இருபது ரூபாய் நோட்டு

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

எம். ரிஷான் ஷெரீப்


நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர் வாங்கியிருக்கிறார்.

திருப்பி கொடுத்து விடலாம் என்கிற முடிவோடு பையனை நெருங்கினார். விடிகாலைதான் என்றாலும் அதற்குள் இரண்டு , மூன்று பேர் கூடி விட்டார்கள் . இப்பொழுது ” நான்தான் பா , கீழே விழுந்து கிடந்த உன் இருபது ரூபாய் நோட்டை எடுத்தேன் ” என்று கொடுத்தால் தனக்குத்தான் அவமானமென்று கொஞ்சம் சிந்தித்தார். அமைதியாய் இருந்தார். பையன் மட்டும் அழுது கொண்டிருந்தான்.

அவர் வழமை போல் உடற்பயிற்சிக்காக சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வந்த போதுதான் கீழே கிடந்த இந்த இருபது ரூபாய் நோட்டு கண்ணில் பட்டது. என்ன தோன்றியதோ… சுற்றுமுற்றும் பார்த்து எடுத்து சட்டைப் பையில் அனிச்சையாகப் போட்டுக் கொண்டார்.

சற்று தூரம் நடந்து விட்டு திரும்பி வரும் வழியில்தான் தான் ரூபாய் நோட்டைக் கண்டெடுத்த அதே இடத்தில் பேப்பர் , பால் போடும் பத்து,பதினொறு வயது மதிக்கத்தக்க பையன் நின்று அழுது கொண்டிருப்பதைக் கவனித்தார்.

வீடுகளிலிருந்து கிடைத்த பணத்தை அந்த இடத்தில் வைத்து எண்ணியதாகவும் அப்பொழுதுதான் விழுந்திருக்கக் கூடும் என்பது அவன் எண்ணம் . ஊகம் சரிதான்.

ஏற்கெனவே அவன் முதலாளி தொட்டதெற்கெல்லாம் சந்தேகப்படும் சந்தேகப் பிராணி எனவும் நோட்டு தொலைந்ததையும் நம்ப மாட்டார் என்பதையும் விம்மலிடையே சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு முடிவுக்கு வந்தவராய் ஏற்கெனவே தனது சட்டைப் பையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
” வேணாம் ஸார் . இன்னிக்கு நீங்க தருவீங்க. நாளைக்கு நான் திரும்பவும் தொலைச்சா யாராவது தருவாங்களான்னு எதிர்பார்க்கத் தோணும். ஒவ்வொருத்தரிடமும் கை நீட்டத் தோணும். வேணாம் ஸார். ரொம்ப தாங்க்ஸ் .” சொன்னவன் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டான் என்பது கூட புரியாமல் அதிர்ந்து நின்றார். மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

வழமையை விடத் தாமதிக்கும் கணவனை எதிர்பார்த்து, கேட்டருகே காத்திருந்த அவர் மனைவிக்கு , வீட்டில் அதிரடியாக நாத்திகம் பேசும் கணவன் தெருமுனைக் கோயில் உண்டியலில் காசு போட்டுக் கும்பிடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

– எம். ரிஷான் ஷெரீப் ,
இலங்கை.

Series Navigation