இருக்கிறது..ஆனால் இல்லை…

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

சேவியர்.


வேறென்ன இருக்கிறது உலகில்
இந்த
உயிர் கோதும் உறவுகள் தவிர…

சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும்
அம்மா…
கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா…
சின்னப் புன்னகையோடு
செல்லமாய் சண்டையிடும் தங்கை,
அண்ணா எனும் ஒற்றை வார்த்தைக்குள்
ஒட்டுமொத்த நேசத்தையும் கொட்டிக் குவிக்கும் தம்பி…

வேறென்ன இருக்கிறது உலகில்…
இந்த
உயிர் கோதும் உறவுகள் தவிர ?

சட்டைப்பையில் அப்பா தந்த
நீளம் குறைந்த நோட்டுக்களின் மகிழ்ச்சியை
இந்த
அன்னிய நீள் நோட்டுக்கள் அளிப்பதில்லை…

மாலை வேளைகளில் அம்மா சமையலும்,
கடற்கரை ஓரக் கவியரங்கமும்,
சிரித்துச் சிரித்தே கண்ணீர் விடும்
நண்பர் கூட்டமும் இல்லாத தூரதேச வாழ்க்கை!!!
தங்க அட்டைக்குள் அடைக்கப்பட்ட
மண்பாண்டமாய் வாழ்க்கை.

வாரமொருமுறை அம்மாவின் குரல்
தொலைபேசி இரைச்சல்களிடையே கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஏக்கக் குரல்
பிடிமானமில்லாமல்
அலங்காரப்பூச்செடியாய் அந்தரத்தில் கரையும்.

வாழ்க்கை நிர்ப்பந்தங்களின்
கடப்பாரைக் கால்களிடையே
அடைக்கல்லாய் நிகழ்கால சந்தோஷங்களை வைத்து,
தொடர்ந்து கொண்டிருக்கும்
இந்த கரன்சி வாழ்க்கை.

சொந்த மண்ணின் ராஜாக்கள்
இந்த பூமியில் அடிமைகள்…
பொருளாதாரத்தின் போக்ரான் நிலங்களில்
ரேடார் காட்ட மறுக்கும் ஏராளம் உடைசல்கள்.

இங்கே
விரல் தொடும் தூரத்தில் எல்லாம் இருக்கும்…
தாய்மடியில் தங்கிவிட்ட என்
மனசைத் தவிர…

Series Navigation