கள். சமூகத்தில் இவர்களால் சில அதிர்வுகளை ஏற்படுத்த முயன்றாலும் சமூகத்தின் பொதுப்போக்கைத் திசைதிருப்ப முடியாது. ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் தீவிரவாதிகளின் அதீதங்களை மறுத்து செயல்படுவோரின் இதழ்களைப் பார்க்கும் போது அவர்களுடைய கருத்துகள் எல்லாம் மிதமானவையாக இல்லை. முதலில் இஸ்லாமிய அடிப்படை நூல்களின் ஒவ்வொரு சொல்லும் என்றென்றைக்குமான உண்மைகளைக் கூறுபவை என்பதில் எல்லாருக்கும் ஒத்த கருத்துதான். அவற்றின் மீதான விளக்கங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம். காலத்திற்கு ஒவ்வாத பல கருத்துகளைப் புகட்டுவது இவற்றின் பிரதான பணியாக உள்ளது. குறிப்பாகப் பெண்கள் தொடர்பான கருத்துகள் செரிக்கவே முடியாதவை. இஸ்லாம் பற்றிய விமர்சனத்திற்கோ விவாதத்திற்கோ எந்த இடமும் அளிக்காத இஸ்லாமிய இதழ்களும் பதிப்பகங்களும் இந்துத்துவ விமர்சனத்தில் சகஜமாக ஈடுபடுகின்றன.

முதலில் இந்து தேசியவாதிகளிடையே மட்டும் இருந்த இஸ்லாமிய வெறுப்பு கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு தமிழ் தேசியவாதிகளையும் தொற்றியுள்ளது. தலித் அரசியலையும் இஸ்லாமிய குழுக்களையும் ஒன்றிணைக்கும் போக்கும் வெற்றி பெறவில்லை. இப்போது இஸ்லாமில் தீவிரமாக வளர்ந்து வரும் வஹாபி இயக்கம் அல்லது தெளகீதுவாதிகள் இயக்கம் தமிழக இஸ்லாமியரின் இடையே வேரூன்றியுள்ளத் தமிழ் கலாச்சாரக் கூறுகளை ‘களைபிடுங்கித் ‘ தூய்மைப்படுத்துகிறது. தர்கா வழிபாட்டு முறையிலிருந்து இஸ்லாமியர்களைத் துண்டிக்க வஹாபி இயக்கத்தவரும் இந்துக்களைத் தடுக்க இந்துத்துவ அமைப்புகளும் முயல்கின்றன. இது தமிழ் சமூகத்திற்கும் இஸ்லாமியருக்குமான இணைப்புகளை முழுவதுமாகத் துண்டித்து அவர்களை தனிமைப்படுத்திவிடக் கூடியது.

இந்து தேசியவாதிகள் போலவோ தமிழ் தேசியவாதிகளைப் போலவோ நிபந்தனைகள் விதித்து இஸ்லாமியர் நன்னடத்தையை வேண்டும் Patronizing ஆன அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை. சமூக உடன்பாடு மிரட்டிப் பெறுவதல்ல. விமர்சனம் மறுக்கவும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைப் பேணவும் எந்த சாதி/மத தமிழனுக்கும் உள்ள உரிமை இஸ்லாமிய தமிழனுக்கும் உண்டு. இந்துக்கள் பல அபத்தமான நம்பிக்கைகளை சமூக விரோத சிந்தனைகளை பல நூற்றாண்டுகள் கொண்டு அனுபவித்தார்கள், அனுபவித்து வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு இஸ்லாமியர்கள் அதனுடன் ஒன்றுபட்டிருக்கும் நிலை தொடர்வது அவசியம். இதற்கு இன்று இன்றியமையாத சுயவிமர்சனம், விவாதம் ஆகியவை போதுமான அளவு இஸ்லாமிய சமூகத்தின் உள்ளோ வெளியிலோ இல்லை. பிற சமூகங்களில் சாத்தியப்பட்டிருக்கும் அளவுகூட இல்லை. முத்திரைகளை விட்டுக் கருத்துகளை எதிர்கொள்ளும் பண்பு எல்லாத் தரப்புகளிலும் வளர்வது அவசியம்.

(கண்ணன் ‘காலச்சுவடு ‘ இதழின் ஆசிரியர்)

Series Navigation