இனியநாள்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

எஸ். ஜெயலட்சுமி


”அக்கா,நான் போயிட்டு வரேன்.நீங்க தனியாஇருப்பேளா?உங்களுக்குத் தனியாஇருக்க போரடிச்சதுன்னா பவானி அக்காவ போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்கோ.உங்களுக்கும் பொழுது போகும்”என்றாள் வித்யா.
”நீ கவலைப்படாமல் போயிட்டு வா.ஊர்ல நான் தனியாத் தானேயிருக்கேன்.நான் என்ன சின்னக்குழந்தையா?சீனியர் சிடிசன் தெரியுமா? இங்கதான் எல்லாம் வசதியாயிருக்கே!
”அக்கா இப்ப மணி ஏழு.நான் வர ராத்திரி எட்டு மணி கூட ஆகலாம்”
”பரவாயில்லை நான் சமாளிச்சுப்பேன்.வேணுமானா பவானிக்கு போன் பண்ணுவேன்.அவள்811அல்லது 812 பஸ் பிடிச்சா பதினஞ்சு நிமிஷத் தில வந்துடுவா.நீ கவலைப்படாமல் தைரியமா போயிட்டு வா”என்றேன்

வித்யா அழிக்கதவைப் பூட்டிக்கொண்டு கையில் ஒரு சாவியைக் கொண்டு போனாள்.என்னிடமும் ஒரு சாவியிருந்தது.அவளை அனுப்பிவிட்டு பேப்பர் படிக்க உட்கார்ந்தேன்.சிங்கப்பூரில் வெளிவரும் பேப்பரில் தான் எத்தனை பக்கங்கள்!லை·ப்,ஹோம் என்று எத்தனை இணைப்புகள்!கொஞ்ச நேரம் பார்த்த பின் மனம் பேப்பரில் ஏனோ லயிக்கவில்லை.ஜன்னலருகில் வந்து நின்றேன்.எதிரே யூஷன் ஜூனியர் காலேஜ்.சிவப்பு மேல் சட்டையும் கருப்பு டிராயரும் அணிந்த மாணவர்கள்.விளையாடுமிடம் நீண்டஒவல் வடிவமாக சிவப்புக் கம்பளம் விரித்தது போல் பார்க்க அழகாக இருந்தது.பக்கத்திலேயே டென்னிஸ் கோர்ட்.சிவப்பு நிறத்தை எடுத்துக்காட்டும் பச்சைப்புல்! பசேலென்ற மரங்கள்!செய்குன்றுகள்!பத்தாவது மாடியிலிருந்து பார்த்த போது ரொம்பவே அழகாக இருந்தது.பக்கத்திலிருந்த மாரியம்மன்
கோவிலிலிருந்து வந்த நாதஸ்வர ஓசை மிகவும் இனிமையாக இருந்தது.கீழே குனிந்து பார்த்த போது முதல்நாள் பெய்த மழையின் சுவடே தெரியவில்லை.சாலைகள் எல்லாம் அலம்பிவிட்டதுபோலிருந்தது.ஒரு இடத்திலும் நீர் தேங்கி நிற்கவில்லை.நம் ஊரில் இப்படி இல்லையே என்று மனம் ஏங்கியது.

மைக்ரோஅவனில் டீ வைத்திருப்பது நினைவு வந்தது.டைம்செட் பண்ணி வைத்தால் தானே அணைந்து விடுகிறது.பால் பொங்கி வழிவது,அடிப்பிடிப்பது எதுவும் இல்லை.என்ன ஒரு செளகரியம்!ஊருக்குப் போனதும் ஒரு மைக்ரோஅவன் வாங்கிவிட வேண்டி யதுதான்.கிச்சனில் போய் டீ குடித்துவிட்டு கப்பை அலம்பியபோது எதிரே எம்.ஆர்.டி ரயில் போவது தெரிந்தது.வித்யாவுடன் இந்த ஒரு மாதத்தில் 5,6 தடவைகளுக்குமேல் ரயிலில் போய் வந்து விட்டேன்.டிக்கட் எடுக்க காத்து நிற்க வேண்டாம்.சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டால் ரயில் பஸ் ரெண்டுக்கும் அதையே யூஸ் பண்ணிக்கலாம்.பஸ் நின்னவுடனே கதவு தானே திறக்கும்!பஸ்லஏறி கார்டை ஒரு மிஷின் மேல வெச்சா அதுல ஒரு சவுண்டு வரும்.கண்டக்டர் கிடையாது.இறங்கணும்னா நம்ம சீட்ல இருக்கற பட்டனை அமுக்கினா டிரைவர் வண்டியை நிறுத்தி விடுவார்.

எம்.ஆர்.டியில் பயணம் செய்வதே ஒரு சுகமான அனுபவம்.ஆட்டமும் இல்லாமல்,சத்தமும் இல்லாமல் ஏ.சி வசதியோடு பயணம் செய்வதால் அலுப்பேயில்லை.அடுத்து என்ன ஸ்டேஷன் வரப்போகிறது என்று இனிய குரலில் அறிவிப்பு. ரயிலில் அனேகமாக எல்லோருமே பேப்பரோ,புத்தகமோ படித்துக் கொண்டேதான் செல்கிறார்கயெல்ல்.சீனப்பெண்கள் எல்லோருமே சொல்லிவைத்தற்போல் ஒல்லியாகஇருக்கிறார்கள்.சில சீனப் பெண்கள் ஒரு காலில் தங்கக்கொலுசு அணிந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நினைத்தபடியே இருந்த என்னை போன்மணி அழைத்தது.எதிபார்த்தபடியே பவானி தான்.

பவானி என் தங்கை,டில்லியிலிருந்து மருமகளின் பிரசவத்திற்காக வந்திருந்தாள்.நான் திருனெல்வேலியிலிருந்து என் தம்பி மாதவன் வீட்டிற்கு வந்திருந்தேன்.என் தம்பி மாதவன் பணி மாற்றம் காரணமாக மலேஷியாவில் இருந்தான்.அடிக்கடி சிங்கப்பூர் வந்து போவான்.
”ராஜம்,என்ன செய்யறே?நான் வரட்டுமா?என்றாள் பவானி.
”வேண்டாம் எனக்கு ஒன்றும் போரடிக்கவில்லை”
”சரி,குழந்தை அழுகிறான்,அப்பறம் பேசறேன்”போனை வைத்து விட்டாள் பவானி

சிங்கப்பூர் திருமுறை மகாநாட்டில் சுகி சிவம் பேசிய ‘யார் பெரியவர்’ என்ற கேசட்டை டேப்ரிகார்டரில் போட்டுவிட்டு வீடு பெருக்க ஆரம்பித்தேன்.நான் ஊரில் இருக்கும் பொழுது சனி,ஞாயிறு இரு நாட்களும்’இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன்.யார் பெரியவர் என்ற கேள்விக்கு 63 நாயன்மார்களே பெரியவர்,தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டே பெருக்கி,வீடு துடைக்கும் வேலையை முடித்தேன்.பின் கம்ப்யூட்டரில் திண்ணை,மரத்தடியில் வந்திருந்த சில கட்டுரைகளைப் படித்தேன்.கம்ப்யூட்டரில் படிக்க என் தம்பி மனைவி வித்யா கற்றுக்கொடுத்து விட்டாள்.

என் தம்பியும் வித்யாவும் ஆளுக்கொரு லாப்டாப் வைத்திருக்கிறார்கள். தம்பி பெண் அமெரிக்காவில் இருப்பவள் புதுமாடல் வாங்கிவிட்டதால் அவளுடைய பழசில் எனக்கு தமிழில் டைப் அடிக்க கற்றுக் கொடுதார்கள். ஆங்கில எழுத்துக்களை அமுக்கினால் திரையில் தமிழ் எழுத்து வருவது எனக்கு வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.தமிழ் எழுத்துக்கள் அவ்வளவும் 26 எழுத்துக்குள் அடங்கியிருப்பதைப் பார்த்து ஒரே ஆச்சர்யம்! திரையில் கர்சர்,அம்புக்குறி நகர்வது வேடிக்கையாக இருக்கும்.ஒரு பக்கம் வார்த்தைகள் டைப் அடித்து வையுங்கள் என்று வித்யா சொல்லியிருந்தாள்.4,5 நாட்களாகத்தான் பழக ஆரம்பித்திருந்தேன்.ஒரு பக்கம் டைப் செய்துவிட்டுப் பார்த்ததில் சில இடங்களில் நெடிலுக்குப் பதில் குறிலும் குறிலுக்குப் பதில் நெடிலும் இருந்தன.ல,ள ர ற,ன ண வேறுபாடுகள்! மறந்து போகிறது!வயது ஒரு காரணமா?60 வயதுக்கு மேல் முதியோர் கல்வி!

”ஊருக்குப் போறதுக்கு முன்னால எப்படியும் உங்களுக்கு கம்ப்யூட்டரும்,இண்டெர்நெட்டும் ஆபரேட் பண்ண சொல்லித்தரப்போறோம்.நீங்க இண்டியா போய் எங்களுக்கு ஈ மெயிலில் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு.!அந்த லாப்டாப்பையும் எனக்குத் தரப்போவதாகச் சொல்லியிருந்தார்கள்.அவர்களுடைய அன்புக்கும்,ஆர்வத்திற்காகவாவது நான் எப்படியும் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று முயற்சி செய்தேன்.செல்பேசி ஒலித்தது.வித்யா தான் ”அக்கா,சாப்பிட்டீர்களா?
‘இல்லை,இனிமேல் தான்”
‘மணி என்ன தெரியுமா?”
நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன்.மணி இரண்டரை.இவ்வளவு நேரமாகக் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கிறேன்!ஒரேயடியாக உட்கார்ந்திருந்ததில் முதுகு வலிக்க ஆரம்பித்தது.சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று ஜெயகாந்தனின்’தேவன் வருவாரா?” என்ற புக்கை கையில் பிரித்தபடி படுத்தேன்.தேவன் வருவதற்குள் தூங்கி விட்டேன்.திடீரென்று விழிப்பு வந்தது.வாஷிங்மிஷினில் துணிகள் கிடப்பது நினைவு வந்தது.மிஷினைத்திறந்தேன் மேலேயிருந்து கழிகளையெடுத்து அவற்றில் துணிகளைப் போட்டு ஜன்னலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் குழாய்களில் சொருகினேன்

மாதவன் சங்கீதப் பிரியன்.அவன் மதுரைமணி,எம்.டி ராமனாதன்,டி.வி.சங்கரநாராயணன்,சந்தானம்,லால்குடி.
டி.என்.கிருஷ்ணன்,எம் எல்,வி,எம்,எஸ்,சுதா,நித்ய ஸ்ரீ இவர்களின் லைவ் கச்சேரி சி.டிக்கள்நிறைய சேகரித்து வைத்திருக்கிறான்.லால்குடி வயலின் கச்சேரி சிடி ஒன்றை ஓட விட்டேன்.சுகமான சுகம் என்ன குழைவுஎன்ன நளினம்,என்ன கம்பீரம்!சங்கீதம் கேட்டுக் கொண்டே வித்யா வைத்துவிட்டுப் போயிருந்த பாவாடை விளிம்பைப் பிரிக்க ஆரம்பித்தேன்.வெளிச்சம் போறலையே என்று பார்த்தால் மணிஆறு! சுவாமி விளக்கேற்றி விட்டு காயப்போட்ட துணிகளை மடித்து வைத்தேன்.வித்யாவுக்கு போன் பண்ணி அவள் வர நேரமாகுமா என்று கேட்டேன்

”அக்கா,இங்க மழை ரொம்ப பலம்மா பெய்யறது.நீங்க கவலைப் பட வேண்டாம்.நான் என் ·ப்ரெண்டோட வந்துடுவேன்.நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டாம்.இட்டிலி வார்த்துச் சாப்பிடுங்கள்.டிராயிங்ரூம் சோபாசெட் பக்கம் சில பேப்பர்ஸ் வெச்சிருக்கேன். ”மஹாபாரதத்தில் பெண்ணியம்”.நீங்கள் இன்றே படித்து விடுங்கள்.நான் நாளை படித்துவிடுவேன்.நாளை மறுநாள் ஜெயந்தியிடம் கொடுக்க வேண்டும்.”என்றாள்

அது ஒரு நாடகம்.பீஷ்மரின் சபதம் மற்றவர்களை எப்படியெல்லாம் பாதித்தது என்பது பற்றியும் அக்காலப் பெண்கள்
வாரிசு வேண்டும் என்பதற்காகத் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளையெல்லாம் எப்படி புறம் தள்ள வேண்டியிருந்தது என்பது பற்றிய நாடகம். பாரதத்தில் பெண்ணியம் படித்து முடித்ததலோ என்னவோ,நான் பாரதியின் பாஞ்சாலி சபதம் பற்றிய எண்ணங்களில் மூழ்கிவிட்டேன்! வித்யா கதவைத் திறந்து உள்ளே வந்ததையோ ஹாலில் மற்ற லைட்டுகளைப் போட்டதையோ நான் கவனிக்கவேயில்லை.அக்கா என்று அவள் என் தோளைத் தொட்டதும் தான் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.”நீங்கள் கவலைப் படப்போகிறீர்களே என்று எனக்குக் கவலை யாக இருந்தது”என்றாள்.
”மஹாபாரதப் பெண்களின் கவலையைப் பற்றிப் படித்ததில் உன்னைப் பத்தின கவலை கூட மறந்து போச்சு.
‘புது எடத்தில நீங்க தனியா இருக்கேளேன்னு கொஞ்சம் கவலையாயிருந்தது.
‘வித்யா, நான் தனியாவா இருந்தேன்?எங்கூட சுகிசிவம்,லால்குடி,கம்ப்யூட்டர்,ஜெயகாந்தன்,மஹாபாரதப் பெண்கள் எல்லாரும் துணை
யிருந்தாளே! உண்மையச் சொல்லட்டுமா.எந்த எடஞ்சலும் இல்லாம ரொம்பவே ரசிச்சேன்.நாயன்மார்களும் வயலினும்,கம்ப்யூட்டரும்,
ஜெயகாந்தனும்,தனிமையும் ஆனோம். இந்தநாள் ஒரு இனியநாள் என்று சொல்லிக்கொண்டே இட்டிலி வார்க்க எழுந்து சென்றேன்.


vannaijaya@hotmail.com

Series Navigation