இனியும் விடியும்….

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

சேவியர்.


அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள்.

அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது.

சட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

… இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் நல்லமுறையில் இயங்குவதற்குக் காரணம் நீங்கள் தான்.

இந்த அலுவலகத்தை மூட வேண்டுமென்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் வீழ்ச்சி பில்கேட்ஸ்-ஐயே கொஞ்சம் அசைத்து, அவரையே உலக பணக்காரர் வரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டது. நம்முடைய இந்த அலுவலகத்துக்கு எந்த விதமான புதிய ஒப்பந்தங்களும் நடைபெறாத நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட இயலாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இந்த அலுவலகத்தை இந்த மாதத்துடன் மூடுவெதென்று உத்தேசித்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கு……

அமெரிக்காவின் கலிபோர்ணியா நகரின் ஓர் எல்லையில் இருந்தது அந்த அலுவலகம்.

அது இன்றோ நேற்றோ துவங்கியதல்ல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. இதுவரை எந்தவிதமான நெருக்கடி நிலமைகளும் வந்ததில்லை, இந்தியா வின் ஒரு மூன்றாம் தொடர்பாளர் வழியாக வேலைபார்த்துவந்த சில இந்தியர் பேர் உட்பட அந்த அலுவலகத்தில் இருந்த நானூற்று அறுபத்து மூன்று பேருக்கும் இன்னும் இரண்டு வாரம் தாண்டினால் வேலை இல்லை. காலையில் திடாரென்று ஓர் அழைப்பு, ஏதோ ஒரு மீட்டிங் என்று கைகளில் குளிர்பான கோப்பைகளோடு வந்தமர்ந்த மொத்த உறுப்பினர்களும் இதயம் சூடாகிப் போனார்கள்.

திடாரென்று ஓர் விசும்பல் சத்தம், கொஞ்சம் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண்… கட்டுப்படுத்த முயன்று தோற்றுபோன விசும்பல்.

அங்காங்கே கேள்விகள் முளைத்தன. சில கேள்விகள் கெஞ்சல்களாய், சில இயலாமையின் வெளிப்பாடாய், சில கோபத்தின் பிரதிநிதியாய்……

இப்படி திடாரென்று சொன்னால் என்ன செய்வது ? எங்கள் நிலமை தான் என்ன ? எங்களுக்கு வேறு அலுவலகத்தில் வேலை கிடைக்க நிர்வாகம் உதவி செய்யுமா ?

கம்பெனியிலிருந்து ஊழியர்களுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கிடக்குமா ?

நாங்கள் வேலையிலிருந்து நிற்க விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்னால் நோட்டாஸ் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் நிர்வாகம் ஏன் குறைந்த பட்சம் அதைக்கூட செய்யவில்லை ?

குடும்பமாக இங்கே இருந்துவருகின்ற எங்களுக்கு என்ன முடிவு ?

கொத்துக்கொத்தாய் கேள்விகள் விழுந்தாலும் புன்னகையுடன் ஒரே ஒரு பதில் தான் வந்தது…

வருந்துகிறேன்…மன்னிக்க வேண்டும்… எனக்கு அதிகமாய் எதுவும் தெரியாது… உங்கள் கேள்விகளை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்கிறேன்.

இல்லையேல் நீங்களே மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்….

முடிவு எடுத்தாகிவிட்டது… இனிமேல் என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை என்று மொத்த கூட்டமும் நிமிடங்களில் புரிந்து கொண்டு விட்டது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கூட்டத்தினர் வெளியேறத்துவங்கினார்கள். கடைசி வரிசையில் அமர்ந்து எதையும் செரித்துக்கொள்ளமுடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.

விக்னேஷ், மூன்று மாதங்களுக்கு முன் ஏராளம் கனவுகளோடு அமெரிக்காவுக்கு வந்தவன்.

கிராமத்தில் படித்து, சென்னையில் கணிப்பொறி மென்பொருள் எழுதும் ஓர் கம்பெனியில் பணியாற்றி, ஒரு கன்சல்டன்சி வழியாக அமெரிக்கா வந்தவன். தன்னைப்படிக்க வைத்து அமெரிக்கா செல்லக்கூடிய அளவுக்கு தயாராக்கிய தந்தை, அம்மா… இன்னும் வானத்தை நம்பி விவசாய வாழ்க்கை நடத்தும் உறவினர்கள்… வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சம் உதவ வேண்டும் என்னும் ஏக்கம் அவன் மனசு முழுவதும் நிறைந்திருந்தது. இவன் அமெரிக்கா செல்ல விமானம் ஏறிய போது பெருமையுடனும், பிரிவின் வலியுடனும் கண்கலங்கிய அப்பா… என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று எதிர்படுவோரிடமெல்லாம் வலியச் சென்று சொல்லும் அப்பா… நினைக்கும் போது கண்கள் நிறைந்தது விக்னேஷ்க்கு.

இதே நிலமை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் கூட இவ்வளவு வருந்தியிருக்க மாட்டான். இப்போது நிலமையே வேறு. எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பு, பல நூறு கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. வேலை கிடைப்பது இப்போது குதிரைக்கொம்புதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணிப்பொறியில் ஏதோ நான்கு வார்த்தைகள் சொல்ல முடிந்தால் உடனே வேலை. இப்போது அப்படி அல்ல… அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடப்பதால் இந்தியாவில் கூட வேலை கிடைப்பது மிகவும் கடினம்.

‘விக்னேஷ் ‘….

நண்பனின் குரல் அவனை நிஜத்துக்கு இழுத்து வந்தது.

என்னடா … இப்படி கவுத்துட்டாங்களே. இப்போ என்ன பண்றது ?

இங்கே வேறு கம்பெனியில் முயற்சி செய்யலாம்… வேறு என்ன செய்ய முடியும் ?

எங்கே போய் முயற்சி செய்வது ? போனவாரம் ரஞ்சித் சொன்னதைக் கேட்டாயா ? எங்கேயும் வேலை இல்லை.

நமது நிலமை இப்போ மிகவும் இக்கட்டானது. இங்கே வேலையில்லாமல் நாம் ஒரு மாதத்துக்கு மேல் தங்க முடியாது தெரியுமா ? நாம வந்திருப்பது வேலை பார்ப்பவர்க்கான விசா… இந்த நாட்டில் நாம் வேலையில்லாமல் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் நாம் அவர்களுடைய சட்டத்தை மீறுபவர்களாய் கருதப்படுவோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் ஜெயிலில் கூட அனுப்பப்படலாம்….பதட்டம் நிறைந்த குரலில் சொன்னான் விக்னேஷ்.

ரஞ்சித் ஊமையானான்… எதுவும் சொல்ல முடியவில்லை என்னால். என்ன நடக்கப்போகிறதோ ?

எங்கே வேலை தேடுவதோ தெரியவில்லை. ஒரு நாள் நான்குமுறை தலை நீட்டும் நிர்வாகிகள் யாரையும் காணவில்லை. எல்லோரும் நழுவி விட்டார்கள். நடுக்கடலில் நிற்கிறோம் இப்போது. கண்டிப்பாக நீச்சலடித்துத் தான் ஆகவேண்டும். எங்கே கரையேறுகிறோம் என்பது ஆண்டவன் செயல். சொல்லிவிட்டு நடக்கத்துவங்கினான் ரஞ்சித்.

வாழ்க்கை சுவாரஸ்யம் இழந்துபோனதாய் நகர்ந்தது. ஆகாய விமானமாய் பறந்துகொண்டிருந்த உற்சாகம் எல்லாம் விதியில் விழுந்து நடைவண்டியாய் நடக்கத் துவங்கியது.

வாரம் ஒன்று ஓடிவிட்டது. நிறைய இடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியாகிவிட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை… விக்னேஷின் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடையத்துவங்கியது.

வேலை இருந்தபோது தினசரி நான்குமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நண்பர்கள், விஷயம் கேள்விப்பட்டபின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் செல்வதுபோல் தோன்றியது விக்னேஷ்க்கு. ஏதாவது உதவி கேட்பேன் என்று பயப்படுகிறார்களா ?

இல்லை என்னோடு வழக்கம் போல கலகலப்பாய் பேசமுடியாது என்று நினைக்கிறார்களா ? சிந்தனை வட்டமடித்துப் பறந்தது.

பிரியாவிடமிருந்து கூட பதில் கிடைக்கவில்லை…. பிரியா, விக்னேஷின் நெருங்கிய தோழி. விக்னேஷைப் போலவே ஒரு வேலை.

கணிப்பொறியில் இரண்டு நிமிடங்கள் செலவழித்தால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். காணோம்….

முதல்நாள் அதிர்ச்சியாய் ஒரு கடிதம்… இரண்டாம் நாள் வேலை ஏதாவது கிடைத்ததா என்னும் ஒரு கடிதம்….

கடந்த நான்கு நாட்களாக அதுவும் இல்லை. இப்போது விக்னேஷிற்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் அதிகமாய் காயப்படுத்துவதாய் தோன்றியது. மூக்கில் அறுவைசிகிட்சை செய்து கொண்டவனுக்கு தொண்டையும் கட்டிப்போன அவஸ்தை அவனுக்கு.

இதுதான் வாழ்க்கை. சாவு நெருங்கிவரும்போதுதான் தான் வாழ்ந்த இந்த உலகம் என்பது மிகவும் உன்னதமாது என்கிற விஷயம் பலருக்கும் புரியத் துவங்குகின்றது. ஒரு பிரிவுதான் உறவின் இறுக்கத்தை மிகத்தெளிவாய் விளக்குகிறது. விக்னேஷிற்கும் இப்போது தான் சில விஷயங்கள் புரிவதாகத் தோன்றியது. ஏதாவது ஒரு மாயம் நடந்து கம்பெனி மூடும் விஷயத்தைக் கைவிட மாட்டார்களா என்று வேண்டுதல்கள் செய்தான். இந்த தனிமை அவனை ஒரு பாறாங்கல் கிரீடமாய் அவனை அமிழ்த்தத் துவங்கியது. இனி என்ன செய்வது ?

எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து விக்னேசின் கால்களை உடைத்துக் கொண்டிருந்தபோது அழைப்புமணி ஒலித்தது.

வாசலில் தபால்காரப் பெண்மணி. கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு, கொஞ்சும் ஆங்கிலத்தில் கையசைத்து நகர்ந்தாள்.

யார் கடிதம் அனுப்பியிருப்பார்கள் என்று பார்த்த விக்னேஷ் ஆச்சரியப்பட்டான். அப்பா !!!. அப்பா இதுவரை கடிதம் எழுதியதில்லை, இப்போது என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணியபடியே கடிததைப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

அன்பு மகனுக்கு…..

உனக்கு வேலை பறிபோய்விடும் என்னும் விஷயம் கேள்விப்பட்டு கலங்கினேன். இதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்கள் தான்.

இந்த வேலை போனால் உனக்கு வேறு ஒரு வேலை காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள். வேலை போனால் கவலையில்லை, ஆனால் நம்பிக்கை மட்டும் உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக்கொள். வேலை என்பது ஒரு பாதை. நம்பிக்கை என்பது உன் பாதம்.

இல்லையேல் வேலை என்பது ஒரு கதவு, நம்பிக்கை என்பது உன் கரங்கள் என்று நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சின்ன வயதில் நீ ஆரம்பப்பாடசாலைக்குச் செல்ல அழுவாய். அப்போதெல்லாம் நீ நினைத்தாய் உன் சின்ன வயதுச் சுதந்திரம் சிறையிலிடப்பட்டது என்று. பிறகு நீ புரிந்து கொண்டாய். கல்லூரியில் இடம் கிடைக்காத போது கலங்கினாய், விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்று வருந்தினாய். வேலை தேடிய நாட்களில் தாழ்வுமனப்பான்மையில் தவழ்ந்தாய். இவையெல்லாம் உனக்கு வேலை கிடைத்தபோது மறைந்து போய்விட்டது. இதுவும் அப்படித்தான், ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவுகள் திறக்கும் என்பார்கள். கவலையை விடு.

உயிருக்குயிராய் காதலித்தவள் இன்னொருவனோடு ஓடிப்போனபோது கூட, அவளைப்புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இதுவென்று அமைதியாய் சொன்னவன் நீ. நீ கலங்கமாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான்….

தற்காலிகத் தோல்விகள் கற்றுத்தந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்தவெற்றி நோக்கி அடியெடுத்து வை….

எதுவும் புரியவில்லை என்றால் என்னிடம் வா… கொஞ்சநாள் சின்ன வயதுக்காரனாய் என்னோடு சிரித்துவிளையாடு…..

விக்னேசிற்கு கண்கள் பனித்தன. மனதுக்குள் ஏதோ மிகப்பெரிய ஒரு பலம் வந்ததாய் உணர்ந்தான்.

ஒன்றுமில்லாத விஷயத்துக்காய் இத்தனை நாள் கஷ்டப்பட்டதாய் தோன்றியது அவனுக்கு.

நன்றி அப்பா…. மனசுக்குள் உற்சாகமாய் சொல்லிக்கொண்டான்.

****

Series Navigation