இருளில்

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

அ.முத்துலிங்கம்


எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்? கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரபா பார்வையற்றவர். அவருடைய கனவில் அம்மா வருகிறார். அவருடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் வருகிறார்கள். அவருக்கு கண்பார்வை போனது ஏழுவயதில் என்பதால் அவர் காட்சிகள் எல்லாம் ஏழுவயதோடு உறைந்து விட்டன. பிறவியிலேயே பார்வையற்றவர் கனவுகளில் உருவங்கள் வராது. எல்லாமே இருள் திட்டுகளும் ஒலிகளும்தான் என்றார்.

பிரபா வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் அவருடைய மனைவி தேர்ந்த சமையல்காரிபோல வேகமாகச் சமைப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களை அவதானிக்கும் எவரும் கணவன் மனைவி இருவருமே பார்வையற்றவர்கள் என்பத உணரமாட்டார்கள். பிரபா அவருடைய கம்புயூட்டரில் வேலைசெய்வதை பார்க்கும்போது தலையை சுற்றும். என்னுடைய சுட்டு விரல் தட்டச்சு முறையிலும் பார்க்க பத்து மடங்கு வேகம் கூடியது. அவருடைய கணினியில் ‘எழுத்து – குரல்’ செயலி இயங்குகிறது. அது அவருக்கு வரும் மின்னஞ்சல்களை வாசித்து சொல்கிறது. அவர் அனுப்பும் கடிதங்களையும் படித்துக் காட்டி பிழைகளை திருத்தவைக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குருடர்களை பார்ப்பது கெட்ட நிமித்தம் என்று கருதினார்கள். இலங்கையை பரராசசேகரன் என்னும் மன்னன் ஆண்ட காலம், அவனிடம் பாடிப் பரிசில் பெற இந்தியாவிலிருந்து அந்தகக் கவி வீரராகவமுதலியார் வந்திருந்தார். அவரை நேரே பார்த்தால் சகுனப் பிழை என்று கருதி அரசன் திரைபோட்டு வரவேற்றானாம். இன்றோ நிலைமை வேறு. பிரபா கனடாவில் கைத்தடியால் தரையை தொட்டு நடக்கும்போதுகூட தலை குனிவதில்லை. பஸ், ரயில், விமானங்களில் சர்வ சாதாரணமாக பயணம் செய்கிறார். மின்தூக்கியில், பிரெய்லில் எழுதப்பட்ட அவருடைய தளத்து பட்டனை அமுக்குகிறார். வங்கியில் பொறுப்பான உத்தியோகத்தில் பணியாற்றுகிறார். பொது இடங்களில் கழிவறையில் எது ஆண் எது பெண் என்பதை பிரெய்ல் மூலம் தடவி அறிந்து தானாக போய் வருகிறார். பேசும் புத்தகங்களை கிரமமாக நூலகங்களில் இருந்து தருவித்து கேட்கிறார்.

சமீபத்தில் பொஸ்டனிலுள்ள பேர்கின்ஸ் பார்வையற்றவர்கள் கல்விக்கூடத்துக்கு போனபோது பிரபாவை நினைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் Inauspicious Times என்ற தலைப்பில் வெளியான என்னுடைய தமிழ் சிறுகதை தொகுப்பை பேர்க்கின்ஸ் கல்விக்கூடம் ஒலிப்புத்தகமாக கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருந்தது. புத்தகத்திலுள்ள சில வார்த்தைகளின் உச்சரிப்பை சரி செய்வதற்காக நான் உச்சரிக்க அவற்றை பதிவு செய்து வைத்துக்கொண்டார்கள். பெரும் நிலப்பரப்பில் எழும்பிய கட்டிடங்களைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. இங்கேதான் சிறு வயதில் ஹெலன் கெல்லர் படித்தார். மிகப் பெரிய கூடங்களில் ஒலிப்புத்தகங்களும், பிரெய்ல் புத்தகங்களும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. நாள் ஒன்றுக்கு 2000 ஒலிப்புத்தகங்களை நூலகங்களுக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

கல்விக்கூடத்தின் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் கண்பார்வையில்லாதவர்கள் ஒரு தடியை முன்னால் நீட்டிக்கொண்டு கிறுகிறுவென்று நடக்கிறார்கள். ஒரு திருப்பத்தையும் தவறவிடுவதில்லை. கார்கள் போகும்பாதையில் கடவையில் நின்று சாவதானமாக கடக்கிறார்கள். ஒருமுறை நான் நடந்த பாதையில் ஒருவர் தடியுடன் தட்டிக்கொண்டு வருவதை அவதானித்து கரையிலே ஒதுங்கி நின்றேன். அந்த மனிதர் வேகமாக என்னைக் கடக்கும்போது ‘காலை வணக்கம்’ என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டு மேலே நடந்தார். எப்படி அவருக்கு நான் அங்கே நின்றது தெரிந்தது என்பது எனக்கு இன்றுவரை விடுபடாத மர்மங்களில் ஒன்று.

ஒலிப்புத்தகங்களை ஆர்வமாகக் கேட்பதுபோல பிரபா உணவு விசயத்திலும் நுண்மையான ரசனையுள்ளவர். கண்பார்வையற்றவர்களால்தான் உணவின் முழுச்சுவையையும் அனுபவிக்க முடியும் என்று அடிக்கடி சொல்வார். ஒருநாள் அவர் விநோதமான உணவகம் ஒன்று பற்றி கூறினார். ரொறொன்ரோவின் மையப்பகுதியில் இயங்கும் இந்த உணவகத்தை சில நாட்கள் முன்னர்தான் திறந்திருந்தார்கள். அதன் பெயர் ‘O Noir’. இருளில் என்று அர்த்தம். பார்வையில்லாதவர்களால் நடத்தப்படும் உணவகம் அது என்றும் அங்கே உணவருந்தப் போகிறவர்கள் இருட்டில் அமர்ந்து உண்ணவேண்டும் என்றும் சொன்னார்.

ஒருநாள் நாங்கள் நால்வர் அங்கே விருந்துக்கு செல்ல முடிவு செய்தோம். நான், மனைவி, நண்பர் ஒருவர், பிரபா. உணவகம் அடக்கமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வரவேற்பறையில் ஒப்பனை செய்த மெல்லிய பெண் உயரமான ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார். அவர்தான் வரவேற்பாளினி. எங்களைக் கண்டதும் எழுந்து நின்று முகமன் கூறி வரவேற்றார். ‘உணவறை முற்றிலும் இருட்டிலேயே இயங்கும். ஒரு மின்மினிப்பூச்சி வெளிச்சம்கூட இராது. உள்ளே போனால் நீங்கள் இருளில் மெனு அட்டையை வாசிக்க முடியாது. ஆகவே முதலிலேயே உங்கள் உணவை ஓடர் பண்ணினால் நல்லது’ என்று சொல்லி மெனு அட்டையை நீட்டினார். பிரபா பிரெய்ல் மெனு அட்டையை தடவி தன்னுடைய தெரிவுகளை சொல்ல நாங்களும் எங்களுக்கு பிடித்த உணவு வகைகளுக்கு ஆணை கொடுத்தோம். உணவறையை நோக்கி வரவேற்பு பெண் முன்னே நடக்க, பிரபா எனது வலது முழங்கையை தனது இடது கையால் பிடித்துக்கொண்டார். நான் நடக்க அவரும் நடந்தார். படிக்கட்டு வருகிறது என்று சொன்னேன். அவர் நீங்கள் படியில் ஏறும் போது உங்கள் முழங்கையும் ஏறும். அப்படியே நான் உங்கள் அசைவை பின்பற்றி வந்துவிடுவேன். நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பாட்டுக்கு நடவுங்கள்’ என்றார்.

ஒரு மூடிய வாசல் வந்ததும் வரவேற்பாளினி அழைப்பு மணியை அடிக்க கதவை திறந்துகொண்டு பரிசாரகர் வந்தார். ஆறடிக்கும் மேலே உயரமான கறுப்பு மனிதர். நீலக் கால்சட்டையும், பழுப்பு நிற சேர்ட்டும் அணிந்து கம்புபோல நேராக நின்றார். மடக்கிய வலது கையில் மடித்த வெள்ளை துணி. பார்வையில்லாத அவர் தன்னுடைய பெயர் நைஜர் என்று அறிமுகம் செய்துகொண்டார். நாங்களும் எங்கள் பெயர்களைச் சொன்னோம். அவர் முன்னே நடந்து இடுப்பினால் கதவை திறந்து பிடிக்க நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தோம். ஹிட்லரின் ராணுவ வீரன்போல பரிசாரகர் தன் கால்களை முன்னே நீட்டி நடக்க நாங்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு அவர் பின்னால் போனோம். கதவு மூடியதும் எங்களை இருள் சூழ்ந்தது. இருட்டில் செயல்படும் காமிராவால் யாராவது எங்களை அந்த நேரம் படம் எடுத்திருந்தால் அது விநோதமானதாக இருந்திருக்கும். என்னுடைய கை எனக்கு தெரியவில்லை. நாங்கள் மெல்ல அசைந்து, இரவில் சுவர் சிவிட்சைக் கண்டுபிடிப்பதுபோல, பரிசாரகர் தொட்டுக்காட்டிய ஆசனங்களைத் தட்டிப்பார்த்து அமர்ந்துகொண்டோம். எங்களைச் சுற்றி தடவிப் பார்த்தோம். முன்னுக்கு மேசை, மேசை மேலே பிளேட், கரண்டி, முள்ளுக்கரண்டி, கத்தி, நாப்கின் போன்றவற்றை ஊகிக்கக்கூடியதாக இருந்தது.

நிறைய ஆட்கள் அடுத்தடுத்த மேசைகளில் உட்கார்ந்து சாப்பிடும் சத்தம் கேட்டது. கரண்டி பல்லில் படும் ஒலி, கோப்பையில் கத்தி உரசும் ஒலி, அடிக்கடி எழும் சிரிப்பு அலை, கிளாஸ்கள் எழுப்பும் ணங் சத்தம், பரிசாரகர்கள் நடமாடும் ஒலி, உறிஞ்சும் ஒலி என்று எங்கும் ஒலி மயம். பரிசாரகர் அவரவர் ஓடர் பண்ணிய உணவைக் கொண்டுவந்து மேசையின் மேல் வைத்தார். நாங்கள் தடவி அவற்றின் இருப்பிடத்தை மனதில் நிறுத்தினோம். வைன் வந்தபோது எங்கே வைப்பது என்ற பிரச்சினை எழுந்தது. எப்படியும் இன்றிரவு முடிவதற்குள் நான் வைனைக் கொட்டி, கிளாஸை உடைத்து, உடையையும் பாழாக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் பொது ஆலோசகர் பிரபாதான். ‘சுவரை தட்டி பாருங்கள், அதிலிருந்து ஒரு சாண் தூரத்தில் வைன் கிளாஸை வையுங்கள். எடுக்கும்போது சுவரில் தொடங்கி மேசையில் விரல்களால் ஊர்ந்து வந்து எடுங்கள்’ என்றார். அன்று வைனும், கிளாசும் என் உடையும் தப்பியது அப்படித்தான்.

கோப்பை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அத்துடன் கத்தியின் கூர் பக்கத்தையும் தடவிப் பார்த்து உறுதிசெய்ததுதான் எங்களுடைய முதல் காரியம். உணவை உண்பது சிறிய வேலை; அது எங்கே இருக்கிறது என்பதை ஊகிப்பதுதான் பெரிய வேலை. நாப்கின் அடிக்கடி மறைந்துபோனது; கீழே விழும். மடியில் இருக்கும். கோப்பைகளின் அடியில்போய் ஒளிந்துகொள்ளும். கையில் இருந்த முள்ளுக்கரண்டி திடீரென்று காணாமல் போய்விடும். இரண்டும் இருந்தால் கோப்பை இராது. பிளேட் விளிம்பை தடவிக் கண்டுபிடித்து உணவைத் திரட்டி வாயில் வைப்பதே ஒவ்வொரு தடவையும் பெரிய வெற்றி ஈட்டியதுபோலத்தான். நீண்ட நேரம் கத்தியால் வெட்டிவிட்டு கரண்டியால் அள்ளினால் அதிலே ஒன்றுமே இராது. எந்த திசையிலிருந்து எந்த உணவு வருகிறது என்ற அனுமானம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வாயும் ஆச்சரியத்தையும் அற்புதமான ருசியையும் கொடுத்தது.

என் மனைவி அரைவயிறுதான் சாப்பிட்டதாக சொன்னார். மீதி மேசையிலேயே கொட்டிவிட்டது. என்னுடைய நண்பர் பற்றி சொல்லவேண்டும். அவருடைய கழுத்து சதை வான்கோழியின் கழுத்துப்போல மடித்து மடித்து இருக்கும். உணவு உள்ளே போவது வெளிச்சத்திலும் கண்ணுக்கு தெரியாது. ஓடும்போதோ, வேலைசெய்யும்போதோ அவருக்கு வியர்வை வராது. ஆனால் சாப்பாடு உள்ளே போனதும் வியர்த்துக் கொட்டும். மூச்சு ரேஸ் குதிரைபோல வெளிவரும். சேர்ட் முதுகுடன் ஒட்டிக்கொள்வதால் பிரித்துத்தான் எடுக்கவேண்டும். ஆளைப் பார்க்க சகிக்காது, ஆனால் அன்று அவருடைய கோலத்தை பார்க்கும் சங்கடத்திலிருந்து தப்பினோம். அவர் ஓடர் பண்ணிய பதார்த்தம் குத்திச் சாப்பிடவேண்டியது. ஆகவே அவர் கை உளையுமட்டும் பிளேட்டை குத்திக்கொண்டே இருந்தார். பரிசாரகர் பிளேட்டை எடுத்துப்போன பிறகும் குத்திய சத்தம் கேட்டது. ஒருவித பிரச்சினைப் படாமல் உணவருந்தியது பிரபா மட்டும்தான். எப்படி என்று கேட்டேன். அவர் ‘நான் குருடாக இருப்பதற்கு இருபது வருட காலம் திறமான பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்றார்.

நாங்கள் விருந்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு மாற்றத்துக்காக பிரபாவின் வலது முழங்கையை நான் பிடித்துக்கொண்டேன். அவருக்கு பிரச்சினையே இல்லை. எங்கே சுவர் எங்கே கதவு எங்கே படி என்றெல்லாம் மனப்பாடம் பண்ணி வைத்திருந்தார். எப்படி என்று கேட்டேன். மறுபடியும் 20 வருடப் பயிற்சி என்று சொல்லாமல் எந்தப் புது இடத்துக்கு போனாலும் மனது எண்ணிக் கணக்கு பண்ணிக்கொள்ளும் என்றார். படி வந்து அவர் இறங்கும் போது முழங்கையும் கீழே போனது. நானும் இறங்கிக்கொண்டேன். வெளிச்சத்துக்கு வந்து உணவறை வாசலில் பரிசாரகரிடம் விடைபெற்றபோது அவர் என் தலைக்கு மேலே பார்த்துக்கொண்டு ‘நன்றி, மீண்டும் வருக’ என்றார். அப்பொழுதுதான் உணவறை வாசலில் எழுதி வைத்திருந்ததை நாங்கள் படிக்க நேர்ந்தது. உள்ளே சென்றபோது இருந்த படபடப்பில் அதை படிக்கவில்லை. There is no darkness but ignorance’ என்ற சேக்ஸ்பியரின் வாசகம். எங்கள் அப்போதைய நிலைக்கு அது மிகவும் பொருத்தமாகப் பட்டது.

வரவேற்பாளினி நாங்கள் எங்கே விட்டு வந்தோமோ அந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு விட்டில் பூச்சி அவரை தொடுவதும், சிறகை அடிக்காமல் நேரே எழும்பிச் சென்று மின்விளக்கை தொடுவதும், ஒளிச் சிதறலாக கீழே விழுவதுமாக ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது. பார்வையில்லாத பரிசாரகர்கள் அவரைச் சுற்றி உணவுத் தட்டங்களுடன் ஓடிக்கொண்டிருக்க, பார்வை உள்ளவர்கள் இருட்டறையில் உணவுடன் போராட, இங்கே இந்த அழகான பெண், பத்தாயிரம் கண்கள் கொண்ட விட்டில் பூச்சி அவரை வட்டமிட, தன்னந்தனியாக மின்தூக்கி கதவு திறப்பதற்கு ஒருவர் காத்திருப்பதுபோல காத்திருந்தார். எங்கள் உணவுக்கான கட்டணத்தை அவரிடம் கட்டினோம். அப்பொழுது அந்தப் பெண் ‘இங்கே உணவருந்தியவர்களுக்கு ஒரு கேள்விப் போட்டியிருக்கிறது. அதிலே நீங்கள் வென்றால் உங்களுக்கு விசேடமான பரிசு ஒன்று உண்டு’ என்றார்.

ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படம் எனக்கு ஞாபகம் வந்தது. அரசியாக நடித்த மாதுரிதேவி, கேத்தல் கைப்பிடி போல இடுப்பிலே ஒரு கையை வளைத்து வைத்துக்கொண்டு, கேள்வி கேட்பார், பதில் தெரிந்தால் அவரை மணக்கலாம். தெரியாவிட்டால் அவர் உங்கள் தலையை கொய்து வைத்துக்கொள்வார். இங்கே எங்கள் தலை போகாது ஆனால் மானம் போவதற்கு வாய்ப்பிருந்தது. வரவேற்பாளினி கேட்ட கேள்வி இதுதான். ‘இந்த உணவகத்தில் எல்லாவிதமான இறைச்சிவகைகளும் பரிமாறுவோம். மரக்கறி, பழங்கள், இனிப்பு வகையும் உண்டு. ஆனால் மீன் மட்டும் பரிமாறமாட்டோம், அது ஏன்?’

வனவாச முடிவில் நச்சுப்பொய்கையில் பஞ்சபாண்டவரை நிறுத்தி அசரீரி கேட்டது போன்ற கேள்வி. நாங்கள் அந்த புராணச் சகோதரர்கள்போல வரிசையாக நின்று பதில் இறுத்தோம். ‘நாற்றமடிக்கும், அதனால்தான்’ என்றார் மனைவி. அவர் சமையல் கலை நிபுணி. ‘வழுவழுவென்று இருக்கும், இருட்டிலே வெட்டிச்சாப்பிட முடியாது.’ இது வியர்வையில் நனைந்துகொண்டிருந்த நண்பர். ‘மீனின் கண் இறந்தபிறகும் திறந்தபடி இருக்கும். பார்வை இல்லாதவர்களை கேலி செய்வதுபோல.’ என்னுடைய இந்த கவித்துவமான பதிலுக்கு நிச்சயமாக பொற்கிழி கிடைத்திருக்கவேண்டும், ஆனால் கிடைக்கவில்லை. ‘மீன் முள் ஆபத்தானது, தொண்டையில் போய் சிக்கிக்கொள்ளும்’ என்றார் பிரபா. எல்லாமே பிழையான பதில்கள் என்று சொன்ன பெண் சரியான விடையையும் பகர்ந்தார்.

‘முற்றிலும் இருட்டில் உட்கார்ந்து உண்பதற்காக இந்த உணவகம் உண்டாக்கப்பட்டது. பார்வையற்றவர்கள் தங்கள் உணவை எப்படி உண்கிறார்கள் என்பதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு. மீனுக்கு இருட்டிலே ஒளிரும் தன்மை உண்டு. அதைப் பரிமாறினால் உணவுத்தட்டு எங்கே இருக்கிறது என்பது தெரிந்துவிடும். உணவகத்தின் நோக்கம் நிறைவேறாது’ என்றார்.

பரிசு கிடைக்காத துக்கம் மேலிட நாங்கள் வெளியே வந்தோம். இரவு ஒன்பது மணி என்றாலும் சூரியன் வானத்தில் தகதகவென்று எரியும் காட்சி கிட்டியது. எங்களை மயக்கிய அந்தக் காட்சி பிரபாவை ஒன்றுமே செய்யவில்லை. ‘இருளிலே ருசி அதிகமாகும் என்பது சரியாகத்தானே இருந்தது’ என்றேன். பிரபா அதிகம் பேசி பழக்கமில்லாதவர். அவர் ‘ஒரு துப்பாக்கி குண்டின் முழுப் பெறுமதியையும் பெறவேண்டுமானால் அதைச் சுடவேண்டும்; எறியக்கூடாது. உணவை நாங்கள் வாயால் சுவைக்கும்போது அதன் முழுப்பெறுமதியும் கிடைப்பதில்லை. கண்களை மூடினால் எல்லா புலன்களும் ஒரே திசையில் வேலை செய்து ருசி பலமடங்கு அதிகமாகிறது’ என்றார்.

திருதராட்டினன் மனைவி காந்தாரி மணமுடித்த நாளிலிருந்து தன் கண்களை ஒரு பட்டுத் துணியினால் கட்டிக்கொண்டாராம். தன் கணவர் அனுபவிப்பதை தானும் அனுபவிக்கவேண்டும் என்ற நல்லெண்ணம்தான். ஆனால் அதில்கூட அவர் வெற்றிபெறவில்லை. காந்தாரி காணும் கனவுகளில் உருவங்கள் வந்துபோகும்; ஆனால் திருதராட்டினன் கனவுகள் வெறும் இருள் திட்டுக்கள்தான். எவ்வளவுதான் முயன்றாலும் ஒரு பார்வையற்றவர் படும் இன்னலை முற்றிலும் இன்னொருவர் அனுபவிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டோம்.

அடுத்த நாள் காலை உணவகத்தை அவர்கள் சுத்தம் செய்யும்போது அது எப்படி இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் பட்ட சிரமங்களையும் அதன் சாட்சியாக விட்டு வந்த அடையாளங்களையும் அவர்கள் காண்பார்கள். பிளேட்டுகளைச் சுற்றி இறைந்து கிடக்கும் உணவு, கதிரைக்கு கிழே விழுந்து கிடக்கும் கரண்டிகள், தண்ணீர் சிந்தி அதற்கு மேல் நிற்கும் கிளாஸ்கள், இவையெல்லாவற்றையும் பார்ப்பார்கள். என்னுடைய நாப்கின் மூலையை நான் கத்தியால் வெட்டி துண்டாக்கியதையும் அவர்கள் கண்டுபிடிக்கக்கூடும்.

சேக்ஸ்பியர் ‘இருள் என்பது இல்லை; அறியாமைதான் உண்டு’ என்று கூறினார். உணவக சம்பவத்துக்கு பிறகு எங்கள் அறியாமை கொஞ்சம் குறைந்திருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.

முற்றும்

Series Navigation