இரவுத்தினவுகள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

ஸ்ரீமங்கை


—-

அந்தப் பொட்டிழந்த அமங்கல இரவு…

ஒவ்வொரு நாளும்,
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து எறிந்த
நிலவு மலரை முழுதாய்த்
தொலைத்த
தினவில் வானம் கனத்திருந்த
வேளையது…

கடல் கைம்பெண்
வெள்ளையுடுத்தி, கரைகளில்
வளையல்கள் உடைத்து அழுததாய்
காற்று துக்கம் பகர்ந்த நேரமது..

கனவுகளைக் கர்ப்பம் தரித்த கண்கள்
நனவில் இரு சொட்டுக் கண்ணீரையே
பிரசவித்த விகார வேளையது..

ஏதோதோ ஏக்கங்கள் நிறைந்த
பெருமூச்சுகள், மலர்களில் சூடேற்ற,
பாரம்தாங்காமல்,
இலைகளோடு தண்டும் வளையும்
வலிகள் தோய்ந்த காலமது..

காற்றில் வலிகளின் வாசமேறி
நாசிநிறைத்து, நெற்றியில் விடைத்து
நெஞ்சையடைக்கும் நேரமது..

குரூர இரவே!
வருடும் விரல்களில் ஏன் விஷநகங்களை
வளர்த்திருக்கிறாய் ?
ஆறுதல்சொல்வதாக அழைத்துச் சென்று
இக்கடல் நடத்தும் பிலாக்கணக் கொடைவிழாவில்
ஏன் என்னைத்
தொலைத்துவிட்டாய் ?

கொடுங்காற்றே!
என் கவிப்பூக்களை என் வேர்களிலேயே
உதறி, உரமிட்டதாக அறிவித்துப் போகிறாயே ?

உன் குரூரங்களுக்கு
மங்கிய கண்களுமாய்,விசித்த வானம் சாட்சி.

வானத்தைநோக்கி விரல்கள் நீட்டுகிறேன்..
ஏதோ உணர்வு…
என்னோக்கியே என்விரல்
நீளுவதாக…

அன்புடன்
ஸ்ரீமங்கை
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை