இந்த வார வெண்பா நான்கு

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

மத்தளராயன்


கிரோம்பேட்டை ரயில்வே கேட்

வடிவாய் உடுத்த வனிதை குனிந்து
அடியில் கடக்க முடியின் நெடியே
முகரும் குருக்கள் முகமும் வியர்க்க
நகரும் சரக்கு ரயில்.

விற்பனையாளர்

ஆழ யழைப்புமணி அங்கே கதவும்தான்
தாழவே மெல்லத் திறந்திடும் – சூழவெங்கும்
மோதும் புகைநடுவே சீட்டாடும் கூட்டமொன்று.
ஊதுபத்தி விற்கவந்த பெண்.

போலீஸ் குடை

பின்னிரவில் பெய்ததெனச் சொன்னார் சுவடெதுவும்
சன்னமாய் வீதியில் கண்டாயா ? முன்னேபார்.
காலையில் சின்னதாய்க் காளான் துளிர்விட்டுச்
சாலையில் போலீஸ் குடை.

ஓய்வு பெறும் ஸ்டேஷன் மாஸ்டர்

விடிந்து பதவி முடியும் நினைப்பில்
பிடித்த கொடியும் தளரும் – படிந்து
முகத்தில் புகையும் விலகக் கடந்து
நகரும் சரக்கு ரயில்.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்