இறந்த கிரிக்கெட் எப்போது உயிர்பெறும் ?

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue

சின்னக்கருப்பன்


சென்ற மாதம் ஒரு அதிகாலை, ஒரு இன்டெர்நெட் முகவரியில் கிரிக்கெட் இறந்து போனது.

மனோஜ் பிரபாகர் மற்ற கிரிக்கெட் ‘வீரர் ‘களுடன் பேசிய ஒலிநாடாக்களை வெளியிட்டு எல்லா கிரிக்கெட் ‘வீரர் ‘களின் மானத்தையும் வாங்கிவிட்டார்.

பிறகு நடந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். கபில்தேவ் எல்லோருக்கும் முன்னால் கண்ணீர்விட்டு கதறி அழுததும், கவாஸ்கர் விசாரணைக்கு தேவை பற்றி அறிக்கை விட்டதன் பின்னர் அவரது பெயரே விசாரணையில் வரும் என்றவுடன் வாயை மூடிக்கொண்டதும், ஜெயவந்த் லெலியிடமிருந்து வந்த அறிக்கைகளும் சித்து, அஜார் போன்றவர்களின் சொத்துக்களின் பட்டியல்களும் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனை தலைகுனியவைத்துவிட்டன.

நான் கிரிக்கெட்டை திட்டும்போதெல்லாம், என் நண்பர்கள் அதற்கு ஆதரவாகவும், தீவிர ரசிகர்களாய் உணர்ச்சி வசப்பட்டு என்னை திட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னை பார்க்கும் போது கிரிக்கெட் பற்றியே வாயைத் திறப்பதில்லை. இதை என் வெற்றியாக நான் கருதவில்லை. இது ஒரு சாதாரண ரசிகனின் மனத்தை புண்படுத்திவிட்ட கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டும், விளையாட்டு வீரர்களும், வியாபாரிகளும் இனி என்றென்றும் பணம் பண்ணமுடியாத ஒரு சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டுவிட்டதை இன்னும் அவர்கள் உணரவில்லை என்பதுதான் இன்னும் சோகமான விஷயம்.

இப்போது எந்த் கிரிக்கெட் மேட்சை ஒரு கிரிக்கெட் ரசிகன் பார்ப்பான் ? இப்போதே நடக்கும் கிரிக்கெட் மாட்சை பார்க்க ஆளில்லை. தொலைக்காட்சியில் வரும் கிரிக்கெட் மாட்ச் காண்பாரின்றி கிடக்கிறது. கிரிக்கெட் மாட்சுகள் பற்றிய அவநம்பிக்கை உறுதிப்பட்டுவிட்டது.

உண்மையிலேயே கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு இறந்தேதான் போய்விட்டது.

இன்று யாருக்கும் அஜாருதீன் வைத்திருக்கும் சொத்து பற்றியோ, அல்லது கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் போர்டில் இருக்கும் அசாதாரணமான செல்வாக்கு பற்றியோ ஆர்வமில்லை. அதுவே இந்த விளையாட்டு இறந்து போனதன் அறிகுறி.

கிரிக்கெட் இறந்து போனதை உணராமல், கிரிக்கெட் கமண்டேட்டர்களும், விளையாட்டு வீரர்களும் பெரிய ஊழல் நடந்து விட்டது போலவும், மக்கள் இந்த பிரச்னையை ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டு பெரிதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். Who cares ?

இன்றைய கிரிக்கெட் அமைப்பே பெரிய அபத்தம்.

செங்கல்பட்டு மாவட்டம் அளவே உள்ள நியூசிலாந்து ஒரு கிரிக்கெட் குழு. தமிழ்நாடு அளவு கூட இல்லாத இலங்கை ஒரு கிரிக்கெட் குழு வைத்திருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் குழுவில் சில வருடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டாளரைப் பார்ப்பதே அரிது.

மும்பையைச் சேர்ந்த விளையாட்டாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் விளையாட்டுக் குழுவில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏன் நாகாலாந்தில் யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லையா ?

கேட்டால் அதற்குத்தான் ரஞ்சி ட்ரோபி இருக்கிறதே என்பார்கள் நமது அமைப்பாளர்கள். மோகீந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி போன்றவர்கள் காலம் காலமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீக்காந்த் ஒரு மேட்சில் சரியாக விளையாடவில்லை என்றால் உடனே கல்தா.

இந்திய கிரிக்கெட் குழு என்பதே ஒரு பெரிய அபத்தம். அதுவும் ஏன் அது அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதும் ஒரு கேள்வி. இது போர்டு. அரசாங்கமில்லை என்று சப்பைக் கட்டும் சிலர் கட்டுகிறார்கள். நான் சொல்வது, இது மோனோபாலி என்பதுதான்.

இந்தியாவில் இந்திய கிரிக்கெட் குழு என்பது இருக்கக்கூடாது. இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு முதலில் கலைக்கப்படவேண்டும்.

அடாவடி போல தோன்றலாம். ஆனால் சற்றே யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கவேண்டிய கிரிக்கெட் குழுக்களின் எண்ணிக்கை சுமார் 50. வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, கேரளம், வட கன்னடம், தென் கன்னடம், ராயலசீமை, ஆந்திரா, ஒரிஸ்ஸா, வட வங்காளம், தென் வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, கிழக்கிந்தியா, காஷ்மீர், என்ற ரீதியில் நாம் ஒரு சுமார் 50 கிரிக்கெட் குழுக்கள் இருக்கவேண்டும் என்பதுதான் நான் சொல்வது.

இவைகள் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் இருப்பதும் கூடாது. (இருந்தால் அமைச்சரின் பையன், அரசாங்க அதிகாரியின் மாமன் மகன் எல்லோரையும் மாநில கிரிக்கெட் குழுக்களில் பார்க்கலாம்). இவை லாப நோக்கம் கொண்ட இந்தியக் கம்பெனிகள் கையில் இருக்கவேண்டும்.

இந்த விளையாட்டுக் குழுக்கள் தேசீய கிரிக்கெட் அமைப்பு என்ற ஒரு புது அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். புதிய குழுக்கள் இந்த அமைப்பில் உறுப்பினராவதற்கான நெறிமுறைகளை இந்த அமைப்பு உருவாக்கி அதை பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதோடு இந்த அமைப்பின் வேலை முடிந்து விட்டது.

வேண்டுமெனில் இங்கிலாந்து குழுவும், இலங்கை குழுவும் இந்த இந்தியக் குழுக்களொடு ஒன்றாய் விளையாடி தன் திறமையை நிரூபிக்கட்டும். ஒவ்வொரு வருடமும் 50 குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் எத்தனை குழுக்களுக்கு பணம் கொடுக்க முடியும் புக்கிகளால் ? புக்கிகள் மூலம் கிடைக்கும் பணத்தை விட புகழ் மூலம் கிடைக்கும் பணம் அதிகம் என்றால் எத்தனை பேர் பணம் வாங்கிக் கொண்டு மோசமாக விளையாடுவார்கள் ? மோசமாக விளையாடும் எத்தனை விளையாட்டு வீரர்களை, குழுக்களின் நிர்வாகிகள் பொறுத்துக் கொண்டு காசுதருவார்கள் ?

அப்போது நன்றாக விளையாடவேண்டும் என்பது மட்டுமே முக்கியமானதாக இருக்கும். அப்போதுதான் இறந்து போன கிரிக்கெட் உயிர்பெறும்.

இந்த அறிவுரை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல. எல்லா விளையாட்டுகளுக்கும் தான். இந்த முறை ஒன்றே ஒரு சாதாரண விளையாட்டு ரசிகனுக்கு ஆர்வத்தை கொடுக்கும். ஆர்வமுள்ள விளையாட்டு ரசிகனே அந்த விளையாட்டு தொலைக்காட்சியில் வரும்போது பார்ப்பான். நிறைய ரசிகர்கள் இருக்கும் விளையாட்டு விளம்பர பணத்தை விளையாட்டுக் குழுக்களுக்கு கொடுக்கும். அப்போது அஜாருதீனும் ஜடேஜாவும் கோடாஸ்வரர்களாக இருந்தாலும் ஒரு ரசிகன் வயிறெரிய மாட்டான். ஏனெனில் அது உழைத்து சம்பாதித்த பணம். ஒரு ரசிகனை ஏமாற்றி சம்பாதித்த பணம் அல்ல.

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

Scroll to Top