இரத்த பாசம்

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


“ஏலே மாரி!” என்ற குரலுடன் தொடர்ச்சியான சைக்கிள் மணியோசையும் கேட்க ‘யாரோ கூப்புடுதாக்ல இருக்கு. என்னான்னு பாருமய்யா” தாயி கணவனை உலுக்கினாள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தான் மாரி.

“அடடே! டீக்கடை அண்ணாச்சிங்களா? வாங்க வாங்க”

“ஆமா, விடிஞ்சும் விடியாம மூணு மணிக்கெல்லாம் ஒங்கூட்டுல விருந்து சாப்பிடத்தான் கெளம்பி வந்திருக்கனாக்கும்” சலித்தபடி கையிலிருந்த உள்நாட்டு உறையை நீட்டினார் கண்ணுச்சாமி.

என்னமோ மகனையே பார்ப்பது போல மாரி முகம் மலர அதை வாங்கிக் கொண்டான்.

“நெதமும் எங்க வூட்டைத் தாண்டித்தான் போற வார. நின்னு ‘கடிதாசி வந்திருக்கா’ன்னு கேட்க என்ன கொள்ளை பிடிச்சிருக்கோ” என்று சைக்கிளைத் திருப்பினவரை வழி மறிப்பது போல நின்று கொண்டு “அண்ணாச்சி நல்லாருப்பீக. அப்படியே இதக் கொஞ்சம் வாசிச்சுக் காட்டீர மாட்டீங்களா” கெஞ்சினான் மாரி.

“அடங்கொப்புறானே, எடத்தக் குடுத்தா மடத்த புடுங்கறான் பாரு! காலங்காத்தால ஒன்னோட பெரிய ரோதனயால்ல போச்சு. கடையத் திறக்க நேரமாவுது மாரி. இந்தா.. இந்நேரம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸைப் புடிக்கிற சனங்கல்லாம் வர ஆரம்பிச்சிருப்பாங்க. பொழப்பக் கெடுக்காதப்பா. வேற யாருட்டயாச்சும் கேட்டுக்க”

தன்னை விலக்கி விட்டு சைக்கிளில் விரைந்தவரை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் மாரி.

“என்னாத்துக்கு இந்தாக் கோவமா ஏசுதாரு?” மெலிந்த குரலில் வினவிய தாயி மெதுவாக எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

”ஆமா, அட்ரசு இல்லாத குடிசேல இருந்துக்கிட்டு அடுத்தவன் வூட்டு மூலமா கடிதாசி வாங்குறோம்ல! கொண்டு தாரவன் நாலு கொடை குடுத்தா அதையும் வாங்கிக் கட்டிக்கத்தான் வேணும்”

“என்ன எம்புள்ள கதிருட்டேருந்து கடிதாசியா” பூரித்துப் போய் கேட்டாள்.

“பாரேன், நேத்து ராவையிலேருந்து பேசக் கூட திராணியில்லன்னு மொடங்கிக் கிடந்தவ, புள்ள கடிதாசி போட்டிருக்கான்னதும் என்னமா கூவுற” கிண்டலாகச் சிரித்தபடி அவள் அருகே அமர்ந்து கடித உறையைப் பிரிக்கப் போனான்.

“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.

”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.

”சரி தாயீ நா கெளம்புதேன். அப்புறம் மாடுங்க கத்த ஆரம்பிச்சிரும். இன்னிக்கு சோறு ஒண்ணும் ஆக்காதே. பழசு கெடக்குல்லா. படுத்து நல்லா தூங்கி முழி”

துண்டை தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு கிளம்பியவனை “ஏன்யா காசு ஏதும் கேட்டு எழுதியிருக்க மாட்டானுல்ல” தாயியின் பரிதவிப்பான கேள்வி தடுத்து நிறுத்தியது.

“போ புள்ள. போன மாசந்தான ஐநூறு ரூவா அனுப்பிச்சோம். திரும்பயும் கேட்டு எழுத அத்தன வெவரங் கெட்டவனா? ‘அனுப்பிச்சது வந்து சேந்தது ரொம்ப சந்தோசம்’னு எழுதியிருப்பான்”

“என்னமோய்யா. விக்கக் கூட வூட்ல பொட்டுச் சாமான் கெடயாது. இருந்த ஒண்ணு ரெண்டு அண்டா குண்டானையும் வித்து அனுப்பியாச்சு”.

“அட, மனசப் போட்டு ஒழப்பிக்காத. நா வருசையா எல்லா வூட்டுலேயும் தொழுவெல்லாஞ் சுத்தம் பண்ணிட்டு, மாடுங்களக் குளுப்பாட்ட வாய்க்காலுக்குப் பத்திட்டுப் போறதுக்கு முன்னால, ஒரு ஆறு மணி வாக்கில இங்கன வந்து விசயத்த சொல்லிப்புட்டுப் போறன். அதுக்குள்ள ஆரும் அம்புடாமயா போயிருவாக வாசிச்சு சொல்ல”

மனைவியின் அருகில் வந்து அவள் தோளைத் தட்டி “நா கதவ சாத்திட்டுப் போறன். கொஞ்ச நேரம் நிம்மதியா தலயச் சாயி” ஆதுரத்துடன் சொல்லி விட்டு வெளியேறினான் மாரி.

அவன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் தாயி.

‘கடவுளே இது காசு கேட்டு வந்த கடிதாசியா இருக்கப் படாதே. இந்த மனசனும் நாயாத்தான் அலக்கழியுதாரு. ஊரச் சுத்தி கடனு. எல்லா வூட்டுலயும் முன் பணம் வாங்கிட்டாரு. இனிம ஆருட்டன்னு போயி கேக்க முடியும்’

கணவனை நினைத்து இப்படிக் கலங்கிய உள்ளம் மறுகணமே மகனை நினைத்து மருகத் தொடங்கியது.

‘அவனுந்தான் என்ன செய்வான்? பெரிய எஞ்சனீரு படிப்பு படிக்கான். ஆவாதா பின்ன செலவு? ஆத்தா அப்பன்னு இந்த ரெண்டு உசுரும் கிடக்குந்தன்னியும் இங்கனதான கேக்கும் புள்ள’

எண்ண ஓட்டங்களுக்கிடையே உறங்கிப் போனவள் “ஏ தாயக்கா” என்ற ராக்காயியின் கூப்பாட்டைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

”எம்மா நேரமா கூப்புடுதேன். கதவயே தெறக்கல. என்னமோ ஏதோன்னு உள்ளார வந்தேன். ஒடம்புக்கு என்னா?”

“ஒரே அசதி, கையுங் காலும் கழண்டுரும் போலல்லா இருக்கு”

“ப்போ, சரி அப்ப நா கெளம்புதேன். நயினார் கொளத்துக்கு அந்தாண்ட வயல்ல அறுப்புக்கு ஆளு கூப்புட்டு லாரி இட்டாந்திருக்காக. இன்னும் அரை மணில கெளம்பிரும். எல்லாரும் போறம். ஆஞ்சு ஓஞ்சு கெடக்கிற நீயி அங்கன வந்த என்னாத்த கிழிக்கப் போற? பேசாத வூட்லதான் வுழுந்து கெட”

’உனக்கென்ன கொடுத்து வச்ச மவராசி. ஒன்னப் போல தெம்பா இருந்தாக்க எம் புருசனை இந்தப் பாடு பட வுடுவனா என்ன’ முணுமுணுத்தபடி மீண்டும் படுக்கப் போனவள் மாரி வருவதைப் பார்த்ததும் ஒற்றைக் கையை ஊன்றி அமர்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தே அவளுக்குப் புரிந்து போயிற்று.

“எவ்ளோ வேணுமாம்?”

“முன்னூறு, அதும் அவசரமா வேணுமாம். பரிச்சைக்குக் கட்டணுமாம்”

கவலை தோய்ந்த முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தான் மாரி.

பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஓய்வா ஒழிச்சலா? நாள் முழுக்க உழைக்கத்தான் செய்கிறான். ஏழெட்டு வீடுகளில் மாடு கவனிக்கிறான். அதிகாலையில் கிளம்பிப் போனால் தொழுவை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி தண்ணீர் வைத்து, பால் கறப்பவர் கறக்கின்ற வேளையில் சாணங்களை வரட்டி தட்டி காயப் போட்டு, பின் மேய்ச்சலுக்கு மாடுகளைப் பற்றிச் சென்றால் பொழுது சாயத்தான் திரும்ப முடிகிறது. அதன் பிறகும் கூட முடிகிற போது விறகுக் கடையில் மரம் உடைக்கிற வேலை என எது கிடைத்தாலும் விட்டு வைப்பதில்லை.

தன்னால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருந்து கணவனுக்கு உதவ முடியவில்லையே என்று தாயிக்குத் தாங்க முடியாத ஆற்றாமையாக இருந்தது. அவள் உடல் நிலை அப்படி. பத்து நாள் வயல் கூலிக்குப் போனால் பத்து நாள் விழுந்து கிடப்பாள். மாரி வேலை பார்க்கும் வீடுகளிலிருந்து நெல் அவிக்க, அரிசி புடைக்க என்று அடிக்கடி அழைப்பு வரும். கணவன் அவர்களிடம் வாங்கியிருக்கும் முன் பணத்தை மனதில் கொண்டு உடம்புக்கு முடியா விட்டாலும் போய் செய்து விட்டு வருவாள்.

போனமுறை வாத்தியார் வீட்டம்மா கூடக் கேட்டாள் ”ஏண்டி தாயீ, எங்க வீட்ல நெரந்தரமா வீட்டு வேலைக்கு இரேன்னு நானும் நாலு மாசமா கேக்கறேன். இந்தா அந்தான்னு மழுப்பிட்டே போறியே. பட்டணம் போல் இப்ப இங்கியும்லா வேலைக்கு ஆளு கிடைக்கறது குதிரக் கொம்பாப் போச்சு. எல்லாம் வீட்டோட இருந்து பீடி சுத்தறதுல சுகங் கண்டுட்டுதுகள்”

இப்படி அந்த அம்மாள் அலுத்துக் கொண்ட போது ”ஏம்மா நெரந்தரமா வாரேன்னு ஒத்துக்கிட்டா சொன்ன வாக்கு பொரளாம நெதம் வரணும். இந்தப் பாவி மவளுக்குதான் பாதி நாள் படுக்கையில போகுதே. வேணா என்னால முடியறப்பல்லாம் வந்து ஒங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன்” என்றாள் சமாதானமாக.

“ஆமா நீ எப்போ வருவே என்னிக்கு வர மாட்டேன்னு தெரியாத பாத்திரந் துணியெல்லாம் நாறப் போடவா? பாக்க நல்லா திராட்டிக்கமாதான் தெரியுத. முடியல முடியலன்னு ஒனக்கு சும்ம ஒரு மனப் பிராந்திதான்” சுளுவாகச் சொல்லி விட்டாள் அந்த அம்மாள். ஆனாலும் தாயிக்கு அவள் மேல் ஆத்திரம் வரவில்லை. மாதச் சம்பளம் வரக் கூடிய வேலைக்குப் போகும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று தன்னைத்தான் நொந்து கொண்டாள்.

’ஹூம் இன்னிய பாட்ட மொதல்ல பாப்போம்’ துரத்திய நினைவுகளைத் துடைத்து உதறினாள்.

“ஆருட்டியாச்சும் கேட்டுப் பாத்தீகளா?” வரப் போகும் பதிலைத் தெரிந்தே கேட்டாள்.

“ஆருட்டன்னு போய் நிக்க? கேட்டோம்னாக்க ‘ஒபகாரச் சம்பளத்தில படிக்கிற பயலுக்கு அப்படி என்ன அடங்காத செலவு’ன்னு மூஞ்சில அடிச்சாப்ல கேக்கறானுக. நம்ம பொறப்ப வச்சு ஏதோ இந்த மட்டும் படிக்க எடம் கிடைச்சுதேன்னு நாம சந்தோசப் பட்டா அதுவே பாதி பயலுவளுக்கு வயித்தெரிச்சலா இருக்கு”

தாயி பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள் சில கணம். பிறகு சுவரைப் பிடித்தபடி எழுந்தவள் நிற்க முடியாமல் தடுமாறினாள். கண்ணை மூடி நின்று ஒருவாறாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெல்ல நடந்து பானையில் இருந்த ஒரு குத்துப் பழஞ்சோற்றையும் பிழிந்தெடுத்து தட்டில் போட்டு சிறிது உப்பும் போட்டு மாரியிடம் நீட்டினாள்.

“ஒனக்கு”

“ஒழைக்கிற மனுசன்.. நீரு சாப்பிடுமய்யா”

”நல்லாருக்கே கத. உக்காரு புள்ள. ரெண்டு பேருமா திம்போம். ஹூம் வயத்துப் பாடு கழியறதே மலைப்பா இருக்கேல என்னன்னுதான் இவன படிக்க வய்க்கப் போறமோ”

“மர வச்சவன் தண்ணீ ஊத்தாதயா போயிருவான். எல்லாக் கஸ்டமும் அவன் படிச்சு முடிக்கந்தன்னிதானே. அதுவர நம்மால முடிஞ்சத ராசாக்கு செய்வோம். வாத்தியார் வூட்டம்மாட்ட சொல்லிப் புடுமய்யா நாளேலருந்து அவுககிட்ட வூட்டு வேலைக்கு சேந்திடறேன்னு. இதச் சொல்லியே முன் பணமும் கேட்டுப் பாரும்”

கனவோடு கணக்குப் போட்டபடி ஒரு கை சோற்றையும் வாயில் போட்டு சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு எழுந்தாள் தாயி. கையையும் முகத்தையும் அலம்பிக் கொண்டு புதிதாக உயிர் வந்தவள் போலத் தெம்புடன் வெளியில் கிளம்ப ஆயத்தமானாள்.

“எங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

“ஆளெடுக்க டவுணுலருந்து லாரி வந்திருக்காம். போயிட்டு பொழுது சாய வந்துருவேன். கணிசமா கூலி கெடைக்கும். நா சொன்னதைச் சொல்லி வாத்தியார் வீட்ல மறக்காம கேட்டு வாருமய்யா”

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவசரமாய் லாரியைப் பிடிக்க ஓடும் மனைவியைப் பார்த்து மனம் கலங்கிப் போயிற்று மாரிக்கு. உடம்புக்கு முடியாமல் கிடந்தவள் மகனுக்கு ஒரு தேவை என்று வந்ததும் சோர்வை உதறி விட்டு, கணவனின் சுமையைக் குறைக்க ஓடுகிறாள். ‘போகாதே’ என்று சொல்ல அவன் மனம் துடிக்கத்தான் செய்தது. ஆனால் அப்போதைய தேவை அப்படிச் சொல்ல விடாமல் அவனை வாளாவிருக்க வைத்து விட்டது. அவனை நினைத்து அவனுக்கே அவமானமாய் இருந்தது.

’சே, என்ன சென்மம் நான். ராசாத்தி போல அவள வச்சுக் காப்பாத்தத்தான் வக்கில்லாத போச்சு. ஒடம்புக்கு ஆகாத நெலமெல ஓடுதவளத் தடுக்கக் கூடத் தோணாது என் நாக்குக்குமில்ல கேடு வந்து போச்சு’ என்று நொந்து கொண்டான்.

அப்படி அவளை வாத்தியார் வீட்டில் அடகு வைத்துப் பணம் வாங்கி மகனுக்கு அனுப்ப வேண்டுமா என்று யோசித்தான். ‘இப்பதைக்கு அனுப்ப ஏலாதுன்னு ரெண்டு வரி எழுதிப் போட்டுட்டா என்ன’ என்றும் தோன்றியது. மகனின் முகம் மனதுக்குள் வந்து போக அந்த எண்ணம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

இருவருமே தாங்கள் மகன் மேல் கொண்டிருக்கும் பாசம் எத்துணை ஆழமானது, வலிமையானது என்பதை உணர்ந்திருந்தார்கள். அவனுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள் என்றாலும் கூட அதற்காக மாரி படும் கஷ்டத்தைச் சகிக்க முடியாமல் தாயி பரிதவிக்க, அவளைப் பார்த்து இவன் பரிதாபப் பட என இயலாமையில்தான் அவர்கள் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இரவு பதினொன்றரை மணி போல மாரி விறகுக் கடை வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் கண்ணுச்சாமி டீக்கடையை அடைத்துக் கொண்டிருந்தார்.

“ஏலே மாரி, நில்லுப்பா. நானும் வாரேன்” என்று பேச்சுத் துணைக்கு அவனை நிறுத்தி வைத்தவர் கடையைப் பூட்டிய பின் சைக்கிளை உருட்டித் தள்ளியவாறு மாரியுடன் நடக்கத் தொடங்கினார்.

“காலம்பற அவசரத்தில ஏதோ கத்திப் புட்டேன், வுடு அத. என்ன… மறுபடி காசு கேட்டுருக்கானா உம் மவன்?”

யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்தவன் போல மடமடவென்று அவரிடம் சொல்லத் தொடங்கினான் மாரி “ஆமா அண்ணாச்சி, பீசு கட்ட அவசரமா முன்னூறு வேணுமாம். எம் பொஞ்சாதி நாளேலர்ந்து வாத்தியாரு வூட்டுக்கு வேல பாக்கப் போறா. அவுகளும் மொதல்ல சந்தோசமா வரட்டும்னாக. அப்பால முன் பணம் கேட்டனா? மூஞ்சில அறஞ்சாக்ல முடியாதுன்னுட்டாக”

“ம்.. அப்புறம்” என்றார் கண்ணுச்சாமி சுவாரஸ்யமாக.

“அப்பால என்னா! காலுல வுழாத கொறதான். படிப்புக்காகத்தான கேக்குறேன். மனசு வைக்கப் படதா? ‘வைத்தியம் புள்ள சீக்கு வாத்தியாம் புள்ள மக்கு’ன்னு சும்மாவா சொன்னாக பெரியவுக. அவுக மவன் பத்து தாண்டாத ஊரச் சுத்திட்டு வாரான். சரி, ஊராம் புள்ளயாச்சும் படிச்சு பெரிசா வரட்டுமேங்கிற பெரிய மனசு இல்லயே!”

‘அதுச…ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

“குடுத்தாரு குடுத்தாரு. ஆனப் பசிக்குச் சோளப் பொறிய போட்டாக்குல அம்பது ரூவா குடுத்தாரு. பொறவு வெறகுக் கடை ஐயாட்ட கெஞ்சிக் கூத்தாடி அவரு ஏச்சு பேச்செல்லாம் கேட்டுக்கிட்டு அம்பது ரூவா வாங்குனேன். தாயி வேற இன்னைக்கு கூலிக்குப் போச்சு. அதுல என்னத்த பெரிசா வரும்.. பத்தோ பதினஞ்சோ!

“ஹூம்.. ஒம்பாடும் சிரமந்தான்”

‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.

அந்தக் குறுகிய சந்தின் வழி நெடுக மாடுகள் குறுக்கும் நெடுக்குமாய் படுத்துக் கவலையின்றி அசை போட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வளைந்து நெளிந்தும் தாண்டிக் குதித்தும் நடக்க வேண்டியதாயிற்று.

“குறுக்கு வழியேன்னு வந்தா இதே ரோதனயாப் போச்சு” முணுமுணுத்தபடி சில இடங்களில் கண்ணுச்சாமி சைக்கிளைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டார்.

குடிசைகள் இருளில் மூழ்கிக் கிடக்க, வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தவர்கள் ‘சளப்’ எனக் கன்னம் கை காலோடு சேர்த்துக் கொசுவை அடித்துக் கொண்டும் விரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.

“எப்படித்தான் இந்த மாதிரி எடத்தில காலந்தள்ளுறீங்களோப்பா” என்றார் கண்ணுச்சாமி.

மாரிக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. இன்னும் ஒரு பர்லாங் நடந்தால் குடிசை வந்து விடும். அதற்குள் அவரிடம் கேட்டு விட வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் நடந்தான்.

“என்னலே திடீர்னு வாயடச்சுப் போயிட்டே?”

பேச்சுத் துணைக்குக் கூட்டி வந்தவன் பேசாமல் வருகிறானே என்று பொழுது போகாத கண்ணுச்சாமி மறுபடி அவன் வாயைக் கிளறினார்.

“ரோசனதான். மிச்சப் பணத்த எப்படிப் பொரட்டன்னுட்டு”

“நா இப்படிச் சொல்லுதனேன்னு சங்கடப் படாத மாரி. அப்படி உம் மவனுக்கு என்னதான் செலவுன்னு எனக்குப் புரியல. அடுத்த ஊருல இருக்கானே எம் மச்சினன். பணக் கஷ்டப் படுதவருதான். உம் மவனப் போல ஒபகாரச் சம்பளத்திலதான் படிக்கான் அவரு புள்ள. ஒங்க பொறப்பு இல்லயே அப்புறம் எப்படின்னு பாக்காத. மாநில அளவுல ராங்கு வாங்குனதல கெடச்சுதப்பா, நாங்கொண்ணும் பொழப்புக்காக ஒத்தத்தொரப் போல பொறப்பு சர்டிபிகேட்ட மாத்திக் குடுக்கிற மனுஷா இல்லப்பா” வீம்பாகச் சொன்னவர் “எம் மருமவன் தன் செலவு போக மிச்சம் பண்ணி வீட்டுக்கும் கூட அனுப்புதானாம் அப்பப்ப” என்று முடித்தார்.

கண்ணுச்சாமியின் கடைசி வாக்கியம், பரிதாபமான தன் நிலையைக் கேட்டு மனமிரங்கி இவராவது உதவ முன் வர மாட்டாரா என்ற மாரியின் கடைசி எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட “அப்ப என் மவன் பொய் சொல்லுதாங்குறீக..” என்றான் மாரி காட்டமாக.

“எனக்கென்னவோ அவன் ஒங்களை நல்லா ஏமாத்துறான்னுதான் படுது. வர்ற பணத்துல அழகா பரிச்சைக்குப் பணங்கட்டி சாப்பாடு பொஸ்த செலவு எல்லாஞ் சமாளிக்க முடியும். இவன் என்ன ஷோக்கு பண்ணதுக்கு ஒங்களப் புழிஞ்செடுக்கானோ..”

“என்னாத்துக்கு கேட்டாதான் என்ன? செலவுக்குத் திண்டாடத மன நெறவா இருந்தாத்தானே படிப்புல கவனம் போகும், அவன் நல்லா படிச்சு வரணும்ங்கிறதுக்காகத்தானே நாங்களும் இந்தப் பாடு படுதோம்.”

“சரி இப்பவே இப்படி ஒங்கள ஏய்க்கிறானே. நாளைக்கி படிச்சு முடிச்சு பெரிய ஆளானப்புறம் ஒங்களத் திரும்பிப் பாப்பான்னா நினைக்கறே. நீங்க நாயாப் பேயாப் படுத பாடெல்லாம் வெழலுக்கு இறச்சத் தண்ணியாத்தான் போப்போவுது போ.”

“அடப் போங்க அண்ணாச்சி. அவன் பின்னால எங்களக் காப்பாத்தணும்னா இம்புட்டும் செய்யறோம்? இத்தன வருசமும் அவனா எங்களுக்குச் சோறு போட்டான்? வாழலயா நாங்க? உசிரு போகந்தன்னியும் எங்க வயித்துப்பாட்டை எப்படியோ கழிச்சிக்க எங்களுக்குத் தெரியும். அவனாவது எங்களைப் போல கஷ்டப் படாத பின்னால நல்ல படியா வாழ்ந்தா சரிதான்” படபடவென்று பேசியவன் தன் குடிசை நெருங்கி விடவே “நா வாரேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டான்.

“தானாவும் புரிஞ்சுக்காது. சொன்னாலும் வெளங்கிக்காது. ஹூம் இதெல்லாம் தேறாத ஜென்மங்க” சைக்கிளில் ஏறி பெடலை மிதித்த கண்ணுச்சாமியின் முணுமுணுப்பு காதில் விழ, ஆத்திரமாக வந்தாலும் ஏதும் பேச இயலாதவனாய் குடிசைக்குள் நுழைந்தான் மாரி. கண்ணுச்சாமி சொன்ன வாக்கில் யோசித்துப் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. முதலில் சற்று குழப்பமாக உணர்ந்தாலும் ‘எம் மவன எனக்குத் தெரியாதாக்கும்’ என்கிற எண்ணம் மேலிட சமாதானம் அடைந்தான்.

இருட்டுக்கு கண் பழக, மூலையில் தாயி சுருண்டு கிடப்பது தெரிந்தது.

”இப்படித்தான் வந்து வுழுவேன்னு தெரியும். ஏதாச்சும் தின்னியா இல்லயா? என் வயித்துப் பாடாவது போற வர்ற வூட்டுல அவுக குடுக்கற மிச்ச மிஞ்சாடியில கழிஞ்சுடுது. ஒனக்கு அதுவுமில்ல” என்றபடி வேட்டியில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து தீக்குச்சி ஒன்றைக் கிழித்தான். அதைக் கையில் பிடித்தபடி சிம்னியைத் தேடி எடுத்து பற்ற வைத்தான்.

தாயிடடிருந்து ஒரு சலனமும் இல்லாது போக அவள் அருகில் அமர்ந்து “ஏ புள்ள தாயீ, உன்னத்தானே..” என்று உலுக்கவும், பதறி விழித்த தாயி மலங்க மலங்க முழித்தாள்.

“என்னா முழிக்கறே? தின்னியா நீ”

“கா..காசு கெடச்சுதா?”

“அட நா கேட்டதுக்கு பதிலச் சொல்லு. ஏதாச்சும் ஆக்கி வயித்துக்குப் போட்டியா?”

“ஆங்…ஆமா அதான் ஆசுபத்திரில குடுத்தாகளே”

“என்ன ஆசுபத்திரியா? என்ன ஒளருதே?” குழப்பமாகக் கேட்டவன் “என்ன செய்யுது ஒனக்கு? கிணத்துக்குள்ளார இருந்து பேசறாப்ல பேசறியே?”

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

தாயி அதை சட்டை செய்யாமல் “எவ்ளோ கெடச்சுது” என்றாள் மறுபடியும்.

“வுட மாட்டியே, வாத்தியாரு வீட்ல அம்பது. அப்பால வெறகுக் கடயில ஒரு அம்பது தேறுச்சு” என்றான் அயர்வுடன்.

“இந்தாய்யா இதையுஞ் சேத்து நாள தபாலுக்கு மொதல்ல அனுப்பீருக. மிச்சத்தை எப்படியாச்சும் பொரட்டி சீக்கிரமா அனுப்புதோம்னு ஆர விட்டாவது ரெண்டு வரி எழுதிப் போட்ருக” மெலிந்த குரலில் பேசியவள் தட்டுத் தடுமாறி சேலை முடிப்பில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

“ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு..இம்புட்டுப் பணம் ஏது புள்ள” கூவினான் மாரி.

”சொன்ன பிற்பாடு என்னய ஏசிப்பிடாதீக. உச்சி நேரந்தன்னியும் வயல்ல நின்னுட்டு அரை நா கூலி மட்டும் வாங்குனனா..! அந்தானிக்கு அப்படியே டவுணு ஆசுபத்திரி போய் ரத்தங் குடுத்தேன். அவுகதான் சாப்பாடுங் குடுத்து இப்படிக் கணிசமா கையில தந்தாக. எல்லாம் அந்தப் புண்ணியவதி முக்கு வீட்டு கருப்பாயி சொன்ன ரோசனதான்” திணறித் திணறி பேசியவள் மீண்டும் சுருண்டு விழுந்தாள்.

“ரோசன கொடுத்தவளப் பாம்பு புடுங்க. புண்ணியவதியாம்ல வருது நல்லா வாயில. பாவிமவளே ஒடம்பு கெடக்க கெடயில நெசமாலும் ரத்தத்தை வித்தா பணங் கொண்டாந்தே” நெஞ்சு பதற அவளை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“தாயீ இப்பத்தான் அந்த டீக்கட பயட்ட வீம்பாப் பேசிட்டு வந்தேன். ஆனா எனக்காக இல்லாங்காட்டியும் ஒனக்காகவாவது ஆண்டவங் கருணயில நம்ம மவன் படிச்சு ஊரு கண்ணு படுதாக்ல ஒசந்து நம்மளயும் கூட்டி வச்சுக்கோணும். அவனாச்சும் ஒன்ன ராணி கணக்கா வச்சுக் காப்பாத்தோணும்”

ஆற்ற மாட்டாமல் குலுங்கிக் குலுங்கி அழுதான் மாரி.

*** *** ***
[1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது]

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி