இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பாரதி மகேந்திரன்


சத்தான காலை உணவு

தீட்டப்பாத சிவப்பு அரிசி (கைக்குத்தல்) – 500 கிராம்
கறுப்பு உளுந்து – 50 கிராம்
பச்சைப் பயறு – 50 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
கொண்டைக் கடலை – 50 கிராம்
சோயா பீன்ஸ் – 50 கிராம்
சம்பா கோதுமை ரவை (வறுத்தது) – 50 கிராம்
பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் – 6, 7 (அ – தேவைப்படி)
உப்பு – 2 மே.க (அ – தேவைப்படி)
கேரட் துருவல் – 50 கிராம்
பொடியாக அரிந்த பங்களூரு தக்காளி – 2 பழங்களினுடையவை
முள்ளங்கி துருவல் – 50 கிராம்
குட மிளகாய் (பொடியாக அரிந்தது) – 2
கரம் மசாலாத் தூள் – 1 தே. க.
வதக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்
வதக்கிய பூண்டுப் பற்கள் – 20 (அ- விரும்பியபடி)
பெருங்காயத் தூள் – 1 தே. க.
கொத்துமல்லித் தழை – 2 கைப்பிடிகள்
கடலைப்பருப்பு – 2 மே.க.
கடுகு – முக்கால் தே. க.
கறிவேப்பிலை (பொடிப்பொடியாக அரிந்தது) – 2, 3 ஆர்க்குகள்

முதலில் கைக்குத்தல் அரிசி, கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு ஆகிய மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, சோயா பீன்ஸ் ஆகிய வற்றைக் களைந்து ஒரு சேரத் தனியாக ஊற வைக்கவும். கடலைப்பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். நன்றாக ஊறிய அரிசி, கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றை, அரிந்த பச்சை மிளகாய் அல்லது மிளகாய் வற்றலுடன் சேர்த்து இட்டிலி மாவின் பதத்துக்குக் கரகரப்பாக மின்னம்மியில் அரைக்கவும். அதன் பின், கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் கோதுமை ரவை, ஊறியுள்ள கடலைப்பருப்பு ஆகியவற்றோடு சேர்த்துக் கலந்து எட்டு மணி நேரம் போல் அபடியே விட்டு வைக்கவும்.

இட்டிலிகளாக வார்ப்பதற்குத் தயாரானதும், கேரட் துருவல், முள்ளங்கி துருவல் ஆகியவற்றைத் தயார் செய்யவும். (மண்ணில் விளைகிற எந்தக் காயையும் நன்றாகக் கழுவுவது மட்டுமே போதாது. மேல் தோலைக் கண்டிப்பாகச் சீவி எடுத்துவிட வேண்டும். மண் வாழ்க் கிருமிகள் வயிற்றினுள் போகாமல் தடுக்கலாம். துருவுவதற்கு முன்னால், இவற்றை உப்பும் மஞ்சளும் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைப்பது நல்லது.) தக்காளி, பச்சை மிளகாய், குட மிளகாய் ஆகியவற்றையும் பொடிப்பொடியாக அரியவும். சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி வைக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலைத் தழைகளையும் தனித் தனியாக ஆய்ந்து அரிந்து வைக்கவும். (அல்லது கறிவேப்பிலையை மட்டும் அரைக்கப் போகிற தானியங்களுடன் சேர்த்து மசித்து விடலாம். குழந்தைகள் அதை எறிவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.)

பின்னர், உப்பு, கேரட் துருவல், பங்களூரு தக்காளி, குடமிளகாய், முள்ளங்கித் துருவல், கொத்துமல்லித் தழை, பெருங்காயப்பொடி, வதக்கிவைத்த பூண்டு, வெங்காயம், கரம் மசாலாப்பொடி ஆகியவற்றை மாவுடன் நன்றாய்க் கலந்து கடுகைத் தாளிக்கவும். பின் இந்த மாவை இட்டிலித் தட்டில் இட்டிலிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்துப் பரிமாறவும். (அதிகக் காரமில்லாத தேங்காய்ச் சட்டினி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.)

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்